தமிழ்மரபும்‌ பேராசிரியரும்‌

தமிழ்மரபும்‌ பேராசிரியரும்‌


ஒரு மொழியினது தனித்தன்மை அதன்‌ மரபிலேயே தங்கியிருக்‌கிறது. மரபு சிதையுந்தோறும்‌ மொழியுஞ்‌ சிதையுமென்பது வரலாறு கண்ட உண்மையாகும்‌. உலக மொழிகளிலே மிகச்சிறந்த இடத்தைப்‌ பெறுந்தமிழ்‌ மொழிக்கு அதன்‌ மரபே உயிராகும்‌, மரபைப்‌ புறக்கணித்து எழுதப்படும்‌ எழுத்து, வழங்கப்படுஞ்‌ சொல்‌, அச்சொல்‌ கருவியாக உணரப்படும்‌ பொருள்‌ ஆகியவையெல்லாம்‌ நரம்பறுந்த யாழுக்குச்‌ சமமாகும்‌, தமிழ்‌ மரபைப்‌ பேணுதற்காகத்‌ தமிழ்‌ மொழியிலே நிகழ்ந்த ஆக்கவேலைகள்‌ பலவாம்‌. இவ்வாக்கங்‌கருதியுழைத்த அறிஞரும்‌ பலராவர்‌, தொல்காப்பியர்‌ முதல்‌ கணேசையர்‌ வரை இவர்களை நாம்‌ கண்டு மகிழ்கிறோம்‌. இலக்கண நூல்கள்‌, நிகண்டுகள்‌, இலக்கண நூலுரைகள்‌, அகராதிகள்‌, விளக்கவுரைகள்‌ என்ற பற்பல துறைகளில்‌ இத்தமிழ்ப்பேரறிஞர்களின்‌ கவனஞ்‌ சென்றது. தமிழ்‌ மரபைப்‌ பேணிவரும்‌ இந்நூல்களைப்‌ படித்து மகிழும்போது தமிழ்‌ மரபைச்‌ சிதைக்கும்‌ நூல்களையும்‌ ஆங்காங்குக் ‌காண்கின்றோம்‌. மரபைக்‌ கெடுக்குங்‌ குற்றங்களை எடுத்துக்காட்டி அக்குற்றங்களை நீக்க முற்பட்ட நற்றமிழாசிரியரும்‌ பலராவர்‌. இந்‌நல்லறிஞர்‌ வரிசையிலே தொல்காப்பியப்‌ பொருளதிகாரத்தின்‌ பின்‌நான்கு இயல்களுக்கும்‌ நல்லுரை கண்ட பேராசிரியர்‌ தலைசிறந்தவர்‌. அவர்‌ மெய்ப்பாடு உவமம்‌ செய்யுள்‌ மரபு என்னும்‌ நான்கியல்‌களுக்கும்‌ உரையெழுதும்‌ வாயிலாகத்‌ தமிழ்‌ மரபைப்பேண வழிவகுத்தலையே தமது பெருநோக்காகக்‌ கொண்டிருந்தாரென்பதை அவர்‌ உரை தெளிவாக எடுத்துக்‌ காட்டுகிறது.

தமிழ்மரபும்‌ பேராசிரியரும்‌


தமிழ்‌ மரபென்பது தொல்காப்பியர்‌ காட்டிய மரபே என்று கூறுமளவிற்குத்‌ தொல்காப்பியந்‌ தமிழ்ப்பெரு நூலாக விளங்குகிறது. தமிழ்‌ மரபு தொல்காப்பியம்‌ முழுவதிலும்‌ இழையோடியது போலிலங்கி மிளிர்கிறது. எனினுந்‌ தொல்காப்பியர்‌ மரபியலெனத்‌ தனியியல்‌ ஒன்று வகுத்து மரபினை ஆராய்கிறார்‌. நூலின்‌ இறுதியியலாக இந்த மரபியல்‌ அமைந்து கிடக்‌கிறது, மரபு பேணலின்‌ இன்றியமையாமையை மக்களின்‌ மனதிற்‌ பதியச்செய்யும்‌ நோக்கமாக அது இறுதியில்‌ வைக்கப்பட்டது.

பேராசிரியர்‌ மரபியலின்‌ உரையை ஆரம்பிக்கும்போது கூறிய கூற்‌றுக்கள்‌ இங்கு உற்று நோக்கத்தக்கன. அவை. “மரபென்ற பொருண்மை என்னையெனிற்‌ கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ்‌ செய்யுளியலுள்‌ மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி இருதிணைப்‌ பொருட்‌ குணனாகிய இளமையும்‌ ஆண்மையும்‌ பெண்மையும்‌ பற்றிய வரலாற்று முறைமையும்‌, அவைபற்றிவரும்‌ உலகியன்‌ மரபும்‌, நூன்மரபுமென இவையெல்லாம்‌ மரபெனப்படும்‌” என்பனவாம்‌. தொல்காப்பியர்‌ இளமைப்பெயர்‌, ஆண்பாற்பெயர்‌, பெண்பாற்‌ பெயர்‌, சாதி என்பனவற்றின்‌ மரபைநிகண்டு முதலிய நூல்கள்‌ கூறுவது போலப்‌ பெயர்‌ மாத்திரையே எடுத்துக்காட்டிச்‌ செல்லுதலின்‌ ஆண்டு ஆராய்ச்சிக் கிடனின்று. தொல்‌காப்பியர்‌ காட்டிய மரபு தமிழ்நூல்களாற்‌ பெரிதும்‌ பேணப்பட்டு வருதலின்‌ பேராசிரியர்‌ விரிந்த உரை எழுதவேண்டிய நிலைமை உண்டாகவில்லை, உலகியலின்‌ மரபுணர்த்த வந்த தொல்காப்பியர்‌,

“வழக்கெனப்‌ படுவ துயர்ந்தோர்‌ மேற்றே நிகழ்ச்சி யவர்கட்டாக லான”

எனக்‌ கூறுகிறார்‌. இச்சூத்திரத்திற்கு உரைவரையப்‌ புகுந்த பேராசிரியர்‌, “இது வழக்கினுள்‌ மரபினைப்‌ பிழைத்துக்‌ கூறுவனவும்‌ உளவென்பதுணர்த்துதல்‌ நுதலிற்று” எனக்‌ கூறுகிறார்‌. தொல்காப்பியர் ‌காலந்தொட்டே உலகவழக்கிலே தமிழ்மரபு மாறுபடுகின்றதென்பது பேராசிரியர்‌ கருத்து. உயர்ந்தோரும்‌ இழிந்தோரும்‌ மொழியை வழங்கிவரினும்‌ உயர்ந்தோர்‌ மொழி வழக்கே வழக்காவதன்றி இழிந்‌தோர்‌ வழக்கைக்‌ கைக்கொள்ளலாகாது. தொல்காப்பியர்‌ காலத்தில் ‌உயர்ந்தோர்‌ உலக வழக்குத்‌ தமிழைத்‌ தூய்மையுடையதாக மரபு பிழையாததாக வழங்கி வந்தனரென்பதை அவர்‌ கூற்றுத்‌ தெளிவுபடுத்துகிறது. இன்று பேச்சுத்‌ தமிழ்‌ தன்‌ நற்பண்பிழந்து மரபு சிதைந்து வழங்கிவருவதைத்‌ தமிழறிஞர்கள்‌ நன்கறிவர்‌. பேச்சுத்‌தமிழ்‌ இவ்வாறு மரபு சிதைந்து வழங்கி வருமாயின்‌ காலகதியில்‌ அதுவேற்று மொழியாகியும்‌ இலக்கியத்தமிழ்‌ எனப்படுஞ்‌ செந்தமிழ்‌ அதனின்றும்‌ மாறுபட்ட பிறிதொரு மொழியாகியுஞ்‌ செல்லுமென்பதைக்‌ தமிழ்மொழி காப்போர்‌ உணர்தல்‌ வேண்டும்‌. வழக்கெனப்படுவது உயர்ந்தோர்‌ மேலதென்பதை எல்லோரும்‌ உடன்பட்டிருந்த காலத்‌தில்‌, அவ்வுயர்ந்தோர்‌ மரபு பிழையாமலே தமிழை வழங்கி வந்தனராதலின்‌ தமிழ்‌ உலகவழக்கழிந்தொழிந்து சிதையுமெனக்‌ கவலைகொள்ளக்‌ காரணமில்லை. இலக்கியங்கள்‌ மரபு நிலை திரியாது ஆக்‌கப்பட்டுவந்த அக்காலத்தில்‌ அவ்விலக்கிய வழக்கையொட்டி உலகவழக்கிலும்‌ இது குணம்‌ இது குற்றம்‌ என்றறியத்தக்க வாய்ப்பு மக்களுக்கிருந்தது. இன்று இலக்கியங்கள்‌ வேலி பயிரைமேய ஆரம்‌பித்தது போலத்‌ தமிழ்‌ மரபை அழித்தொழிக்க முற்பட்டிருக்கும்‌போது உலக வழக்கு எக்கதிதான்‌ அடையாது? “மரபு நிலை திரிதல் ‌செய்யுட்கில்லை'' என்னுந்‌ தொல்காப்பியராணையைச்‌ செய்யுள்‌ நூல்கள்‌ இன்று பொருட்படுத்துவதில்லை. உலகவழக்குப்‌ பிழைபட்டிருக்‌கிறதென்பது மட்டுங் கவலை கொள்ளுதற்குரியதன்று பிழைபட்‌டிருக்கிறதென்பதை அறிந்துகொள்ளமுடியாத மந்தநிலையிலும்‌ பிழைபட்டதனைப்‌ பிழையற்றதென வாதிக்கும்‌ விபரீத நிலையிலும்‌ இன்றையதமிழ்‌ எழுத்தாளர்‌ பலர்‌ இருக்கிறார்கள்‌ என்பதும்‌ வேதனைக்‌ குரியதாகும்.

பேச்சு வழக்கில்‌ இழிந்தோர்‌ மரபுநிலை திரிந்த காலத்திற்‌ கூட‌ நூல் ‌வழக்கிலே மரபுநிலைதிரிதல்‌ ஆரம்பிக்கவில்லையென்பதை

மரபுநிலை திரியா மாட்சிய வாகி

உரைபடு நூறா மிருவகை யியல” என்னுந்‌ தொல்காப்பியச்‌ சூத்திரப்‌ பகுதி எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர்‌ காலத்‌திலிருந்‌த இந்தநிலை மாறிப்‌ பேராசிரியர்‌ காலத்திலே நூல்களிலும்‌ மரபுநிலை திரிதல்‌ ஆரம்பித்து விட்டதென்பதைப்‌ பேராசிரியர்‌ தமது உரைப்‌பகுதிகளில்‌ ஆங்காங்கு எடுத்துக்காட்டிச்‌ செல்‌கிறார்‌. அங்ஙனம்‌ எடுத்‌துக்காட்டுவதோடு அவற்றைப்‌ பிழையற்றனவென வாதிப்பதைமறுத்துச்‌ செல்வதையும்‌ நாம்‌ காண்கிறோம்‌. அகத்தியனாராற்‌ செய்‌யப்பட்டதெனக்‌ கருதப்பட்டுவந்த ஆனந்தக்குற்றம்‌ என்னும்‌ நூல்‌தமிழ்மரபிற்கு மாறுபட்டதெனக்‌ கண்ட பேராசிரியர்‌ அது அகத்தியனாராற்‌ செய்யப்பட்டதன்றென நிலைநாட்டியும்‌, நன்னூல்‌, தண்டியலங்காரம்‌, யாப்பருங்கலம்‌ முதலாய நூல்களிலுந்‌ தமிழ்மரபிற்‌குப்‌ புறம்பானவற்றை எடுத்துக்காட்டி மறுத்துரைத்துஞ்‌ செல்கிறார்‌. நூல்‌, முதனூலும்‌ வழிநூலுமென இருவகைப்படுமென்பது தொல்காப்பியர்‌ துணிபாகும்‌. இவற்றுடன்‌ சார்பு நூலென்பதும்‌ ஒன்றுகூட்டி நூல்‌ மூன்றெனக்‌ கருதப்பட்டவொரு காலத்தில்‌ வாழ்த்‌தவர்‌ பேராசிரியர்‌. திரிபுவேறுடையதாகக்‌ கருதப்பட்ட சார்பு நூலென்பதைப்‌ பேராசிரியர்‌ நூலாகக்‌ கொண்டிலர்‌. சார்புநூலை ஏற்றுக்கொள்ளின்‌ தமிழ்மரபு பிழைப்பதோடு தமிழ்மொழியின்‌ சிதைவுக்குங்‌ காரணமாகுமென்பது பேராசிரியர்‌ கருத்து. “ஒன்றன்‌ வழியேயன்றியுந்‌ தாந்தாம்‌ அறிந்தவாற்றானும்‌ நூல்செய்யப்‌ பெறாரோ வெனின்‌, - அது மரபன்று; அது நோக்கியன்றே, “மரபுநிலை திரியிற்‌பிறிதுபிறிதாகும்‌” என்றவிதி நூலிற்கும்‌ எய்துவித்துப்‌ புகுந்ததென்‌பது என்னும் பகுதியாலே முதனூலொடுமாறுபடாத மரபுடையனவே மரபுபேணும்‌ நூல்களென்பதைப்‌ பேராசிரியர்‌ அறுதியிட்டுக்‌ கூறினார்‌. இத்தகைய மரபு பிறழாத நூல்களைத்‌ தமக்கு இலக்கணமாக உடையசெய்யுள்‌ நூல்களே தமிழ்ச்செய்யுள்‌ நூல்களாகுமென்க.

நூல்களால்‌ ஓதப்பட்ட இலக்கணம்‌ உலக வழக்கிற்கும் ‌உரையுஞ்‌ செய்யுளுமாகி வரும்‌ இலக்கிய வழக்கிற்குமேயுரியன, மற்றைய கணிதம்‌ முதலாய்‌ நூல்களுக்கு அம்மரபு தேவையற்றதெனக்‌ கருதுவாருமுளர்‌. பேராசிரியர்‌ தருக்கம்‌ முதலாய்‌ நூல்‌களுக்குந்‌ தொல்காப்பியம்‌ விதித்த இலக்கணமே இலக்கணமெனக்‌ கூறுவதிலிருந்து எக்கலைபற்றிய நூலாயினும்‌ அது தமிழ்மொழியில்‌ இயற்றப்படுங்கால்‌ அஃது இலக்கணவரம்பு கடவாமல்‌ ஆக்கப்படுதல்‌ வேண்டுமென்றுங்‌ கருத்துடையர்‌ அவரென்பது நன்கு புலனாகிறது.

முதனூலொடு மாறுபட்டநூல்‌ செய்வது மொழிவழக்கை அழித்‌தொழிக்கக்‌ காரணமாகுமெனக்‌ கண்ட பேராசிரியர்‌, அகத்தியரோடு மாறுபட்டுத்‌ தொல்காப்பியர்‌ தமது நூலையியற்றினாரென்னும்‌ முன்‌னைய ஆசிரியர்‌ சிலரின்‌ கருத்தை உடன்பட்டிலர்‌. “தொல்காப்பியர் ‌அகத்தியத்தோடு பிறழவும்‌ வழிநூல்‌ செய்தாரென்றக்கால்‌ இழுக்‌கென்னையெனின்‌ அது வேதவழக்கொடு மாறுகொள்வார்‌ இக்காலத்‌துச்‌ சொல்லிலும்‌ இறந்த காலத்துப்‌ பிறபாசாண்டிகளும்‌ மூன்றுவகைச்‌ சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோரும்‌ அது கூறாரென்பது” எனவரும்‌ பேராசிரியா்‌ உரைப்பகுதியால்‌ இதனுண்மை புலனாகும்‌. தமிழ்நாட்டு ஆசிரியர்‌ மாணவர்‌ ஒழுகலாற்றின்‌ மரபினைப்‌ பேராசிரியர்‌ இப்பகுதியால்‌ அறியவைத்திருக்கும்‌ பான்மை சிந்திக்‌கத்‌ தக்கது. “காலந்தோறும்‌ வேறுபடவந்த அழிவழக்கும்‌ இழிவழக்கும்‌ முதலாயவற்றுக்கெல்லாம்‌ நூல்செய்யின்‌ இலக்கணமெல்‌லாம்‌ எல்லைப்படாது இகந்தோடும்” என்ற பேராசிரியர்‌ உரைப்பகுதி இக்கால இலக்கிய எழுத்தாளருக்குச்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டியது. தூயதமிழை - மரபு சிதையாத தமிழைப்பேசாத மக்களே இழிந்தவராவர்‌. ஆரியர்‌ கூறுந்தமிழைப்‌ பேராசிரியர்‌ நகைச்சுவைக்கு உதாரணங்‌ காட்டலின்‌ ஆரியர்‌ தமிழும்‌ மரபுநிலைதிரிந்த வழக்கேயாம்‌; ஆதலின்‌ அதுவும்‌ அழிவழக்கு இழி வழக்கு என்பவற்றுள்‌ வைத்‌தெண்ணப்படத்தக்கதே. தமிழ்‌ மரபினைச்‌ சிதைத்துப்‌ பேசுவோரை இழிந்தவர்‌ என்று பேராசிரியர்‌ குறிப்பிடலின்‌ அவர்‌ மக்களுள்‌ ஒரு சாராரைத்‌ தாழ்த்தும்‌ நோக்குடன்‌ அவ்வாறு கூறினாரெனக்‌ கொள்ளவேண்டியதில்லையென்க.

இன்னபொருளை அல்லது இன்னகருத்தை இவ்வாறு வழங்குக எனக்‌ கூறிவந்த தொல்காப்பியர்‌, இவ்வாறு வழங்கற்க என்று கூறும் ‌பொருட்பகுதிகளையும்‌ மரபியலுட்‌ காண்கிறோம்‌. இவை மரபு பற்றிய நூற் குற்றங்களாகும்‌. தமிழ்மரபைச்‌ சிதைக்கும்‌ இக்குற்றங்களைப்‌ பேராசிரியர்‌ நன்கு விரித்து விளக்கினார்‌. கூறியதுகூறல்‌ முதலாக என்னவகையிலும்‌ மனங்கோளின்மை யீறாகப்‌ பத்துக்‌ குற்றங்களைத்‌ தொல்காப்பியர்‌ கூறுகிறார்‌. இவற்றை ஆராய்ந்த மரபுதெரிந்த பேராசிரியர்‌ இருபகுதியினவாக வகுத்துச்‌ செல்கிறார்‌. குற்றமென்றே ஒதுக்கற்பாலன ஐந்தெனவும்‌ குற்றமாயினும்‌ மற்றுமொரு பொருளைத்‌ தருதலிற்‌ குணமுமாய்‌ அமைவன ஐந்தெனவும்‌ பேராசிரியர்‌பொருள்‌ காண்கிறார்‌. தொல்காப்பியர்‌ குற்றமாமென விலக்கியவற்றையே பேராசிரியர்‌ குணமுடையனவெனக்‌ கொள்வதால்‌ அவர்‌தமது காலத்திலே தொல்காப்பிய மரபிற்குப்‌ பறம்பானவற்றையும் ‌அமைக்க முற்படுகிறார்‌ எனக்கொள்வது தவறாகும்‌. ஏனெனில் ‌தொல்காப்பியச்‌ சூத்திரங்களையே குணமாக அமைக்குங்‌ குற்றங்களுக்‌குப்‌ பேராசிரியர்‌ உதாரணமாகக்‌ காட்டுதலினென்க.

குன்றக்கூறல்‌, கூறியதுகூறல்‌, மாறுகொளக்‌ கூறல்‌, மிகைபடக்‌கூறல்‌, பொருளில மொழிதல்‌, மயங்கக்கூறல்‌ என்பன வெளிப்படை, கேட்போர்க்கின்னாயாப்பிற்றாதல்‌ என்பதில்‌ இக்கால எழுத்தாளர் ‌கவனஞ்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. மயங்காத எழுத்துக்களை மயங்கவைத்துந்‌ தமிழ்மொழிப்புணர்ச்சிக்கு மாறுபடச்செய்தும்‌ மொழிக்கு முதலாகாத எழுத்துக்களை மொழிமுதலாக்கியும்‌ பிறவாறும்‌ வருவனவெல்லாம்‌ இதில்‌ அடங்குவனவாம்‌. பழித்த மொழியானிழுக்கங்‌கூறல்‌ என்னுங்‌ குற்றமும்‌ தன்னானொரு பொருள்‌ கருதிக்‌ கூறலென்‌னுங்‌ குற்றமும்‌ இக்கால இலக்கிய இலக்கண நூலுள்ளும்‌ வரலாற்று நூலுள்ளும்‌ அன்ன பிறவற்றுள்ளும்‌ மலிந்து காணப்படுதலின்‌ அவற்‌றைப்‌ பேராசிரியர்‌ வழியிலே நின்று சிந்திப்பது தக்கது.

இன்றைய நூலாசிரியர்கள்‌ பழித்த மொழிகளை எடுத்து வழங்குவது கண்கூடு, மரபு திரிந்து சிதைந்த மொழிகளையும்‌ வடமொழியாகாத பிராகிருத மொழிச்‌ சொற்களையுந்‌ திசைச்சொல்லாகாத வேற்றுமொழிச்சொற்களையும்‌ இவர்கள்‌ வழங்குவதன்மூலந்‌ தமிழ்‌மொழியின்‌ இனிமை, பண்பு, மரபு என்பவற்றைப்‌ பாழ்படுத்தி வருதலை நாம்‌ எங்குங்‌ காண்கிறோம்‌. தொல்லாசிரியர்கள்‌, இயற்‌சொல்லென்றுந்‌ திரிசொல்லென்றும்‌ வடசொல்லென்றுந்‌ திசைச்‌சொல்லென்றும்‌ பாகுபடுத்தியதன்‌ உண்மை நிலை உணராது தமிழ்‌ மொழியின்‌ மரபுக்ககப்படாத எல்லா மொழிச்சொற்களையும்‌ வழங்கிவரின்‌ தமிழினது தனித்தன்மை அழிந்துவிடும்‌. வடசொல்லாகித்‌ தமிழில்‌ வந்து வழங்கும்‌ ஆரிய மொழிச்சொற்கள்‌ வடவெழுத்தின் ‌வரிவடிவத்தையும்‌ ஒலிவடிவத்தையும் விட்டு நீங்கித்‌ தமிழெழுத்தின் ‌வரி, ஒலி வடிவங்களைப்‌ பெறுதலை இன்றியமையாத இலக்கணமாகத் ‌தொல்காப்பியர்‌ கருதுவர்‌; இவ்விலக்கணத்தை இன்று தமிழ்‌ நூலாசிரியர்கள்‌ பெரிதுங்‌ கைநெகிழ்த்து வருவது விசனிக்கத்தக்கதே. தமிழிலே தோன்றியுருப்பெற்ற மணிப்பிரவாளநடை உயிரற்றுப்‌போனபின்புங்‌ கிரந்த எழுத்துக்களைத்‌ தமிழ்நூலில்‌ அனுமதித்தலாகாது. ஆறுமுகநாவலர்‌ முதலாய தமிழ்மரபுகாத்த ஆசிரியர்கள்‌ இவ்‌வெழுத்துக்களைக்‌ கையாண்டிருப்பவும்‌ இவற்றை விலக்குவது எற்றுக்‌கெனச்‌ சிலர்‌ வினாவலாம்‌. சமய நூற்கருத்துக்களைக்‌ கூறவந்த ஆசிரியர்கள்‌ பொருள்‌ விளக்கத்திற்காக ஆரம்பத்தில்‌ அவற்றை எடுத்‌தாண்டிருக்கலாம்‌. ஆனால்‌ அவை மேலும்‌ வழங்கவும்‌ வளரவும்‌ இடங்‌கொடுத்தல்‌ ஏதமாம்‌. உரைநடை வழக்கிலே மட்டும்‌ புகுந்த இவ்‌வெழுத்துக்கள்‌ இன்று செய்யுள்‌ வழக்கிலும்‌ புகுந்துள்ளது தமிழ்‌மக்கள்‌ செய்த தவக்குறைவே. பழித்தமொழியென்பதைப்‌ பேராசிரியர்‌ முடிவில்லாத சொல்‌ இழிந்த சொல்லென இருவகைப்படுத்திச்‌ சொல்லதிகாரத்திற்‌ கூறப்பட்ட சொல்லிலக்கணத்துக்குப்‌ புறம்பான அனைத்தையும்‌ அடக்குவர்‌.

தன்னானொருபொருள்‌ கருதிக்‌ கூறலென்பதற்குப்‌ பேராசிரியர்‌, “முன்னோராற்‌ கூறவும்படாது வழக்கினுள்ளது மன்றித்‌ தன்னுள்ளே ஒருபொருள்‌ படைத்துக்‌ கூறல்‌'' எனப்பொருள்கொள்வர்‌. தொல்‌காப்பியப்‌ பொருளதிகாரத்துக்குப்‌ புறம்பான பொருட்பகுதிகளைத்‌ தமிழிற்‌ புகுத்தி மரபு சிதைத்‌தலையே பேராசிரியர்‌ இக்குற்றத்தின்‌பாற்‌ படுத்துகிறார்‌. “ஆனந்தக்‌ குற்றமெனப்‌ பிற்காலத்‌ தானொருவன்‌ ஒரு சூத்திரங்‌ காட்டுதலும்‌ பதமுடிப்பென்பதோர்‌ இலக்கணம்‌படைத்துக்‌ கோடலும்‌ போல்வன'' எனப்பேராசிரியர்‌ ஆனந்தக்‌ குற்‌றஞ்‌ செய்தாரையும்‌ பதவியல்‌ படைத்த நன்னூலாரையும்‌ இதுவே உப இலக்கணமாக அணியிலக்கணம்‌ ஆக்கினாரையும்‌ இகழ்ந்திட்டாரென்க.

என்ன வகையினும்‌ மனங்கோளின்மை என்பதை, “எவ்வாற்‌றானும்‌ பொருளறிதற்கு அரிதாகச்‌ செய்தல்‌'' என்று பேராசிரியர் ‌விளக்குகிறார்‌. பொருளறிதற்கரியதாகச்‌ செய்யுங்‌ கடுந்‌ தமிழினையும்‌ பேராசிரியர்‌ விளக்கியிருப்பது ஈண்டு கவனித்தற்பாலது.

தொல்காப்பியர்‌ நூன்முழுவதிலுந்‌ தமிழ்மரபை ஆங்காங்குக்‌ கூறியது போலப்‌ பேராசிரியரும்‌ மரபியலுரையின்‌ மட்டுமல்லாமல் ‌மெய்ப்பாடு, உவமம்‌, செய்யுள்‌ ஆகிய மூன்றியல்களிலும்‌ ஆங்காங்கு மரபுபற்றிய தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்‌. எழுத்து, சொல்‌, பொருள்‌ ஆகிய மரபுகளைப்‌ புறக்கணித்து எழுதும்‌ நூல்‌வழக்கும்‌ பேசும்‌ உலக வழக்குந்‌ தமிழாகா. மரபு திரிந்த தமிழ் ‌அறிவுடையோரால்‌ ஏற்றுக்கொள்ளப்படின்‌ தமிழ்மொழி அழிவதற்கு அதுவே முக்கிய காரணமாகும்‌. தமிழ்‌ மரபுணர்த்துவது தமிழைப்‌பிழையற எழுதுவதற்கும்‌ பேசுவதற்குமுள்ள ஒரேயொருவழியாகும்‌. இத்தமிழ்‌ மரபு காக்கும்‌ நூல்களைக்‌ கற்றறியாது நூல்‌ இயற்ற முற்‌படுவது தமிழ்த்தாய்க்குச்‌ செய்யும்‌ உய்தியில்‌ குற்றமாகும்‌. தமிழன்னை மரபு திரிந்து பிறிது பிறிதாகாது, மரபுத்தமிழாய்‌ இன்பப்‌பைந்தேனூற்றாய்‌ என்றும்‌ ஒளிர்வாளாக.


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு