இலக்கிய நுகர்வு

இலக்கிய நுகர்வு


லக்கியம்‌ உண்மையை உணர்த்துவது; கற்பனையோடியைந்து வருவது. உண்மை என்றுமுள்ளது: ஆனால்‌, உலகத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும்‌ உண்மையெனல்‌ வழக்கு. இந்த உண்மையை மாத்‌திரம்‌ உணர்த்துவன வரலாறுகளாகும்‌. இலக்கியம்‌ என்றுமுள்ள உண்மையைக்‌, கற்பனை யோடியைத்துக்‌ கூறுவதாயினும்‌ உலகத்து நிகழும்‌ நிகழ்ச்சிகளோடொப்பதொரு தன்மையையுமுடையதாதல்‌ வேண்‌டும்‌. எனவே, பிரத்தியட்ச உலக நினைவுங்‌ கற்பனையுலகக்‌ காட்சியுமாகிய இருவகையும்‌ இடம்பெற அமைக்கப்படுவது இலக்கியமாகும்‌, இங்ஙனம்‌ பிரத்தியட்ச உலக நிகழ்ச்சிகளோடியையாத இலக்கியம்‌ சமூகத்‌ தொடர்பற்றதாகிவிடும்‌. இதுபோலவே, இலக்கியக்‌ கதாபாத்திரங்கள்‌ உண்டாக்குங்‌ கற்பனை உலகிற்‌ சிறிது நேரம்‌ உவந்துவாசஞ்செய்ய இலக்கியம்‌ இடமளியாவிட்டால்‌ இலக்கிய இன்பமும் ‌அதனால்வரும்‌ பயனும்‌ மக்களுக்குக்‌ கிடையாமற்போய்விடும்‌. இலக்‌கியத்துக்கு இத்தகைய கற்பனையும்‌ அவ்வுலக சஞ்சாரமும்‌ ஏன்‌இருக்கவேண்டுமெனில்‌, மனிதனிடத்துள்ள தீய சுபாவங்களை நல்லனவாக மாற்றச்‌ செய்யும்‌ இயல்பு இலக்கியத்துக்கு இன்றியமையாமையின்‌ என்க. இது கற்பனையாலும்‌ அவ்வுலக சஞ்சாரத்தாலும்‌ ஏற்‌படுகிறது.

Tamil Article


தனக்குத்‌ துன்பஞ்செய்தவனைத்‌ தண்டித்தல்‌ வஞ்சந்தீர்க்கும்‌முறை. அது சில சமயங்களிலே நிகழ்வதில்லை. பாண்டவர்களின் ‌செல்வத்தையும்‌ பெருமையையும்‌ கண்டுபொறாமையுற்றதுரியோதனன்‌,

வஞ்சனை கொண்டேயாதல்‌ வாரண மணித்தேர்‌ வாசி

நஞ்சனையவராலாதல்‌ நாளையே அழித்தல்வேண்டும்‌” என்று தன்‌மனக்கருத்தைக்‌ கூறினான்‌. இதில்‌ வஞ்சனையாலாவது போரினாலாவது பாண்டவரை அழித்தல் வேண்டுமென்று கூறப்படுகிறது. இதற்குமாறாக,

வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால்‌ வெல்ல

அஞ்சினமாயினன்றோ”, என்று கன்னன்‌ கூறுகிறான்‌. சகுனியோ, “தப்பறச்‌ சூது கொண்டு, தகிப்பதே கருமம்‌”, என்று கூறுகிறான்‌. இவற்றுள்‌, சகுனியின்‌ முடிவு தீமையானது, வெறுக்கப்படத்தக்கது, என்பதை இலக்கியங்கள்‌ உணர்த்தல் வேண்டும்‌. தீய சுபாவங்களை நல்‌லனவாக மாற்றப்பழக்கும்‌ இயல்பு இலக்கியத்துக்கு இருத்தல்வேண்‌டும்‌. இதனாலேதான்‌, உலக நிகழ்ச்சிகளை அப்படியே கூறாது, அதே நேரத்து உலக நிகழ்ச்சிகளுக்கு முற்றும்‌ முரணாகியும்‌ விடாது கற்பனையுடன்‌ இயைந்த நிலையான உண்மையை உணர்த்தவேண்டிய கடமை இலக்கியத்துக்கு உண்டானது.

நேரடியாக எதிரிக்குத்‌ தீங்கு செய்யமுடியாதபோது மனத்திலே கோபம்‌, இகழ்ச்சி, அருவருப்பு, புறங்கூறுவது முதலிய மனக்கிளர்ச்சிகளும்‌ நன்மைசெய்ய முனையுமிடத்து அன்பு, பத்தி, உவகை முதலிய மனக்கிளர்ச்சிகளும்‌ உண்டாகின்றன. இவைகளைக்‌ கதாபாத்திரங்களில் ‌அமைத்து இலக்கியங்கள்‌ விளக்குகின்றன. இவை இலக்கியத்துக்குச் ‌சுவையையூட்டுகின்றன.

இலக்கியம்‌ மனிதனை நல்வழிப்படுத்த அறங்களை உபதேசிக்கிறது; அவ்வற உபதேசத்தை மக்கள்‌ உள்ளங்‌ கொள்வதற்காக உலக நிகழ்ச்‌சிகளுக்குப்‌ பெரிதும்‌ மாற்றமில்லாது கற்பனை வளத்தைக்‌ கலந்து அவற்‌றுடன்‌ சுவைகளையூட்டி அவர்களறியாமலே அறவழிப்பட வழிகாட்டுக்‌கிறது, இதுவே உண்மை இலக்கியம்‌.

முற்காலத்து இலக்கியம்‌ அற உபதேசங்களாகவே இருந்தது. அவ்வுபதேசங்கள்‌ மக்கள்‌ மனத்தைக்‌ கவராமையால்‌, அதற்குக்‌ கவர்ச்சியூட்டத்தக்கதாக இலக்கியம்‌ அகம்‌,புறம்‌, பத்தி எனப்பகுக்கப்பட்டுக்‌ கற்பனையுஞ்‌ சுவைகளும்‌ புகுத்தப்பட்டன. அகப்பொருள்‌ இலக்கியங்‌களும்‌ புறப்பொருள்‌ இலக்கியங்களுந்‌ தெய்வ சம்பந்தமான இலக்‌கியங்களும்‌ உலக நிகழ்ச்சிகளுடனும்‌ பொருந்துமாறு ஆக்கப்பட்டன. பின்னர்‌, இலக்கியங்கள்‌ மேலுஞ்‌ சுவை பயப்பதற்காகவும்‌ உலக நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுவதற்காகவும்‌ அவை காவியவடிவம் ‌பெற்றன. காவிய வடிவத்தின்‌ ஆரம்பமாகக்‌ கோவைகள்‌ தோன்றியிருக்கலாம்‌.

இலக்கியங்களை மக்கள்‌ அநுபவிக்க உதவியாகச்‌ செய்யுள்களில் ‌அணிகள்‌ இடம்பெற்றன. அணி என்றால்‌ என்ன? ஒருவிடயத்தைச்‌ சொல்வதற்கு உதவக்கூடிய அமைப்புமுறை, அஃதாவது கேட்போர் ‌இரசித்து மகிழுமாறுகூறும்‌ முறையாகும்‌. அது விடயத்துக்குத்தக்கதாக அமையும்‌. நாம்‌ ஒருகருத்தை வெளிப்படுத்தும்போது அது ஏதாவது ஓர்‌ அணியுடன்‌ தொடர்புடையதாகவே இருக்கும்‌, அணி, செய்‌யுளில்‌ இருப்பது போலவே உரைநடையிலும்‌ இருக்கும்‌, ஒருசெய்யுளை நாம்‌ பாடும்போது நம்மையறியாமலே ஏதாவது ஓர்‌ இராகத்திலோ அல்லது பல இராகங்களிலோ பாடுகிறோம்‌ என்பதைப்‌ பலர்‌ உண்‌மையாக உணர்வதில்லை. இராகம்‌, உணராதாரும்‌ இராகம்‌ பாடநேர்வதுபோல, அணியை உணராதாரும்‌ அணியுடனேயே பேசுகிறார் ‌என்பது உண்மை.

எனவே, புலவன்‌ இலக்கியப்‌ பொருளாகிய அறத்தையும்‌ அதனை விளக்கு தற்குதவியாக்கத்தக்க கதாபாத்திரங்களையும்‌ அக்கதாபாத்திரங்கள்‌ அவற்றைக்‌ கூறவேண்டிய முறையையும்‌ மனத்துக்‌ கொண்டு இலக்கியம்‌ அமைக்கிறான்‌. இம்மூன்றுந்‌ தக்கமுறைப்படி இயைபுடடின்‌ அது உயர்தர இலக்கியமாகிறது. பொதுமக்கள்‌ பிந்திய இரண்‌டனையுமே இலக்கியமென்றெண்ணுவர்‌. ஏனெனில்‌, கதாபாத்திரங்‌களும்‌ அவற்றின்‌ வெளியீடுகளும்‌ அவர்களுக்கு மகிழ்ச்சியையும்‌ இரசனையையுங்‌ கொடுக்கின்‌றமையானென்க, இத்தகையோர்‌ இலக்கியம்‌ மகிழ்ச்சிக்கே என்பர்‌. அது அவர்களைப் பொறுத்தமட்டிற்‌ சரியாகும்‌, ஒருவனின்‌ தீய குணங்களை நீக்க வழிவகுப்பது அதனுட்‌ பொதிந்‌துள்ள அற உபதேசமாகும்‌. அந்த அறம்‌ மட்டும்‌, கூறப்படின்‌ அதுபயன்‌ தராது. அது பயன்‌ தருதற்குக்‌ கற்பனையும்‌ அணிச்சேர்க்கையும்‌ அவசியமாகின்றன. ஏனெனில்‌, இவையே மனக்கிளர்ச்சியையும்‌ ஆவலையும்‌ தூண்டுதலின்‌ என்க. இராமன்‌ வில்லை எடுத்து வளைத்தான்‌ அது உடனே முறிந்தது, என்று கூறுவதைவிட வில்‌ எடுத்தது கன்டார் ‌இற்றது கேட்டார்‌”, என்றுகூறும்போது ஓர்‌ இரசனை ஏற்படுகிறது.

இராமனுக்கு இராச்சியம்‌ கிடைப்பதிற்‌ பொறாமை கொண்ட கூனி, அதற்கான முறையிற்‌ கைகேயிக்குத்‌ தீயபோதனைகளைப்‌ புகட்டி, பரதனுக்கு நாட்டாட்சியைப்‌ பெற்றுக்கொடுக்குமாறு,

மூத்த வற்குரித்‌ தரசெனு முறைமையி னுலகங்

காத்த மன்னனி லிளையனன்‌ றோகடல்‌ வண்ணன்

ஏத்து நீண்முடி புனைவதற்‌ கிசைந்தன னென்றால்

மீத்த ருஞ்செல்வம்‌ பரதனை விலக்குமா றெவனோ” என்று கூறுகிறாள்‌. அஃ தாவது: “அரசு மூத்தவனுக்கேயுரியது” என்று நீ(கைகேயி) கூறும்‌ முறைப்படி உலகத்தை (அயோத்தியை) இதுகாறும்‌ காத்த தசரதச்‌ சக்கரவர்த்தியிலும்‌ பார்க்க இராமன்‌ இளையவனன்றோ. அப்படியிருந்தும்‌ (மூத்தவனாகிய தசரதன்‌ இருக்கவும்‌) தான்‌ முடி சூடிஅரசாள இராமன்‌ இசைந்திருக்கும்போது, இராமனிருக்க இராமனிலும்‌ இளையவனாகிய பரதன்‌ அந்த அரசச்‌ செல்வத்தை அடையாமல் ‌தடுப்பது எவ்வாறு பொருந்தும்‌ ? என்று கூனிகேட்கும்போது அந்த.அணி அமைப்பு - உரைமுறை நமக்கு மகிழ்ச்சியைத்‌ தருகிறது. அத்‌துடன்‌ ஒருவித கலக்க நிலையையும்‌ நமக்குத்‌ தரும்போது, கைகேயிகலங்கி மனம்‌ மாறாதிருக்கமுடியுமா?

தருமத்தின்‌ பயன்‌ இதுவென்று ஆகம நூலாற்‌ கூறவேண்டுவதில்லை, சிவிகையை ஊர்ந்தானையும்‌ அதனைச்‌ சுமந்து செல்பவனையும்‌ நோக்கிக்காட்சியானே அறிந்து கொள்க, என்ற பொருளில்‌,

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தா னிடை”

என்று வள்ளுவா்கூற, அதனை மறுப்பார்போல, மற்றொரு புலவர்‌;

அறத்தா றிது வென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தா னிடையை மறுத்தார்‌ சம்பந்தர்‌,” என்கிறார்‌. சம்பந்தப்பெருமான்‌ ஏறிவந்த சிவிகையை அப்பர்‌ சுவாமிகள்‌ சுமந்‌தார்‌. அங்ஙனமாகில்‌ அவ்விருவருள்‌ அறம்‌ புரிந்தார்‌ யார்‌? மறம்‌ புரிந்தார்‌ யார்‌? எனவினாவி அக்குறட்கருத்தை மறுப்பார்போல அவ்‌விரு நாயன்மார்‌ இயல்புகளையுங்‌ காட்டும்போது செய்யுள்களில்‌ அணிஇடம்பெறலின்‌ உயர்வைக்‌ காட்டுகிறது. எனவே, இலக்கியத்தை நாம்‌ அணிகள் மூலம்‌ இரசிக்கின்றோம்‌. அம்மட்டன்று; இலக்கியத்தை இரசிப்பதற்கு அவ்விலக்கியங்களிற்‌ கூறப்படும்‌ கதாபாத்திரங்களாகவும்‌ நாம்‌ மாறவேண்டும்‌. அஃதாவது தம்மைமறந்த நிலைவேண்டும்‌. நாம்‌ நம்மை மறந்து கூனியாக ஆகாவிட்டால்‌, “தசரதனிருக்க இராமன்‌ அரசாளலாமெனில்‌, இராமனிருக்கப்‌ பரதன்‌ அரசாளலாகாதா? என்று கூனி) கைகேயிக்குக்‌ கூறியதை இரசிக்கமுடியாது. அவ்வாறு இரசிக்காவிட்டால்‌ இலக்கியத்தைப்‌ படிப்பதனாற்‌ பயனில்லை.

நாம்‌ அவ்விலக்கியத்திற்‌ கூறப்பட்ட கதாபாத்திரமாக மாறிஇலக்கியத்தை அநுபவிக்கும்போது நம்மையறியாமலே நாம்‌ கதாபாத்‌திரங்களின்‌ தாரதம்மியத்தை உணர்ந்து கொள்கின்றோம்‌. அப்‌பொழுது அவ்விலக்கியத்திற்‌ கூறப்பட்ட தருமங்களும்‌ அவற்றின்‌ பேதங்களும்‌ நம்மில்‌ ஊறிவிடும்‌. அத்தகைய ஊற்றமொன்று நம்‌மிடையே ஏற்பட்டிருப்பதை நாம்‌ உணரும்போதுதான்‌, அந்த இலக்‌கியம்‌ நம்முடன்‌ கலக்கிறது. மற்றைய இலக்கியங்களோடு ஒப்பிட்‌டுப்‌ பார்க்கும்‌ மனப்பான்மையும்‌ தோன்றுகிறது.

காவியங்களிற்‌ கதாநாயகன்‌ என ஒருவனோ கதாநாயகி என ஒருத்‌தியோ இடம்பெறுகின்றமை எல்லாரும்‌ அறிந்ததே. இக்கதாபாத்‌திரம்‌ எவ்வாறு இருத்தல்‌ வேண்டும்‌ என்பதை இலக்கண நூல்கள் ‌அஃதாவது அணி நூல்கள்‌ தெரிவிக்கின்றன. காப்பியங்களுக்கு இலக்‌கணங்‌ கூறும்போது, அக்காப்பியங்களுட்‌ கூறப்பட வேண்டியனவற்‌றையும்‌ அவற்றின்‌ இயல்பையும்‌ இன்னும்பலவற்றையுந்‌ தண்டி முதலிய இலக்கணநூல்கள்‌ கூறுகின்றன. இவற்றினுதவியாலே நாம்‌ இலக்‌கியத்தை அநுபவிக்கமுடிகிறது.

இலக்கியத்திற்‌ கூறப்படும்‌ பொருளாகிய அறம்‌ பற்றிய சிந்தனையை ஊட்டுவதற்காகவே இவ்வாறு இலக்கியம்‌ பலபட விரிந்தது. அவ்வறம் பற்றிய சிந்தனையும்‌ வாசகர்களுக்கு வேறு வேறு விதமாகத்‌ தோன்றலாம்‌. “அணி செய்‌ காவியம்‌ ஆயிரங்‌ கற்பினுங்‌ ஆழ்ந்திருக்குங்‌ கவியுளங்‌ காண்சிலர்” எனப்பாரதியார்‌ கூறியபடி கவியின்‌ உட்கிடக்‌கையை அறியாவிடின்‌, இலக்கியப்‌ படிப்பாற்‌ பயனில்லை.

தள்ளரிய பெருநீதித்‌ தனியாறு புகமண்டும்‌

பள்ளமெனும்‌ தகையானை பரதனெனும்‌ பெயரானை

எள்ளரிய குணத்தானும்‌ நிறத்தானும்‌ இந்நின்ற

வள்ளலையே அனையானை” என விசுவாமித்திரர்‌ இராமனாதியரின்‌ வரலாற்றைச்‌ சனகனுக்குக்‌ கூறுதலை நோக்குமிடத்து, பரதனும்‌ இராமனுஞ்‌ சமமானவர்கள்‌ என்ற எண்ணந்‌ தோன்றும்‌. பரதன்‌ ஓர்‌ உத்தம பாத்திரம்‌; நீதியின்‌ இருப்பிடம்‌; தருமத்தம்பி. எனவே, நிறத்தான்‌ மட்டுமன்றிக்‌ குணத்தாலும்‌ அவன்‌ இராமனுக்கு இணையானவன்‌ எனவிசுவாமித்திரர்‌ கூறுகிறார்‌. அத்தகைய பரதனை, “மும்மையின்‌ நிறை குணத்தவன்‌ நின்னினும்‌ நல்லனால்‌ குறைவிலன்‌” எனப்பரதனே முடிசூடுவான்‌ என்று இராமன்‌ கோசலைக்கு அறிவித்தபோது, கோசலை பதிலாகக்கூறுகிறாள்‌. இப்பாடற்பகுதிமூலம்‌ பரதன்‌, இராமனிலும்‌ மும்மடங்கு சிறந்தவன்‌; குறைவிலன்‌, எனக்கோசலை பரதனைப்‌ புகழ்ந்து கூறுகிறாள்‌.

கைகேயி உத்தரவுப்படி இராமன்‌ காட்டுக்குச்‌ செல்ல, அதனைப்‌பொறாது தாயைத்‌ தூற்றி இராமனைப்பின்தொடர்ந்து, தவவேடத்‌துடன்‌ இராமனை அழைத்துவரவந்த பரதனின்‌ தன்மையைக்‌, குகன்‌கண்டபோது,

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை யென்ன நீத்துச்‌ சிந்தனை முகத்திற்‌ றேக்‌கி

போயினை யென்ற போது புகழினோய்‌ தன்மை கண்டால்

ஆயிரம்‌ இராமர்‌ நின்கேள்‌ ஆவரோ”

என்பதால்‌ இராமனைக்காட்டிலும்‌ பரதன்‌ பலமடங்கு சிறந்தவன் ‌எனக்கூறுகிறான்‌. இவ்வாறு பரதன்‌ பலராலும்‌ புகழப்பட்டு, எவராலும்‌ வெறுக்கப்படாதிருக்க, இராமன்‌,

ஆடவர்‌ நகையுற ஆண்மை மாசுற

தாடகைஎனும்‌ பெயர்த்‌ தைய லாள்படக்

கோடிய வரிசிலை இராமன்‌” என, கூனியாலும்‌,

இராமர்‌ வாலியை வதைத்த காலத்து, “வாலியைப்‌ படுத்தாயலை, மன்னற வேலியைப்‌ படுத்தாய்‌ விறல்‌ வீரனே,” என, வாலியாலும் ‌இழிவு படுத்தப்பட்டிருப்பதால்‌, பரதன்‌ இராமனிலுஞ்‌ சிறந்த கதாபாத்திரம்‌ எனக் கூறநேரிடும்‌. “இராமன்‌ தாடகை என்னும் ‌பெண்ணைக்‌ கொன்றமையால்‌ ஆண்மை மாசுற்றது”, எனக்கூனியும்‌, “மறைந்து நின்று கொன்றமையால்‌, அறவேலியை அழித்தாய்” என, வாலியும்‌ இராமனை இகழ்தலால்‌ இராமன்‌ இழிந்த கதாபாத்திரமாகத்‌ தோன்றும்‌. ஆயின்‌, “ஆழ்ந்திருக்கும்‌ கவியுள்ளங்” காணவேண்டுவது நமது கடமையேயன்றி, கதாபாத்திரங்களின்‌ பேச்சு நமக்கு உண்மையை உணர்த்தா. எனவே, கவியின்‌ கூற்றே நமக்கு ஆதாரமாதல்‌ வேண்டும்‌.

இராமன்‌ காட்டுக்குப்‌ பதினான்கு ஆண்டு செல்லவும்‌ பரதன்‌ நாடாளவுந்‌ தசரதனிடம்‌ வரம்‌ வேண்டுகிறாள்‌ கைகேயி. “பரதன்‌நாட்டை ஆளட்டும்‌. இராமன்‌ காட்டுக்குச்‌ செல்வதை மட்டும் ‌வேண்டாதே” “மண்ணே கொள்‌நீ, மற்றைய தொன்றும்மற” என்று தசரதன்‌ வேண்டினான்‌. அதற்கு இரங்காளாகிய கைகேயியை நோக்கி,வசிட்டர்‌ முன்னிலையில்‌,

சொன்னேன்‌ இன்றே இவள்‌ தாரமல்லள்‌ துறந்தேன்

மன்னேயாவான்‌ வரும்‌ அப்பரதன்‌ தனையும்‌ மகனென்‌

றுன்னேன்‌ முனிவா அவனும்‌ ஆகானுரிமைக்கு”

என்றுகூறி உயிர்‌ விட்டான்‌. தசரதன்‌ கூறியவாறே பரதன்‌ தசரதனுக்குக்‌ கடமை செய்வதினின்றும்‌ நீக்கப்படுகிறான்‌; ஆயினுந்‌ தசரதனின்‌ இந்த முடிவு சரியான முடிபாகுமா? இதற்கு இத்தண்டனை ஏற்குமா? அரக்கர்‌ பாவமும்‌ அல்லவர்‌ இயற்றிய அறமுந்‌ துரக்கநல்லருளைத்‌ துறந்த கைகேயி இத்‌ தண்டனைக்குரியவளா? என்பது, அறிஞர்க்கு ஆராய்ச்சி தருவதொன்று.

மாமனூர்‌ சென்றிருந்த பரதன்‌, முனிவன்‌ அறிவித்தலின்‌ படி. ஊர்‌திரும்புகிறான்‌, அயோத்தியின்‌ நிலைமையை உணர்ந்து, விபரங்களைத்‌தாய்‌ மூலம்‌ அறிந்தவுடன்‌ தாயை,

“தாயீரல்லீர்‌”, “பேயீர்‌” என்று வைதான்‌.

தசரதன்‌ எவ்வாறு கைகேயியைத்‌ தன்‌ மனைவியல்லள்‌, என்று கூறினானோ அதுபோலவே, பரதனும்‌ கைகேயியை தன்‌ தாய்‌ அல்லள்‌, எனக்‌ கூறுகிறான்‌. எனவே, பரதனுந்‌ தசரதனும்‌ ஒரே தன்மையான செயல்களைச்‌ செய்துள்ளனர்‌ என்று கூறலாம்‌.

இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்‌ இராமன்‌ செய்ததென்ன? “பின்னவன்‌ பெற்ற செல்வம்‌ அடியனேன்‌ பெற்றதன்றோ”, “மன்னவன்‌ பணியன்றாகில்‌ நும்பணி மறுப்பனோ”, என்று கூறியதன்‌றி, “பரதன்‌ நாடாளுவான்‌” எனக்கேள்வியுற்றபோது “அன்றலர்ந்த செந்‌தாமரையினை வென்ற” முகத்தினையும்‌ உடையனாயினான்‌. இவ்வாறு இராமன்‌ மற்றவர்களைக்‌ காட்டிலுந்‌ தான்‌ சிறந்து காட்டுவதோடு, தசரதனும்‌ பரதனும்‌ செய்தன, சரியாகா வென்பதையுங் ‌காட்டியுள்ளான்‌.

இராம இராவண யுத்தம்‌ முடிந்தவுடன்‌, தசரதன்‌ இராமன்‌ முன்தோன்றி (இது கற்பனை உலக சஞ்சாரம்‌. இது அறத்தை நிலைநாட்ட அவசியமாய்‌ இலக்கியத்திற்‌ பிரதான அம்சமாகிறது. இதில்‌லையேல்‌ இலக்கியமில்லை) விரும்பிய வரங்களைக்‌ கேட்குமாறு கூற,



“தீயளென்றுநீ துறந்த என்‌ தெய்வமும்‌ மகனும்

‌தாயுந்‌ தம்பியுமாம்‌ வரந்‌ தருகென” வேண்டுகின்றான்‌. பகைவென்று, தேவர்கலி தீர்த்து நின்ற இராமன்‌, அறம்‌ வளர்க்க உலகிற்றோன்றிய உத்தம பாத்திரமாகலின்‌ தசரதனாற்‌ செய்யப்பட்ட ஒரு முறைகேட்டை (கைகேயி, பரதன்‌, என்போரைத்‌ துறந்தமையை) உலகுக்கு உணர்த்துகிறான்‌. மனைவியைத்‌ துறந்தது அறமாகா தென்‌பதை, மிகவுஞ்‌ சிறந்த முறையிலே - தந்தையை மகன்‌ கேட்கவேண்‌டிய முறையிற்‌ கேட்டு அக்குற்றத்தை நீக்குகின்றான்‌. பரதனுந்‌தாயை அவமதித்து அத்தகைய கு.ற்றமொன்றைச்‌ செய்துள்ளானாகலின்‌ அக்குற்றமும்‌ நீக்கப்படவேண்டியதென்பதையுங்‌ காட்டியுள்‌ளான்‌. குரோதம்‌, வெறுப்பு முதலிய தீய சுபாவங்கள்‌ எந்த அளவில்‌ இருப்பினும்‌ அவை நீக்கப்படவேண்டியன என்பதை உலகுக்கு உணர்த்திய இராமன்‌, கதா பாத்திரங்களுட்‌ சிறந்தவன்‌ என்பதைக்‌ கம்பர்‌ இச்சம்பவமூலங்‌ காட்டியுள்ளார்‌. இதுவே ஆழ்ந்திருக்குங்‌கவியுளங்‌, காணலாகும்‌ எனக்கொள்ளலாம்‌.

நமது வாழ்விலே பிரச்சினைக்குரிய சங்கடங்கள்‌ நேரிடும்போது உத்தம கதா பாத்திரங்களை, அவற்றின்‌ செயல்களை மனத்துட்கொண்டு அதன்‌ துணைகொண்டு வாழ இலக்கியங்கள்‌ உதவவேண்டும்‌. நம்‌ஆக்க இலக்கியங்களும்‌ இந்த உட்கிடக்கையை உள்ளனவாக இருக்‌கும்போதுதான்‌ இலக்கியங்களாகும்‌ என்பதை தாம்‌ மனத்துட்கொள்ளல்வேண்டும்‌. அங்ஙனம்‌ மனத்துட்‌ கொள்ளவில்லையேல்‌ அதுபொதுமக்களுக்குச்‌ செய்யும்‌ ஒரு துரோகமாகும்‌.

இலக்கிய கருத்தாக்கள்‌, அறங்களை மட்டுமன்றி, ஒவ்வோர்‌ சிறியஅம்சங்களைக்கூட முறைப்படி அமைப்பர்‌.

தசரதனிடம்‌ வரங்கேட்க முனைந்த கைகேயி, தன்‌ அலங்காரங்‌களைச்‌ சிதைத்து, “பூவுதிர்ந்ததோர்‌ கொம்பெனப்‌ புவிமிசைப்‌ புரண்‌டாள்‌”; அவள்தன்‌ அலங்காரங்களைச்‌ சிதைக்கும்போது “மதியினின் ‌மறுத்துடைத்துப்பாள்‌ போல்‌ அளகவாணுதல்‌ அரும்பெறல்‌ திலதமும்‌ அழித்‌தாள்‌,” மதிக்கு மறு இயற்கை. இதை அழிப்பது இயற்கை விரோதம்‌. எனவே, அதன்பின்‌ இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள்‌ நிகழ்ந்‌தன. ஆயின்‌, இராமன்‌, இராவணனைக்‌ கொன்றபின்‌, அநுமன் சீதையை அடைந்து அவளை வாழ்த்தி நிகழ்ந்ததைக்‌ கூறினன்‌. அப்‌பொழுது அவள்முகம்‌, “வருகலைக்கு வரும்மறுமான்‌ உருபொருகலைக்‌ குலம்பூத்தது போன்றனள்‌” அதனால்‌ மதியின்மறு, மறுபடியும்‌ மற்றொரு பெண்ணிடம்‌ ஏற்பட்டது. இதனாலே நன்னிகழ்ச்சிகள்‌ ஆரம்பிக்கத்‌தொடங்கின. இலக்கியங்கள்‌ இவ்வாறிருக்க, இக்காலத்து இலக்கி‌யங்கள்‌ எனப்படுவன முன்‌ பின்‌ முரணிக்‌ கிடப்பதைக்‌ கண்டுங்‌ காணாதார்‌ போல வாழுங்‌ காலம்‌ மாறவேண்டும்‌.

நாம்‌ வாழ வழிகூறும்‌ நூல்களுட்‌ சிறந்தது திருக்குறள்‌ எனலாம்‌. திருக்குறளில்‌, இல்லறவியலிற்‌ கூறிய செய்ந்நன்றியறிதல்‌, நடுவுநிலைமை, பிறன்‌ மனை நயவாமை, அழுக்காறாமை முதலியனவும் ‌துறவறவியலிற்‌ கூறிய கொல்லாமை, புலாலுண்ணாமை, கூடா ஒழுக்‌கம்‌ முதலியனவும்‌ அறிஞர்‌ சிந்தனைக்குரியவை. ஒவ்வோர்‌ நிலையிலுள்‌ளாரும்‌ அநுட்டிக்கக்கூடிய ஆகக்குறைந்த அறங்களே திருக்குறளுட்‌ கூறப்பட்டுள்ளன என்று கூறுதல்‌ ஓரளவு பொருந்தும்‌ போலும்‌.

ஆக்க இலக்கியம்‌ படைக்கும்‌ அறிஞர்கள்‌ இதனை மனத்துட்‌கொண்டு தம்‌ தொண்டை ஆற்றுவார்களாக.


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு