மரபும்‌ ஆக்கமும்

மரபும்‌ ஆக்கமும்

மரபும்‌ ஆக்கமும்


மரபெனப்‌ படுவது வகைபெறக்கிளப்பின்

‌வழிவழி வரூஉம்‌ வரவுடைத்‌ தாகி

முக்கா லத்தினு மொத்தியல்‌ நடைத்தாய்

‌அக்கா லத்துக்‌ குறிப்பொடு படுமே

அதுதான்‌,

பழமை மரபும்‌ புதுமையாக்‌ கமுமென

இருபா லாகி யியலு மென்ப

பழமை மரபினைப்‌ பாங்குறப்‌ பகரின்

‌பண்டைச்‌ சான்றோர்‌ நாவினிற்‌ பயின்று

நன்கு நிலைபெறீஇ நாடறி வழக்காய்

‌உரையினும்‌ பாட்டினு முணரத்‌ தோன்றிப்‌

பொருள்புலப் படூஉம்‌ புணர்ப்பின தென்க

முன்னோர்‌ வழிவழித்‌ தோன்றுமூ தறிவோர்

‌அன்னோர்‌ மரபினை யாய்ந்துநன்‌ கறிந்து

தன்னோ ரன்னோரைச்‌ சார்ந்தவை தெளிந்துதம்

‌முன்னோர்‌ கண்ட முறைபிற ழாது

புதுவது படைக்கும்‌ பெரும்பயன்‌ போற்றி

அரும்பொருள்‌ தேற்றி யாக்குமச்‌ சொல்லே

புதுமை யாக்கமெனப்‌ புகல்மர பிற்றாய்ப்

‌புலனெறி வழக்கினும்‌ புகுந்து நிலமிசை

நீடுநின்‌ றுலவும்‌ நீர்மைய தென்க

ஆக்கந்‌ தானே மரபா கும்மே

முன்னோ ராக்கம்‌ பின்னோர்க்கு மரபாம்

‌பின்னோ ராக்கமவர்‌ பின்னோர்க்கு மரபாம்‌

இன்னே வழிவழி யியல்வது மரபே

“சிதைந்தன வரினு மியைந்தன வரையார்‌”

என்ப வாகலி னவையு மிவற்றொடு

சார்ந்தொருங்‌ கியையுந்‌ தகவின வாமே

மக்கட்‌ பரப்பின்‌ மரபுமோ ராங்கு

பரம்பரை மரபு மாக்க மரபுமாம்

‌வரம்பிடை வளரும்‌ மாண்பின தவற்றுள்

‌நற்குடிப்‌ பிறப்பும்‌ நலனுங்‌ கல்வியும்‌

வாய்மையுந்‌ தூய்மையும்‌ வளர்சம நோக்கும்

‌பொறையுநெஞ்‌ சத்து நிறையும்‌ பொருந்திய

மேலோர்‌ தம்முளே மேவித்‌ கலத்தல்

‌பரம்பரை மரபெனப்‌ பகரவும்‌ படுமே

குறைவுடை யோரைக்‌ குறையினி னின்றும்‌

படிமுறை யாகப்‌ பாங்கா யகற்றி

நிறைவுடை மாந்த ரிடைநிலைப்‌ படுத்தி

உயர்வுடை யுலகுக்‌ குறுப்பெனச்‌ செய்தல்

‌ஆக்க மரபென வறிதல்‌ வேண்டும்

‌இந்நிலை மாறி யிழிநிலை மாக்களைச்‌

செந்நிலை மக்களொடு சமமென வலிந்து

சேர்த்தல்‌ மரபன்று சேர்ப்பின்‌ செம்மைசால்‌

ஒழுக்கமும்‌ விழுப்பமு முயர்குடி யாக்கமும்

‌பழிக்கிட னாகி யமைதிபாழ்‌ பட்டே

வரம்பழிந்‌ துலகில்‌ மக்கட்‌ கூட்டம்‌

தரங்குன்றி விடுமெனச்‌ சாற்றுவர்‌ நல்லோர்‌

மொழியுங்‌ காலை மொழிமர பாக்கமும்

‌இனைய தன்மைய வெனவுணர்ந்‌ திடுக

நிறைமொழி குறைமொழி நிகரென நிகழ்த்தி

வரன்முறை மரபு மாக்கமும்‌ வைப்பும்‌

தொல்லாசிரியர்‌ பரம்பரைத்‌ தொடர்பும்‌

கல்லார்‌ மூல பாடமுங்‌ கல்லார்‌

அறைபோ முளத்தொடு வரையறை யிகந்தே

செருக்குங்‌ கோடிய சிந்தையுந்‌ துணையாப்‌

புல்லறி வாண்மையே பொருளெனக்‌ கொண்டு

மாண்பகல்‌ மானம்‌ வழிகாட்‌ டிடவே

குறைமொழிக்‌ குப்பையும்‌ வறுமொழிக்‌ கூட்டமும்‌

அவையல்‌ கிளவியு மடாப்பிற மொழியும்

‌அடுக்கடுக்‌ காக மிடுக்கொடு தொடுத்து

நுவல்வது மன்றி நூலிடைப்‌ பெய்தும்‌

உரைவரம்‌ பழிக்கு முரைநடை யொன்றோ

“மாத்திரை முதலா வடிநிலை காறும்

‌நோக்குதல்‌ தானே நோக்கெனப்‌ படுமே”

என்னுநுண்‌ ணுரையு மிகந்தெழுந்‌ துரைநடைப்

‌பாட்டென்று சிறிதும்‌ பாங்கொத்‌ திசையோ

டிசையா வொன்றையு மிசையா திசைத்தே

வரையா வதனை வரைந்துகொண்‌ டோடி

வெள்ளைக்‌ கோட்டியுள்‌ விரைந்தரங்‌ கேறும்

‌பிள்ளைமைச்‌ செயலும்‌ பீழைபெரி துடைத்தே

இதனால்‌,

அம்மசெந்‌ தமிழின்‌ மரபு மாக்கமும்‌

செம்மையு மென்மையுஞ்‌ சிதைவதுமன்றி

“மரபுநிலை திரியிற்‌ பிறிதுபிறிதாகு” மென

முன்னோர்‌ மொழிந்த மொழிப்படி கருதிய

சொற்பொருள்‌ மாறுபடத்‌ தோன்றி யப்பொருள்

‌ஐயந்திரிபறி யாமையு மாக்குமே

அதாஅன்று

நாள்பல கழிய நன்னடை வழுவிச்

‌சிதைந்த மொழியுஞ்‌ சிதைந்த வொலியும்‌

சிதைந்த தொடையுஞ்‌ சிதைந்த நடையும்

‌சிதைந்த வடிவுமாய்ச்‌ செந்தமிழ்ச்‌ செல்வி

சந்தமுந்‌ திரிந்து தாழ்நிலைப்‌ பட்டே

பாகத பாடையின் பாற்பட்‌ டியங்கும்‌

இயல்பலா நிலையை யெய்தினு மெய்துமோ

வெனும்பே ரச்ச மெழுதலுங்‌ கூடும்‌

“பழையன கழிதலும்‌ புதியன புகுதலும்‌

வழுவல கால வகையினா னே” யென

உரைபுற நடையி னுட்கருத்‌ தோரார்‌

வரையறை கடக்கும்‌ மரபிலாச்‌ செயலால்‌

ஆக்கமோ சிறிது கேடளப்‌ பரிதால்‌

அன்புசேய்‌ யழகியை யுறுப்பறைப்‌ படுத்தே

யின்பங்‌ காணு மிளைஞரு முளரோ

மரபுநந்‌ தாதையர்‌ வழிவழிச்‌ செல்வம்

‌மரபுநம்‌ பின்னோர்‌ வழிவழி யுரிமை

மரபினை யழிக்கு முரிமைநமக்‌ கில்லை

மரபினை யழிப்போர்‌ வழக்கிழந்‌ தோரே

மரபுகாத்‌ தொழுகல்நம்‌ வழிவழிக்‌ கடனே

வாழ்வும்‌ மொழியும்‌ வளஞ்செயும்‌ வரம்பாய்க்

‌கண்ணென முன்னோர்‌ காத்தசெந்‌ நெறியாய்

‌நன்னா கரிகப்‌ பொன்னுரை கல்லாய்‌

மொழியெனு மின்பயிர்‌ வளர்தரு பாத்தியாய்‌

அமைமர பதன்சிறப்‌ பறியுங்‌ காலை

நங்கையர்‌ தமக்கு நாணம்‌ போன்றும்

‌ஆடவர்க்‌ குள்ளே யாண்மை போன்றும்‌

கருமவீ ரர்க்குக்‌ கடைப்பிடி போன்றும்

‌பண்டிதர்க்‌ கழகுசெய்‌ பண்பினைப்‌ போன்றும்

‌ஆசார்க்‌ கமைந்த வருளினைப்‌ போன்றும்‌

மாணவர்‌ தமக்கு வழிபாடு போன்றும்

‌அரசியற்‌ கறிவுசா லமைச்சரே போன்றும்‌

சேவைசெய்‌ வோர்க்குத்‌ தியாகமே போன்றும்‌

வளர்மொழி தனக்கு மரபுசிறந்‌ துளதால்

‌இந்துமா கடலி னெல்லையை யளந்தும்‌

இமயம்‌ வரைப்புக ழீட்டியு மமையாது

சிந்து வெளியினுஞ்‌ சிறப்புடன்‌ திகழ்ந்தநம்

‌செல்வத்‌ திருமொழி தெய்வத்‌ தமிழ்மொழி

மன்னர்‌ வளர்த்திடு வண்மொழி மாநிலம்‌

பொன்முடி. சூடிப்‌ புரந்த புகழ்மொழி

பன்மொழியாளர்‌ பாலித்த நன்மொழி

உண்ணு முணவினும்‌ நீரினு முயிரினும்‌

கண்ணினுஞ்‌ சிறந்தநம்‌ கன்னித்‌ தமிழ்மொழி

நன்ன ரினியநம்‌ மன்னை மொழியினைக்‌

காத்தல்நம்‌ முரிமையுங்‌ கடமையுமாகும்

‌காப்பெனப் படுவது மரபுகாத் ‌தொழுகல்

‌மரபுகாப்‌ போர்மொழி வரம்புகாப்‌ போரே

வரம்புகாப்‌ போர்மொழி வளம்படுப்‌ போரே

வளம்படுப்‌ போரே மொழிவளர்ப்‌ போரே

மரபுகாப்‌ போர்குல வரம்புகாப்‌ போரே

வரம்புகாப்‌ போர்குலம்‌ வளம்படுப்‌ போரே

வளம்படுப்‌ போரே குலம்வளர்ப்‌ போரே

மொழியெனப்‌ படுவது முறைபெற நுவன்ற

மரபு மாக்கமும்‌ வளர வளருமே

குலமெனப்‌ படுவதும்‌ குணநலஞ்‌ சான்ற

மரபு மாக்கமும்‌ வளர வளருமே

மரபுவழி வந்தோர்‌ மரபுணர்‌ வாரே

மரபுணர்‌ வாரே மரபுகாப்‌ பாரே

மரபுகாப்‌ பார்தம்‌ மாபெருஞ்‌ சேவையைக்‌

காத்தல்‌ மரபுடை யார்தங்‌ கடனே

வாழிய மரபும்‌ மரபுகாப்‌ போரும்

‌வாழிய நன்மொழி மரபுசிறந்‌ தினிதே

வாழிய நற்குடி மரபுதழைத்‌ தினிதே

ஊழி முதல்வ னுலவாக்‌ கருணையால்

‌வாழி யுலக வரம்புநன்‌ கினிதே.


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு