மரபும்‌ வழக்கும்

மரபும்‌ வழக்கும்

மரபு முதியது; வழக்குப்‌ புதியது; வழக்கின்‌ முதிர்ச்சியே மரபு வழக்கு முதிர்ந்து செம்மை அழகு உண்மை பெற்றவிடத்து மரபாகும்‌. “மரபு என்பது தொன்று தொட்டுவந்த வழக்கு'' என்றார்‌ அரசஞ்சண்முகனார்‌. நிலை நிறுத்திய வழக்கே மரபாகும்‌. அது பழமையுடையது; தொன்னெறிமுறைமையுடையது.

Tamil culture


வழக்கிலுள்ளது வழக்கு. வழங்குமாற்றான்‌ வழக்கெனப்படும்‌. கற்றார்‌ கல்லாதார்‌ ஆகிய மக்கள்‌ எல்லாராலும்‌ பொருளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களால்‌ அமைந்த சிறந்த மொழிநடையே வழக்கு. மக்களிடையே பலமுறையும்‌ பழகிய சொற்களாற்‌ சிறப்பாக விரிந்து இயலும்‌ இவ்வழக்கியன்‌ மொழியினைச்‌ சேரிமொழி என்பர்‌ தொல்காப்‌பியனார்‌.

மரபு, இயல்‌, விதி, இலக்கணம்‌, நியதி, முறைமை, தன்மை, வழக்கு இவையெல்லாம்‌ ஒரு பொருட்பன்மொழி எனினும்‌ இலக்கணநூலாசிரியர்கள்‌ வெவ்வேறு பொருளாற்றல்‌ புலப்படப்‌ பயன்படுத்தியுள்ளார்கள்‌. நன்னூலார்‌ பதம்‌, சொல்‌, மொழி, கிளவி என்ற ஒரு பொருட்சொற்களைப்‌ பயன்படுத்திப்‌ பல இலக்கணங்களை வகுத்தனர்‌.

மரபு என்ற சொல்லினைத்‌ தொல்காப்பியர்‌ தமது நாலெங்கணும் ‌உபயோகித்தனர்‌. அதற்கு ஒருவாற்றால்‌ வரையறையுங்‌ கூறினர்‌.

“மாற்றருஞ்‌ சிறப்பின்‌ மரபியல்கிளப்பின்‌” என்றும்‌

“மரபுநிலை திரியா மாட்சியவாகி” என்றும்‌

“மரபுநிலை திரிதல்‌ செய்யுட்கில்லை” என்றும்‌

“மரபுநிலை திரியிற்‌ பிறிதுபிறிதாகும்‌” என்றும்

‌மரபினுடைய தன்மையை ஒருபுடை விளக்கினர்‌. தொல்காப்பி‌யர்‌ செய்யுளியலிலே

மரபே தானும்

நாற்சொல்‌ லியலான்‌ யாப்புவழுப்‌ பட்டன்று”

என்று கூறினர்‌.

மரபு, இயற்‌ சொல்‌, திரிசொல்‌, இசைச்சொல்‌, வடசொல்‌ என்னும்‌ நாற்சொல்லின்‌ இயற்கையானே யாப்பின்‌ வழிப்‌ பொருந்தியமைவது என்பது கருத்தாம்‌.

தொல்காப்பியர்‌ கூற்றினைத்‌ தழுவி உரையாசிரியர்கள்‌ பலர்‌ பற்‌பல விதமாக மரபு என்பதனை விபரித்துக்‌ கூறினாரெனினும்‌ அடிப்‌படையிலே மாறினாரல்லர்‌. இளம்பூரணர்‌ இதனை விளக்கிக்‌ கூறியன.

“குறித்த பொருளை முடியச்சொல்‌ தொடுக்குங்கால்‌ பெயர்‌, வினை, இடை, உரி ஆகிய இயற்சொல்லானும்‌ ஏனைத்திரிசொல்‌, வடசொல்‌லானும்‌ எழுவகை வழுவும்‌ படாமற்‌ புணர்ப்பது மரபு'' என்‌றும்‌ “அவற்றுள்‌ இயற்சொல்மரபாவது சொல்லதிகார இலக்கணத்‌தோடு பொருந்துதல்‌; திரிசொல்‌ மரபாவது தமிழ்‌ நாட்டகத்தும் பல்வகை நாட்டினுந்‌ தத்தமக்குரித்தாக வழங்கும்‌ மரபு; திசைச்‌சொல்‌ மரபாவது செந்தமிழ்‌ சூழ்ந்த பன்னிரு நிலத்தினும்‌ வழங்கும்‌மரபு; வடசொல்‌ மரபாவது திரிந்த வகையாகிய சொல்‌ மரபு'' என்‌றும்‌ வருவனவாம்‌.

மரபென்பது காலமும்‌ இடனும்பற்றி வழக்குத்‌ திரிந்தக்

காலும்‌ திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச்

செய்வதோர்‌ முறைமை” என்றார்‌ பேராசிரியர். மரபொடு வழுப்படாமை என்றும்‌ காலம்‌ இடம்‌ பற்றிவருந்‌ திரிந்த வழக்கிற்கு ஏற்ப என்றும்‌ வரையறுத்துள்ள இலக்கணஆற்றல்‌ போற்றுதற்குரியது. நூலாசிரியரின்‌ கொள்கையை இனிதுணர்ந்து உரைவகுத்தமை நன்றே, தொல்காப்பியர்‌ ஒவ்வோர்‌ இயலிலும்‌ புறநடை கூறித்தாமெடுத்து நிலைநாட்டிய மரபினை அரண்படுத்தினார்‌. அதனாலே பேராசிரியரும்‌ இவ்வாறு உரைவகுத்தனர்‌. ஆகவே ஆசிரியரின்‌ கூற்றுக்களை இங்கு எடுத்துக்காட்டி விளக்குவது மிகையாகாது.

எழுத்ததிகாரத்திற்குப்‌ புறநடை

கிளந்த அல்ல செய்யுளு டிரிநவும்

வழங்கியன்‌ மருங்கின்‌ மருவொடு திரிநவும்‌

விளங்கிய இயற்கையின்‌ வேறுபடத்‌ தோன்றின்

வழங்கியல்‌ மருங்கின்‌ உணர்ந்தனர்‌ ஒழுக்கல்‌

நன்மதி நாட்டத்‌ தென்மனார்‌ புலவர்‌”

இதன்‌ கருத்து முன்‌ சூத்திரங்களிலே கூறப்படாதனவாய்ச்‌ செய்‌யுளிடத்துத்‌ திரிந்து வருவனவும்‌ வழக்கின்கண்‌ மருவி வருவனவுங்‌கூறப்பட்ட விதிகளுக்கு மாறுபடத்‌ தோன்றின்‌, வழக்கினை உணர்ந்து நடத்தலே நல்லறிவுடையார்களது கடமையாகும்‌ என்பதாம்‌. மேலும்‌,

ஓம்படை யானையிற்‌ கிளந்தவற்றியலாற்

பாங்குற உணர்தல்‌ என்மனார்‌ புலவர்‌” என்றும்

செய்யுண்மருங்கின்‌ மெய்பெற நாடி

இழைத்த இலக்கணம்‌ பிழைத்தன போல

வருவ உளவெனினும்‌ வந்தவற்றியலால்‌

திரிபின்றி முடித்தல்‌ தெள்ளியோர்‌ கடனே”

என்றும்‌ திறம்படச்‌ சூத்திரித்தார்‌. ஆசிரியர்‌ கருத்தும்‌ பேராசிரியர்‌ கருத்தும்‌ ஒன்றே. இருவரும்‌ மரபினைக்காத்து ஒரோவழி வந்தடையும்‌ வழக்கினையும்‌ போற்றுமாறு கூறிப்‌ போந்தனர்‌.

இனி, வழக்குத்தானும்‌ மரபோடியைந்தன்றி வாரா. மரபும்‌ வழக்‌கும்‌ உயர்ந்தோர்‌ வழியன்றி வாரா என்பதைத்‌ தொல்காப்பியர் ‌தெளிவாகக்‌ கூறினார்‌. சான்றோர்‌ வழக்கினை எடுத்தோதியும்‌ இழிவழக்கினை இழித்துரைத்தும்‌ தமது நூலினை அழகுறச்‌ செய்தார்‌.


வழக்கெனப்படுவது உயர்ந்தோர்‌ மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்டாகலான”

இதன்‌ கருத்து வழக்கென்று சொல்லப்பட்டது, உயர்ந்தோர்‌ மேலது, நூலின்‌ நிகழ்ச்சி அவர்களிடத்தாகலான்‌ என்பது.

இதுவரை தொல்காப்பியத்திலுள்ள மரபு வழக்குப்பற்றிய குறிப்‌புக்களை எடுத்துக்‌ காட்டினோம்‌. இனி நன்னூலார்‌ கூற்றினை ஆராய்வாம்‌. நன்னூலார்‌ மரபினையும்‌வழக்கினையும்‌ வேறுவேறு வாய்பாடுகளாற்‌ கூறித்தெளிவுபடுத்தினர். 

எப்பொருள்‌ எச்சொலின்‌ எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர்‌ அப்படிச்‌ செப்புதன்‌ மரபே”

எந்தப்‌ பொருளை எந்தச்‌ சொல்லால்‌ எந்த வழியில்‌ அறிவுடையோர்‌ சொன்னார்களோ அந்தப்‌ பொருளை அந்தச்சொல்லால்‌ அந்தவழியிற்‌ சொல்லுதலே மரபு.

கோழிக்குட்டி என்று சொல்லும்‌ வழக்கம்‌ ஒருசார்‌ ஒருகுறிச்சிக்‌கண்‌ வழங்கப்பட்டுவரினுங்‌ கோழிக்குஞ்சு என்றலே மரபு. இந்தமரபினை எந்த வழக்கும்‌ எக்காலத்துஞ்‌ சிதைக்காது.

“கடிசொல்‌ இல்லைக்‌ காலத்துப்படினே” என்று தொல்காப்பியர் ‌சூத்திரித்தமை அவரின்‌ வருங்கால உணர்ச்சியையும்‌ இலக்கணம் ‌வகுப்பதற்கான ஆற்றலையும்‌ பெரிதுங்‌ காட்டுகின்றது. சொற்கள்‌ காலந்தோறுந்‌ தோன்றுவதும்‌ மறைவதும்‌ வேறு பொருள்‌ கொள்ளுவதும்‌ மொழிவளர்ச்சியில்‌ இயற்கையே. மொழிகளெல்லாம்‌ காலப்‌போக்கில்‌ வளருந்தன்மையன;. வளர்வதற்கிசையப்‌ பூரணமான இலக்கணம்‌ வகுத்த பெருமை தொல்காப்பியரைச்சாரும்‌. அதனாலேயே மேற்காட்டிய சூத்திரந்‌ தோன்றலாயிற்று, இதனைத்தழுவியே நன்னூலாரும்‌ “பழையன கழிதலும்‌ புதியன புகுதலும்‌ வழுவல காலவகையினான” என்று சூத்திரித்தும்‌ மரபுக்குமாறாகப்‌ பழையன கழித்‌தலையும்‌ புதியன புகுத்தலையும்‌ அனுமதித்தாரல்லர்‌. சான்றோர்‌ வழியில்‌ வருகின்றனவற்றை மொழிநூல்‌ வகுப்பார்‌ ஏற்றுக்கொள்ளுதல்‌ வேண்டுமென்பதே தெளிவு. தைலம்‌ என்றசொல்‌ எண்ணெய்‌ என்றபொருளுடையது. திலம்‌ என்ற சங்கதமொழியின்‌ தத்திதாந்தமேதைலம்‌  ஆகும்‌. திலம்‌ என்பது எள்ளு. எள்ளிலிருந்து எடுபடும்‌ நெய்க்கே எண்ணெய்‌ என்பர். அதுபோலவே திலத்திலிருந்து எடுபடுவது தைலம்‌, இன்று தைலம்‌ எண்ணெய்‌ என்ற இருசொற்களும்‌ எள்ளிலிருந்து எடுபடாதவற்றையுங்‌ குறிக்கின்‌றன.

குருதைலம்‌ தேங்காய்‌ எண்ணெய்‌

கறுவாத்தைலம்‌ இருப்பெண்ணெய்

கருப்பூரத்தைலம்‌ மண்ணெண்ணெய்‌.

இவ்வாறு மாறுபடவந்தும்‌ எண்ணெய்‌ என்பதனை “எண்ணைஎன்று எழுத ஆன்றோர்‌ அனுமதித்தாரல்லர்‌.

கடல்க்காற்று பால்க்குடம்‌ என்று எழுதிக்காட்டிய பெரியாரைத்‌ தமிழ்‌ உலகம்‌ முழுவதுமே இகழ்ந்துரைக்க ஒருவர்‌ இருவர்‌ அவரைப் ‌புகழ்ந்துரைத்‌ தாரெனினும்‌ அவ்விருவர்கூட அவரைப்பின்பற்றி எழுதினாரல்லர்‌. வழக்கு வழக்கு என்று புகுத்தப்பார்த்தார்கள்‌ ; வாய்க்கவில்லை. மரபுக்குமாறாகக்‌ கழித்தலும்‌ புகுத்தலும்‌ மொழிவளர்ச்சியில் ‌வேண்டற்பாலன அல்ல.

சாமிநாதையர்‌ அவர்கள்‌ மரபுக்குமாறுபட எழுதிய கட்டுரைக்குத் ‌தமிழ்மொழிக்கு அளப்பருந்‌ தொண்டினை அவர்‌ செய்தவிடத்துந்‌ தமிழ்‌ கூறும்‌ நல்லுலகம்‌ கண்டனம்‌ எழுதத்‌ தவறவில்லை. சங்கதமொழி மரபைத்‌ தமிழ்‌ மரபென்று எடுத்துக்காட்டத்‌ துணிந்தனர் ‌ஐயர்‌ அவர்கள்‌. இதனைத்‌ தமிழறிந்தயாவரும்‌ எதிர்த்தனர்‌ ; வெறுத்‌தனர்.

இப்பொழுதும்‌ ஒருசிலர்‌ ஷி, ஸ, ஜ முதலிய சங்கத எழுத்துக்‌களைத்‌ தமிழ்மொழியிற்‌ புகுத்த வழிவகுக்கின்றனர்‌. உரைநடையிலன்‌றிச்‌ செய்யுளிலும்‌ புகுத்துகின்றனர்‌. “தனாது நாட்டித்‌ தங்கோணிறுத்‌தலை” இனிது ஆராய்ந்தே கையாளுதல்‌ வேண்டும்‌. தமிழில்‌ வழங்கும்‌ எழுத்து மரபின்படி இவ்வட எழுத்துக்களுக்கு இடமில்லை. இச்சங்கதஎழுத்துக்கள்‌ ஆதிதொட்டு வழங்குவன அல்ல, இடையில்‌ வந்தவை. காலதேச வித்தியாசத்தால்‌ உண்டானவை, இவற்றை அனுசரித்துச்‌சான்றோர்‌ செய்யுளைச்‌ செய்தார்களல்லர்‌. தமிழ்‌ நெடுங்கணக்‌கில்‌ இவை இதுவரை சேர்க்கப்படவில்லை. ஆகவே இவ்வெழுத்துக்‌களைச்‌ சேர்ப்பது மரபுமன்று ; வழக்குமன்று, ஏனெனில்‌ இவ்வெழுத்‌துக்கள்‌ மரபால்‌ வந்தவையல்ல. வழக்கிலேறியவையுமல்ல என்க.

இனி, சொன்‌ மரபுக்கு வருவாம்‌. சொல்லாக்கம்‌ எவ்வாறு நடைபெற வேண்டுமென்று ஆன்றோர்‌ வகுத்துள்ளார்கள்‌. சொற்களின்‌ முதலில்‌, இடையில்‌, கடையில்‌ என்னென்ன எழுத்துக்கள்‌ அமைந்து வரலாமென்று கூறினார்கள்‌. மரபால்‌ வழங்கிவருஞ்‌ சொற்களை ஆராய்ந்து அவை எழுதப்படுமாறுணர்ந்துகொண்ட பின்னரே இவ்வகை முடிவுக்கு வந்தனர்‌. உயிரெழுத்துக்களெல்லாஞ்‌ சொற்களின்‌ முதலெழுத்‌தாக வரும்‌என்ற முறைமை யாவராலும்‌ ஒப்புக்கொள்ளப்பட்டதே. எல்லா உயிர்மெய்‌ எழுத்துக்களுஞ்‌ சொல்லுக்குமுதலிலே வாரா. மெய்யெழுத்துத்‌ தனித்து முதலில்‌ வராவென்று எடுத்துரைக்க வேண்டியதில்லை. ங, ட, ண. ர, ல,ள, ற,ன முதலிய உயிர்மெய்‌ எழுத்‌துக்கள்‌ சொல்லின்‌ முதலில்‌ வாரா என்பது முந்தையோர்‌ கண்டமுடிபு. அது மரபு. வழக்காற்றில்‌ ஒருசிலர்‌ இதற்குமாறாக எழுதுவதுமுண்டு, இதனை நாம்‌ வழக்கென்று கூறிக்கொண்டு இலக்கணம்‌ அமைக்கவேண்டியதில்லை, ஏனெனில்‌ உயர்ந்தோர்‌, படித்தோர்‌, ஐயந்‌திரி பறக்கற்றோர்‌ இவ்வாறு எழுதுவதில்லை ஆகலான்‌.

மேலுஞ்சில சொற்கள்‌ வழக்காற்றின்‌ பயனாக வேறு வேறு அருத்‌தங்களிலும்‌ உருவங்களிலுந்‌ தமிழ்‌ மொழியில்‌ வந்துள்ளன. இவையெல்லாங்‌ கால இடவேறுபாடுகளினாலாகி, மரபுவழியில்‌ அனுசரிக்கப்‌பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. கற்பு, தொடை, கிழக்கு, முதலியசொற்கள்‌ அருத்தத்திலே மாற்றமடைந்தவை; துண்டம்‌, நாக்கு, சொல்லு முதலியவை உருவத்திலே மாற்றமடைந்தவை. மணம்‌, நாற்றம்‌ என்ற சொற்கள்‌ ஒரே பொருளுடையன எனினும்‌ மணம் உயர்ந்த கருத்திலும்‌ நாற்றம்‌ தாழ்ந்த கருத்திலும்‌ பயன்படுத்தப்‌படுகின்றன. மணம்‌, நாற்றம்‌ என்பனவற்றிற்குச்‌ சான்றோர்‌ நூல்‌களில்‌ வேற்றுமை காண்பதற்கில்லை.

இனி, சொற்றொடர்‌ மரபுக்கு வருமாம்‌. சொற்கள்‌, தொடர்ந்து நின்று பொருள்‌ பயக்குமாற்றினை உணர்ந்து சான்றோர்கள்‌, அவற்‌றினைத்‌ தொகைநிலைத்தொடர்‌, தொகாநிலைத்தொடர்களாக வகுத்து இலக்கண அமைதி கூறினார்கள்‌. இவ்வமைதிகளுக்கு மாறாகப்‌ புதுப்‌புதுச்‌ சொற்றொடர்களை அறியாமை காரணமாக உருவாக்கி உபயோகிக்கின்றார்கள்‌. இது புதியன புகுத்தல்‌ என்ற குற்றத்தின்பாற்படும்‌. இவ்வகைக்‌ குற்றந்‌ தப்பான மொழிபெயர்ப்பு வகையாற்‌ புகுத்தப்‌படுகின்றன. இவை தடுக்கப்படுதல் வேண்டும்‌.

தமிழ்ப்பேசும் மக்கள்‌.

வாக்காளப்‌ பெருமக்கள்‌.

ஆசிரியத்‌ தொழில்‌.

பன்றியிரும்பு,

மாணவமன்றம்‌.

இது ஒரு மக்கள்‌ பிரசுராலய வெளியீடு.

சுருக்கச்‌ சரித்திரம்‌.

ஒரு பண்பாட்டு வரலாறு.

தேசீய இலக்கியம்‌.

சிருட்டி இலக்கியம்‌.

கடன்‌ வாங்கிக்‌ கல்யாணம்‌.

இவ்வகைச்‌ சொற்பிரயோகந்‌ தகாத வகையில்‌ அதிகாரத்தின்‌ பேரிற்‌ புகுத்தப்படுகின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழ்‌ மக்களின்‌ கடமையாகும்‌. இவற்றை வழங்கவிட்டுப்‌ பின்னர் ‌மரபாக்கிக் கொண்டால்

“மரபுநிலை திரியிற்‌ பிறிதுபிறிதாகும்‌”

என்ற தொல்காப்பியனார்‌ கூற்றுப்படி இதுவரை தோன்றிய மலையாளம்‌, கன்னடம்‌, தெலுங்கு இவற்றோடு இன்னுமோர்‌ தமிழ்க்கிளை உண்டாகும்‌. இக்கிளையும்‌ பலவாறாகப்‌ பிரியினும்‌ பிரியும்‌, இவ்வகைப் ‌பிரயோகங்கள்‌ அரசியல்‌ வாதிகளினால்‌ அதிகம்‌ பயிலப்படுவதனால்‌ இடதுசாரித்‌ தமிழ்‌, வலதுசாரித்தமிழ்‌ என்று பெயரிடப்படுதலுங்‌கூடும்‌. அன்றியும்‌ பத்திரிகைத்தமிழ்‌, சினிமாத்தமிழ்‌, அரசியற்றமிழ் ‌என்றும்‌ வகைப்படுதல்‌ கூடும்‌.

ஆகவே சிவஞானமுனிவர்‌ கூற்றுப்படி,

தொல்லாசிரியர்‌ வழக்கே வழக்கு; பிற்காலத்து வேறுபட வழங்கப்‌படுமாயின்‌ அவ்வழக்கு இலக்கணத்தோடு பொருந்தாதென விலக்கி மரபையும்‌ வழக்கையும்‌ போற்றல்‌ வேண்டும்‌.


Comments

Popular posts from this blog

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு