இசைமரபு
இசைமரபு
இசைமரபை நன்கு விளங்குவதற்கு இசை வளர்ச்சியைப்பற்றி முதலிற் சிறிது ஆராய்தல் வேண்டும். இசை வளர்ச்சியினது தன்மையைக் கொண்டு, இசைமரபின் விரிவை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.
இசைவளர்ச்சியைப் பண்டையதமிழிசை, இடைக்காலத் தெய்வீகஇசை, கருநாடகஇசை என மூன்று பிரிவாகப்பிரிக்கலாம். பண்டைய தமிழிசைமரபு சிறிதும் பிறழாமல் கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரை நன்கு பாதுகாக்கப்பட்டது. அதன்பின்புஞ் சேக்கிழார் காலம்வரை, அஃதாவது 13-ஆம் நூற்றாண்டுவரை தமிழிசைமரபு பிறழாதிருந்தது. குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பாகவே தமிழ்நாட்டிலே நெடுங்காலம் இசைக்கலை அதிஉந்நத நிலையிலிருந்ததென்பதற்கு ஆதாரங்கள்பலவுள. இசையையும் இசையோடு சம்பந்தப்பட்ட ஆடல், பாடல், அபிநயம், குழல், யாழ் முதலியவைகளையும் பற்றிப் பழந்தமிழ் நூல்களிலே விளக்கங் கூறப்பட்டிருக்கிறது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் விரிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை முற்றிலுஞ் சங்கீத சம்பந்தமானது. சங்கீத சம்பந்தமாகச் சிலப்பதிகாரகாலத்திருந்த பலசொற்கள் இப்போதுந் தமிழ்நாட்டிற் பழக்கத்திலிருக்கிறன.
சிலப்பதிகாரத்திலே நாட்டியஞ் சிறு பெண்களுக்கு ஐந்தாவது வயதிலேயே ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து ஏழுவருடங்கள் இடைவிடாது பயிற்சி அளிக்கப்படவேண்டுமெனவும், அதன் பின்பே அரங்கேற்றம் நடாத்தப்பட வேண்டுமெனவுஞ் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அரங்கேற்றுகாதை வரிப்பாடலில், நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடிகள் கொண்ட நான்குவகைப் பாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இந்தப்பாட்டுக்கள் ஆடலுக்குத்தக்கபடி வெவ்வேறு தாளங்களிற் பாடப்படும். பக்கமேளங்களை வாசிக்கவேண்டிய விதங்கள் மூன்று என்றும், தனிப்பாட்டுமட்டும் பாடுகின்ற போது இன்ன பக்கவாத்தியம் என்றும், பாடலும் ஆடலுஞ் சேர்ந்து நடக்கின்றபோது இன்ன பக்கவாத்தியங்கள் என்றுஞ் சொல்லப்படுகிறன: இப்படியாகச் சங்கீத விடயங்கள் பல சங்க காலத்திற் பரந்து கிடந்தன. சிலப்பதிகாரம் கடைச் சங்ககாலத்தைச் சேர்ந்தது. கடைச்சங்ககாலத்திற்கு முன்பே, தமிழ் எப்போது உண்டானதோ அக்காலத்திருந்தே தமிழிசை பெருமளவில் வளம்பட்டுத் திகழ்ந்த தென்பது நன்கு புலனாகும்.
சங்ககாலத்திற் பாண்டிய சேரசோழ மன்னர்களால் வளர்க்கப்பட்ட சங்கீதம் பின்பு தமிழ்நாட்டுக் கோயில்களிலே நாட்டியக்காரர், மேளகாரராற் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை நிலவிவருகிறது. இசைக்கலையின் பெருமையைப் பண்டைத்தமிழர் அறிந்தவாறு வேறெவருமே அறிந்திலர். தமிழ் என்ற மாத்திரையானே இயலிசைநாடகம் என்ற முத்தமிழையுங் குறிக்கும் பான்மை வேறெந்த மொழிக்குமே கிடையாது. முதற்சங்ககாலத்திருந்தே தமிழிசை வளர்க்கப்பட்டது. பொருநாரை, பெருங்குருகு என்ற இசை நூல்கள் அன்றிருந்தன. அகத்தியர் முத்தமிழிலக்கணம் இயற்றினார். கி. மு. இரண்டாயிரமாண்டுகட்கு முன்பிருந்த இடைச்சங்க காலத்தும் இசைநுணுக்கம் என்ற இசைநூலிருந்தது. தொல்காப்பியத்திலே “நரம்பின்மறை” என்ற இசைநூலைப்பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கடைச்சங்ககாலத்துச் சிற்றிசை, பேரிசை என்ற இசைநூல்களிருந்தன. கடைச் சங்ககாலத்தே பண்டைய இசை நூல்கள் அழிந்தன எனக் கடைச்சங்ககால நூலான சிலப்பதிகாரங் கூறுகிறது.
யாழுங் குழலுந் தமிழர்கண்ட முதலிசைக் கருவிகளாகும். தமிழர் அகப்பொருளிலக்கணத்தில் வகுத்துள்ள ஐந்திணைக்கும் ஐவகைப் பண் உரியன என்றனர். அவைதாம், தாரப்பண் குரற்பண், துத்தப்பண், உழைப்பண், இளிப்பண் என்பனவாம், தாரப்பண்ணை இக்காலத்திலே மோகனராகம் என்றும், குரற்பண்ணை இக்காலத்திலே மத்தியமாவதி என்றும், துத்தப்பண்ணை இக்காலத்திலே இந்தோளம் என்றும், உழைப்பண்ணை இக்காலத்திலே சுத்தசாவேரி என்றும், இளிப்பண்ணை இக்காலத்திலே சுத்ததந்நியாசி அல்லது உதயரவிச்சந்திரிகா என்றுங் கூறுவர், மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் உரிய இசைப்பாடல்கள் அக்காலத்திருந்தன.
தமிழிசைக் கலையிலிருந்த பல தமிழ்ப் பெயர்கள் மாறிமறைந்து பிறமொழிக்கலப்பில் வேறுதிரிபுப் பெயர்களாயின. சங்க அழிவு காலத்தின்பின்பு தமிழ்நாட்டின் கடைசி அரசாங்கமான தஞ்சாவூர் சம்ஸ்தானத்தில் இசைக்கலை சரண்புகுந்தது. பிற்காலத்திலுந் தஞ்சாவூரை ஆண்ட மகாராட்டிர மன்னர்கள் சங்கீதத்தைக் காப்பாற்றினர். மகாராட்டிரமன்னர்கள் பலர் தாமே சங்கீத வித்துவான்களாக இருந்தனர். அவர்கள் தாய்மொழியான மராத்தி, வடமொழிக்குச் சம்பந்தப்பட்டதாகையால் வடமொழிப் பாடல்களை அம்மன்னர்கள் ஆதரித்தனர். வாய்ப்பாட்டில் வடமொழியை விரும்பினாலும், இசைக்கருவிகளெல்லாந் தமிழ் நாட்டிலே முன்னிருந்தவையே இப்போதும் வழக்கத்திலிருக்கின்றன. தென்னிந்தியாவில் இசைக்கருவிகள் எல்லாம் தஞ்சாவூரிலேயே செய்யப்படுகின்றன.
சங்ககாலத்திற் புல்லாங்குழலையே ஆதார சுருதியாக வைத்துப் பாடினார்கள். இக்காலத்திலே தம்புராச் சுருதியை ஆதார சுருதியாக வைத்துப் பாடுகிறார்கள், யாழுங் குழலுந் தமிழ்நாட்டிசைக் கருவிகளாகும். பல்வேறு இசைக் கருவிகளையெல்லாம் ஒன்றுசேர்த்து வாசிப்பதைப் பண்டைக்காலத்தே “ஆமந்திரிகை” என்றனர். இதையே பழந்தமிழர்
“ குழல்வழிநின்றது யாழே,
யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே,
தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே,
முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை
புருவம் ஏறாமல், கண்கள் ஆடாமல், கழுத்
தோன்றாமல் காந்தருவதத்தை யாழ் வாசித்த
“ கருங்கொடிப் புருவம்ஏறா, கயல்நெடுங்
அருங்கடி மிடறும்விம்மாது, அணிமணி
இருங்கடற் பவளச்செவ்வாய் திறந்துஇவ
நரம்பொடு வீணைநாவால் நவின்றதோ ௭
எனக்கூறப்படுகிறது. இன்னும் “விரல் அசைந்து ஆடஅசையாமல்” மத்தளம் வாசிக்க வேண்டுமென்பர்.
இப்படியாகத் தமிழிசைமரபு ஆதிகாலந்தொட்டுப் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை, அஃதாவது சேக்கிழார் காலம்வரை பழைய வரன்முறையில் வழங்கிவந்தது. பழைய இசைமரபு வரலாற்றை வகைப்படுத்தியாராயும்போது தமிழ் எப்போது உண்டாயிற்றோ அன்றிருந்தேதமிழிசை வளர்ச்சியுமாரம்பமாயிற்று என்பது புலப்படும், மூன்றாவது நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டிற்குமிடையே தமிழ் நாட்டிற் சமணக்கலப்பால் இசைக்கலை சிறிது தளர்வுற்றது. நான்காம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டைப் பல்லவ அரசர்கள் ஆண்டபோது வடமொழிக்கலப்பேற்பட்டு இசைபற்றி வடமொழிநூல்கள் எழுதப்பட்டன. ஏழாவது நூற்றாண்டிலே இக்காலம் வழங்கும் ௪, ரி, ௧, ம, ப, த, நி என்ற ஏழுசுரங்களையும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள என்ற உயிரெழுத்துக்களுடன் சேர்த்திசைத்தனர். ஏழாவது நூற்றாண்டிலேயே தேவாரப் பண்களாகிய தெய்வீக இசை நிரம்பிவழிந்தது. தேவாரகாலத்தில் யாழொடுவீணை வாசிக்கும் வழக்கமிருந்தது, சம்பந்தர் பாடிய யாழ்முரிப்பண்ணுக்குரிய “மாதர் மடப்பிடியும்” என்ற பதிகத்தால் யாழ் அக்காலத்திருந்தது என்று தெரிகிறது. நாவுக்கரசர் “வருங்கடல் மீள நின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே” என்றார். எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் பாடப்பட்ட திருவாய்மொழிக்கும், எட்டாம் நூற்றாண்டிற் சுந்தரராலே பாடப்பட்ட தேவாரங்களுக்குந் தமிழ் முறையிலேயே இசை வகுக்கப்பட்டிருக்கிறது. பத்தாவது நூற்றாண்டில் எழுந்த சிந்தாமணியிலும் இசைப்பாடல்கள் காணப்படுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே சிலப்பதிகாரஉரை எழுதிய அடியார்க்கு நல்லார், தமிழிசை நூல்கள் அக்காலத்து வடமொழிப் பெயர்கள் பெற்று விளங்கின என்கிறார். அந்நூல்கள், தமிழிசைநூல்களான இந்திரகாளியம், பரதசேனாபதீயம், பஞ்சபாரதீயம், பஞ்சமரபு முதலாயின. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்பு தமிழிசைநூல்கள் வழக்கொழிந்து வடமொழி இசை நூல்கள் எழுந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின் சாரங்கதேவர் எழுதிய “சங்கீத ரத்னாகரம்” என்ற வடமொழிநூலே இக்காலம் வழக்கத்திலிருக்கும் கருநாடக சங்கீதத்திற்கு முதனூலாகும். சங்கீத ரத்னாகரத்தைத் தொடர்ந்து இசைநூல்கள் பல வடமொழியிலே தமிழ் நாட்டில் எழுந்தன. வேதகாலந்தொட்டுச் சங்கீதத்தைப் பற்றி வடமொழி கூறுவதேயொழிய, சங்கீதரத்னாகரத்திற்கு முன்வடமொழியில் ஒரு இசைநூலும் பெரிதாக எழுதப்படவில்லை.
வான்மீகி இராமாயணத்திற் சங்கீதத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இராவணனுடைய இராச்சபையிலே தேவ அரம்பையரின் ஆடல்பாடல்களிருந்தன. விராடமன்னனுடைய மகள் உத்தரைக்குப் பாடலும் ஆடலும் அருச்சுனனால் “பிருகன்னளை'' என்ற மாறுவேடத்தோடு பாடஞ் சொல்லிவைக்கப்பட்டதாக வியாசரது பாரதங் கூறுகிறது. இற்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்பு வட மொழியிலே பரதமுனிவரால் எழுதப்பட்ட “பரதநாட்டிய சாத்திரத்திலும்” நாட்டியத்தைப்பற்றியல்லாது, சங்கீதத்தைப்பற்றிச்சொல்லப்படவில்லை. “நாரதர் சங்கீத மகரந்தம்” என்ற வடமொழி இசைநூல் இற்றைக்கு 1100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இவையெல்லாம் இசை இலக்கண நூல்களாகும். இசை இலக்கிய நூல் என்றவகையில் இற்றைக்கு 800 வருடங்களுக்கு முன்பு “கீதகோவிந்தம்” என்ற அட்டபதிகள் அடங்கியநூல் சயதேவரால் எழுதப்பட்டது. மேலேசொல்லப்பட்ட சங்கீத ரத்தினாகரம்” இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. தமிழ் நாட்டு இக்காலச் சங்கீதவித்துவான்கள் இந்நூலை மிகவும் பாராட்டுகின்றனர். தமிழ் நாட்டிலிப்படியாக அதியுன்னத நிலையிலிருந்த தமிழ்ச்சங்கீதம் அரசாங்க மாறுதல்களினாற் பல்வேறு மொழிகளிலே பல்வேறு இசைக்கா்த்தாக்களால் இசையிலக்கண நூல்களையும் இசை இலக்கியங்களையும் புதிதாகப்பெற்றது.
பழைய இயலுமிசையும் ஒன்றித்து வளர்ந்துவந்தன. தமிழிலுள்ள நான்குவகைச் செய்யுள்களுக்கு அச்செய்யுள்கள் இன்னஇராகங்களிற் பாடப்படவேண்டுமென்ற நிர்ணயம் அக்காலத்தேயிருந்தது. வெண்பாவைச் சங்கராபரணத்திலும், அகவலை ஆரபிஇராகத்திலும், தாலாட்டை நீலாம்புரி இராகத்திலும் பாடவேண்டுமெனப் பழைய இசைமரபு கூறுகிறது. இயற்பாக்களெல்லாம் அசை, சீர், தளை, அடி, தொடை என்ற அடிப்படையில் அவ்வவற்றிற்குரிய ஓசைகளைத் தழுவி எந்தெந்த இராகங்களிற் பாடவேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இன்றும் அம்முறை தமிழகத்தே நிலவிவருகிறது. திருமுறைப்பாடல்கள் பண்டையதமிழிசைக் கருவூலங்களாகும். இசையறிவின்பயனே திருமுறைகளை ஓதுவது எனக்கூறினாலும் மிகையாகாது. இசைச்சாகித்தியங்களை உடல் என்று கொண்டால், அச்சாகித்தியங்களுக்குண்டான இசையை உயிரெனலாம். முறையான இசையமைப்பு இயலிசையிரண்டினும் ஒருங்கே புலமைபெற்ற இசைவாணர்களாற்றான் செய்யமுடியும், “பண் என்னும், பாடற்கியைபின்றேல்” என்றபடி பாடலுக்கியைந்த இசையமையவேண்டும்.
பழைய இசைமரபுப்படி பண், பண்ணியம், திறம், திறத்திறம், ஆளத்தி என இசைக்கூறுகளிருந்தன. பண் ஏழு சுரங்களையுடையது பண்ணியம் ஆறு சுரங்களைக் கொண்டது. திறம் ஐந்து சுரங்களைக்கொண்டது. திறத்திறம் நான்கு சுரங்களைக் கொண்டது. ஆளத்தியென்பது இராகங்களை ஆலாபித்தலாகும். இக்காலக் கருநாடக சங்கீதத்திலிவைகள் சம்பூரணம், சாடவம், ஓளடவம், சுராந்தம் எனக் கூறப்படுகின்றன. பண் என்றால் இராகமெனக்கொண்டனர் பண்டைய தமிழர். பண்டைக்காலத்திற் பண்பாடுதலையே தொழிலாகக்கொண்ட மக்களைப்பாணர் என்றும் ஆடுவோரை விறலியர் என்றுங் கூறினர். இந்த முறையிலே திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருப்பாணாழ்வாரும், திருமுறைகண்ட சோழரும், திருமுறைகளுக்குப் பண் வகுத்த திருவெருக்கத்தம்புலியூர் அம்மையாரும் பாணர் மரபைச்சேர்ந்தவராவர். பழைய தமிழ்ப்பண்கள் வடமொழிப்பெயரிலேமாறின. செவ்வழிப்பண்ணை எதுகுலகாம்போதி என்றும், சாதாரிப்பண்ணைக் காமவர்த்தனி என்றும், புறநீர்மைப்பண்ணை பூபாளம் என்றும், இந்தளத்தை மயாமாளவகெளளை என்றும் தக்கேசியைக் காம்போதி என்றும் வடமொழிப்பெயர்களாகப் பிற்காலத்தே மாற்றினர். இப்படியாகப் பண்டைய இசைமரபைத் தழுவியே இடைக்காலத் தேவாரஇசை இக்காலத்துக் கருநாடக இசை எல்லாம் நிற்கின்றன.
பண்டைய தமிழிசைக்குப்பின் சென்ற 700 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டிலே தேவார திருவாசக, திவ்வியப்பிரபந்தம் முதலாய தெய்வீக இசை பண்ணோடு பாடப்பட்டு வந்திருக்கிறது. இதை இடைக்கால இசை என்பர். இதன்பின்பு இற்றைக்கு 450 வருடங்களுக்கு முன்பு கருநாடக சங்கீதம் தஞ்சாவூரில் இரகுநாதநாயக்கா் என்ற அரசனால் வளம்படுத்தப்பட்டது. இவர்காலத்திற் “புரந்தரதாசர்” கன்னடத்திற் பாட்டுக்களை இயற்றினார். இவர் சங்கீதத்தை முறையாக மானுக்கர்களுக்குச் சொல்லிவைக்கும் முறையிலே சுரவரிசை, செண்டைவரிசை, கீதம் ஆகிய சங்கீத பாடவகைகளையும் இயற்றினார். இவரது காலம் 16-ஆம் நூற்றாண்டாகும். 17-ஆம் நூற்றாண்டிலே கோவிந்ததீட்சகர் 72 மேளகர்த்தா அமைப்புமுறையை உருவாக்கினார், இந்த 72 மேளகர்த்தா அமைப்பு முறையின்பின் 18-ம் நூற்றாண்டிலே சங்கீத மும்மூர்த்திகளான தியாகராசசுவாமிகள், முத்துசுவாமிதீட்சகர், சாமாசாத்திரிகள் மூவருங் கருநாடக சங்கீதத்திற்கு மெருகுகொடுத்து, சங்கீதத்திற்குச் சீவசக்தி அளித்தார்கள். இம்மூவரும் ஒரே காலத் தவர்களாய் தஞ்சை மாநிலத்திலே திருவாரூரிற் பிறந்தவர்கள். இப்பொழுது உலகத்திலுள்ள எல்லாச் சங்கீதவகைகளிலும் இந்தக் கருநாடக சங்கீதமே மிகவும் உயர்ந்ததென எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள். சங்கீதக்கலை தென்னிந்தியாவில் இவ்வளவு உயர்ந்த தானத்தை அடைந்ததற்குக் காரணமானவர்கள் இந்தச் சங்கீத மும்மூர்த்திகளேயாவர்., இவர்கள் தெலுங்கு, வடமொழியிரண்டிலுஞ் சங்கீத சாகித்தியங்களை இயற்றினர்.
இந்தக் கருநாடக சங்கீதம் பழைய தமிழிசை மரபிற்குப் புறம்பானதன்று. மும்மூர்த்திகளும் மற்றையோரும், தெலுங்கிலும் கன்னடத்திலும் வடமொழியிலும் இசைப்பாடல்களைப் பாடிவந்தாலுங்கருநாடக இசைமரபு, பழையதமிழிசை மரபையே அடிப்படையாகக் கொண்டது. கருநாடக சங்கீதந் தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரையே மூலத்தானமாகக் கொண்டது. அது தென்னிந்தியாவில் ஆரம்பித்து ஏறக்குறைய 400 வருடங்களாகிறது. ஆனாலிக்கருநாடக சங்கீதத்திற்கு மூலாதாரமாகவுள்ள தமிழிசை மரபு2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தோன்றிய காலத்திருந்தே, மிகமிக வளம்பட்டிருந்தது. இசையைத் தொழிலாகக்கொண்ட ஓதுவார்கள், நட்டுவசாதியினர், மற்றும் நடனம் முதலியன தெரிந்த இசைத் தொழிலாளிகளிடையே இன்றும் பழைய தமிழிசைமரபு பிறழாதிருப்பதைக் காணலாம். தேவாரந் திருவாய்மொழி பழைய பண்முறைப்படி பாடப்பட்டு வருகின்றன. பண்டைய தமிழிசை இலக்கணவரம்பு பிறழாது இடைக்காலத் தெய்வீக இசைக்குரிய திருமுறைகள், திருவாய்மொழி ஆதியனவும் இக்காலக் கருநாடக இசையும் வளர்ந்துகொண்டு வருகின்றன.
சென்னையிலே தமிழிசைச் சங்கத்தின்சார்பில் பண்ணாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்வாராய்ச்சி பழைய பண்முறையை நமக்குத் -தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டும். தேவாரத்திற் காணப்படும் பண்முறைகள் திருவாய்மொழியிலுங் காணப்படுகின்றன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இடைக்காலத்தே இசையை வளர்த்தார்கள். தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய இராசராசனும், அவன்மகன் இராசேந்திரசோழனுந் தேவாரப் பண்களைக் கோவில்களிலே முறையாகப்பாட நிலதானங்கள் செய்திருந்தார்கள். இன்னும் அக்காலத்தே கோயில்களிலே தேவாரம் ஓதத் “தேவாரமண்டபமும்” கட்டப்பட்டிருந்ததாகச் சான்றுகள் உள. இத்தகைய தெய்வீகஇசை தமிழ்நாட்டிலே மீண்டும் மறுமலர்ச்சிகொள்ள நம்மாலான எல்லாத் தொண்டுகளையுஞ் செய்யவேண்டும். தேவாரப் பண்மூலம் பண்டைய இசைமரபை ஒருவாறு தெளிவுபடுத்தலாம். திருக்கோயில்களிலே தேவாரம் பாடுவோர், நடனமாடுவோர், மங்கள வாத்திய இசைவாசிப்போருக்கு விளைநிலங்கள், மான்யங்கள் வழங்கி ஆதரிக்கவேண்டும். நாதசுரம் இன்று முக்கிய இடத்தைப்பெறுகிறது. இராகவித்தாரத்தை நாதசுர இசையிலே கேட்கமுடியும். இந்த உத்தம இசைக்கருவி கோவில் விழாக்களிலும் மணவிழாக்களிலும் பிரதான அம்சமாக விளங்குகிறது. தமிழ்நாட்டிற்கே உரித்தான இந்த வாத்தியத்தின்பெருமை சொல்லிமுடியாதது. இவ்வாத்தியம் பழையகாலந்தொட்டு இன்றுவரை இசைமரபைக் காத்துவருகிறது.
பழைய இசைமரபு மீண்டுந் தமிழ்நாட்டிலே மிளிரவேண்டுமானால் இசையை மொழியுடனேயே சேர்த்து வளர்க்கவேண்டும். தமிழ் நாட்டிலே தமிழிசைக்கே முக்கியத்துவங்கொடுக்கவேண்டும் காலமாறுதலால் இயற்றமிழறிவுடையோரும், இசைபயின்றவர்களும் பிரிந்துதனித்து வாழ்தல் வருந்தத்தக்கது. தனித்த இசைத்தமிழ்நூல்கள் சங்ககாலத்தே அழிந்தொழியவே வேற்றுமொழியில் காலமாறுதலுக்கியைய இசைநூல்கள் எழுந்தன. பழைய இசைமரபும் சிறிது தளர்ச்சியுற்றது. தமிழிசை அருகியதின் விளைவாகக் கருநாடக சங்கீதத்தோற்றமுண்டாயது. இன்றையதமிழுலகம் தமிழிற் புதியபல இசைப்பாடல்களை எழுதி வருகிறதேயல்லாமற் பண்டைய இசைமரபுப்படியும் பண் அமைவுப்படியும் தமிழிசையை வளர்க்க ஆர்வங்காட்டவில்லை. இந்நிலையில் சுவாமி விபுலானந்தர் விடுத்த “யாழ்நூல்” பெரும் பயனுடைத்தாக விளங்குகிறது.
தமிழிசை இலக்கியம் அண்ணாமலைச் செட்டியாரால் ஆரம்பிக்குமுன்பு தமிழ்நாட்டிலே தமிழ்ப்பாட்டுக்கள் பாடும் வழக்கமும் மிகஅரிதாகவே இருந்தது. மேடைக்கச்சேரிசெய்த வித்துவான்௧ள் பலருக்கு, அவர்களுக்குத் தெரியாத மொழியிலேயே-அஃதாவது தெலுங்கு, கன்னட, சங்கதமொழிகளிலேயே சங்கீதக்கச்சேரி செய்யும் நிலமை உண்டாகியது. அந்தந்த மொழியறிவில்லாது வேற்றுமொழிகளில் இசைக்கச்சேரி செய்வோர் தொகை அதிகரித்தது. இசைக்கு மொழியறிவு தேவையில்லை எனத்தமிழ்நாட்டிலே பலர் கருதினர். இச்சமயத்தில் அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைச் சர்வகலாசாலைமூலம் பழைய தமிழிசைக்கு ஆக்கமளித்தனர். பிறநாட்டுமொழிகளைப்போல மொழிவேறு, இசைவேறென்றில்லாமல் முன்னோர் இயலிசைநாடகமென மூன்றையுந் தமிழ்மொழியெனவே கருதினர்: “முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” என்றும் “சங்கத்தமிழ் மூன்றுந்தா” என்றும் அருள்வாக்குக்கள் கூறுகின்றன.

Comments
Post a Comment