திருவாசக ஆராய்ச்சிப் பேருரையின்மாண்பு
திருவாசக ஆராய்ச்சிப் பேருரையின் மாண்பு
திருவாசகம் என்னுந் திவ்விய நூலிற் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதற்கு வாய்ப்பளிக்கும் முறையில் எழுந்த உரைகளும் விளக்கங்களும் ஆராய்ச்சியுரைகளும் பேருரைகளும் பலவாகும். இவ்வுரைகளிற் சோழவளநாட்டுக் கிருட்ண புரத்திலிருந்து யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தையடைந்து வாழ்ந்த மாவைக் கவுணியன் வெண்ணெய்க் கண்ணனார் எனப்படும் நவநீத கிருட்ண பாரதியார் செய்த ஆராய்ச்சிப் பேருரையும் ஒன்று. இவ்வுரை, புத்தம் புதிய கருத்துக்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு திருவாசகத்தின் சிறப்பை நன்கெடுத்துக் காட்டுகின்றது; மணிவாசகப் பெருமான் வழிபாடாற்றிய தலங்களில் ஆங்காங்குப் பாடியருளிய பத்திப்பாடல்கள் பலவற்றின் தொகுப்பே திருவாசகம் என்னுங் கொள்கையை ஓரளவுக்கு மாற்றித் திருவாசகமுந் திருக்கோவையாரும் ஒரு பெருநூலின் இரு வேறுறுப்புக்கள் என்னும் உண்மையை ஒருவாறு தெளிவுபடுத்துகிறது; பழந்தமிழ்மக்கள் சித்தாந்த சைவக் கோட்பாடுகளை அன்பினைந்திணை வழியாகத் திட்பநுட்பமுற வெளிப்படுத்தும் நெறியினையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது; இதுவரை விளங்காதிருந்த பலபதிகப் பெயர்களையும் அப்பதிகங்கள் புலப்படுத்தும் விளையாட்டுக்களையுஞ் சான்று காட்டி விளக்குகிறது; திருவாதவூரடிகள் புராணம், திருப்பெருந்துறைப்புராணம், திருவிளையாடற்புராணம், என்பனவற்றில் வெவ்வேறு வகையாக உரைக்கப்பட்ட மணிவாசகர் வரலாற்றினை அகச்சான்று கொண்டு ஆராய்கிறது. இத்தகைய ஆராய்ச்சிப் பேருரையென்னும் பெருங்கடலுள்ளே முத்தும் பவளமும் பிறவுங்குறைவின்றிக் கிடக்கின்றன. இவற்றில் ஒரு சிலவற்றை எடுத்துக் காட்டுவதேயிக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருவாசகம், திருப்பெருந்துறை முதலாய பலவிடங்களில் அடிகள் அருளிய பதிகங்களைக் கொண்டதாயினும், “வாதவூரடிகள் தில்லையில் வீற்றிருந்த இறைவன் தன்கரத்து ஏடுதாங்கியெழுதத் திருவாசகத்தினையுந் திருக்கோவையாரையும் உடன் கூறியருளினார் எனவழங்கிவரும் வரலாறு கொண்டு இவை நூல் எனப்படுதற்குரிய பல்வகைச் சிறப்பும் பெற்று விளங்குகின்றனவென ஆராய்ச்சிப் பேருரைகாரர் கருதுகிறார். நூலின் முதற்பகுதியாக அமைந்த சிவபுராணம் என்னும் பெயரமைந்த திருப்பாட்டை நூன்முழுவதற்கும் ஆசிரியர் அருளிய தற்சிறப்புப்பாயிரமென மிக அழகுற நிறுவினார். இப்பாட்டு தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் பிறவும் எய்தவுரைக்கின்றதென்பது அவர்கருத்து. சிவபுராணம் என்பது அப்பாட்டின் பெயராக மட்டும் அமையாது நூன் முழுவதற்கும் அடிகளிட்ட பெயரெனவும், அடிகள் “சிவபுராணம்” என்ற பெயரோடு “குழைத்தசொன்மாலை” என்னும் பெயரையுந் திருவாசகத்திற்குக் கொடுத்தாரெனவும் பேருரைகாரர் கூறுவது நனிபொருந்துவதாகும். “சிந்தைமகிழச் சிவபுராணந்தன்னை” எனவுங் “குழைத்தசொன்மாலை” கொண்டருள் போற்றி எனவும் வரும் பகுதிகள் இக்கூற்றிற்காதாரமாகின்றன. இன்னும் “மணிவார்த்தை” என்பதும் “இருந்துதி” என்பதுந் திருவாசகத்திற்கு அடிகள் இட்ட பிறபெயர்களாகுமென்பதும் அவர்கருத்து. “நமச்சிவாய வாழ்க” என்று தொடங்குந் திருப்பாட்டில், “நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க” என்னும் முதலாமடி தொடங்கி, “அவனருளாலேயவன்றாள் வணங்கி” என்னும் பதினெட்டாமடியிறுதி யாகவுள்ள பகுதியாற் கடவுள் வணக்கமும், “சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான்” என்னும் அடிகளாற் செய்யப்படு பொருளுங் கூறப்பட்டனவென ஆராய்ச்சிப் பேருரைகாரர் நாட்டுகிறார். மேலும், “கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி” என்னும்அடி தொடக்கம் “பொல்லாவினையேன் புகழுமாறொன்றறியேன்” என்னும் அடியிறுதியாகவுடைய பகுதியால் அவையடக்கமும், “புல்லாகிப்பூடாய்ப் புழுவாய் மரமாகி” என்னும் அடிதொடங்கிச், “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்னும் அடியிறுதியாகவுடைய பகுதியாலே தியான வழியால் அடைக்கலம் புகுதலும், "செல்வர்சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து” என்னும் பகுதியால் நூற்பயனுங் கூறப்பட்டனவெனத் திருவாசக ஆராய்ச்சிப் பேருரையாசிரியர் கூறும் உரை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது மட்டுமல்லாமல் உவந்து பாராட்டற் பாலதுமாகும்.
சிவபுராணத்தை யடுத்துள்ள கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித்திருவகவல் என்னும் மூன்றகவல்களுந் திருவாசக நூல் வரலாறுந் திருவாசக நூலாசிரியராய மணிவாசகரது ஒழுகலாற்றிற்குரிய முதனூல் வரலாறுங் கூறுகின்றனவென்பது பேருரையுடையார் கூற்று. இறைவன் முதனூலை மகேந்திர மலையிலே தோற்றுவித்தானென்பதனைக் கீர்த்தித் திருவகவல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
“கல்லாடத்துக் கலந்தினிதருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்தும்
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
உற்றவை முகங்க ளாற்பணித் தருளியும்”
என்னும் பகுதியால் இறைவன் முதனூல் வெளிப்படுத்த வரலாறு கூறப்படுகின்ற தென்பதும் அம்முதனூல் ஆகமம் என அடிகளாற் கூறப்பட்ட அன்பினைந்திணையாதல் வேண்டுமென்பதும் ஆராய்ச்சிப் பேருரைகாரர் கொள்கை. இங்குக் கூறப்பட்ட கீர்த்தித் திருவகவற் பகுதியை நோக்கின் பேருரை யாசிரியர் கருத்துப் பொருந்தாதென எவரும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. கல்லாடத்திலே நல்லாளோடு நயப்புறவெய்தியதும், பஞ்சப்பள்ளியிலே பால்போலும் மொழியினை யுடையாளுடன் எஞ்சாதீண்டிய இன்னருளை விளைத்ததும், வேட்டுவ வடிவுடன் முருக்கமலர் போன்ற சிவந்த வாயினை யுடையாளது இடையீடின்றிச் சேர்ந்த மார்பகமாகிய நன்மை பொருந்திய தடத்தின் கண்ணே படிந்ததுமாய நிகழ்ச்சிகள் எல்லாம் அகப்பொருட் சார்புடையனவாகவே காணக்கிடக்கின்றன. கேவேடர் எனப்படும் வலைஞர் குமாரனாகிக் கெளிற்றுமீனை அகப்படுத்தியதோடு பெருமை பொருந்திய எட்டிடத்தனவாய ஆகமங்களை வாங்கிக் கொண்ட நிகழ்ச்சிக்கு முன்பே கிராத வேடங்கொண்டு கிஞ்சுக வாயினையுடையாளது விராவு கொங்கை நற்றடம் படிந்த களவுப் புணர்ச்சி கூறப்படுதலைப் பேருரைகாரர் முல்லைக் கரியுட்கொல்லேறு தழுவித்தலைவன் தலைவியை வதுவையிற் கொள்ளுமுன்பே களவிற் கூடிய நிகழ்ச்சியைக் சித்தரிக்கும் பாட்டுக்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது மிக்க பொருத்த முடையதாகக் காணப்படுகிறது. “கயிலையங்கிரியிலே அகப்பொருள் இலக்கணத்திற் கருத்தூன்றாதிருந்தவளுக்கு அதுகருத்துட்பதிவதோர். உபாயத்தை நாடி அவளைச் சபிப்பாள் போல நடித்து மண்ணிற் பிறக்க வைத்துப் பாராமுகஞ் செய்யப்பட்ட ஆகமங்களையுங் கடலுள்வீசச் செய்து அவளோடு தானும் அவளுக்குத் தலைவனாகச் சென்று களவினுங் கற்பினும் பயின்றும் அவளைப் பயில்வித்தும் மற்றவற்றின் மேல் அவளுக்கு ஆகமங்களின் பொருளை அறிவுறுத்தினாள்.” என்னும் பகுதியால் ஆராய்ச்சிப் பேருரையாசிரியர் அன்பினைந்திணையின் பெருமையை நன்கு புலப்படுத்தினார்.
ஆகமம் என அடிகள் குறிப்பிட்டது அகத்திணை இலக்கணத்தையே யென்பதனையும் பேருரைகாரர் நுணுகி ஆராய்ந்து புலப்படுத்தினார். “மற்ற ஐம்முகங்க ளாற்பணித தருளியும்” என்னும் பகுதியால் வடமொழியாகமம் புலப்படுத்திய செய்தியே குறிக்கப்படுகின்றதென்பது பொருந்தாதென்பது அவர்கருத்து. வடமொழியாகமம் பணித்தது ஐந்தாம் முகமாகிய ஈசான முகத்தாலென அறிஞர் கூறுதலின் ஐம்முகங்களாற் பணித்த ஆகமமும் ஐந்தாம் முகத்தாற் பணித்த ஆகமமுந் தம்முள்வேறேயென அவர் கருதுவது பொருத்தமுடைத்து. ஐம்முகங்கள் என்பதற்குப் பேருரைகாரர், ஆயிரம் முகத்தான கன்றதாயினும்-பாயிர மில்லது பனுவலன்றே' என்னும் பகுதிக்குப் பிறர் பொருள் கொண்டதுபோல ஐந்துவகை எனப் பொருள் கொண்டுரைப்பது நயந்து பாராட்டத்தக்கதே. ஐம்முகம் என்பதனாற் குறிக்கப்படுபவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாம். எனவே மகேந்திரத்திருந்து இறைவன் வெளிப்படுத்திய ஆகமமும் ஆலவாயின் அவிர்சடைக் கடவுள் செய்தளித்த இறையனார் களவியலும் ஒன்றாதல் வேண்டுமெனப் பேருரைகாரர் துணிகின்றார். மகேந்திரத்திருந்து இறைவன் வெளிப்படுத்திய ஆகம வழிப்பட்டொழுகிக் கருத்துலகிலே தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் அமைத்த மணிவாசகர் அவ்வாகமத் தோற்றத்தையும் இறைவன் இவ்வுலகிலே தம்மை இருத்தி அடியவர்களென உலகோர் கூறும் பரத்தையர்க்கு அருள்புரிந்து ஒன்றக்கலந்ததையுந் தம்மை இறைவன் பிரிந்ததனாலே தாம்பட்ட துன்பங்களையுந் தொகுத்துக் கூறுவனவே நூல்வரலாறு எனக்கொண்ட மூன்றகவல்களுமென்பது பேருரை காரர் கருத்து. அன்பினைந்திணையின் பெருமையை “என்னை பாவம் ! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடையதாகலான்யாம் அதனைத் தீர்க்கற்பாலம் என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத் தெழுதிப் பீடத்தின் கீழிட்டான்.” எனவரும் இறையனார் களவியலுரைப் பகுதியாலும் “பொருளதிகாரம் ஞானம் உணர்த்துங் கருவி” என்னும் பேருரை காரர் கூற்றாலும் நன்கறியலாம்.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரைகாரர் பாயிரம் எனவும் நூல் வரலாறு எனவுங் கொண்ட பகுதிகளையடுத்துத் திருச்சதகம் முதலாக நூல் வருகின்றது. திருச்சதகம் நீத்தல் விண்ணப்பம் என்னும் இப்பகுதிகளுக்குப் பின்னர்த் திருவெம்பாவை முதலாகப் பெரும்பாலானவை அகப்பொருட் செய்தி தழுவினவாகவே காணக்கிடக்கின்றன. அகப்பொருட் செய்தி தழுவிவருஞ் சிலபதிகப் பெயர்கள் ஆராய்ச்சிப் பேருரை எழுமுன் விளங்காதனவாகவேயிருந்தன. இவற்றுள் திருந்தெள்னேணம், திருச்சாழல், திருப்படையாட்சியென்பன குறிப்பிடத்தக்கவை. அகப்பொருள் தழுவாதவற்றுள்ளும் கோயின் மூத்த திருப்பதிகம் முதலாயினவும் அத்தகையவே.
திருத்தெள்ளேணம் என்பது ஆராய்ச்சிப் பேருரை வெளிவருங்காலும் விளங்காத ஒன்றாக விருந்தது. தெள்ளேணங் கொட்டுதல் என்பது மணலை அள்ளிக் கொட்டுதல் எனப் பொருள்படுமென உரைவரைந்தோரும் உளர். “தென்னா தென்னா வென்று தெள்ளேணங் கொட்டாமோ” என்பது கொண்டு அது ஒரு தோற்கருவியாதல் வேண்டுமெனத்துணிந்த பேருரைகாரருக்குப் பிங்கலந்தை அமரகோசம் என்னுந் தென்மொழி வடமொழி நிகண்டுகள் பேருதவி புரிந்தன. இந்நிகண்டுகளில் ஏணம் என்பது மானின் பெயர் எனக்கண்ட பேருரைகாரர், திருத்தெள்ளேணம் என்பதிலே திருவென்பது தெய்வீகம் எனப் பொருள் படுமெனவுந் தெள்ளேணம் என்பது தெளிந்த ஓசையையுடைய மான் எனப் பொருள்பட்டுப் பின்னர் அதன் தோலையுந் தோலாற் செய்யப்பட்ட பறையையுங் குறித்து நின்றதெனவும் நிறுவியுள்ளார். இதனைப் பேருரைகாரர் கவரிமான் தோலாற் செய்யப்பட்ட படகம் என்னுந்தோற்கருவியென உணர்த்துந் திறன் ஊன்றி நோக்கியின் புறற்பாலது.
ஏணம் என்பது கலைமானைக் குறிப்பதாகவும் திருக்கோவையாரில், “பல்லிலனாகப் பகலை வென்றோன்” என்னும் முதலையுடைய திருப்பாட்டில் “எல்லிலனாகத்தொடேனம் வினாவியவன் யாவன் கொலாம்' எனப்பாடங் கொண்டு ஏனம் என்பதற்குப் பன்றியெனவே பொருள் கூறினார். பேராசிரியர் என்னும் அதன் உரையாசிரியர். ஏனம் என்னுஞ் சொல்லிற்குப் பன்றியென்பது பொருளாயினும் திருக்கோவையாரில் குறித்த செய்யுளில் ஏனம் அதாவது பன்றி சுட்டப்படுவது பொருத்தமற்றதென்பது நன்கு புலப்படுகிறது. திருக்கோவையாரிலே முன்னர்த் தலைவன் வினாவியவற்றுள் ஏனம் இன்மை யானும் கலைமான் காணப்படுதலாலும் இவ்விடத்தும் தோழி, “கலைமானை வினாவுகின்ற இவன்” என்னும் பொருள்பட “ஏணம்வினாவியவன் யாவன் கொலாம்” என வினாவினாள் எனக்கொள்வதே பெரும்பயனுடைத்து கலைமானை வினாவியவளைப் பன்றிவினாயவன் எனக் கூறுவது பொருத்தமற்ற தென்பது கூறாமலேயமையும். திருக்கோவையாருக்கு உரைவரைந்த பேராசிரியர் ஏணம் என்னுஞ் சொற்குப் பொருள் விளங்காமையின் ஏனம் எனப் பாடங்கொண்டு பன்றியென உரைவரைந்தாரென அவரின் பெருமைக்கு இழுக்குக் கற்பிக்க விரும்பாத பேருரைகாரர் “ஏணம் என்னுஞ் சொற்பொருளறியாமையினாற் போலும் அதன் உரையாசிரியர் காலத்துக்கு முற்பட்டோர். மற்று அதனை ஏனம் என மாற்றியமைத்து விட்டனர் என்பது ஈண்டுத் துணியப்படும்'' எனக் கூறிப் பேராசிரியரை ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார். படகம் என்னுந் தோற்கருவி வட்ட வடிவின தாய்ப் பெண்பாலாரும் முழக்கத்தகுந்ததென்பதை, “வட்டவானமெனும் வான்படகத்தைச் கொட்டுமண்மகள்'' எனவரும் கந்தபுராணச் செய்யுட்பகுதி கொண்டு பேருரைகாரர் தெளிவுபடுத்தினார். இப்படகங் கவரிமானுரி போர்க்கப்பட்டதெனக் கொண்ட அவர் மானமழியின் உயிர்வாழாக் கவரிமானுக்கும் அதனுரி போர்த்த படகத்தைக்கொட்ட முற்பட்ட தலைவிக்கும் ஒரொற்றுமை கொள்ளற்கு இடனாகின்றதெனக் கூறித் தலைமகளின் மானத்தினை நுட்பமாக வெளிப்படுக்குந்திறன் போற்றத்தக்கது.
திருச்சாழல் என்னும் பகுதிக்கு ஆராய்ச்சிப் பேருரைகாரர் கொண்ட பொருளும் அறிஞர் உலகிற்குப் பெருவிருந்தாய் அமையத் தக்கது. திருச்சாழல் என்னும் பகுதியுள்வருந் திருப்பாட்டுக்களெல்லாம் முற்பகுதி இறைவனின் இயல்பைப் பழித்துரைப்பனவாகவும் பிற்பகுதி அவனியல்பைப் புகழ்ந்துரைப்பனவாகவும் அமைந்தன. இவ்வேறுபாடு நோக்கிய மணிவாசகர் வரலாறு வரைந்த ஆசிரியர்கள் திருச்சாழலில் வரும் பழிப்புரைகள் மணிவாசகப் பெருமானோடுவாதுசெய்த புத்தரால் வினாவப்பட்ட வினாக்களெனவும் புகழுரைகள் அவற்றிற்கு ஈழநாட்டரசனுடைய குமாரத்தி மணிவாசகப் பெருமானால் ஊமைத்தன்மை நீக்கப்பட்டதன்மேற் கூறிய விடைகளெனவுங் குறித்துச் சென்றனர். இக் கூற்றுப் பொருந்தா தென்பதைத் திருச்சாழற் பாக்களை ஒரு முறை படித்தோரும் இலகுவில் உணர்ந்து கொள்வர். பழிப்புரை கூறுவோரைப் புகழ்ந்துரை பகர்வோர் தாழ்குழலாய் என விளித்திருத்தலின் பழிப்புரை கூறுவோரும் பெண்பாலாரேயாவரென்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அகப்பொருட்டுறைகள் தழுவி உரைவரைந்த ஆராய்ச்சிய் பேருரையாசிரியர், தோழிதலைமகளை இயற்பழித்து மொழிதலுந் தலைவி அதனை எதிர்த்துத் தலைமகனை இயற்பட மொழிதலுமாகிய பொருளுடையது திருச்சாழல் என நிலைநாட்டினார். சாழல் என்பது விளையாட்டாகக் கைகொட்டி நகைத்துப் பேசுதல் என்னுங் பொருளுடைய தென்பதைப் பல்வேறு சான்றுகாட்டி ஆராய்ச்சிய் பேருரைகாரர் நிறுவினார். விளையாட்டாக கைகொட்டி நகைத்துப் பேசுதலைக் குறிக்கும் அச்சொல் ஆகுபெயராய் விளையாட்டையும் அதன் மேற் பாடல்களையுங் குறிக்குமென்பதும் அவர்கருத்து. தலைவனைப் பிரிந்து வருந்திய தலைவியை வருத்தந்தீர்க்குமுகமாக ஒருபாயத்தை நாடிச் செய்வதே இயற்பழித்து மொழிதல். இயற்பழித்துரைக்கப்பட்ட தலைவனின் இயல்புகளை உள்ளவாறு விளக்கி இயற்படமொழிதல் அவ்விடத்துத் தலைவிக்குரியதாகும். அவ்வாறு இயற்பட மொழியுந் தலைவி அதுபற்றுக் கோடாக ஆற்றியிருக்குமென்பது அகப்பொருட்டுணிபு. தோழி கூறியன எள்ளிநகையாடற்பாலன வெனத் தலைமகள் கைகொட்டி நகைப்பதாக இப்பகுதித் திருப்பாட்டுக்கள் அமைந்திருப்பதும் பேருரை காரர் கூற்றிற்கு அரண்செய்வதாகும்.
திருவாசகத்தில் வருந்திருப்படையாட்சி யென்னும் பதிகப்பெயர் விளங்குவதானாலும் அப்பகுதிப் பாடல்களுக்குப் பொருள்கொள்வோர் பெரிதும் இடர்ப்பட வேண்டிய நிலையில் அவை அமைந்தன. அடிதோறும் இருமுறை வரும் “ஆகாதே” என்னும் சொற்பிரயோகமே இத்தகைய இடர்ப்பாட்டிற் கெல்லாம் காரணமாகும். ஆகாதே என்பதற்கு ஆகாது எனப்பொருள் கொண்டோரும் ஆகும் எனப்பொருள் கொண்டோருமாகிய இருபகுதியினருந் தமதுபொருள் பொருந்தாத இடங்களைக் கண்டு மலைப்புற வேண்டிய நிலையிருந்தது. ஆதலாற் சிலவிடங்களில் “ஆகும்” எனப்பொருள் கொள்வதும் வேறுசில இடங்களில் “ஆகாது” எனப்பொருள் கொள்வதும் அவசியமெனக் கண்டனர். கண்களிரண்டும் அவள் கழல் கண்டுகளிப்பனவாகாதே என்னும் பகுதியில் ஆகும் என்னும் உரையும் “காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமாகாதே” என்னும் பகுதியில் ஆகாது என்னும் உரையும் பொருத்தமாதல் சிந்திக்கத்தக்கது. இவ்வாறு ஒரு சொற்பிரயோகத்திற்கு இருவேறுவகைப் பொருள் காண்பது பொருத்தமற்ற தென்பது வெளிப்படை. ஆராய்ச்சிப் பேருரையாசிரியர் அகப்பொருட்டுறை தழுவி உரைவரைந்து திருப்பாட்டின் பொருளைத் தெளிவுபடுத்தினார். விதிவழி யொழுகுதல் நல்லதாகவும் விலக்குவழி யொழுகுதல் தீயதாகவும் அமைதல் உலகியற்கை. ஆனால் மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடின் விதிவழி யொழுகுதலும் ஒழுகாமையுமாகிய இரண்டும் நல்லனவெனத்தலைமகள் கூறுவனவாக இப்பகுதிப் பாட்டுக்களின் பொருள் அமைக்கப்பட்டுள்ளதெனப் பேருரைகாரர் காட்டுந்திறன் மிகப்பொருத்தமுடைத்து. தலைமகளைத் தோழிகண்டு உனக்கு நல்லனவே யாகும் அல்லனவாகாவெனக் கூறக் கேட்ட தலைமகள், “என்னுடைய நாயகனாய ஈசன் எதிர்ப்படுமாயிடின் எனக்கு இவை நல்லன; இவை அல்லன; என்னும் பேதமின்றி எல்லாம் நல்லனவாம்” என்று கூறுகின்றாளென உரை வகுக்கும் ஆராய்ச்சிப் பேருரைகாரர் கூற்றுப் போற்றத்தக்கது, இதற்கு, “என்னணியார் முலையாகம் அளைந்துடன் இன்புறுமாகாதே” எனவரும் பகுதியும், “காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமாகாதே” எனவரும் பகுதியும், “சேலன கண்கள் அவன் றிருமேனி திளைப்பனவாகாதே” எனவரும் பகுதியுந் தக்க சான்றுகளாம்.
அன்னைப்பத்து என்னும் பதிகத்திற் கூறப்படுஞ் செய்திகளைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றலைக் கூறுவனவாக ஆராய்ச்சிப் பேருரைகாரர் கருதுகிறார். “ஊரவர் அலர்தூற்றலாலும் ஐயங் கொண்டமையாலுந் தலைமகளது ஆற்றாமை கண்ட செவிலி வெறியாட்டெடுக்க முயலுவதை அறிந்த தோழி, தலைமகளுக்கமைந்த நோய் காதலாலே நேர்ந்ததன்றிஅணங்காலே நேர்ந்ததன்றென அவளாற் காதலிக்கப்பட்ட தலைமகன் இயல்பு அவன் காதலுள் ஈடுபட்ட தலைமகள் இயல்பு என்னுமிவற்றைக் செவிலிக்குக் கூறியறத்தொடு நின்ற நிகழ்ச்சியே இப்பகுதிக்கண் கூறப்படுகிறது'' என ஆராய்ச்சிப் பேருரைகாரர் கூறுகிறார். தலைமகள் இங்ஙனம் கூறினாளெனத் தலைவி கூறியதனைக் கொண்டு கூற்றாகத் தோழி செவிலிக்குக் கூறினாளென்பதும் அவர் கொள்கை. இப்பகுதியில் அன்னாய் எனவரும் விளி தலைவி தோழியை விளித்ததெனத் தொல்காப்பியச் சூத்திர ஆதாரத்துடன் நாட்டுகிறார். பூத்தரு புணர்ச்சி கூறி அறத்தொடு நிற்றலை இப்பகுதி சித்திரிக்கிறதெனக் கூறும் அவர், தமது கூற்றுக்காதாரமாக, “துன்னிய சென்னியின் மத்தம் உன்மத்தமே இன்றெனக் கானவாறன்னே யென்னும்'' என்னுந் திருப்பாடற் பகுதியை எடுத்துக் காட்டி நிறுவுந்திறன் வியக்கத்தக்கது.
அகப்பொருளைத் தழுவி வரும் பதிகங்களிலே மட்டுமன்றி மற்றையவற்றிலும் பேருரைகாரரின் நுண்ணிய ஆராய்ச்சியின் பலனாக விளங்காதபல செய்திகள் விளக்கம் பெற்றுள்ளன. கோயிற்றிருப்பதிகந் தில்லையில் அருளிச் செய்யப்பட்டதென்பதை ஆராய்ச்சிப் பேருரைகாரர் திருவாசகம் முழுவதுந் தில்லையிலிருந்து அடிகளால் அருளிச் செய்யப்பட்டதென்னும் பொருளில் ஏற்றுக்கொண்ட போதிலும் அப்பதிகம் பெருந்துறையானையே பன்னிப் பன்னிப் பேசிவருதவால் கோயில் என்பது திருப்பெருந் துறையையே குறிக்குமென நுவன்றார். பொதுவாகக் கோயில் என்பது தில்லையைக் குறிக்குமேனுங் “கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய்” என்றின்னோரன்ன கூற்றுக்களாலே தமக்குப் பெரிதும் ஈடுபாடுடைய பெருந்துறையையும் அடிகள் கோயில் என்றே கொண்டனரெனவும், திருப்பெருந் துறையைக் கோயில் என்று கொண்டமையால் தில்லையானைப் புகழ்ந்து பேசுந்திருப்பதிகத்தைக் கோயில் மூத்த திருப்பதிகம் என அடிகள் குறித்தாரெனவும் ஆராய்ச்சிப் பேருரைகாரர் துணிந்தார். மூத்த கோயிற்றிருப்பதிகம் என்பதே கோயின் மூத்த திருப்பதிகமாயிற்றென்பதும் அவர் தரும் விளக்கமாகும். திருப்பெருந்திறையைக் கோயிலெனக் கொண்ட அடிகள் தில்லையை மூத்த கோயிலெனக் கொண்டது பொருத்தமுடைத்தே.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரை, திருவாசகப் பதிகங்கள் பலவுங் குறிப்பிடும் பல்வேறு வகையினவாகிய பண்டைக்கால விளையாட்டுக்களை ஓரளவிற்கு ஆதாரங் காட்டி நிறுவுகிறது. திருவெம்பாவை, திருஅம்மானை என்னும் பாடல்களுக்குத் தொல்காப்பியப் பொருளதிகார உரைவிரித்த பேராசிரியர் தொல்காப்பியத்துள் இலக்கணம் அமைத்துப் போதலாலும் அவர் திரு வென்னும் அடைபுணர்க்காது கூறியமையாலும் முற்காலத்தே கன்னியர் தாம் விரும்பிய தலைவரை மணக்கக் கருதிப் பாடியும் நோற்றும் வந்தனரெனப் பேருரைகாரர் கூறினர், அடிகள் திருவெம்பாவையையும் ஆண்டாள் திருப்பாவையையும் முறையே இறைவனையும் கண்ணனையும் மணக்கக் கருதிப் பாடியருளிச் செய்தனரெனவும் அவர் உரைத்தார். திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம் முதலிய விளையாட்டுக்களெல்லாந் திருவாசக ஆராய்ச்சிப் பேருரையாலே நன்கு விளக்கம் பெற்றன வென்பது அவ்வப்பதிக முன்னுரையாலே அறியத்தக்கது.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரைகாரர் இறைவன் மணிவாசகப் பெருமானை முதலில் அண்டவிடம் திருப்பெருந்துறையென்பதை மறுத்து உத்தரகோச மங்கையென்பதைத் தக்கஅகச்சான்றுகள் காட்டி ஆணித்தரமாக நிறுவினார். தொல்லையிரும்பிறவி என்னும் முதலையுடைய வெண்பாவைத திருவாசகப் பேறு எனக்குறிப்பிடு மாசிரியர் அவ்வெண்பாவிலே திருவாசகமென்னுந் தேன் என்னுஞ் சொற்றொடரை யெடுத்துக் காட்டி, சிவபுராணம், குழைத்த சொன்மாலை, மணிவார்த்தை, இருந்துதி என்னும் பெயர்களால் அடிகள் அழைத்த நூலுக்குத் திருவாசகம் என்னும் பெயரைத் தொல்லையிரும் பிறவி யென்னும் முதலையுடைய வெண்பாவின் ஆசிரியரே கொடுத்திருத்தல் வேண்டுமெனக் கருதுகிறார். அவ்வெண்பாவை இறைவனே அருளிச் செய்திருக்கலாமென்பதும் அவர் கருத்து. இவ்வெண்பாவுக்கு அவர் வரைந்துள்ள உரையாலும் பல புதிய கருத்துக்கள் புலனாகியுள்ளன. திருவாசகத்தில் வரும் பாடல்களை இயற்கைப் பொருளடைவுக் கேற்ப மாற்றியமைத்தும் பதிகங்களையும் அன்னவாறே அங்காங்கு இயல்பாயமைய வேண்டிய முறை காட்டியும் அவர் உரை செல்கிறது. ஆராய்ச்சிப் பேருரைகாரர் சமய உலகிலும் இலக்கிய உலகிலும் விவாதத்திற் கிடஞ் செய்யும் பல் வேறு செய்திகளையும் எடுத்தாராய்ந்து தம் முடிபு நாட்டிச்சென்றமையையும் நூலைக் கற்போர் கண்டின்புறுவர்.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரை தமிழ் மொழியிற்சிறந்து விளங்கும் நூல்களில் ஒன்றென்பதில் ஐயமில்லை. இறையனார் களவியலுக்கு உரைகண்ட நக்கீரனார் கருத்தை நுணுகியாராய்ந்து அகப் பொருள் இலக்கணத்தைத் தெளிவுபடுத்தும் இவ்வுரை சைவத்தமிழுலகிற்குக் கிடைத்த ஒப்பற்ற தெய்வக்கருவூலம் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொள்ளும் என்பது தெளிவு.

Comments
Post a Comment