பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு
பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு
பவளவிழாக் காண்கிறார் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு ( 24.09.2025 புதன்)
![]() |
| பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு |
யாழ் தீவக மண்ணின் மைந்தர் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் மேனாள் பிரதி முதல்வர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு 24.09.2025 (புதன்) இல் அகவை 75 எய்தி பவளவிழாக் காண்கிறார்.
தீவகத்தின் அல்லைப்பிட்டிக் கிராமத்தில் செல்லையா - இலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனாக 24.09.1950 இல் பிறந்தவர் இவர்.
அதே ஊரைச் சேர்ந்த விஜயலட்சுமியைத் திருமணம் செய்து தற்போது நல்லூரில் பண்டாரிக்குளம் ஒழுங்கையில் அமைதியாகவும் எழிமையாகவும் வாழ்ந்து வருகின்றார். நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நற்றமிழ் ஆசிரியர்களை வழிப்படுத்தி, உருவாக்கிய பெருமை அவருக்குரியது.
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் படிக்கும் காலத்தில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர். தொடர்ந்து வேலணை மத்திய கல்லூரியில் சாதாரணதரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்று சித்தியடைந்தார்.
தனது 18 ஆவது வயதில் வாழ்வாதாரத்திற்காக சிறு சிறு தொழில்களை மேற்கொண்டார். அதில் குறிப்பாக இலங்கை போக்குவரத்துச் சபையில் நடத்துநராகப் பணி புரிந்தார். அப்போதெல்லாம் உயர்தரக் கலைப்பாடங்களுக்குரிய புத்தகங்களைப் படித்தபடிதான் பஸ் நடத்துநர் பணியை மேற்கொண்டாராம். இந்நிலையில் சுயமாகவே கற்று கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சை எழுதிச் சித்தியடைந்தார்.
1984 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டதாரியாகி 1985 இல் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1999 இல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இணைக்கப்பட்ட விரிவுரையாளரானார். 2000 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்வாங்கப்பட்டார். 60 ஆவது அகவையில் சேவையில் இருந்து இளைப்பாறுகை பெற்றாலும் தொடர்ந்து வருகை விரிவுரையாளராக ஆசிரியர் கலாசாலை, தேசிய கல்வி நிறுவக டிப்ளோமா கற்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழில் முதுமாணி கற்கை நெறிகளில் சேவை நல்கினார்.
டானியலின் எழுத்துகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். மரபார்ந்த இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் தேர்ச்சி மிக்கவர். இதனால் தமிழ்ப்பண்டிதர் பட்டத்தையும் பரீட்சைக்குத் தோற்றிப் பெற்றுக் கொண்டார்.
உடுமலை நாராயண கவியின் திரையிசைப் பாடல்களில் ஆழ்ந்த தேடல் மிக்கவர். இதனால் உடுமலை தந்த கவிமலை என்ற ஆராய்ச்சி நூலை எழுதி அதனைத் தமிழகத்தில் வெளியீடு செய்தார். தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள் என்ற 1300 பக்கங்கள் கொண்ட நூல் அவரது மிகப்பெரிய தேடலின் வெளிப்பாடு. தீவக மண்ணிற்கு அவர் செய்த மிகப்பெரிய ஆவணமாக்கற்சேவை இந்நூலாக்கம் என்றால் மிகைப்படாது. இந்நூல் வடமாகாண பரிசையும் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுக்கொண்டது.
இதுவரை 24 நூல்களை அவர் ஆக்கியுள்ளார். இதில் ஐந்து பாடநூல்கள் ஆகும். ஏனையவை பெரும்பாலும் ஆய்வு சார்ந்த படைப்புகள். இந்நூல்களில் பல விருதுகளைப் பெற்றுள்ளன.
இவரது 24 ஆவது நூல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டைக் கௌரவிக்கும் வகையில் வடக்கின் ஆசிரியர் கலாசாலைகள் என்ற பொருளில் அமைந்தது. இதனை 2023 இல் வரலாற்று நூலாக வெளியீடு செய்தார்.
தான் உயர்ந்ததோடல்லாமல் மற்றையவர்களையும் உயர்த்திப் பார்ப்பதில் அலாதிப்பிரியம் கொண்டவர். குறிப்பாக வசதி குறைந்த, உதவி தேவைப்படும் நபர்களுக்கு அளப்பரிய உதவிகளை புரிந்திருக்கின்றார்.
இன்றும் நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழும் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்கள் தனது உடல் இயலாமை காரணமாக பொது வைபவங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தாலும் அவர் எம்முடன் இருக்கிறார் என்பதொன்றே எமக்குரிய அறிவுசார் பலமாகும். உடல் உள ஆரோக்கியத்துடன் அவர் நீண்ட காலம் எமது பலமாக வாழ இன்றைய 75 ஆவது பிறந்த நாளில் மனமுவந்து வாழ்த்துவோம்.



Comments
Post a Comment