இலக்கியமரபு

இலக்கியமரபு


லக்கிய மென்னுமிச்சொற்‌ பழந்‌தமிழ்ச் சொல்லன்று; பிற்றைஞான்றை வடசொற்‌ சிதைவு; இலக்கணமிலக்கியம்‌ என்னும்‌ இணைச்‌சொல்லுளொன்று.

Tamil


இலக்கணமென்பதூஉம்‌ வடசொற்சிதைவு. இச்சொல்லுத்‌ தொல்‌காப்பியத்துள்ளுங்‌ காணப்படுகின்றது. ஆயினும்‌ அதனுள்‌ இலக்கியமென்பது காணப்படவில்லை. இலக்கணமென்பது தானும்‌ இலக்கணவிலக்கியமென்னும்‌ எண்ணுத்தொடரில்வரும்‌ பொருண்மேல்‌ வரவில்லை. அதுவும்‌ இடைக்காலத்துப்புக்க இடைச்செருகலாகவேயிருக்க வேண்‌டும்‌. அது அவ்விடங்கட்குப்‌ பொருத்தமின்றி வேண்டாதிருப்பவும்‌ அவ்விடங்களில்‌ உள்ள பழந்தமிழ்ச்சொற்‌ காணப்படாமையால்‌ வடநூற்பயிற்சி யுடையவராய்த்‌ தமிழ்நூலாய்ந்தார்‌ தமக்குத்‌ தோன்றியவாறு வலிந்து முடைந்துள்ள தென்பதனைத்‌ தமிழ்நூற்‌ பயிற்‌சிவல்லார்‌ எளிதிற்‌ கண்டுகொள்வர்‌. இதுபோலும்‌ இடைச்‌ செருகல்‌பல தொல்காப்பியத்துள்‌ ஆங்காங்குக்‌ காணப்படும்‌. திருவள்ளுவருடையமுப்பால்‌ போலும்வரம்புடையமிகச்சிலவே இடைச் செருகற்குப் ‌பெரிது மரியனவாம்‌. அவையொழியப்‌ பல்லாயிரம்‌ யாண்டுகளாகவும்‌ பன்னூறியாண்டுகளாகவும்‌ வழங்கிவருமெந்நாலும்‌ பதிப்புமுறைவருமுன்‌ இடைச்செருகவில்லாதிருந்ததில்லை. வடமொழிக்‌ கல்வியும்‌ வடமொழியாளருந்‌ தமிழகத்துப்புக்குச்‌ சொற்செலவு மிக்கிருந்த பொழுது அவ்வாறு வடசொற்களைச்‌ செருகுந்‌ துணிவுண்டாதலுந்‌ தமிழர்‌ அதுகைக்கொண்டு வழங்குதலு மியலாதவையல்ல.

இலக்கணமென்பது யாதானு மொன்றனைக்‌ குறித்துக்காட்டு மதனடையாளம்‌. அது அப்பொருளின்‌ சிறப்பியலெனப்படும்‌.

இலக்கணத்திற்குப்‌ பற்றுக்கோடாவது இலக்கியம்‌. காரணமுடையது காரியம்‌; பிரமாணமுடையது பிரமேயம்‌; அநுமானமுடையது அநுமேயம்‌; உபமானமுடையது உபமேயம்‌ என வடமொழியுள்‌ வருமாறுபோலவே இலக்கணமுடையது இலக்கியம்‌ எனவும்‌ வரற்பாலது.

வடமொழிப்புலமையுந்‌ தமிழ்மொழிப்புலமையும்‌ ஒருங்குடைய வடமொழியாளர்‌ தமிழ்மொழியில்‌ எழுத்துச்சொற்பொருள்‌ யாப்‌பணி‌ என்னுமைவகையுமாமாறு கூறுமொழி நூல்களாகவும்‌ அக்‌கூற்றுக்கு வழக்குஞ்‌ செய்யுளுமெல்லாம்‌ எடுத்துக்காட்டாகவும் ‌இருத்தலைக்‌ கண்டு அவையெல்லாவற்றையுந்‌ தொகுத்து இலக்கணமிலக்கியமென இருகூறுபடுத்து வழங்குவாராயினர்‌.

வடமொழி முதலிய ஏனைய மொழிகளிலே மொழிநூல்களிற் ‌பொருளியல்‌ கொள்ளாமையால்‌ அவற்றுப்பனுவலெல்லாம்‌ இங்ஙனம்‌ இலக்கணம்‌ இலக்கியமென இருகூறுபடுத்துத்‌ தொகுத்துக்‌ கூறுதற்கு ஏற்புடையவல்லவாயின.

இலக்கணமிலக்கியமென்பன பொதுச்சொல்லாயினும்‌ வழக்குப்‌ பயிற்சியாற்‌ சிறப்பாக முறையே மொழியிலக்கணத்தையும்‌ மொழியிலக்கியத்தையுங்‌ குறிப்பன வாயின.

மொழியிலக்கணமென்பது மொழியினதிலக்கணமென ஆறாம்‌ வேற்றுமையும்‌ மொழியிலக்கியமென்பது மொழியாகிய இலக்கியமெனப்‌ பண்புத்தொகையுமாம்‌. வழக்குஞ்‌ செய்யுளுமல்லது மொழியென ஒன்றில்லாமையின்‌ மொழியே இலக்கியமெனலாம்‌. மொழியின்‌ அமைப்புணர்த்துவது மொழிநூலென்னுமிலக்கணம்‌. இலக்கணமென்‌பது ஆகுபெயராய்‌ இலக்கணமுணர்த்தும்‌ நூலையுமுணர்த்தும்‌. பண்‌டைத்தமிழ்ப்புலவர்‌ இலக்கணமுணர்த்துவனவற்றையே நூலெனவும்‌ இலக்கியமெல்லாவற்றையுஞ்‌ செய்யுளெனவும்‌ வழங்கிப்‌ போந்தனர்‌. நூலென்பது ஒருவகையாப்பின்‌ பெயர்‌. இலக்கணங்களை நூல்யாப்‌பால்‌ உணர்த்திப்போதலே மரபாயினமையின்‌ அவைகூறும்‌ நூல்‌யாப்புக்களின்‌ றொகுதியும்‌ நூலெனப்படும்‌. வடநூலாரும்‌ ஒருசூத்‌திரத்தையுஞ்‌ சூத்திரமென்பர்‌. சூத்திரங்களின்‌ றொகுதியையும் ‌வேதாந்த சூத்திரமென்றாற்போலச்‌ சூத்திரமென்பர்‌. தமிழ்நூலாரும்‌ ஒருநூலையும்‌ நூலென்பர்‌. அவற்றுத்‌ தொகுதியையும்‌ நூலென்பர்‌. அதுபோலவே ஒருசெய்யுளையுஞ்‌ செய்யுளென்பர்‌. அவற்றுத்‌ தொகுதியையுஞ்‌ செய்யுள்‌ என்பர்‌. எனவே இலக்கியஞ்‌ செய்யுளெனப்படும்‌. அதனால்‌ இலக்கியங்களை வகுத்துக்‌ குறியீடு செய்யலுற்றார்‌, தனிநிலைச்செய்யுள்‌, இணைநிலைச்செய்யுள்‌, தொகை நிலைச்செய்யுள்‌, தொடர்நிலைச்செய்யுள்‌, உரையிடையிட்ட பாட்டுடைச்‌ செய்‌யுளெனக்‌ குறியீடு செய்வாராயினர்‌. நூல்யாப்புந்‌ தான் ‌எடுத்‌துக்காட்டாகுங்காற்‌ செய்யுளெனப்படுவதாயினுந்‌ தானுணர்த்தும்‌ பொருள்பற்றி நூலெனச்செய்யுளின்‌ வேறாகப்பிரித்துவைத்து வழங்கப்படும்‌. எப்பொருளையும்‌ எச்சொல்லையும்‌ வழங்குமாற்றுக்கு வேறாகச்செய்து கூறுதல்‌, செய்யுளெனப்பட்டது. அங்ஙனங்கூறுதலே இலக்கியமாம்‌. நூலுஞ்‌ செய்யுளுமடக்கப்‌ பனுவலெனக்‌ குறியீடு செய்யப்பட்டு வழங்கிற்று. இஞ்ஞான்று சிலப்பதிகார முதலிய செய்யுளெல்லாவற்றையும்‌ வேற்றுமையின்றி நூலெனவழங்குதல்‌ பொருந்தாதாயினுஞ்‌ சிறப்புடைய நூலுக்கு இனமாதல்பற்றி ஒவ்வொரு செய்‌யுளையும்‌ நூலெனவழங்குதலை மரபுவழுவமைதியெனத்‌ தழீஇக்‌ கொள்‌ளலாம்‌. ஆயினும்‌ நூலெல்லாவற்றையுஞ்‌ செய்யுளெல்லாவற்றையுந்‌ தொகுத்துப்‌ பொதுவிற்‌ பனுவலென வழங்காது நூலென்றே வழங்குங்கால்‌ நூலென்பது சிறப்பினாற் பெற்ற பொதுப்பெயரெனக்‌ கொளல் வேண்டும்.‌

ஏனைமொழிகளிலெல்லாம்‌ எழுத்தியலுஞ்‌ சொல்லியலு முணர்த்‌துவனவே மொழிநூலெனப்படும்‌. பொருளியல்‌, யாப்பியல்‌, அணியியலுணர்த்துவன மொழிநூலெனப்படுதலில்லை.

தமிழ்மொழியிலோ அவ்வாறன்றித்‌ தனித்தனியாகவேனும்‌ ஒருங்கு தொகுத்தேனும்‌ அவ்வைந்தியலுணர்த்துவனவெல்லாம்‌ மொழிநூலெனப்படும்‌.

எனவே தமிழ்மொழியில்‌ எழுத்தியல்‌, சொல்லியல்‌, பொருளியல்‌, யாப்பியல்‌, அணியியலென இலக்கணமும்‌ ஐவகைப்படும்‌. எழுத்துச்‌சொற்‌ பொருள்‌ யாப்பணி என இலக்கியமும்‌ ஐவகைப்படும்‌.

ஆயினும்‌ வழக்கிற்‌ காட்டினும்‌ ஏனைய எழுத்துஞ்‌ சொல்லும் ‌பொருளும் ‌அணியுமுற்றக்‌ காணுமிடம்‌ யாப்புக்களேயாகலின்‌ அவற்றை இலக்கியமெனச்‌ சிறப்புடைமைபற்றி வழங்குவர்‌.

யாப்பு எழுவகைப்படும்‌, அவையாவன பாட்டு, உரை, நூல்‌, பிசி, மறைமொழி, முதுமொழி, குறிப்புமொழி என்னுமிவை.

அவ்யாப்பேழும்‌ இலக்கியங்களேயாம்‌. அவற்றுள்‌ இங்கு நூலென்‌றது இலக்கணமன்று. ஒருவகையாப்பு.

இலக்கியமேழனுள்ளும்‌ பாட்டு நடைச்செய்யுளும்‌ உரைநடைச்‌ செய்யுளுமே சிறந்தனவென்பதுபற்றி அவையே இலக்கியமெனப் ‌பெரும்பாலும்‌ வழங்குவர்‌. அவைதாமும்‌ பொருளின்‌ செய்தி புனையாது இயல்‌ கூறுதலே மேற்கொள்ளுமாயின்‌ இலக்கியப்பனுவலாகாது இலக்கணப்பனுவலாய்விடும். நூல்போல, அப்பொழுது நூலின்பாற்‌படுமென்பதுபற்றி அவை நூலெனப்படும்‌, வீரசோழிய முதலாயின நூலான்வாராது பாட்டான்‌ வந்தனவாயினுஞ்‌ செய்யுளெனப்படாது நூலெனப்படுவனவாயின. ஆயினும்‌ அவை சிறப்பிலவாகலிற்‌ சான்று கொளலாகாவாம்‌. இலக்கணம்‌ இந்நாளை மகார்க்கு விளங்குதற்‌பொகுட்டு உரைநடை நூவாய்வந்தனவுமுளவாயினும்‌ அவை அள்‌வளவிலே நூலெனக் கொள்ளலாம்‌. ஏனையோர்க்குப்பாட்டானும்‌ உரையானும்‌ இலக்கணம்‌ வாராது நூலான்‌ வருதலே மரபு வழாநிலையாம்‌.

பாட்டுநடையிலக்கியந்‌ தனிநிலைச்செய்யுளும்‌ இணைநிலைச்செய்யுளுந்‌ தொகைநிலைச்செய்யுளுந்‌ தொடர்நிலைச்செய்யுளுமென நால்‌வேறுபட வழங்கும்‌.

திருவள்ளுவனா ரருளிய முப்பாலுள்

இன்சொலா லீரமளைஇப்‌ படிறிலவாஞ்

செம்பொருள்‌ கண்டார்வாய்ச்‌ சொல்‌” என்பது இலக்கணங் ‌கூறுகின்றது.

இனிய வுளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக்‌ காய்கவர்ந்‌ தற்று” என்பது இலக்கியமாகின்றது.

இங்ஙன முதலிரண்டுபாலும் விரவிக்‌ காணப்படுகின்றது. இன்‌பத்துப்பான் முழுதுமிலக்கியம்‌,

எனவே திருக்குறள்‌ இலக்கணமுமன்று; இலக்கியமுமன்று; அவ்‌விரண்டுமொருங்குவிராய்‌ இலக்கணவிலக்கியமென ஒருவகையிற்படும்‌. படவே பனுவலெல்லாம்‌ இலக்கணம்‌, இலக்கியம்‌, இலக்கணவிலக்கியமென மூவகைப்படுமென்பதூ உமாயிற்று, பதினெண்‌ கீழ்க்கணக்‌குக்களுட்‌ கார்நாற்பது, களவழிநாற்பது, நாலைந்திணைப்பனுவல்கள் ‌என்றிவை இலக்கியமே. ஏனையபனுவல்கள்‌ அறனும்‌ பொருளும்‌ பயப்பக்கூறாது அவற்றையே எடுக்தோதினும்‌ அவை கருத்துவகையான்‌ இலக்கணமுஞ்‌ சொல்லுமாற்றான்‌ இலக்கியமுமாய்‌ இலக்கணவிலக்கியப்பனுவலாம்‌.

வீடு பேற்றைப்‌ பயப்பனவற்றுட்‌ சிவஞானபோதம்‌, சிவஞானசித்தியார்‌, சிவப்பிரகாசம்‌, ஞானாமிருத முதலாயின இலக்கண நூல்‌கள்‌. தேவாரந்‌ திருவாசகம்‌, திருக்கோவையார்‌, நாலாயிரத்திருமொழி முதலாயின இலக்கியம்‌.

இலக்கியமெல்லாம்‌ வரலாற்றிலக்கியம்‌, கதையிலக்கியம்‌, புதுப்‌புனைச்‌ செய்தியிலக்கியம்‌ புனைபுகழ்ச்‌ செய்தியிலக்கியம்‌ தன்மெய்ப் பாட்டுரையிலக்கியம், நாடக‌விலக்கியம், நாட்டுபாடலிலக்கியமென எழுவகைப்பட்டிருத்தல் காணப்படும்.  

சோழன்‌ கரிகாலன்‌ வரலாறு, சேரன்செங்குட்டுவன்‌ வரலாறு, பாண்டியர்‌ வரலாறு, தமிழர்‌ வரலாறு, அரசர்‌ வரலாறு, நாட்டுவரலாறு முதலாயின வரலாற்றிலக்கியமெனப்படும்‌. வரலாற்றிலக்‌கியமெல்லாம்‌ உரைநடையிலக்கியமாயிருக்கும்‌. செப்பேடு கல்வெட்‌டுக்களிலன்றிப்‌ பழைய வரலாற்றிலக்கியந்‌ தமிழிற்‌ காணப்படவில்லை. செப்பேடு கல்வெட்டுக்களிற்‌ காணப்படுவனவும்‌ அரைகுறையாயினவை. இற்றைக்கு இரண்டு நூற்றாண்டுகட்கு முன்‌ வாழ்ந்த புதுச்‌சேரி ஆனந்தரங்க முதலியார்‌ எழுதிவைத்த கைக்குறிப்புக்‌ கட்டுரையும்‌ நிரம்பாத வரலாற்றிலக்கியமெனலாம்‌. மதுரைத்‌ திருப்பணிவரலாறு போல்வன பாட்டாற்‌ செய்யப்படுதலின்‌ வரலாற்றிலக்கியத்‌தின்பாற்படா, அவையுந்‌ தொடர்பில்லாதவை; நிரம்பாதவையுமாம்‌.

கதையிலக்கியம்‌ ஐவகைப்படும்‌. அவையாவன பொருண்மரபில்‌லாப்‌ பொயம்மொழியும்‌ பொருளொடு புணரா நகைமொழியுங்‌ குறிப்புள்ளடக்கிய கூத்துக்கதையும் பொழுதுபோக்குப் புதுமைக்கதையும் வரலாற்றுக் கதையுமெனவிவை.

‌மக்களின்‌ செய்தியைப்பறவை விலங்கு முதலியவற்றின்‌ மேல்‌வைத்துக்‌ கூறுதல்‌ பொருண்மரபில்லாப்‌ பொய்ம்மொழிக்கதை. அவை நட்புப்‌பேறு முதலிய ஐவகைச்‌ சூழ்ச்சிக்கதை போல்வன:

மக்களின்‌ செய்தியேயாயினும்‌ விலங்கு முதலியவற்றின்‌ செய்‌தியே யாயினும்‌ அப்பொருளோடியைபில்லாத பொய்யும்‌ நகைவிளைப்‌பதுமான செய்திகூறுதல்‌ பொருளொடுபுணராத நகைமொழிக்கதை. அவை முழுமடப்பணிக்கன்‌ (அவிவேகபூரணகுரு) கதைபோல்வன.

இவ்விருசார்க்‌ கதைகளுந்‌ தொல்காப்பியனார்க்கு முற்றொட்டுள்ளன. அக்காலத்திலேயே அவை உரைநடையிலக்கியமாகவே அமைந்திருந்‌தன. அவையெல்லாம்‌ பண்டைத்தமிழர்‌ உரை நடையிலக்கியமறிந்திருக்கவில்லை யென்றுபிறர்கூறுமளவுக்கு மறைந்தொழிந்தன.

நம்பன்‌ கூற்றுவனையுதைத்தகதை, கண்ணுதல்‌ காமவேளைக்கண்‌ணழலாற்‌ காய்ந்து கடிமணஞ்‌ செய்தகதை, மலரோனுமாலு நம்பனடிமுடி தேடிய கதை என்றிவைபோல்வன இறைவன்‌ சாக்காடில்‌லான்‌, காமமில்லான்‌, வினையில்லான்‌ மெய்யுணர்வு முதல்வன்‌ என்‌னுங்‌ குறிப்புக்களை உள்ளடக்கிப்‌ பொதுமக்கட்கு விளக்குங்‌ கூத்துக்‌கதைகளாம்‌. பிறவுமன்ன.

ஓரூரில்‌ ஒருமன்னனிருந்தான்‌ என்றாற்‌ போலத்தொடங்கி எஞ்சியசெய்தி என்ன வெனக்கேட்பார்‌ ஆர்வங்கொள்ளுமாறு சொல்லிக்‌கொண்டுவருங்‌ கதை பொழுது போக்குப்புதுமைக்கதை, இக்கதை கேட்பார்க்கு ஆர்வமும் வியப்பும் விளைக்கும்‌; நகைவிளைப்பதன்று. இதுஉரைநடையிலக்கியம்‌.

சிலப்பதிகாரம்‌, மணிமேகலை, இராமாயணம்‌, பாரதமுதலாயின வரலாற்றுக்கதை. இவற்றுட்‌ சில பெரிது வரலாறுஞ்‌ சிறிது கதையும்‌ வேறுசில சிறிது வரலாறும்‌ பெரிதுகதையுமுடையவை, சீவகசிந்தாமணி முதலியன வரலாறு கலவாக்கதைகளேயாம்‌.

கதையுடையவரலாறு சான்றுகொள்ளத்‌ தக்கனவல்ல. இவ்வரலாற்றுக்கதை யெல்லாம்‌ பாட்டுநடையிலக்கியமாகவும்‌ உரையிலக்கியமாகவும்‌ அவ்விரண்டுங்‌ கலந்த உரையிடையிட்டபாட்டுடைச் செய்‌யுளிலக்கியமாகவுமிருக்கும்‌.

இப்பொழுதைய நிகழ்ச்சியாகப் படைத்துக்கொண்ட மக்கட்செய்‌தியைக் கூறுதல்‌ புதுப்புனைச்‌ செய்தியிலக்கியம்‌, இவை உரைநடையிலக்கியம்‌.

புதுப்புனைச்‌ செய்தியிலக்கியங்களும்‌ பொழுதுபோக்குப்‌ புதுமைக்‌ கதையிலக்கியங்களும்‌ பொதுமக்களின்‌ பொருட்டே அமைந்தனவாகலின்‌ அவர்கட்குத்‌ தெரிந்த மொழியாற்‌ செவ்விதிற்‌ கிளந்து தேர்தல் ‌வேண்டாது குறித்தது தோன்றிப்புலனென்னும்‌ வனப்புடையனவாயிருத்தல்‌ வேண்டும்‌.

புதுப்புனைச்‌ செய்தியிலக்கியம்‌ நெடுங்காலமாயினும்‌ அவை செய்‌தார்‌ காலத்து நிகழ்ச்சியாகலிற்‌ கதையெனப்படா. வரலாறெனவும்படா. இவை இஞ்ஞான்றைப்புதுப்படைப்பு. ஆங்கிலமொழியைப்‌ பின்பற்றித்தமிழின்கட்‌ புனையப்படுவன. இவை தமிழின்‌ கண்மலிந்து காணப்படுவனவாயினும்‌ பெரும்பாலான புலவரல்லாதாராற்‌ செய்யப்படுகின்றன. அதனால்‌ இவை சேரி மொழியாகிய தெரிந்தமொழியாற் கிளக்கப்படல் வேண்டுமாயினுஞ்‌ செவ்விதிற்‌ கிளக்கப்படுவனமிகச் ‌சிலவே. இவை சேரிமொழியாற்‌ செய்யினு மொழிமரபு கெடாதவாறு விழுமிய பொருள்பயப்ப எண்சுவையும்‌ நன்கினிது கமழ்ந்து சிறக்குமாயிற்‌ புலவர்களானுந்‌ தமீஇக்‌ கொளற்பாலனவேயாம்‌.

உள்ளோ னொருவனைப்‌ பாட்டுடைத்‌ தலைவனாகக்கொண்டு அவன் புகழ்புலப்படப்பலவாறு செய்தி புனைந்துபாடுதல்‌ புனை புகழ்ச்‌ செய்தியிலக்கியம்‌. அவை உலாப்புறம்‌, உலாமடல்‌, காதல்‌, ஆற்றுப்படை முதலியனவாம்‌. இவை பாட்டு நடையிலக்கியம்‌. ஆற்றுப்படை ஆசிரியப்பாவானும்‌ உலாப்புற முதலாயின வெண்கலிப்பாவானும்‌ வரும்‌.

புனைபுகழ்ச்செய்‌தியிலக்கியம் போலப்‌ புனை பழிச்செய்தியிலக்கயமு முண்டாயினும்‌ அருகிக்காணப்படுகின்றன. அவை திருமுகவிலாசமென்பதுங்‌ கனகி புராணமென்பதுமாம்‌. கனகிபுராணம்‌ பிற்காலத்ததாயினுமிறந்தது.

பாடும்‌ புலவர்‌ இறைவன்‌ முதலாயவர்பாலெழுந்த தம்மன்பும் ‌அழுகைக்குறிப்பும்‌ உவகைக்குறிப்பும்‌ முதலாயவற்றை வெளிப்படுத்‌துப் பாடுவனவுங்‌ கூறுவனவுமெல்லாந்‌ தம்மெய்ப்பாட்டுரையிலக்கியமெனப்படும்‌: அவை தேவாரந்‌ திருவாசகந்‌ திருவாய்மொழி முதலியனவும்‌ புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்‌ என்றிவை போலுந்தொகை நிலைச்செய்யுட்களும்‌ பிறவுமாம்‌.

நாடக இலக்கியமாவன திருக்கோவையார்‌ முதலிய கோவைகளும்‌ அகத்திணைப்பொருளவாகிய அகநானூறு முதலாய ஐத்துதொகை நூல்‌களும்‌ பரணி, குறவஞ்சி, குறம்‌, பள்ளுத்‌ தொடக்கத்தனவுமாய்க் ‌கருதப்படுமவரவர்‌ கூற்றானன்றிப்‌ பாடும்‌ புலவர்‌ கூற்றான்‌ வாராதனவாம்‌, இவை பாட்டானும்‌ உரையானும்‌ பாணியானும்‌ வரும்.

நாட்டுப்பாடலிலக்கியமாவன சேரியம்‌ பெண்டிரும்‌ ஆடவரும்‌ அவ்‌வத்தொழில்செய்யுந்தொறும்‌ விளையாடுந்தொறும்‌ பாடிவரும்‌ பலவகைப்‌ பாடல்களுமாம்‌. அவை வள்ளைப்பாட்டும்‌, வரிப்பாட்டும்‌, ஒலாட்டுப்பாட்டும்‌, ஒப்பாரிப்பாட்டும்‌, பாவைப்பாட்டும்‌, பள்ளியெழுச்சிப்பாட்டுங்‌ கோலாட்டுப் பாட்டுங்‌ கோத்தும்பிப்பாட்டும்‌, அம்மானைப்பாட்டும்‌, உந்திப்பாட்டுஞ்‌, சாழற்பாட்டுந்‌, தெள்ளேணப்‌பாட்டுங்‌, குருவிப்பாட்டுங்‌, காக்கைப்பாட்டும்‌ முதலாய பலப்பல. இவை பெரும்பாலுந்‌ தாளத்தொடுபடாதனவுஞ்‌ சிறுபான்மை தாளத்தொடுபட்டனவுமாய இசைப்‌ பாடல்களாயிருக்கும்‌. இவை பாடலாகவேயிருக்குமாதலிற்‌ பாடலிலக்கியமெனப்படும். இவையும் ‌புலனென்னும்‌ வனப்புடையனவே.

இவ்வெழுவகையிலக்கியங்களுந்‌ தனித்தனி மரபுடையனவாயினும் ‌பொதுநிலைமரபின்‌ வழி நிற்றல்‌ வேண்டும்‌.

அறம்‌ பொருளின்பம்‌ பயப்பவருதலும்‌ நகை முதலிய சுவைவிளைத்தலும்‌ பாட்டு மரபு மொழிமரபு தழுவலும்‌ உவமை முதலாய அணிநலங்‌ கெழுமலும்‌ வனப்பும்‌ உடையனவாய்க்‌ கேட்போ ருளங்‌கவர்தலே இலக்கியப்‌ பொதுநிலைமரபு. சேரிமொழியாயுஞ்‌ செவ்‌விதிற்‌ கிளக்கப்படுதலே மொழிமரபு.

நாட்டுப்‌ பாடலுள்ளும்‌ நாடகவிலக்கியத்துள்ளுங்‌ கல்லாதபொதுமக்கள்‌ கூற்றும்‌ பேதைமகளிர்‌ கூற்றுஞ்‌ சிறார் கூற்றும்‌ பேய்கோட்பட்‌டார்‌ கூற்றுங்‌ களிமகன்‌, கூற்றும்‌ மையல்கொளிகூற்றும்‌ இன்னோரன்னவும்‌ இயல்வழிவாராதிழுக்கிய சொல்லொடும்‌ இடக்கரொழிந்த இழிசொல்லொடும்‌ மரூஉச்‌ சொல்லொடும்‌ வருதல்‌ கடியப்படாது; மரபுவழுவமைதியாம்‌.

இச்சொற்கள்‌ இலக்கியமாக்கியோன்‌ கூற்றாகவேனும்‌ இலக்கியத்‌துள்வரும்‌ உயர்ந்தோர்‌ கூற்றாகவேனும்‌ வருமாயின்‌ இலக்கியமரபு திறம்பிற்றென அவ்விலக்கியம்‌ இழித்துவிலக்கப்படும்‌.

இலக்கியமுடையானால்‌ ஆளப்படுஞ்சேரிமொழியுந்‌ தமிழகத்துப்‌பொதுச்‌ சொல்லாதல் வேண்டும்‌. அவன்‌ ஆளுஞ்‌ சேரிச்சொல்‌ எல்லாச்‌சேரிக்கும்‌ பொதுவாகாது “நேக்கு” “நோக்கு” என்றாற்போலவரும் ‌பார்ப்பனச்சேரிச்சொன்‌ முதலியனவாகத்‌ தனித்தனிச்‌ சேரிச்‌ சொல்‌லாயின்‌ அவ்விலக்கியம்‌ அவ்வச்சேரிக்கே உரிய இலக்கியமாகி, இலக்‌கியமெல்லாம்‌ பொதுவிலக்கியம்‌, தனிச்சேரியிலக்கியமென இருவேறுபட்டுத்‌ தனிச்சேரியிலக்கியஞ்‌ சான் ‌றோரிலக்கியமன்றாய்த்‌ தமிழரெல்‌லாருடைய துணையுமின்‌றிக்கெடும்‌.

அதனால்‌ இலக்கியமாக்குவாரெல்லாஞ்‌ சேரிச்சொல்லாயினும்‌ ஊர்ச்சொல்லாயினும்‌ பொதுவாகிய நாட்டுச்‌ சொற்களாலுங்கல்‌விச்சொற்களாலுமே இலக்கியம்‌ படைத்தல்வேண்டும்‌.

மகப்பெறுவார்‌ தம்‌மகவு சாவாது வாழவேண்டுமென்னு நோக்கத்‌தோடு அதற்கு வேண்டுவனவற்றை மருத்துவர்‌ கூறியமுறையாற்‌ செய்து போற்றல் வேண்டும்‌. அங்ஙனமின்றாயின்‌ மகவுசாம்‌. அதுபோல இலக்கியம்‌ படைப்பாருந்‌ தம்மிலக்கியம்‌ அழியாது நின்று நிலவுதல்‌ வேண்டுமென்னுநோக்கத்தோடு அதற்கு வேண்டுவனவற்றை நூலோர் ‌கூறியமுறையாற்‌ செய்துபோற்றல்‌ வேண்டும்‌. அங்ஙனமின்றாயின்‌ அவ்விலக்கியங்‌ கடிதினிறந்துபோம்‌.

பழமுறையிலாயினும்‌ புதுமுறையிலாயினும்‌ எம்முறையில்‌ இலக்‌கியம்‌ படைக்கினும்‌ மரபுவழிப்பட்ட சொல்லாற்‌ செய்தல்‌ வேண்டுமாதலின்‌ “மரபுநிலைதிரிதல்‌ செய்யுட்கில்லை” யென்பது கட்டளை.

“மரபுநிலை திரியிற்‌ பிறிதுபிறி தாகு” மென்பவாகலிற்‌ புலவரிலக்கியம்‌ பொதுமக்களிலக்கியமென்னு மிருவகையினுட்படு மெல்லாவிலக்கியங்களும்‌ பொதுவாகிய மரபுவழாது முக்காலத்தினு மொத்துநடப்பப்‌ புனையப்படுதல்‌ வேண்டும்‌.

இலக்கியச்சொற்களுள்‌ இறந்தது காத்தலும்‌ எதிரது போற்றலுமிருத்தல் வேண்டும்‌.

இறந்தது காத்தலெனத்‌ தொல்காப்பியத்துள்‌ வந்தது இன்னதெனத்தெருளாத நன்னூலார்‌ இறந்தது விலக்கலெனக்கூறியது தமிழ்ச்சொற்களுக்குச்‌ செல்லாது. அவர்‌ பழையன கழிதலென்றதும்‌ பண்டே திருந்திய தமிழ்ச்சொற்களுக்குப்‌ பொருந்தாது.

இறந்தது காத்தலென்புழி இறந்ததென்பது செத்ததன்று ; இறந்தகாலத்தது என்பதாம்‌, எனவே இறந்த காலத்துச்சொற்களை விலக்‌காது பாதுகாத்துக்‌ கையாளுதல்வேண்டும்‌. சொற்‌ செத்ததாயின் ‌அதனை விலக்கலும்‌ காத்தலும்‌ எங்ஙனம்‌ பொருந்தும்‌? இறந்தகாலத்‌துச்‌ சொற்களைக்‌ கையாளாதுவிட்டால்‌ அவை இறந்தொழியும்‌. இங்‌ஙனம்‌ மேன்மேல்‌ இறந்துகொண்டே வருமானால்‌ மொழியும்‌ பழைய இலக்கியச்செல்வமும்‌ என்னவாம்‌? எதிரது போற்றலும்‌ இறப்பதா மென்றாற்‌ படைப்பெங்கே? பண்பாடெங்கே?


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு