ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் 

அமெரிக்க மக்களிடையே 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதியன்று அருந்தவப்புதல்வன் ஒருவன் உதித்தான். அவன் பெயர் ஆபிரகாம் லிங்கன். அடிமைத்தளைகளை அறுத்து அகிலத்தின் அன்பை அமெரிக்காவுக்குத் தேடித்தந்த அந்த அண்ணல் கென்க்கி என்னும் இடத்தில் பிறந்தார். அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகி, அமெரிக்க நீக்ரோக்களுக்கு விடுதலையளித்த ஆபிரகாம் லிங்கன் படித்த, பணக்காரக் குடும்பத்திற்பிறக்கவில்லை. ஏழைக் குடும்பத்திலேதான் அவர் பிறந்தார். வாழையடி வாழையாக அதிகாரம்செலுத்தும் குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை; ஏழைத் தொழிலாளி ஒருவனின் மகனாகக் குடிசை ஒன்றிலே பிறந்தார். இந்தச் சாதாரண மனிதன்தான் சுதந்திரத்தின் இருப்பிடமாக, அமெரிக்க நீக்ரோ மக்களின் விடுதலைத் தலைவராக, உலகம் போற்றும் உத்தமகை விளங்கிய வீரபுருஷன். 

Abraham Lincoln
ஆபிரகாம் லிங்கன் 

ஆபிரகாம் லிங்கனின் தந்தை ஒரு விறகுவெட்டி ; லிங்கனும் அந்தத் தொழிலையே இளம் வயதிலிருந்து செய்து வந்தான். லிங்கன் சிறுவனாக இருக்கும் பொழுதே அருமைத் தாயை இழந்துவிட்டான். லிங்கன் குடும்பத்தை வறுமை அங்கும் இங்குமாக அலைத்து ஈற்றில் இல்லினொஸ் என்னும் இடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்குதான் ஆபிரகாம் லிங்கன் தனது இளம் பிராயத்தைக் கழித்தான். 

சொந்த முயற்சி 

பள்ளிக்கூடத்திற் சிறிதளவு கல்வி கற்றிருந்தாலும், தனது சொந்த முயற்சியால் மிகுந்த அறிவு பெற்றான் லிங்கன். வெட்டிய விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்திருந்த ஒரு கொட்டில்தான் லிங்கன் பிறப்பிடம்; அவன் கல்விக் கூடம். காலைமுதல் மாலைவரை கடும் வேலைசெய்துவிட்டு வீடு திரும்பும் லிங்கன், இரவு நெடு நேரம்வரை தனது விறகுக் கொட்டிலிற் படித்துக் கொண்டேயிருப்பான். அவன் முதன்முதலாகப் படித்த புத்தகத்தைப் பற்றிய கதை, அவனுக்குக் கல்வி கற்பதில் இருந்த ஆர்வத்தையும், ஆவலையும் எடுத்துக் காட்டுகிறது. 

பதினாறு வயதின்போது ஒருநாள் லிங்கள் தன் குடிசையருகில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக வந்திருந்தவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாக கேள்விப்பட்டான்.  உடனே அங்கு சென்று அவரிடம் அப்புத்தகத்தை இரவலாகப் பெற்றுக்கொண்டான். அது அமெரிக்காவின் முன்னைய குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் உவாசிங்டன் என்பவரின் வாழ்க்கைச்சரிதைப்பற்றியது. இரண்டு மூன்று இரவுகளுக்குப் பின், குடிசைக்கூடாகப் பெய்து மழை லிங்கனின் இரவற் புத்தகத்தை ஈரமாக்கி விட்டது! பழுதடைந்த புத்த சகத்தைத் திருப்பிக் கொடுக்கப் பயந்த லிங்கனிடம் அதற்குரிய விலையைக் கொடுப்பதற்கும் ஒரு சதம் கூடக் கிடையாது.

லிங்கன் அதற்குப் பதிலாக, விரைந்து சென்று புத்தகம் இரவல் கொடுத்தவரின் வயலில் வேலை செய்தான். இவ்வாறு தன்னுடைய முதற் புத்தகத்தை நெற்றி வியர்வைமூலம் உழைத்துக்கொண்டான் ஆபிரகாம் லிங்கன். 

ஆபிரகாம் லிங்கன் பல தொழிற்துறைகளில் ஈடுபட்டான்: அவன் விறகு வெட்டினான். அவனைப்போலத் திறம் படைத்தோர் அவ்விடத்தில் ஒரு குருவியும் கிடையாதாம்! கப்பல் ஓட்டினான்; வயலை உழுது விதைத்து அறுவடை செய்தான். தானே அடுக்களை வேலைகளையும் பார்த்தான். லிங்கனின் உடலானது உழைப்பினால் உரம் பெற்று உறுதியாக விளங்கியது. அவன் உடலைப் போலவே உள்ளமும் உறுதி ஊற்றெடுத்துப் பாயும் பாறையாக விளங்கியது. உடல் வலிமையும் உள்ளத்துணிவும் கொண்டு ஓர் உன்னத புருடனாக வளர்ந்திருந்தான் ஆபிரகாம் லிங்கன். 


குடியரசுத் தலைவர்

இதே ஆபிரகாம் லிங்கன் தான் 1860 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைமையை ஏற்ற காலம் அமெரிக்காவுக்கும் அதன் மக்களுக்கும் ஒரு சோதனைக்காலம்; வேதனைக் காலமுங்கூட. நீக்ரோ அடிமைகளின் சிக்கல் நாட்டையே இரு கூறாகப்பிரித்து ஒற்றுமையைப் பிளவுபடுத்தியது. வட அமரிக்கா, அடிமை வாழ்வு அமெரிக்கா முழுவதிலும் ஒழிய வேண்டும் என்று என்ற வற்புறுத்தியது. அதே நேரத்தில், தங்கள் பருத்தி விருத்திக்காகப் பயன்பட்ட நீக்ரோ அடிமைத்தனம் வாழவேண்டும் என்று தென் அமெரிக்கா வற்புறுத்தி நின்றது. அத்துடன் ஐக்கிய அமெரிக்காவை விட்டு விலகித் தனி ஆட்சி நடத்தவும் எண்ணியது தென் அமெரிக்கா. இதன் விளை வால், 1860-64 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க வரலாற்றின் பக்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களின் செங்குருதியிலே தோய்ந்தன. உள்நாட்டுப் போர் மிக உக்கிரகமாக நடந்தது. 

இந்தப் போராட்டத்தில், ஆபிரகாம் லிங்கன் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அடிமைகள் பக்கம் சார்ந்து நின்றார். அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலந்தொட்டு, அடிமைத்தனம் ஒழிய வேண்டுமென்று வாதாடிய வீரன், பின் வேறு எந்தப்பக்கம்தான் சார்ந்து நிற்பான்? அமெரிக்க நாட்டின் ஒற்றுமைக்காகவும், அன்பு உள்ளம் படைத்த அந்த அண்ணல் வாள் ஏந்திப் போர்முனையும் புகுந்தார். பரீட்சையற்ற போர்ப் படைகளைக் கொண்ட அவர் தம் கட்சி, முதலிற் பல இடங்களிலே தோல்வி கண்டது. ஆனால், ஆபிரகாம் லிங்கனின் விடாமுயற்சியும் உற்சாகமூடடும் மொழிகளும் ஒன்று சேர்ந்து வட அமெரிக்காவுக்கு வெற்றியையும் அமெரிக்க நாட்டிற்கு ஒற்றுமையையும் ஈட்டின. இவற்றிலும் மேலாக நீக்ரோ மக்களுக்கு - அடிமைகளுக்கு, விடுதலையையும் பெற்றுத்தந்தன.


 உலகிற்கு உரியவர்

அமெரிக்காவுக்கு உண்மைச் சுதந்திரம் ஈட்டிக் கொடுத்த ஆபிரகாம் லிங்கன் 1864 ஆம் ஆண்டு மறுபடியும் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆனால், அந்தோ! ஒரு சில மாதங்களில் ஆபிரகாம் லிங்கன், ஒரு தென் அமெரிக்கனால் நாடகக் கொட்டகையில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்தத் துக்ககரமான சம்பவம் ஏப்ரல் 14 ஆம் திகதி வாசிங்டன் நகரத்திலுள்ள நாடகக் கொட்டகை ஒன்றில் நடைபெற்றது. 

அவர் இறந்த செய்தி கேட்டு அமெரிக்கநாடே துக்கத்தில் ஆழ்ந்தது. வடக்கும் தெற்கும் கண்ணீர் சொரிந்தன. எதிரிகளிடம் கூட அன்பும், சகிப்புத் தன்மையும் கொண்டவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கனின் பிரிவு யாருக்குத்தான் கவலையை ஊட்டாது விடும்!' 

உலகுக்கு அவர் இறந்த செய்தியை விடுவித்த காரியதரிசி ஸ்டான்டன் என்பவர் "இப்பொழுது அவர் காலத்திற்கு உரியவர்” என்று கூறினார். இல்லை-உண்மையான சனநாயகம் என்பது "மக்களுக்காக, மக்களால் நடாத்தப்படும் ஆட்சி" என்ற பொன்மொழிகளைப் புவிக்கீந்த அப்பெரும் மனிதன் காலத்திற்கு மாத்திரம் உரியவனல்லன்; ஞாலத்திற்கும் உரியவன். 

Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு