மரபு
மரபு
உலகத்திலே பல்வேறு மொழிகள் வழங்குகின்றன. அவை வெவ்வேறு தரமுடையவை.
ஒரு மொழியின் வளர்ச்சியை அம்மொழிக்குரிய மக்களதும், அம்மொழிவழங்கும் இடத்ததும் பெருக்கத்தாலே மதிப்பிடலாகாது. அம்மொழியை வழங்கும் மக்களின் வளர்ச்சியாலேயே மதிப்பிடல் வேண்டும்.
மக்கள் வளர்ச்சியானது இலெளகிக வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என இருவகைப்படும். மக்கள் இந்த இருவகை வளர்ச்சியிலும் எவ்வளவுக்கு மேம்படுகிறார்களோ அவ்வளவுக்கே அம்மக்களுக்குரிய மொழியும் மேம்பட்டிருக்கும். மொழி ஆராய்ச்சியாளரும் அநுபவமுள்ளவர்களும் இவ்வுண்மையை ஒப்புக்கொள்வர்.
ஒருவர் தம் கருத்துக்களைப் பிறருக்குப் புலப்படுத்துங் கருவிகளுட் சிறந்தது மொழியாகும். எனவே மொழிக்குரியவர்களது கருத்துவளர்ச்சிக்குத்தக மொழிகள் பலதரப்படுகின்றன.
எழுச்சி, கருத்து, ஞானம் என்ற மூன்றின் கூட்டமே மொழியெனப்படும். எழுச்சியிலுங் கருத்துச் சிறந்தது; அவ்விரண்டிலும் ஞானஞ் சிறந்தது. எழுச்சியுங் கருத்துஞ் சுட்டியுணரப்படுவன. ஞானஞ் சுட்டிறந்தது. சுட்டியுணர்தலாவது பாகுபடுத்தியுணர்தல். சுட்டிறந்துணர்தலாவது முழுமையாக உணர்தல். கருத்தின் சாயல் எழுச்சியிலே பொருந்துவதற்குத் தக்கதாக எழுச்சி பலதரப்படும். அதுபோலவே ஞானத்தின் சாயல் கருத்திலே பொருந்துவதற்குத் தக்கதாகக் கருத்தும் பலதரப்படும். இங்ஙனம் பலதரப்படும் மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அடிப்படையுண்டு. மொழி வல்லுநரால் அவ்வடிட்படைநிலைகள் கண்டறியப்பட்டபின் அவற்றிற்கியைய அம்மொழிகளுக்கு இலக்கணம் வகுக்கப்படும், அவ்விலக்கணம் காலகதியிலே மரபாகிறது. எனவே ஒவ்வொரு மொழியும் வெவ்வேறு மரபைப் பெறுகின்றது.
ஒரு மொழி ஒரு அடிப்படைக்குரிய மரபைப் பெறுவது இன்றியமையாதது. எழுச்சிவகைப்பட்ட மொழிகளுங் கருத்துவகைப்பட்ட மொழிகளுஞ் சுட்டியுணரப்பட்டுத் தம்முள்ளடங்கிய உட்பிரிவுகளுக்குப் பொதுவான மரபைக் காணவியலாமையினாலே அவைகளுக்குத் தனித்தனி மரபைப் பெறுகின்றன, எங்ஙனமெனில் வசனம், செய்யுள், இயல், இசை, நாடகம் எனப்பல உட்பிரிவைக் கொண்டஎழுச்சி மொழியுங் கருத்துமொழியும் அவற்றிற்குப் பொதுவான மரபுநிலை இல்லாதிருப்பதுடன் அவற்றிலே முரண்பாடுடையன வாயுமிருக்கும் என்க. சுட்டுணர்வற்ற ஞானக்கலப்பு நன்கமைந்த மொழிகள் தம்முள்ளடங்கிய உட்பிரிவுகளுக்குச் சிறப்பான மரபைப் பெற்றிருப்பதோடு பொதுமரபையும் பெறுகின்றன. தமிழ்மொழியிலே அகப்பொருண்மரபு, புறப்பொருண் மரபு எனத் தனித்தனி சிறப்பான மரபிருந்தாலும் ஒன்றுக்கொன்று முரண்பாடற்று அகப்பொருளின் பூர்வமாகப் புறப்பொருள் அமைகின்றது. இன்னும் இயன்மரபு, இசைமரபு, நாடகமரபு எனமூன்றாகப் பிரித்துக் கூறப்பட்டாலும் அம்மூன்றும் படிமுறையாக அமைந்து ஒரு அடிப்படையைப் பெற்று ஒரு மரபுக்குட்படுகின்றன, இயல் இறைவனையும் அவனருள் வழிபட்டோரையும் எண்ணி வியந்து முகஞ்செய்வது. அங்ஙனம் முகஞ்செய்யப்பட்ட பொருளோடியைவிப்பது இசையாகும். முகஞ்செய்து இயைந்தபின் ஒன்றுபட்டு இலயமடைவது நாடகமாகும். இந்த ஒருமைப்பாடு தமிழ்மொழிக்குண்டு, தமிழராலே பேசப்படுவது தமிழ் என்பதேயன்றித் தமிழ் என்ற பண்பையும் அச்சொல் உணர்த்துவது சிந்திக்கத்தக்கது.
எழுச்சியுங் கருத்துங் காமவெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களுக்கும் உட்பட்டவை. ஞானம் அக்குற்றங்களுக்கு அப்பாற்பட்டது. அகத்தியருந் தொல்காப்பியருங் காம வெகுளி மயக்கம் நீங்கிய ஞானிகள். அவர்களாலே எழுத்துச் சொற்பொருளிலக்கணங்களையும் அகப்பொருள் புறப்பொருள்களையும் இயல் இசை நாடகங்களையும் பொதுமையாக நோக்கித் தமிழ்ப்பண்புக்குரிய அடிப்படையைக்காண முடிந்தது, அவர்கள் அங்ஙனங்கண்டு இலக்கணம் வகுத்தார்கள். அகத்தியர் ஆன்மீகத்துறையிலே பூமியிற் பிறந்து பெறத்தக்கன எல்லாவற்றையும் பெற்று முழுமையடைந்தவர். தொல்காப்பியர் அகத்தியரின் முதன் மாணவர். அவர்களாலே வகுக்கப்பட்ட மரபு அந்தமானது; மாற்ற வேண்டாதது. அதனாலேயே தொல்காப்பியர்
“மரபுநிலைதிரியிற் பிறிது பிறிதாகும்” என ஆணை தந்தார். அகத்தியருந் தொல்காப்பியரும் ஆணையிட்ட மரபு நிலையைத் திரித்துக் கொண்டால் இயல்வேறு, இசைவேறு, நாடகம்வேறு, இங்ஙனமே ஏனையவும் வேறுபட்டுப் பிறிதுபிறிது ஆதலோடு ஒன்றற்கொன்று மாறுபட்டுக் கீழ் நிலையும் அடையும் என்பது கருத்தாம்.
“ ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வெய்தாக் கடை” என்பது திருக்குறள்.
ஐயுணர்வு ஐந்து பொறிகளாலும் உணரும் உணர்வு. இன்றைய விஞ்ஞானிகள் ஐயுணர்வுக்குட்பட்டே தங்கள் ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். ஐயுணர்வு சடசம்பந்தமானது, மெய்யுணர்வு விஞ்ஞானத்துக்கப்பாற்பட்டது: சித்துச் சம்பந்தமானது. சத்தியஞ் சிறந்த தருமம் என்றாலும் அது ஞானத்தொடர்புபடாதவிடத்துப் பெருங்கேட்டை விளைவிக்கும், அதுபோலவே ஐயுணர்வும் மெய்யுணர்வோடு தொடர்புபடாத விடத்துப் பயனற்றுப் போகின்றது. இக்காலத்து மொழியாராய்ச்சியாளர் இந்த மெய்யுணர்வின் உயிர்த்தத்துவத்தை உணரல்வேண்டும். சிலர் அகத்தியர் தொல்காப்பியர்களின் மெய்யுணர்வின் முழுமையை விளங்கிக்கொள்ளும் ஆற்றலின்றித் தங்கள் ஐயுணர்வினாலே தமிழ் மரபைச் சிதைக்கின்றார்கள். இவர்கள் இங்ஙனஞ் சிதைப்பார்களென்பதை அறிந்து போலும் தொல்காப்பியர் தம்மாற்செய்யப்பட்ட பொருளதிகாரத்து 660-ஆம் சூத்திரத்திலே “சொல்லப்பட்ட எல்லா மாண்புமிருந்தாலும் முதனூலோடு மாறுகொள்ளின் அந்நூல் சிதைந்த நூலெனப்படும்” என்று கூறினார். இன்னும் அவர் விஞ்ஞானிகளை எண்ணி, “எல்லாப் பொருள்களும் நிலம் நீர்தீவளி விசும்பு என்னும் ஐம்பூதச் சேர்க்கையாதலால் அவற்றை உயர்திணைப்பொருள் அஃறிணைப் பொருள் என்று வகுப்பதேன் என்று கருதவேண்டாமென்றும்,
“ இருதிணை ஐம்பால் இயனெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும்” என்றும்
கூறியனவற்றை மரபை மீறுவோர் நன்கு சிந்திப்பார்களாக. இக்காலத்து வாழ்க்கைக்கு வழிவகுக்கும் விஞ்ஞான நூல்கள் தமிழ்மொழியில் இல்லையென்று பலர் கருதலாம். அக்குறைபாடு சில ஆண்டுகளிலே நீங்கிவிடும்: தமிழ் மொழியிலுள்ள ஆன்மீக வளர்ச்சியைப் பல்லாயிரமாண்டு சென்றாலும் மற்றைய மொழிகள் பெறமாட்டா.
தமிழினுடைய தொன்மையை உணராத மேனாட்டார் பலர் தமிழிலே கி. பி, 9-ஆம் நூற்றாண்டுக்குப்பின்பே சிறந்த இலக்கியங்கள் செய்யப்பட்டன என்றும் அதற்கு முன்பு தமிழிலே சிறந்த இலக்கியங்கள் இல்லையென்றுங் கருதுகின்றனர். இங்ஙனங் கருதுவது உண்மைக்கு முழுமாறாகும். 9-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழிலே சிறந்த இலக்கியங்களும் இலக்கணங்களுந் தோன்றின.
ஆங்கிலம் படித்த சிலர் 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழிலே மக்களிலக்கியம் இல்லை என்கின்றனர். இவர்கள் எவற்றை மக்களிலக்கியமென்று கருதுகிறார்கள் என்பது விளங்கவில்லை. அவர்கள் திருக்குறள் இராமாயணம் முதலியனவற்றை என்ன இலக்கியம் என்பார்களோ!
மாதவச் சிவஞான யோகிகள் தொல்காப்பியரை முக்குற்றங்களும் நீங்கிய முழுஞானி என்றும் அவர் கூறியவை எக்காலத்தும் பிழைபடாத மரபின என்றுங் கூறியிருக்கவும் சிலர் சங்க இலக்கியங்களைப் படித்ததன் பயனாகத் தொல்காப்பியர் இலக்கண நூல் செய்தார் என்றும் அவர் கி. பி, 5- ஆம் நூற்றாண்டிலிருந்தார் என்றுந் தம்மனம்போன போக்கிற் கூறுகின்றனர். இவை மரபுக்கமைந்த கூற்றுக்கள் அல்ல.
எழுச்சி இலக்கியங்கள் ஆரம்பகாலத்திலே சிலராற் போற்றப்பட்டாலும் நீண்டகாலத்துக்கு நிலைக்கா. கருத்திலக்கியங்கள் தாம்பெற்ற ஞானக்கலப்புக்குத் தக்கதாகப் பலதரப்படும். ஞானக்கலப்பு அதிகரிக்க மரபு தூய்மைப்படும், நக்கீரர் அகத்தியரிடம் ஞானங்கற்றபின்பு தாம்முன்புசெய்த நூல்களிலிருந்த வழுக்களை நீக்கினார் என்று கூறப்படும் வரலாறு ஞானக்கலப்பினது தரத்தைக் காட்டுகின்றது.
சங்கச் செய்யுள்கள் ஓரளவு ஞானக்கலப்புள்ளவை. தொல்காப்பியம் பெரிதும் ஞானக்கலப்புள்ளது. சங்க இலக்கியங்களைத் தொல்காப்பியத்திலே வைத்துச் சீர்தூக்கிப்பார்ப்பதே மரபு. அம்முறைக்கு மாறாகத் தொல்காப்பியத்தைச் சங்க இலக்கியங்களிலே வைத்துச் சீர்தூக்கிப் பார்ப்பது மரபன்று.
ஒலி ஆராய்ச்சியாளர் தொல்காப்பியத்தின் ஒலியமைவு தங்கள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாகவும் முழுமையடைந்ததாகவுங் ௧ருதுகின்றனர். தொல்காப்பியத்தின் ஒலி தெளிவாயும் இலகுவாயுமிருப்பதாலே தொல்காப்பியர் காலத்தான் மிகப்பிந்தியவர் என்பவர்களும் உளர். ஒலித் தெளிவுக்கும் இலகுவுக்குங் காரணம் அவரின்ஞான முதிர்ச்சியாகும், எனவே, தொல்காப்பியத்தைப் பின்பற்றி மரபுவழிதவறாது பேசவும் எழுதவுஞ் சிந்திக்கவும் முயல்வோமாக.

Comments
Post a Comment