இசுலாமுந் தமிழும்
இசுலாமுந் தமிழும்
“யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்ற சான்றோர் கூற்றுக்கிணங்கப் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றி ஒழுகும் பல்வேறு இனமக்கள் தமிழ் மொழியைப் பேணிவளர்த்து வந்துள்ளனர். உலகத்திலுள்ள பிரதான சமயங்கள் அத்தனையும் பற்றிய இலக்கிய நூல்களுள்ள மொழிகள் சிலவற்றிலே தமிழ்மொழியும் ஒன்றாகும். சைவ, வைணவ, பெளத்த, சமண, கிறித்தவ, இசுலாமிய சமயங்களைப் பின்பற்றும் அனைவரும் தத்தமது மொழியாக உரிமை பாராட்டத்தக்க தனிப்பெரும் பண்புகள் தமிழுக்கு உண்டெனில் அக்கூற்று மிகையாகாது. இங்ஙனம் வெவ்வேறு சமூகத்தவருந் தத்தமது என உரிமை பாராட்டுந் தமிழ்மொழி, அவ்வச்சமூகத்தவரிடையே நிலவும் பழக்க வழக்கங்களுக்கும் விருப்புவெறுப்புக்களுக்கும் இயைய அதனது நடையில் வேறுபட்டுள்ளது. தமிழ்மொழியைப் பேசும்மக்களின் ஒன்றோடொன்று வேறுபட்ட சமயஒழுக்க ஆசாரங்களுக்கு அமைய அதன் வளம் ஓங்கியதோடு அதன் அமைப்பிலும் மாற்றங்கள் உண்டாயின. ஆனால் எத்தகைய மாற்றங்கள் உண்டான பொழுதிலும் அவை அனைத்துங் கன்னித் தமிழின் இலக்கணமரபு வழுவாத முறையில் இடம்பெற்றுள்ளன.
இனி, இசுலாத்தினுடைய தொடர்பினாலே தமிழ்மொழி எத்தகைய நிலையை அடைந்துள்ளதென ஆராய்வோம். தமிழ் நாட்டுக்கு வந்த முசுலிங்களே முதலிலே தமிழ்மொழியோடு தொடர்பு கொண்டனர். அதன்பயனாகத் தமிழ்மொழி வளம்பெற்றது. தமிழ்நாட்டில் இசுலாம் பரவத் தலைப்பட்டது. இசுலாமிய அடிப்படையிற் பல தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. முன்பு தமிழில் பயின்றுவந்த பிரபந்தங்களைப் பின்பற்றி இசுலாமிய அடிப்படையிலே நூல்களை இயற்ற முன்வந்ததோடமையாது, முசுலிங்கள் அரபு மொழியிலிருந்த முனாசாத்து, கிச்சா, மசலா முதலிய பிரபந்தவகைகளைத் தமிழிலே புகுத்தவுந் தலைப்பட்டனர். படைப்போர் என்ற தமிழ்ச்சொற்றொடரால் வழங்கும் ஒரு புதுப் பிரபந்தத்தையுந் தமிழில் புகுத்துவதில் வெற்றி ஈட்டினர். தமிழ்நாட்டில் வாழ்ந்த முசுலிம் புலவர்கள் அரபு மொழியிலிருந்து இசுலாமியக் கோட்பாடுகளைத் தமிழ்மரபுக்கியையத் தெள்ளியதமிழிற் பாடியுள்ளனர். இலங்கையில்வாழும் முசுலிம் புலவர்களும் இவ்வாறே இப்பணியைத் தொடர்ந்து புரிந்து வந்துள்ளனர். அவ்வாறே இன்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈழவளநாட்டிலே முசுலிம் மக்கள் எங்கெங்கு வாழ்கின்றனரோ அங்கங்கெல்லாந் தமிழையே தமது வீட்டு மொழியாக உபயோகிக்கின்றனர். சமய மொழியாம் அரபு மொழியை முசுலிங்கள் புனித மொழியாகக் கணிக்கின்றனர். எனவே அவர்களின் சமய, சமூக வாழ்க்கையிற் புனித மொழியாம் அரபுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. மிகப்பெரும்பான்மையான முசுலிங்களால் எழுத, வாசிக்கத் தெரிந்ததமிழ்மொழி இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. திருமணம் போன்ற சமய ஆசாரங்களின்போது அரபுந் தமிழுஞ் சரிநிகர் சமானமாக உபயோகிக்கப்படுகின்றன. இலங்கைவாழ் முசுலிங்களின் வாழ்க்கையில் இதுவரை வேறொரு மொழிக்கும் இடங் கிடைக்கவில்லை. மற்றையமொழிகளுக்கும் இலங்கை முசுலிங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதே இதன் கருத்தாகும்.
முசுலிம் மக்கள் தமிழ்மொழியைத் தமது தின வாழ்க்கையில் உபயோகிக்கும் பொழுது செந்தமிழைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறவியலாது. ஒருவர் தமது கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துவதற்கே மொழி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அன்றியும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்தவர்கள் அம்மொழிகளில் உள்ள சொற்களைக்கொண்டு தத்தம் கருத்துக்களை வெளிப்படுத்த முயல்வர் என்பது மொழியியல் வல்லுனர் கொள்கையாகும். இலங்கை முசுலிங்களிடத்திலே மொழியியல் வல்லுனரின் இக்கூற்றுச் செயல் முறைப்படுவதைக் காணலாம்.
மதாசாரங்களுக்காக முசுலிங்கள் அரபுச் சொற்களையுஞ் சொற்றொடர்களையுந் தடையின்றியும் முட்டின்றியும் உபயோகிப்பர். அச்சொற்களையுஞ் சொற்றொடர்களையுந் தமிழில் உரையாடும் பொழுதும் உபயோகிப்பர். இம்மை, மறுமை என்ற இரண்டு சொற்களையும் எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டும் மக்கள் பெருவழக்கிலுள்ள சொற்களாகும், எனினும் முசுலிம் மக்கள் அச்சொற்களுக்குப் பதிலாக உள்ள அரபுச் சொற்களை உபயோகிப்பதையே பெரிதும் விரும்புவர். இம்மை, மறுமை என்பவற்றிற்குப் பதிலாக முறையே துனியா, ஆகிறா என்ற இரண்டு அரபுச் சொற்களையும் உபயோகிப்பர். அல்லா, நபி முதலிய ஆயிரக்கணக்கான அரபுப் பதங்களை முசுலிங்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் உபயோகிப்பர். அவற்றின் கருத்துக்களைக் கொண்ட வேற்று மொழிச்சொற்களை உபயோகிப்பது உசிதம் அன்றென்றே அவர்கள் கருதுகின்றனர்.
தமிழ்மொழிச் சொற்களைப் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் பொழுது முசுலிம் மக்களிடையே சில சிறப்பியல்புகள் இருப்பதைக் காணலாம். வணக்கஞ் செய்தல் என்று சாதாரணமாகப் பயிலப்படுங் கருத்தை முசுலிங்கள் தொழுகை என்ற சொல்லால் மாத்திரமே வெளிப்படுத்துவர். முசுலிம் மக்கள் தொழுகை என்று கூறும் பொழுது அல்லாவை வணங்குதலையே அது குறிப்பிடுகின்றது. வேறு எந்த வணக்கத்தையும் அச்சொல்லால் முசுலிம் மக்கள் குறிப்பிடுவதில்லை. திருக்குர்ஆன் பாராயணம், சமய நூல்களைப் படித்தல் என்ற கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கு ஓதுதல் என்ற சொல்லை மாத்திரமே முசுலிம்கள் உபயோகிப்பர். வேறு எந்த வாசித்தலையும் “ஓதுதல்” என்றசொல்லாலே முசுலிங்கள் வழங்குவதில்லை. தொழுகை, ஓதுதல் ஆதியாஞ் சொற்கள் முசுலிம் மக்களிடையே புனிதத் தன்மையைப் பெற்றுள்ளன. சமயஞ் சம்பந்தமான சொற்களாக அமைந்துள்ளன.
சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் வசிக்கும் முசுலிங்கள் தமது தின வாழ்க்கையில் உபயோகிக்கும் பேச்சுத்தமிழிலே சிங்களச் சொற்களையும் உபயோகிப்பர். சிங்கள மக்களோடு உரையாடும் பொழுது சில சிங்களச் சொற்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும். அச்சொற்கள் கேட்போரின் மனதிலே தங்கிவிடும். அத்தகைய சொற்களை முசுலிம் மக்கள் தமது தமிழ்ப் பேச்சிற் பிரயோகிப்பர். பெரும்பாலும் அத்தகைய சொற்களை உபயோகிக்குஞ் சந்தர்ப்பங்களில் அவற்றைத் தமிழ் இலக்கண மரபுக்கியையத் தமிழ் விகுதிகளை உபயோகித்தே உச்சரிப்பர். பிச்சைக்காரனைச் சிங்களத்தில் “உறிங்கன்னா'' என்பர். சில சந்தர்ப்பங்களிலே முசுலிங்கள் “உறிங்கன்னா” என்ற சிங்களச் சொல்லுக்குத் தமிழ் ஆண்பால் விகுதியைச் சேர்த்து “உறிங்கன்னான்” என்று வழங்குவர். மடையனைச் சிங்களத்திலே “மோடயா” என்பர். முசுலிங்கள் சில சந்தர்ப்பங்களிலே “மோடயன்” என்று சிங்களச்சொல்லை “அன்” என்ற ஆண்பால் விகுதியைச் சேர்த்து உபயோகிப்பர். மரக்கறி வியாபாரியைச் சிங்களவர் “எலவுளுகாரயா” என்பர். முசுலிம் மக்கள் “எலவுளுக்காரன்” என்பர். தச்சன் சிங்களத்தில் “வடுவா” அல்லது “வடுறால” என்று அழைக்கப்படுவான். முசுலிம் மக்கள் தச்சனை “வடுவன்” என்று வழங்குவர். “அவனுக்குப் பைத்தியம்” என்று சொல்லவேண்டிய இடத்தில் சில சந்தர்ப்பங்களில் “அவனுக்குப் பிச்சு” என்று தமிழையுஞ் சிங்களத்தையுங் கலந்து உபயோகிப்பர். சிங்களத்திற் பிச்சு என்றாற் பைத்தியன் என்பது கருத்து. வியப்பையும் அனுதாபத்தையும் ஆச்சரியத்தையுங் குறிப்பிடும் பொழுது சில பகுதிகளிலே சிங்களச் சொற்களையே ௨பயோகிப்பதைக் காணலாம். “ஐயோ” என்பதற்குப் பதிலாக “அனே” என்று உபயோகிப்பர்.
முசுலிங்களுக்குத் தேவையான ஒலிக்குறிப்புக்கள் அனைத்தையும் வெளியிடுவதற்குத் தமிழ் அரிச்சுவடியிலுள்ள எழுத்துக்கள் போதா. சில சமயங்களிலே முசுலிங்கள் உபயோகிக்கும் அரபு, பாரசீகச் சொற்களைத் தமிழ் நெடுங்கணக்கில் எழுதின் அவற்றின் கருத்துக்கள் தெளிவாக இரா. எடுத்துக்காட்டாக ஓருசொல்லைப் பார்ப்போம், முசுலிங்களின் ஐம்பெருங் கடமைகளுள் ஒன்று திருமக்கா யாத்திரை. எல்லா வசதிகளும் உள்ள ஒருவன் தனது வாழ்க்கையில் ஒருமுறையாவது திருமக்கா நகர்சென்று இப்புனிதமான கடமையை நிறைவேற்றுதல் வேண்டும். இதனைக் கச்சு என்று அழைப்பர். இவ்வரபுச் சொல்லின் சரியான உச்சரிப்பைப் பெறவேண்டுமெனிற் கிரந்தஎழுத்துக்களை நாடுதல்வேண்டும். கிரந்த எழுத்துக்களை உபயோகிக்காமல், இவ்வரபுச் சொல்லைத் தனித்தமிழில் எழுதுவதாயின் அச்சொல் “கச்சு” அல்லது “அச்சு” என்றே உச்சரிக்கப்படும். கச்சு அல்லது அச்சு என்பது தமிழ் வழக்கிலே வேறு கருத்தையுங் கொடுக்கும். எனவேதான் தமிழ் அல்லாத சொற்களை உபயோகிக்கும்போது முசுலிங்கள் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த முற்படுகிறார்கள். ஆனால் கச்சு என்பதைத் தனித்தமிழில் வழங்க விரும்பும் புலவர்களும் முசுலிங்களிடையே வாழ்ந்து வந்துள்ளனர். பிச்சை இபுறாகிம் புலவர் இயற்றிய மதீனா அந்தாதியில் கச்சு என்றே உபயோகித்துள்ளார், அவர் கவிதையில் இடம்பெற்றுள்ள அரபுச்சொற்கள் மிகச் சிலவாகும். அவற்றுள் ஒன்று “கச்சு” என்பதாகும்.
இனி, முசுலிம் புலவர்களாற் பாடப்பட்ட இலக்கியங்களை எடுத்துக் கொள்வோம். தமிழ்மரபு வழுவாது தமிழ்ப்பாணியில் இலக்கியநூல்களையாத்த முசுலிம் புலவர்கள் தமிழிலே உள்ள பிரபந்தவகைகளைப் பயன்படுத்திய தோடமையாது புதிய பிரபந்த வகைகளையும் புகுத்தியுள்ளனர். பல்வேறு பாவினங்களைத் தமது கவிதைகளிற் புகுத்தியுள்ள முசுலிம் புலவர்கள் “தொங்கல்” என்ற ஒருவகைப் பாவினத்தைப் பிரதானமாகக் கருதுவர். பெரும்பான்மையானோர் தமது பாக்களை தொங்கல் என்றே அழைப்பர். தொங்கல் என்பதற்கு விளக்கங் கூறும் முசுலிம் புலவர்கள் அதனை அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் என்று கூறுவர். ஆனால் இப்பாக்கள் தொங்கல் என்று அழைக்கப்படுவதன் கருத்தையும் அவ்வாறு அச்சொல் ஏன் வழங்கப்படுகிறது என்பதையும் அறிவது கடினமாக இருக்கிறது. அரபு எழுத்துக்களிலே தமிழ்க் கவிதைகளை எழுதும்பொழுதும் இத்தொங்கல் என்ற பாவினத்தையே பெருவழக்காகக் கொள்வர்.
பல்வேறு சமயங்களை அடிப்படையாக வைத்து எழுந்த தமிழ் இலக்கியப் படைப்புக்களிலே அவ்வச் சமயங்களோடு மிகநெருங்கிய தொடர்புடைய சொற்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். பெளத்தமத அடிப்படையிலே தோன்றிய மணிமேகலை போன்ற சான்றோர் செய்யுள்களிலே பாளிமொழிச் சொற்கள் இருப்பதைக் காணலாம். அதைப்போன்று இசுலாமிய அடிப்படையிலே தோற்றுவிக்கப்பட்ட நூல்களிலே அரபுச் சொற்கள் பரக்கக்காணலாம். அன்றியும் முசுலிம் புலவர்கள் சில சமயங்களிலே தமிழில் எழுதிய தமது நூல்களை அரபு எழுத்துக்களிலே எழுதியுள்ளனர்.
முசுலிங்களுக்கு அரபுமொழி புனிதமொழியாகும். அரபு திருக்குர்ஆன் எழுதப்பட்ட மொழியாகும். எனவே அந்த அரபு எழுத்துக்களில் எழுதப்பட்ட நூல்களையும் புனிதமானவை எனக் கருதுவர். கருதிப் பத்தியோடு அவற்றைப் படித்துப் பயன்பெறுவர். முசுலிம்மக்கள் எங்கெங்கு சென்று குடியேறினார்களோ அங்கங்கெல்லாம் அரபுமொழியையும், அரபு எழுத்துக்களையும் நிலைநாட்டியுள் ளனர். பொதுவாக ஒருமொழியிலுள்ள சொற்களை வேறொரு மொழியின் எழுத்துக்களில் எழுதுவதாயின் முதற்குறிப்பிட்ட மொழிக்குச் சொந்தமான எழுத்துக்கள் இல்லாதிருத்தல் வேண்டும். அத்தகைய ஒருமொழி பாளியாகும். இலங்கையில் பாளிமொழி சிங்கள எழுத்துக்களிலே எழுதப்படுகின்றது. அதனை எழுதப்பர்மியர் பர்மிய எழுத்துக்களை உபயோகிப்பர், வட இந்தியாவிற் பாளிமொழி தேவ நாகர எழுத்துக்களில் எழுதப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பாளிமொழியை அறிஞர் உரோமன் எழுத்துக்களில் எழுதுவர். துளுவும் அத்தகைய ஒரு மொழியாகும். அம்மொழி இப்பொழுது கன்னட எழுத்துக்களில் எழுதப்படுகின்றது. பாளி மொழியையோ, துளு மொழியையோ போன்றதன்று தமிழ்மொழி. தமிழ் மொழிக்கு அதற்கென ஒரு நெடுங்கணக்குண்டு. எனவே தமது தமிழ் இலக்கியப் படைப்புக்களை அரபு எழுத்துக்களிலே முசுலிம் புலவர் எழுதியமைக்குப் பலகாரணங்கள் உள. அக்காரணங்களை ஈண்டு விரிவஞ்சி விடுத்தனம். பாரசீகம், துருக்கி, மலாய், பெர்பெர், சொமாலி முதலிய மொழிகள் அவற்றின் பண்டைய எழுத்துக்களை மாற்றி அரபு எழுத்துக்களிலே எழுதப்படுகின்றன. மலயாள மொழியை வழங்கும் முசுலிங்களுந் தமது நூல்களுள் சிலவற்றை அரபு எழுத்துக்களிலே எழுதுகின்றனர். கிழக்கு ஆபிரிக்க சுவாஉறிலி மொழியும். அத்தகையதொன்றாகும்.
இந்தியக் குடாநாட்டு முசுலிங்களின் தமிழ் இலக்கியத்துக்கும் ஐபீரியன் குடாநாட்டு முசுலிங்களின் அந்நாட்டு இலக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் காணலாம். ஐபீரிய முசுலிம் இலக்கியப் படைப்புக்கள் பலவற்றில் அந்நாட்டுச் சொற்கள் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. அவை பிரான்சு மொழியில் வழங்கும் பிரபந்த வகைகளைப் பின்பற்றி இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் அரபு எழுத்துக்களிலே எழுதப்பட்டுள்ளன. கிரண்டாக் கோட்டை முசுலிம்களின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னருங் கிறித்தவ பரம்பரையிலே தோன்றி இசுலாத்தைத் தழுவிய ஐபீரியநாட்டு முசுலிங்கள் தமது உறோமன் மொழியைப் பேச்சு வழக்கிற் பயன்படுத்திய போதிலும் அம்மொழியை அரபு எழுத்துக்களிலே எழுதப்பழகி இருந்தனர். எனவே அரபு மொழியையும் அரபு எழுத்துக்களையும் முசுலிங்களிடமிருந்து பிரிப்பது மிகக்கடினமாகும். இதனாலேயே முசுலிம் புலவர்கள் யாத்த தமிழ் இலக்கியங்களிலே அரபுமொழியின் செல்வாக்கைப் பெரிதுங்காணலாம். எனவே முசுலிங்களின் தமிழ்மொழியிலுந் தமிழ் இலக்கியத்திலும் அவற்றின் சிறப்பியல்பாக அரபு மொழியின் ஆதிக்கம் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆங்கில இலக்கியத்திலுள்ள சில சமய அமிசங்கள் என்ற தமது நூலில் றோச் மக்கோலே என்பவர், “ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆங்கில முறைப்படி ஆங்கில மரபுக்கியைய தமது நூல்களை யாத்தாலும், அவர்களின் இலக்கியப் படைப்புக்களுக்கு அடிப்படையாய் அமைந்தவை இலத்தீன் மொழியிலிருந்த கிறித்த மதஞ்சம்பந்தமான கருத்துக்களேயாம்” என்று கூறியுள்ளார். இக்கூற்றில் உள்ள ஆங்கிலத்துக்குப் பதிலாகத் தமிழையும் இலத்தீனுக்குப் பதிலாக அரபையும் கிறித்தவம் என்பதற்குப் பதிலாக இசுலாம் என்பதையும் மாற்றி அமைத்தால் இங்கு கூறப்பட்டுள்ள கூற்று முசுலிங்களின் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் பொருத்தமுடைய தொன்றாகும். வாழ்க தமிழ் மொழி. வாழ்க இசுலாம்.

Comments
Post a Comment