நாடக மரபு.
நாடக மரபு.
தொன்று தொட்டே நாடகக்கலையைத் தமிழகத்தார் பொன்னெனப் போற்றினர்; பேணிக்காத்தனர். தமிழ்மொழி இயல், இசை நாடகமென முத்திறப்படுத்தி வளர்க்கப்பட்டமையே இதனைத் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றது. நம் செந்தமிழ்மொழி, உலகமொழிகள் அனைத்திலும் பார்க்கத் தனித்துவமும் மகத்துவமும் கொண்டமொழியாக இலங்குவதும் இக்காரணத்தால் என்பது கண்கூடு, இம் முத்தமிழில் ஒன்றாகிய இயலும் இசையும் விரவிய நாடகத்தமிழ், சங்ககாலத்திலேயே தன்னிகரற்ற சிறப்புடன் பூரணத்துவம் பெற்று விளங்கியதெனலாம்.
“ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல்சான்ற புலனெறி வழக்கம்.” அகத்திணை 53
என்ற தொல்காப்பியத்திலுள்ள அடிகள் இவ்வுண்மையைப் புலப்படுத்தி நிற்கின்றன. அக்காலத்திலே தமிழ்மக்கள் கூட்டங்கூட்டமாகக் கூடி நாடகங்களை வெண்ணிலவிலே இன்பமாக நயந்தனர் என்ற கருத்தைப் பட்டினப்பாலையில் உள்ள
“ பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
வெண்ணிலவின் பயன் துய்த்தும்
கண்அடைஇய கடைக்கங்குல்”
என்ற அடிகள் மிக அழகாகவிவரிக்கின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வதிந்த வள்ளுவப் பெருந்தகையே, சில குறள்களில் கூத்தாட்டவை பற்றிக் குறிப்பிடுகிறார். செல்வம் நிலையாத்தன்மைபற்றிக் கூற வந்தவள்ளுவர் “கூத்தாட்டவைக்குழாத்தற்றே” என்றார். பழந்தமிழ் நூல்களிற், புலவர்கள் சிலவிடயங்களை விளக்குமிடத்து, நாடகத்துக்குக் கையாளப்பட்ட ௧ருவிகளையே உவமையாக ஆண்டிருக்கிறார்களென்றால், அக்காலமக்கள் நாடகத்தில் ஈடுபட்டதன்மை விளங்குகிறதல்லவா? ஒரு உப்பு வண்டியின் முற்புறத்தில், ஊறுகாய்ப் பானை ஒன்று கயிற்றால் வரிந்து கட்டப்பட்டிருப்பதை வர்ணிக்கவந்த உருத்திரங் கண்ணனார், நாடக அரங்கிற்குக்கொண்டு வரப்படும் வாரினாலே கட்டப்பட்ட மத்தளத்தை அதற்கு உவமையாகக் கூறுகிறார் இதை.
“ நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்னியங் கடுப்பங் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கு” என்ற அடிகள் விளக்குகின்றன.
அக்காலத்திலே கூத்தாடுவோரை மன்னர்களும், சிற்றரசர்களும், வள்ளல்களும் மனமுவந்து ஆதரித்தார்கள் என்பதைச் சங்கஇலக்கியமூலமும், இதிகாசமூலமும் அறிகின்றோம். ஓரி என்னும் வள்ளல், கூத்தாடுவோருக்குத் தனது நாட்டையே கொடுத்தான் என்ற குறிப்பு, சிறுபாணாற்றுப்படையில் இருப்பைக்காண்கின்றோம். சிலப்பதிகாரத்திற் காணப்படும் பல செய்திகளும், “முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” என்ற அப்பரின் தேவார அடிகளும், “இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழென, வகைபடச் சாற்றினர் மதியுணர்ந்தோரே” என்ற பிங்கலர் கூற்றுந் தமிழகத்திற் கற்றுணர்ந்த வல்லுநரும் நாடக இன்பத்தை மாந்தித் திளைத்தனர் என்பதை வலியுறுத்துகின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நாடகம் நனிசிறந்து விளங்கியமையை, அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முன்னரேயே நிலவியபரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், கூத்தநூல் என்பன காட்டுகின்றன. இந்நூல்கள் காலவழக்கிலே மறைந்தன. எனினும், தமிழகத்திற் பண்டுதொட்டே நாடகஞ் சிறப்புற்று ஒங்கியதென்பதும், மக்கள் இத்துறையில் அதிக ஈடுபாடுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள் என்பதும்,மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும், இதனால் ஆதிதொட்டே, ஒரு நாடகமரபு தமிழ் மக்களிடம் நிலவியதெனலாம்.
ஒருவர் தமது உணர்ச்சிகளையுங் கருத்துக்களையும் மற்றவர்களுக்கு உணரவைக்க விரும்பும்போது, அவருக்குக் கை கொடுத்து உதவுபவை அவிநயமுஞ் சொற்களுமாகும். இவைகளைத் தனித்தனியோ, அன்றிச் சேர்த்தோ, மக்கள் உள்ளத்தெழுச்சிகளை வெளிக்காட்ட உபயோகிக்கின்றனர். குழந்தைகள் பலரும் பிறர் செய்வது போலத் தாமுஞ் செய்ய விருப்புடையராதல் இயல்பு. எனவே, பிறர்போல நடிக்கும்போது, அவிநயமும் குரலுமே, மக்கள் அனைவருக்கும் பொதுக்கருவிகள் ஆகின்றன. இந்தவகையிலே ஆராய்ந்தால், அக்காலத்தமிழ் நாடகங்களிலும், அவிநயமே முக்கியம் பெற்ற ஒருமரபைக், காணலாம். “கதகளி” போன்ற ஒருவகை விறலோடு மட்டும், ஒருகாலத்திலே தமிழ் நாடகங்கள் இருந்திருத்தல் வேண்டும், பின்னர் சைகைகளால் விளக்கமுடியாத சில இடங்களிலே சொற்கள் சேர்க்கப்பட்டன. அப்படிச் சேர்க்கப்பட்டவைகளிற் பெரும்பகுதிகள், செய்யுள்களின் பகுதியாக இருப்பதே மரபாய் அமைந்தன.
தமிழ் நாடகங்கள் சமயவளர்ச்சியின் அடிப்படையிலேதான் தோன்றின என்பதை மறுத்தல் முடியாது. திருவிழாக்காலத்தில் ஆடலும்பாடலும் சேர்க்கப்பட்ட ஒரு நிலையிலிருந்தே நாடகம் ஆரம்பமாயிற்று, பின்னர் கதைநடையான மனப்பாடங்கள் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாடலாக அமைந்த சம்பாடணைமரபைச் சிறிதுதிரித்து வசனமாக மாற்றினர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டளவில், குறையின்றி நாடகம் நல்ல மதிப்புக்குரிய தொழிலாகக் கணிக்கப்பட்ட மரபுமுண்டு.
கூத்துக்களை நடாத்துவதற்கான அரங்குகள், அவைகள் அமைப்பது அக்காலமரபாகும். இப்படியான அரங்குகள் ஆலயங்களுக் கணித்தாய், தேரோடும் வீதிகளில் அமைக்கப்பட்டன. மதுரைமாநகர் பற்றிக்கூறவந்த மாங்குடிமருதனார், அக்காலத்திலே திருவிழாக்களிற் கூத்தை ஆடிமுடித்த வயிரியர் துயில் கொள்ளும் நல்லிரவைப்பற்றி
“ விழவின் ஆடும் வயிரியர் மடியப்
பானாட் கொண்ட கங்குல்” என்று கூறுகின்றார். இதனாலே திருவிழாக்காலங்களிலே நாடகங்களைத் தமிழ் மக்கள் நடாத்திய மரபைக் காண்கின்றோம். கூத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கங்கள் ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல்நீளமும், உடையனவாய் இருந்தனவாம். அரங்கத்தின் குறட்டுயரம் ஒருகோலெனவும், கூத்தாடுமிடம் நாலுகோல் உயரமுடையதெனவும், அரங்கினுள்ளே செல்லவும் வெளியே போகவும் வேறு வேறு வாயில்கள் இருந்தன எனவுங் கூறுதற்கு ஆதாரங்கள் உள.
“ ஏழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்தரப் பலகையொ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த”
என்கின்ற சிலப்பதிகார அடிகளிலே பண்டைத்தமிழரது நாடக அரங்கு பற்றிய கருத்துக்களைக் காணலாம். தூண்களின் நிழல் அரங்கத்திலே விழாதமுறையாக, அரங்கின் நிலைவிளக்குக்களை வைத்தார்களென்றால், எவ்வளவுதூரம் அரங்க அமைப்புக்களை, நுணுக்கமாகச் செய்தார்கள் என்பதையும், அக்கால நாடகமுறைகள் மரபுகள் எத்தகைய உயர்ந்த நிலையை எய்தி இருந்தன வென்பதையும் நாம் ஊகிக்கமுடிகின்றது. நாடக அரங்கத்தின் திரைச்சீலைகள் பற்றிய குறிப்புக்கள், ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி போன்ற விதம் விதமான திரைகளினது தோற்றம்பற்றிய குறிப்புக்கள், ஆடல்கள் பற்றிய விளக்கங்கள் சிலப்பதிகாரத்திற் பொதிந்திருப்பதைக் காண்கின்றோம். கோவில்களின் மட்டுமன்றி அரசர் அரண்மனைகளிலும் ஊரிற் பொது அரங்குகளிலும் நாடக அரங்குகள் அமைக்கப்பட்ட மரபும் உண்டு.
அக்காலத்தில் ஆடப்பட்ட கூத்துக்களிற் பெரும்பாலானவை அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றின் அடிப்படையில் எழுந்தவையே. இந்த மரபு தமிழகத்திற் பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. அறத்தைப் பொருளாகக் கொண்ட கூத்துக்களிலே, நல்லொழுக்கத்தை நனிவிரித்து உரைத்தல், குணக்குன்றாக மிளிர்பவரை இறுதியிலே நன்மையடையச்செய்தல், தீயஒழுக்கத்தின் நிலைக்களனாய் உள்ளவரை அழிந்தொழியச் செய்தல் என்பன இடம்பெறுதல் வழக்கம். அரசனது செங்கோன்முறையையும், இராசாங்கத்தின் தன்மையையும் நிலைநாட்டும் வகையாக எழுந்தவை பொருள்பற்றிய கூத்துக்களாம். ஒருதலைக்காமம், அன்புடைக்காமம், பொருந்தாக்காமம் என்னுமிவைபற்றி எழுந்தவை இன்பத்தைப் பொருளாகக் கொண்ட நாடகங்களாகும். வீடுபற்றிய கூத்துக்களில், வீதியின் வலியினை எடுத்துக் கூறுவனவும், கடவுளிடத்துக் காட்டும் அன்பு பற்றியவையும் அடங்கும். இங்ஙனம் புனிதமான பொருள்களின் அடிப்படையிலே எழுந்த நாடகங்கள், அக்காலத்திலிடம் பெற்ற ஒரு மரபையுங் காணலாம். இப்படியாக ஆக்கப்பட்ட கூத்துக்கள் பெரும்பாலும் மூன்று வகையினவாக அமைந்தமை நோக்கத்தக்கது. உண்மையாக இவ்வுலகிலே நடந்ததாய், அனைவருக்குந் தெரிந்தகதையை ஒட்டியகூத்து ஒருவகை. உலகத்தே நிகழாததாய், நாடகப்புலவனால் இயற்றப்பட்டதாயுள்ள கூத்து இன்னொருவகை. மெய்யுரைக் கதையுடன், சிறிது பொய்யுரையையுஞ் சேர்த்து, நாடகப்புலவன் அழகுற மைக்கும் நாடகம் பிறிதொருவகை, நாடக அமைப்பு, பொருள் என்பனவற்றிலும் ஒருமரபு இருந்திருக்கிறது.
ஆரம்பத்திலே தமிழகத்துக் கூத்துக்களிலே தமிழ் மரபுப்படி எண்சுவையே இடம்பெற்றதெனினும், பின்னர் வடநூன் மரபுப்படி சமநிலை என்ற “சாந்த” இரசமும் கையாளப்பட்டது, எனவே அற்புதம், சினம், கருணை, இழிப்பு, இன்பம், அச்சம், சிரிப்பு, வீரம், சாந்தம் என்னும் ஒன்பது சுவைகளும் நாடகத்திற் பெரிதும் இடம்பெற்றன. அரங்கிலே தோன்றி ஆடுங் கூத்தர்கள், பலவித சைகைமூலம் இவ்வித இரசங்களை வெளிப்படுத்திய மரபுந் தமிழகத்தில் இருந்தது. வியப்புச் சுவையைக் கண்வாய் கைகளை அகலவிரித்தல் கையைக்கொட்டி வாயில் வைத்தல் ஒரே நிலையிலே நிற்றல் ஆச்சரியமாகப் பேசுதல் என்பவற்றாலும், கோப உணர்வைக் கண் சிவத்தல் விழியை உருட்டல் நெற்றி சுருக்குதல் மூக்கு வரிதல் கையை ஓங்குதல் உடல்படபடத்தல் நறநறவெனப் பற்களைக் கடித்தல் காலை அழுத்தி மிதித்தல் முதலிய சைகைகளாலும், கருணைத்தன்மையை மலர்ந்த முகம் இன்சொல் அடக்கம் அன்பு ஆசி என்பவற்றாலும், இழிவுச் சுவையை முகத்தைச் சுளித்தல் எரிந்து விழுந்து பேசுதல் முதலியவற்றாலும், சிருங்கார இரசத்தைக் கண்களை மலரச்செய்தல் புன்னகையைச் சிந்துதல் நாணப்பார்வை கோணற்பார்வை மெல்லியகுரல் என்பனவற்றாலும், அச்ச உணர்வை உடல் நடுக்கம் மார்புத்துடிப்பு பெருமூச்சு பதற்றல் கண்களை அகலத்திறத்தல் முதலியவற்றாலும், துன்பச்சுவையை விரித்தகூந்தல் அழுகை கண்ணைமேலே பார்த்தல் தலையைத் தொங்கப்போடல் முகத்தை முழந்தாளில் வைத்தல் முன்தானையான் மூடல் கண்ணீர் துடைத்துக்கொண்டு விம்மல் புலம்பல் முதலியவற்றாலும், நகைச்சுவையைக் கேலிச்சிரிப்பு வஞ்சகப் புன்னகை வெறிநகை பைத்தியச்சிரிப்பு செருக்குநகை முதலியவற்றாலும், வீரஉணர்வைச் சபதங் கூறல் உரத்துப்பேசுதல் தலைநிமிர்ந்து விழியை அகலச்செய்தல் முதலியவற்றாலும், சாந்த உணர்வைச் சாதாரணபார்வை முகவிகார மின்மை என்பவற்றாலுங் காட்டிய முறைமை இருத்தது. இங்ஙனம் பல்வேறு சுவைகளையும் நாடக அரங்கிலே சித்தர்கள் பல்வேறு சைகைகள் மூலங் காட்டியமரபு தமிழ்நாட்டிற் பண்டுதொட்டே இருந்து வந்திருக்கிறது.
பழங்காலத்தில் அவிநயத்துடன் இருந்தகூத்தில் இடைக்காலத்தே பாட்டுஞ் சேர்க்கப்பட்டது. பின்னரே உரைநடை சேர்க்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது, ஆதியில் இராகத்துடன் இசைத்துப் பாடக்கூடிய பாடல்கள் இடம்பெற்றன. பிற்காலத்தில் இழிந்த இயல்பாக வழங்குஞ் சொற்களினாலாய பாடல்களும் நாடகத்திலிடம் பெற்றன. மிகப்பிந்திய காலத்தே கீர்த்தனம், வரிப்பாடல்கள், சிந்து ஆனந்தக்களிப்பு, கும்மி என்பனவும் நாடகத்திலிடம்பெறத் தொடங்கின. இடைக்காலத்து நாடகங்கள் பாட்டுவடிவில் எழுதப்பட்டன. அருணாசலக்கவிராயர், இராமச்சந்திரக்கவிராயர், கோபாலகிருட்டிணபாரதி என்போர் முறையே எழுதிய, “இராம நாடகம்” “பாரத விலாசம்” “இயற்பகை நாயனார்” என்பன கீர்த்தனங்களாகவுஞ் செய்யுள்களாகவும் அமைந்திருப்பதே இதனை வலியுறுத்தும், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த திரு. சுந்தரம்பிள்ளையின் “மனோன்மணியம்” என்னும் நாடகமும், செய்யுள் நடையில் எழுதப்பட்டது. பிற்காலத்திற்றான், நாடகங்கள் உரைநடையில் எழுதும்முறை தமிழகத்தில் உண்டாயிற்று, உரைநடை இலக்கியம் எல்லாத்துறைகளிலும் முக்கியத்துவம் பெற்றமை காரணமாக, நாடக இலக்கியமும் பிற்காலத்தில் உரை நடையில் அமையத்தொடங்கின. “உரூபாவதி”, “கலாவதி” என்ற நாடகங்களை இயற்றிய வி. கோ. சூரியநாராயணசாத்திரியார், செய்யுட்களையும் பாடல்களையும் இடைக்கிடை புகுத்தியுள்ளார். இதன்பின் வந்த சம்பந்தமுதலியார் உரைநடைக்கே முக்கியத்துவங் கொடுத்து, அறுபதுக்கு மேற்பட்ட நாடகங்களை ஆக்கினார். அவற்றுள்ளே பெரும்பாலானவை மொழிபெயர்ப்புக்களேயாகும். இவைகாரணமாக, மேனாட்டு மரபு பிற்பகுதியிலே தமிழ்நாடக உலகிற் செறிந்ததெனினும் எமது மரபை அலட்சியஞ் செய்தலாகாது.
அக்காலத்துக் கூத்துக்களில் ஆடல்களும் பாடல்களும் முக்கியத்துவம் பெற்றமையால், நீண்டகாலப் பயிற்சி இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வரலாம். அரங்கிலே கூத்தாடுபவன் செய்யவேண்டிய அனைத்தையுங் கூத்துக்கு அச்சாணிபோன்ற சூத்திரதாரனே பயிற்றினான். அவன் பயிற்றியதை, அப்படியே அரங்கிற் கூத்தர்கள் காட்டிநடித்தனர். இப்படியான பயிற்சியில், ஒழுங்கும் புனிதமும் இருக்க முடியும். இப்பயிற்சியை, ஒரு சில நாட்களிற் பயின்றுவிட முடியாது; மாதக்கணக்காக, வருடக்கணக்காகப் பயின்றாலே திறம்பட நடிக்கலாம். எனவே, அக்காலத்திலே கூத்து ஆடுபவர்கள் முறையான பயிற்சியை, ஒழுங்காகச் சூத்திரதாரனிடம் பெற்றார்கள் என்பதையும், நீண்டகாலப் பயிற்சிக்குப்பின் கூத்தை மேடையிடும் மரபு இருந்ததென்பதையும் உணரமுடிகிறது. ஆனால் இன்று நாடகத்துறையில் ஈடுபட்டிருக்கும் பலர், இம்மரபை மறந்து, ஒத்திகையே இல்லாமற்கூட நாடகமாட எத்தனிக்கிறார்கள்; “அன்றைக்கு எல்லாம் வரும்” என்ற அலட்சிய மனப்பான்மையை வளர்க்கிறார்கள். இந்த மனப்பான்மை, இத்துறையை மற்றவர்கள் குறைவாக மதிப்பீடு செய்யவழிவகுக்கும். எனவே பயிற்சியைப் பொறுத்தமட்டில், பழையநாடக மரபை இக்கால நாடகக்கலைஞர்கள் கைக்கொள்ளல் பயனுடையதாம்.
அக்காலக் கூத்துக்கள் திருவிழாக் காலங்களிலே, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலே நடிக்கப்பட்டதாலும் வெளிச்சவசதி மிகவுங்குறைந்த காலத்திலே பாத்திரங்களின் உருவம், தூரத்தே இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியவேண்டுமென்பதாலும், உடுப்புக்களையும், ஒப்பனைகளையும் இயற்கையாக அமையாது, பெரியனவாகச். செய்தார்கள். சாதாரணமாக ஒருவருக்கு இருக்கவேண்டிய மீசையின் தடிப்பைவிட, பன்மடங்கு தடிப்பிலே, அரசனாய் நடிப்பவருக்கு மீசை வைத்தார்கள். தாடி, புருவம், இமை, உதடு, திலகம், காதணி என்பன எவையுமே பெருப்பித்துக் காட்டப்பட்ட மரபை அன்றைய கூத்தர்கள் கைக்கொண்டனர். நாடகமரபு அறிந்தவர் இன்றும் இம்முறையைக் கைவிடுவதில்லை. சினிமாவைப் பின்பற்றுபவர்கள் முதல் வரிசையில் இருப்பவர்களுக்கே தெரியாதமுறையில் ஒப்பனைகளைச் செய்கின்றனர். ஒப்பனைகளைப் போலவே நடிப்பைப் பொறுத்தமட்டிற் சற்று மிகைப்படச் செய்யும்மரபு அன்றைய கூத்தர்களிடம் இருந்தது. எந்தச் சுவையையும் அவையில் இருப்போரின் உள்ளத்தில் உறுத்துமளவிற்கு நடிக்கவேண்டுமானால் இயற்கையாக ஒருவர் செய்வதைக்காட்டிலும் மேடையில் அழுத்திச் சற்று மிகைப்படச் செய்தல் வேண்டும். அங்ஙனஞ் செய்வது பழந்தமிழ் மரபாகும். இதை இக்கால நாடகக் கலைஞர்கள் மனதில் இருத்திக்கொள்வது அவசியமாம்.
செய்யுள்கள், இராகத்துடன் கூடிய பாடல்கள், கீர்த்தனங்கள், வரிப்பாடல்கள் ஆதியனவே அன்றைய கூத்துக்களில் இடம்பெற்றன, எனவே புனிதமான தமிழ்நாட்டுக்குரிய சங்கீதங்களையே இக்காலநாடகங்களிற் புகுத்துவது சிறப்புடைத்தாம். அதைவிடுத்து, ஆங்கிலம், இந்திபோன்ற வேற்றுமொழிப் பாடல்களை நாடகங்களில் உபயோகித்துக் குழப்பியடிப்பது, நாடகமரபு தெரியாதவர்களின் பெருங்குறையாகும். பொதுசனக்கவர்ச்சிக்காக வியாபார தந்திரத்துடன் ஆங்கிலப்பாட்டு மெட்டுகளையும், நடனங்களையுஞ் சினிமாவிற் புகுத்துகிறார்கள் என்பதற்காக, தமிழ் நாடகங்களிலும் அநாவசியமாக அவற்றைப்புகுத்துவதா? எனவே சினிமாப் பாடல்களையோ அன்றிஅவை போன்ற பாடல்களையோ நாடகங்களிலே தவிர்த்துப் புனிதமான-தரமான சங்கீதத்தைப் புகுத்துவதைத் தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும்.
அக்கால நாடகங்களில் இடைக்கிடை பேசப்பட்ட வசனங்கள் பெரும்பாலுஞ் செய்யுள்களின் பகுதியாக இருந்த மரபை முன்னர்க் கண்டோம். பின்னர் வசனநடைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாடக ஆக்கங்கள் நடந்தபோதும் “கொச்சைத்தமிழ்” பெரிதும் விலக்கப்பட்டது. எனவே இக்கால நாடக ஆசிரியர்கள் உயர்தரமான வசனநடையையே கண்டிப்பாக இலக்கிய சமய சரித்திர நாடகங்களிற் கையாளவேண்டும். சமூக நாடகங்களிலும் பெரிதும் “கொச்சைத்தமிழ்” அற்ற இலகுவான நடையை உபயோகிப்பதே உகந்த முறையாகும்.
நாடக நங்கை பூரணத்துவம் பெறவேண்டுமானால், களிநடம்புரிந்து உன்னத தானத்தை அடையவேண்டுமானால் பண்டைய சூத்திரதாரர்களுங் கூத்தர்களுங் கையாண்ட நாடக உத்திகளை இன்றைய நாடகக் கலைஞர்கள் பெரிதும் மனதில் இருத்தல் வேண்டும். பழமையில் இருந்து கலைபற்றிய நுட்பங்களைக் கற்றறிய முடியும் என்ற எண்ணத்துடன் நாடக இயக்குநர்களும், நடிகர்களும், மற்றும் இத்துறையில் ஈடுபட்டோரும் கலைச்சேவைசெய்ய முன்வரவேண்டும், முனைய வேண்டும். அதனாலே நாடகமரபைப் பேணுவதுடன் நாடக உலகையும் நலம் பெறச் செய்யலாம்.

Comments
Post a Comment