மகாகவி இக்பாலின் தத்துவம்
மகாகவி இக்பாலின் தத்துவம்
தத்துவம் என்பது அறிவு விசாரத்தின் பெறுபேறும் வரம்பமாகும். கீழைத்தேச அறிவு விசாரம்
“ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”
என்ற அடித்தளத்தின்மீது அமைக்கப்பட்டது. அதனால் அது ஆன்ம விசாரத்துடனும் இறை நம்பிக்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது. கீழைத்தேசத்தாரின் மத நம்பிக்கைகளுங் கலையுணர்வுகளுஞ் செழிப்பான தத்துவ வரம்பிட்டு நுண்ணுணர்வாகிய வேர்களைமிக ஆழமாகப் பரப்பி ஆசாரமென்னும் நீரைப்பாய்ச்சிப்பண்பாடென்னும் எருவிட்டுச் செழிப்புற்ற சிறப்பினை ஆராயுந்தோறும் இன்பத்தேனூறுவதைக் காணலாம். தத்துவம் வெறும் வித்துவச் செருக்காக அமைந்து விடுவதுமுண்டு. அங்ஙனந் தத்துவம் அமைந்தால் அது பெரிய ஆபத்தாகும். அன்றியும், இருட்டறைபீல் உலாவுங் கரும்பூனையின் வாலைப்பிடிக்கும் வீண் செயலாகவும் அதுஅமைந்துவிடும். அதன் விளைவாகத் தத்துவம் எவ்வளவுக்குப் பயனற்ற செயலாக, பாமர மக்களுக்கு விளங்காததாக அமைகிறதோ அவ்வளவுக்குச் சீரிய கருத்தென்று மருளுவோரும் உளர். இந்நிலையில், அல்லாமாமுகம்மது இக்பால் அவர்களுடைய தத்துவத்தை ஆராய்வாம்.
மகாகவி இக்பால் சிறந்த கவியுந் தத்துவஞானியுமாவர். உருது, பார்சி, பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே தமது புலமையை வெளிப்படுத்திப் புகழ்பெற்றார். இந்நூற்றாண்டின் சிறந்த தமிழ்க்கவியாகிய பாரதியார்,
“ காதல் செய்யும் மனைவியே சத்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்”
எனப்பாடுகிறார். இசுலாத்தைப் பூரணமாக ஏற்றுக்கொண்டு அம்மத நம்பிக்கையிலே திளைத்துக் களிப்புற்ற கவிஞர் திலகமாகிய இக்பால்,
“ காதலியிடங் குன்றாத பத்திகொண்ட அன்பாயிரு
அதன்மூலமே நீவலையை வீசி
இறைவனைப் பிடிக்க முடியும்”
எனப்பாடுகிறார். இந்த இருகவிகளின் கூற்றுக்களிலுள்ள ஒற்றுமை கீழைத்தேசக்கவிதாதத்துவத்திலுள்ள இயைபையும் நித்திய உண்மையையும் விளக்குகிறது.
தத்துவஞானிகளுஞ் செந்நாப்புலவர்களும் முழுச்சான்றாண்மையுள்ள (முழுமையான) ஒருவனைக் கற்பனை செய்யவும் அகக்கண்ணாற் காணவும் விளைந்தார்கள். அங்ஙனம் விளைந்த முழுப்புருடனை “பரமாத்மா” “புண்ணியவான்” “அரகத்” “சம்பூரணன்” “இலட்சிய மனிதன்” “முமீன்” எனப்பல பதங்களாற் பலரும் அழைத்தனர்; அழைக்கின்றனர். திருக்குறள் சம்பூரணநிலைக்கு மக்களை அழைத்துச் செல்கின்றது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். கவியுங் தத்துவஞானியுமாகிய இக்பால்இசுலாம் என்கின்ற மாறாத உண்மையிலே காலூன்றித் திருக்குறள் கூறுஞ் சம்பூரண நிலைக்குரிய பண்புகளைக் கூறுகிறார். இக்பாலுக்கு முன்னர் வாழ்ந்த இசுலாமியப் பெருங்கவிகள் பலர் இக்பாலைப்போலவே தத்துவவிசாரம் நடத்திச் சம்பூரண நிலையைக்காண வழி வகுத்தனர். அவர்களுள் மெளலானா சவாலுதீன் ரூமி அவர்களும் ஒருவராவர். மெளலானாரூமி காணவிழைந்த சம்பூரண மனிதனின் இலட்சியப்பண்புகள் பின்வருமாறு,
“ படைக்கப்படாததுந் தெய்வீகமானதுமான தன் அமரதத்துவ
ஆன்மாவை அறிந்துள்ளவனே இலட்சியமனிதனாவான்”
ரூமி கூறும் இந்த இலட்சியமனிதனால் அற்புதங்களை நிகழ்த்தமுடியும். இந்த அற்புதங்களை நிகழ்த்தும்பண்பு இக்பால் தரிசித்த இலட்சிய மனிதனுக்கும் இருக்கிறது. மெளலானா ரூபி இலட்சிய மனிதனை ஆன்மீக முறையில் அணுகுகிறார். சைவசாத்திரங்களின் சிகரமாயமைந்த சித்தாந்ததத்துவ ஞானிகள் சீவன் குறுகிச் சிவனாகும் என்கின்றார்கள். சித்தாந்திகள் கொள்கைப்படி சிவனுஞ் சீவனும் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடும் என்க. இதை இக்பால் ஒப்புக்கொள்ளவில்லை. இசுலாம் மதக்கொள்கைப்படி அல்லாவே ஏக இறைவனென்றும் அந்த அல்லாவை மிக அண்மையில் அணுகலாமேயன்றி அல்லாவோடு இரண்டறக் கலக்கவியலாதென்றும் இக்பால் உறுதிப்படுத்திக் கூறுகின்றார். எனவே இறைவனுடன் நெருங்கிப்பழகுபவனே இக்பாலின் சம்பூரண மனிதனாவான்.
செய்கு அப்துல் கறீம் இப்னு இப்றாகீம் அல்சீலி அவர்கள் இந்தச் சம்பூரணநிலையை மூன்றாகப்பிரிக்கிறார். அப்பிரிவுகள் நாமதியானத்தில் ஒன்றுதல், குணப்பண்புகளில் ஒன்றுதல், இறைவனின் பண்புகளே ஆதல் என்பனவாம். மூன்றாவது நிலையில்,
“ அம்முழுச்சான்றோனின் கண்கள் இறைவனின் கண்கள்;
அவன் வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள்;
அவன் சீவன் இறைவனின் சீவனாகிறது”
என்கிறார் அல்சீலி. பெளத்த மததத்துவத்தின் அடித்தளம் சித்த பரிசுத்தமாகும். சித்தபரிசுத்தத்தின்மூலம் “அரகத்” நிலை அடையலாம். அந்த அரகத்நிலை- புத்தநிலை- இறைநிலையாகின்றது. அரகத்நிலையே முழுச்சான்றோனினுடைய நிலை என்பது பெளத்தமத நம்பிக்கையாகும். இந்தத்தத்துவத்தின் ஒருமைப்பாட்டினை அல்சீலியிற் காணமுடிகிறது.
ஆழ்ந்துநோக்கினால் மெளலானா ரூமியும் அல்சீலியும் ஆத்மீகத்துறையிலே மாத்திரம் ஒருமுழுச்சான்றோனைத் தரிசிக்க முயலுஞ்சாயல் புலனாகிறது. இசுலாம் தனி ஆத்மீக மார்க்கமன்று. நபிபெருமான் காட்டிய இசுலாம், இலெளகிகம், ஆத்மீகம் ஆகிய இரண்டையும் மிக்கநல்லமுறையில் இணைத்த உயர்வொப்பற்ற மார்க்கமாகும். அதனைத் தத்துவ ஞானியான கவி இக்பால் நன்குணர்ந்திருந்தார். அவருக்கு இலெளகிகப் பார்வையிலும் உடற்பேணலிலுங் கவனஞ் சென்றது.
கிரேக்க இலக்கியங்களை நாகரிக உலகுக்குக் கொடுத்த பெருமை இசுலாத்துக்கேயுண்டு. அதனாலே மார்க்க ஞானத்திற்கு இடையூறு உண்டுபட்டதென்று கருதியவர் இக்பால் என்க. என்றாலுங் கிரேக்கதத்துவ ஞானிகளின் முழுச்சான்றோனைப்பற்றிய சிந்தனையும் இக்பாலுக்கிருந்தது. கைம்மாறற்றசேவை, அன்புடைமை, இன்னாசெய்யாமை, அழுக்காறாமை, வெகுளாமை, அடக்கமுடைமை, இனியவைகூறல், பயனிலசொல்லாமை ஆகிய வள்ளுவப் பண்புகளுக்கு இசைவான முழுச்சான்றோனையே கிரேக்கதத்துவ ஞானியான அரித்தோற்றில் தரிசிக்கிறார். அரித்தோற்றிலின் இலட்சியமனிதன் மனிதருக்குச்சேவை செய்யுமியல்பினன்; ஆனால் பிறர் தனக்குச் சேவை ஏதுஞ் செய்துவிட்டால் வெட்கித்தலைகுனிவான். அதையே இக்பால்,
“எச்சரிக்கை; கடமைப்படுவதினின்றும் எச்சரிக்கை!” எனக் கூறுகிறார். இச்சந்தர்ப்பத்திலே, இரண்டாவது கலீபாவான உயர் (ரலி) அவர்கள் கீழே விழுந்த சவுக்கைத்தானே ஒட்டகத்தினின்றும் இறங்கி எடுத்த சம்பவத்தை நினைவுகூர்ந்து களிபேருவகை கொள்ளலாம்.
மகாகவி இக்பால், தன்னை ஒரு குறிப்பிட்ட தத்துவத்தடத்திற்கு மட்டுங் கட்டுப்படுத்தியவரல்லர். இந்நூற்றாண்டின் செர்மானிய தத்துவஞானி நீட்சேயின் தத்துவங்களிலும் ஈடுபாடுகொண்டவர். நீட்சே நிரீச்சுரவாதி. “சகலரும் பாவமுள்ளவர்களாகப் பிறக்கின்றார்கள்; அத்தகையவர்களும் பாக்கியவான்கள்; மரணத்திற்கு அப்பால், உள்ளதுதான் ஒரேயோர் உண்மையான உலகம் என்கிற நம்பிக்கைகளைப் பிணைத்துள்ள கிறீத்துவ மதத்தைச் சார்ந்தவர் நீட்சே. இதனாற்றான், நீட்சேயைப்பற்ற “அறிவால் கபீராகவும், இதயத்தால் மூமீனாகவும் நீட்சே விளங்குகிறார்” என்று இக்பால் குறிப்பிடுகின்றார். இக்பால் இவண் மூமீன் என்று குறிப்பிடுவது முழுச்சான்றோனையே. நீட்சேயின் முழுச்சான்றோன் சம்பூரண குணங்களுடன் உடற்பலத்தை மட்டுங்கொண்ட ஆற்றலுடையவனாகத் திகழ்கின்றான். இக்பால் தம்முடைய முழுச்சான்றோனுக்கு உலோகாயுத ஈடுபாடும், உடலுறுதியுந்தேவை என்று வலியுறுத்துகிறார். அதேசமயம், அல்லா கற்பித்த அறநெறிகளை இங்கு நிலைநாட்டும் ஒருவனாகவே இக்பாலின் முழுச்சான்றோன் விளங்குகின்றான்.
கவிச்சக்கரவர்த்தி இக்பாலின் தத்துவ தரிசனங்கண்ட முழுச்சான்றோனின் பண்புகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்.
“ஒரு முழுச்சான்றோனின் கரம்
உண்மையில் அல்லாவின் கரமேயாகும்.
தலைமையாற்றலும், படைப்பாற்றலும், தகுதியும்,
எதையுந் தாங்குந் திறனும் உடையவன் அவன்.
மானிடன்தான் ; ஆயினும்,
பண்பில் இறைதூதன் போன்றவன்.
அடிமைதான் ; எனினும்,
ஆண்டானின் பண்புகளைக் கொண்டவன்.
அவனது உரிமை உள்ளம்
எவ்வுலகைப்பற்றியும் வருந்துவதில்லை.
அவன் உறுதிப்பாடுகள் சிறியவை.
அவன் குறிக்கோள்கள் மேன்மையானவை.
அவன் ஒழுக்கம் யாரையும் ஈர்க்கும்.
அவன் கண்கள் அருளானவை.
மென்மையான இன்மொழியும்
மறச்செயன் முறையும் உடையான் அவன்.
போரிலுஞ்சரி,
நண்பர் குழாத்திலுஞ்சரி
அவன் உள்ளந் தூய்மையானதாகவும்
அவன் போக்குக் கண்ணியமுள்ளதாகவும் இருக்கும்.”
இதுவே மகாகவி இக்பால்காணும் முழுச்சான்றோனின் பண்புகள். அச்சம், இரத்தல், அடிமைத்தனம், பீடுபேசுதல் ஆகிய பலவீனங்களைக் களைந்தெறிந்து, அன்புடைமை, இம்மைமறுமை பற்றிய அவாஅற்றநிறைவு, மறம், இன்னாசெய்யாது இன்னாசெய்தாரைப் பொறுத்தல், அறவழியில் ஊண்பெறல், திறனை வளர்த்தல் ஆகிய ஆறுவழிகளிலே முழுச்சான்றோன் அஃதாவது இன்சானுல்காமில் என்னும் மூமீன், தன் அகத்தில் நீறுபூத்ததாக மறைந்து கிடக்கும் நெருப்பினை வெளிக்கொணர்ந்து, அதன் ஒளியில் உண்மையையும் இறைவனையுந் தரிசிக்கின்றான். இத்தகைய தரிசனம் பெற்றவனையே முழுச்சான்றோனாக இக்பாலின் தத்துவம் தரிசிக்கின்றது.

Comments
Post a Comment