“திருவாக்கு” என்னும்‌ “திருநூல்‌” தமிழில்‌ வளர்ந்த வரலாறு

“திருவாக்கு” என்னும்‌ “திருநூல்‌” தமிழில்‌ வளர்ந்த வரலாறு


யேசுநாதர்‌ அருளிய திருவசனங்களைச்‌ (Gospel) சுவிசேடம்‌ என்று தமிழில்‌ வழங்கி வருகின்றனர்‌. சு+விசேடம்‌ என்பது நற்செய்தி என்று பொருள்படும்‌. Gospel என்பதனைச்‌ சுவிசேடம்‌ என்று மொழி பெயர்த்த பெருமையாருக்குரியதோ தெரிகின்றிலது. திருநூல் எனப்படும் ‌விவிலிய நூலினை மொழிபெயர்த்தது யார்‌? பலர்‌ மொழிபெயர்த்தார்கள்‌. முதன்முதலாகத்‌ தமிழ்மொழியிலே அதுயாரால்‌ எங்கே மொழிபெயர்க்கப்பட்டது?

  இந்தியாவில்‌ வழங்கிவரும்‌ நூற்றுக்கணக்கான மொழிகளில்‌ ஏறக்குறைய ஒரு நூறுமொழிகளிலே திருநூல் ‌மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றுள்‌ முதன் முதலாகத்‌ தோன்றியது தமிழ்மொழியிலே என்பது மகிழ்ச்சிக்‌குரியது: அதுவும்‌ இலங்கையிலேயே தொடங்கலாயிற்றென்றால்‌ இன்னும்‌ பேருமகிழ்ச்சிக்குரிய தன்றோ.

Holy bible


திருநூல்‌ தமிழில்‌ வந்த வரலாற்றை வகுத்துந் தொகுத்துக்‌ காட்டுதலே இக்கட்டுரையினது நோக்கமாகும்‌. அவ்‌வரலாற்றை இருவகைப்படுத்துவாம்‌.

  1. கத்தோலிக்கு வேத மொழிபெயர்ப்பு

  2. மற்றைய கிறீத்துவ சபையினர்‌ மொழிபெயர்ப்பு.

மற்றைய கிறீத்துவ சபையினராலே தொடங்கப்பட்ட மொழிபெயர்ப்பு வேலைகள்‌ வரலாற்றிலே முதலிடம்‌ பெறுகின்‌றன. ஆகையால்‌ அவற்றைப்பற்றி முதலில்‌ எடுத்துக்‌ காட்டுதும்‌. இவர்களின்‌ மொழிபெயர்ப்பு வேலைகளும்‌ பல திறப்பட்டன: ஆகவே அவற்றையும்‌ வகுத்துக்‌ காட்ட வேண்டியதாகின்றது.

  1. இலங்கையை ஆண்ட ஒல்லாந்த அரசாங்கம்‌ எடுத்துக்‌கொண்ட முயற்சி.

  2. தனிப்பட்ட பாதிரிமார்‌ எடுத்த முயற்சி.

  3. மொழிபெயர்ப்புச்‌ சங்கங்கள்‌ செய்த முயற்சி.

இலங்கையை ஒல்லாந்தர் 17 ஆம்‌ 18 ஆம்‌ நூற்றாண்டுக‌ளில்‌ ஆண்டனர்‌. ஆண்ட காலத்தே இறப்பிறமாது வேதத்‌தைப்‌ பரப்பவும்‌ முயன்றனர்‌. தமிழிலும்‌, சிங்களத்திலும் ‌விவிலியம்‌ எனப்படுந்‌ திருநூலை மொழிபெயர்க்கவும்‌ அச்சிட்டுப்‌பரப்பவும்‌ ஒழுங்குகள்‌ செய்தனர்‌.

இம்முயற்சி பற்றிய வரலாறுகள்‌ பிலிப்பு தே மெல்லோ பாதிரியார்‌ மொழிபெயர்த்து 1759 இல்‌ அச்சேற்றிய திருநூலின் ‌முகவுரையிற்‌ கூறப்பட்டிருக்கின்றது. அம்முகவுரையின்‌ விசேட பகுதியை அப்படியே தருகின்றோம்‌.

“குஸததாவு விலலெம பாரொனவன இமமொவு எனபவா இவடததிலெ புகடசியுடன அழுமபொது உஙகள நிததிய இபறகைககுளள நனமையினுந தினமையினும பெரிவே மனதிரஙகி தமககுணடான பாரமான விசாரஙகளுககுகூட மெலாலெ குறிககபபடட சஙகை பெநத பிலிபபுஸ பலதெயுஸ எனகிற குருவானவா தமிடபடுததின மததெயுஸ எழுதின சுவிசேடததையும சஙகை பொநத அதிரியானுஸதெகுமெய எனற குருவானவா தமிடபடுததின புதிய ஏறபாடு முழுதையும தாஙகளபாடியிற ௪ஙகை பொநத குருககள தமிடபடுததின புதிய ஏறபாடடையும தாமுயிரொடிருககுமபொது யாடபாணததிற ௪ஙகை பொநத குருவாகிய அதெலபுச கறாமா எனபவருககுப பாரமாககி இதுகள கிரேகக வாககியததுடனெ சரிககடடபபடடு பாஷையறிநத தமிள மனிதருடைய உதவியைக கொணடு இவடததுத திருசசபை அலொசனையின விசாரிபபின கீழாகத தமிடபாஷையின குணததுககும பெலனுககும ஒததிருககிற வொரு பாஷைபபடுததுதலை யுணடுபணணிக கொளளததககதாக மெததவுந தெணடிததார இபபடி ததானெ இநதச சுசிரதமானதுவும அதிக நெசமுளளதுவுமான கறபினை அநதபபுகளப படததகக உததமமானவருடைய கடடளையின படியெ நனறாயக குறிககபபடட சஙகைபொநத இரணடு பொகள முனபதாகவும யாடபாணதது புறொபபொனெநதாகிய யுவாம பிலிபபுஸ எனறவரையும நிரகொழுமபு  புறொபபெனெநதாகிய பிலிபபு எமானுவெல எனறவரையும பாஷையறிநத பொகளையுங கொணடு நடப‌பிககபபடடு மததெயு செழுதின சுவிசெஷம 1749 ஆணடில அறபசி மாதததின கடசியிலெ உனககு உனது பாஷையிலெ கையாழிககபபடடுது.”

இம்முகவுரை வசனங்களின்‌ படி விவிலிய நூலின்‌ மொழி பெயர்ப்பை முதலிற்‌ செய்தவர்‌ பிலிப்பு பல்தேயு என்பவராவார்‌. இவர் தமிழ்ப்படுத்தியது மத்தேயு திருவாக்கு ஆகும்‌. பிலிப்பு பல்தேயு இலங்கையிலே யாழ்ப்பாணத்தில்‌ 1658-1665 என்ற ஆண்டுகளுக்கிடையிலே தங்கியிருந்து வேதபோதகஞ்‌ செய்தனர்‌ என்று அறியக்கிடக்கின்‌றது. ஆகவே 1665க்கு முன்‌ யாழ்ப்பாணத்திலே மத்தேயு திருவாக்கு மொழி பெயர்க்கப்பட்டுக்‌ கையெழுத்துப்‌ பிரதியாக வழங்கியிருத்தல் ‌கூடுமென்பது புலனாகின்றது.   s இவ்வாறு விவிலியம்‌ முதன்‌ முதலாக யாழ்ப்பாணத்திலே மொழிபெயர்க்கப்படலாயிற்று.

ஒல்லாந்தர்‌ ஆட்சி இலங்கையிலே தொடங்கிய காலத்‌துத் ‌திருவாக்கு நூலினை மொழிபெயர்க்க முயற்சிகள்‌ எடுக்கப்‌பட்டன. 1694 இற்‌ பழைய எற்பாட்டை மொழிபெயர்க்க முயற்சி எடுக்கப்பட்ட தெனினும்‌ நற்பயனளிக்கவில்லை. வீண்‌முயற்சியாக முடிந்ததெனினும்‌, இச்சீரிய தொண்டினை ஒல்‌லாந்த அரசாங்கங்‌ கைவிடவில்லை. இம்முயற்சிகளுக்கிடையிலேதான்‌ அதிரியானுச தேமேயு என்பவர்‌ புதிய ஏற்பாடு முழுவதையும்‌ மொழிபெயர்த்து வெளிப்படுத்தினார்‌. இது கொழும்பிலே நிகழ்ந்தது. ஆனால்‌ எவ்வாண்டில்‌ வெளிவந்ததென்‌று சொல்ல முடியவில்லை. இதற்குப்பின்னரே தரங்கம்‌பாடி மொழிபெயர்ப்பு உதயமாயிற்று. இது பத்தலோமயசுசீகன்‌பால்கு என்ற சேர்மானிய பாதிரியாராலே மொழிபெயர்க்கப்‌பட்டு 1714 இல்‌ முதலாம்‌ பகுதியும்‌ 1715 இல்‌ இரண்டாம்‌ பகுதியுமாக அச்சேறி வெளிவந்தது. 494 பக்கங்களையுடையது. தென்மார்க்கு அரசர்‌ நாலாம்‌ பிறடறிக்கு மன்னருக்குச்‌ சமர்ப்பிக்கப்பட்டது. இப்பதிப்பின்‌ முகவுரையிற்‌ சீகன்‌ பால்கு ஐயரும்‌, மொழிபெயர்ப்பு வேலையில் ‌அவருடன்‌ தொண்டாற்றிய கிரீண்டலர்‌ ஐயருங்‌ கையெழுத்திட்டனர்‌. இதன்‌ இரண்டாம்‌ பதிப்பு 1758 ஆம்‌ வருடம் ‌வெளிவந்தது. இப்பதிப்பினை உரோமாபுரியிலுள்ள பாப்பாண்‌டவர்‌ நூல்நிலையத்திற்‌ பார்க்கலாம்‌.

பழைய ஏற்பாட்டையும்‌ மொழிபெயர்க்க சீகன்‌ பால்கு முன்வந்தனர்‌. 1714ஆம்‌ ஆண்டு அவ்வேலையைத்‌ தொடங்கினர்‌. ஆனால்‌, அவர்‌ 1719 இல்‌ காலமானார்‌. உரூத்து புத்தகம் வரை செய்து முடித்தனர்‌. பெஞ்சமின்‌ சூல்சையர் ‌இதனைத்‌ தொடர்ந்து மொழிபெயர்த்து 1728 இல்‌ அச்சில்‌ வெளிப்படுத்தினர்‌.

சூல்சையர்‌ பழைய எற்பாட்டிலுள்ள தள்ளுபடி ஆகமங்‌களையும் மொழிபெயர்த்து அதனையும்‌ 1728 ஆம்‌ ஆண்டு தரங்கை அச்சகத்தில்‌ வெளியிட்டார்‌. இவரது தமிழ்நடை சிறப்புற்றதாயமையவில்லை. வீரமாமுனிவரும்‌ பல கிறீத்தவர்‌களுங்‌ குறைகூறி எள்ளிநகையாடினர்‌. சாமுவேல்‌ என்பார்‌ அதன்‌ தமிழ்‌ நடையைத்‌ திருத்தி 1868 இல்‌ சென்னை எச்‌. பி. சி. கே. அச்சகத்தில்‌ வெளியிட்டனர்‌.

1741 இல்‌ யாழ்ப்பாணத்திலே கிறேமர்‌ என்பார்‌ மத்தேயு திருவாக்கினை மொழிபெயர்த்து அச்சேற்றினர்‌. இவ் வெளியீட்‌டிற்குக்‌ காரணகருத்தாவாக ஒல்லாந்த தேசாதிபதி உவில்லியம்‌ வான்‌ இம்மாவ்‌ இருந்தனர்‌ என்று இதன்‌ முகவுரையிற்‌ கூறப்பட்டிருக்கிறது.

கிறேமர்‌ தொடங்கிய வேலையை, வட்லுவ்‌ தலைமையில் ‌இயங்கிய சபையொன்று தொடர்ந்து செய்யலாயிற்று. இச் ‌சபையில்‌ பிலிப்பு தேமெல்லோ, சைமன்‌தேசில்வா என்பாரிருந்த‌னர்‌. நான்கு திருவாக்கும்‌, அப்போத்தல நடபடிகளும் ‌1742 இல்‌ வெளிவந்தன. இந்நூல்‌ கொழும்பிலே கிழக்கிந்திய ஒல்லாந்த சங்கத்தாரின்‌ அச்சகத்திற்‌ பதிப்பிக்கப்பட்டது.

பிலிப்பு தே மெல்லோ சிறந்த தமிழ்ப்‌ புலவர்‌. இலங்‌கையின்‌ முதற்றமிழ்‌ வேதபோதகர்‌; பலமொழிகளைக்‌ கற்றுணர்ந்தவர்‌. திருவாக்கு நூல்களை மொழிபெயர்த்‌ததுடன்‌ தாவீதின்‌ சங்கீதங்களையுந் தமிழில்‌ இன்னிசையால்‌ யாத்தனர்‌. இது 1755 இல்‌ அச்சேறியது. கொழும்பு நூதனசாலையிலே பிரதி ஒன்றுண்டு.

க: சங்கீதம்‌

க. ஆகாதவ ராலோசனை யிலெ

பொகாமற பாவிகள வழியிலெ

நிலலாமற சாசககா றருடைய

வெதததிற கருததாய அதனை ததான

ராபபகற சிந்திபபொன பாயககியவான

1759 இல்‌ இவரின்‌ சொந்த மொழிபெயர்ப்பாகிய புதிய ஏற்பாடு முழுமையும்‌ வெளிவந்தது இப்பதிப்பின்‌ முகவுரையிலே புதிய பழைய ஏற்பாடுகளின்‌ மொழிபெயர்ப்பு வரலாறு தரப்பட்டிருக்கிறது. இதன்பிரதியொன்று கொழும்பு நூதனசாலையிலுண்டு. இவ்வகை மொழிபெயர்ப்பினை ஊக்குவித்த பெருமை ஒல்லாந்த தேசாதிபதிக்கேயுரியது. பெருந்தொகைச்‌செலவிற்‌ பதிப்பித்த இவ்வகை நூல்கள்‌ கிறீத்தவர்களுக்கு இலவசமாகவே அளிக்கப்பட்டன.

வீரமாமுனிவருக்குப்பின்‌ தமிழ்‌ அகராதி ஒன்றினைச் ‌செய்த பிலிப்பு பாபிரிசியசு என்ற சேர்மன்‌ பாதிரியார்‌ தமிழ்‌மொழியினை நன்கு கற்றுத்‌ தேறித்‌ தமிழ்‌நூல்கள்‌ இயற்றுவாராயினர்‌. இவர்‌ சேர்மனிய உலூத்தர்‌ சபையைச்‌ சேர்ந்தவர்‌. சீகன்பால்கு ஐயர்‌ சூல்சையர்‌ என்பவர்கள்‌ செய்தமொழி பெயர்ப்புக்களை நன்கு ஆராய்ந்து அவற்றைத்‌ திருத்திச் ‌சேர்க்க வேண்டியவற்றைச்‌ சேர்த்துச்‌ செவ்விய மொழி பெயர்ப்பென்று 1772 இல்‌ புதிய ஏற்பாட்டினை அச்சேற்றி வெளியிட்டனர்‌. ஆயிரம்‌ பிரதிகளே எடுக்கப்பட்டன. இதன் ‌இரண்டாம்‌ பதிப்பு 1778 இல்‌ வெளியாயிற்று. முழுவேதாகமும்‌ 1796 இல்‌ இவர்‌ இறந்தபிற்பாடு வெளிவரலாயிற்று.

பாபிரிசியசு பாதிரியாரின்‌ மொழிபெயர்ப்பிலுங் ‌குறைகள்‌ காணப்பட்டன. இவர்‌ மொழிபெயர்ப்பைக்குறித்து “அருணோதயம்‌” என்னும்‌ சஞ்சிகை 1867 மாசி மாதத்தில்‌ எழுதியதாவது:

“கர்த்தர்‌ நமக்களித்த வேதத்திருப்புதலை மதித்துக் காப்‌

பாற்ற முயல்வது போல்‌ அதிலுள்ள பிழைகளையுங்

‌காக்க முயலவேண்டுமென்பது கர்த்தருடைய சித்த

மல்ல என்பதையும்‌ நிச்சயமாய்‌ அறிந்திருக்கிறோம்‌.”

ஆகவே அதனைத்‌ திருத்துவதில்‌ வேதபோதகசபை முனைந்து நின்றது. சுவார்சு ஐயரும்‌ இந்தியப்பாதிரிமார்‌ இருவரும்‌ இவ்‌வேலையில்‌ உழைக்கலாயினர்‌.  பாபிரிசியசு ஐயர்‌ மொழிபெயர்ப்பிலே கண்ட எழுத்துப்பிழை, சொற்பிழை, தமிழிலக்கணப்பிழை இவற்றைத்‌ திருத்தி  1867 இல் ‌வெளியிட்டனர்‌. ‌1893 இல்‌ வேறொரு பதிப்பும்‌ வெளிவந்தது.

வேதாகம மொழிபெயர்ப்புக்கள்‌ இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கையில்‌ இரேனியசு ஐயர்‌ என்பார்‌ பாபிரிசியசின் ‌மொழிபெயர்ப்பின்‌ குறைகளை நீக்கிப்‌ புதிய ஏற்பாட்டின் ‌மொழிபெயர்ப்பைச்‌ செய்து காட்ட அதனைச்‌ சென்னை வேதாகம சங்கம்‌ 1833 இல்‌ வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்புச்‌ சிறந்‌ததெனினும்‌ பல சொற்றொடர்கள்‌ நேர்மொழிபெயர்ப்பாயிராமல்‌ வியாக்கியானமாயிருந்தது காரணமாகத்‌ தமிழ்ச்‌ சபையினர்‌ இதனை ஏற்றுக்‌ கொள்ள மறுத்தனர்‌.

இவ்வாறு தனியாட்கள்‌ செய்த மொழிபெயர்ப்புக்களும்‌ அச்சேறியுள்ளன. கும்பகோணத்தில்‌ வேதபோதக ஊழியஞ்‌செய்த மத்தேயு எல்வின்‌ ஐயர்‌ புதிய ஏற்பாடு நான்கு திருவாக்குக்களையும்‌ மொழிபெயர்த்து 1911-1913 என்ற வருடங்‌களுக்கிடையில்‌ வெளியிட்டனர்‌. 1922 இல்‌ ஞானப்பிரகாசம்‌ஐயர்‌ என்பவரின்‌ புதிய ஏற்பாட்டின்‌ மொழியெயர்ப்பு ஒன்று வெளிவந்தது.

இதுவரை, வேதபோதக ஐயர்மார்‌ தனித்தும்‌ ஒன்று கூடியுஞ்‌ செய்த மொழி பெயர்ப்புக்களைப்பற்றி விரித்துரைததாம்‌. இவையெல்லாம்‌ காலத்துக்குக்‌ காலந் திருத்தப்பட்டனவெனினும்‌ யாவராலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டவையல்ல; திருத்தம்‌ வேண்டி நின்றன. சபைகள்‌ பல தாய்நாட்டிலுஞ்‌ சேய்‌நாட்டிலுங் கூடின. சேய்நாட்டில்‌ யாழ்ப்பாணத்திலே சபை யொன்று கூட்டப்பட்டது. இதன்‌ தலைவர்‌ பீற்றர்‌ பேர்சிவல்‌ஐயர்‌. 1832 இல்‌ இச்சங்கம் கூடலாயிற்று. இச்சங்கத்தில்‌ இதுபோல்திங்கு, உவிஞ்சுலோ, விறதேட்டன்‌, அறுமுகநாவலர்‌ ஆகியோர்‌ அங்கம்‌ வகித்தனர்‌. தமிழ்‌ உரைநடைகைவந்த நாவலர் பெருமானின்‌ உதவியுடன்‌ மொழிபெயர்ப்பு நடைபெறலாயிற்று. பதினெட்டு ஆண்டுகளாக நடந்த மொழி பெயர்ப்புச்‌ சென்னையில்‌ அரங்கேறச்சென்றது. சென்னையில்‌ இதற்கு எதிர்ப்பு இருந்தது. மழுவை மகாலிங்கஐயர்‌ இம்மொழி பெயர்ப்பைப்‌ பெரிதும்‌ பாராட்டித்‌ தீர்ப்புக்கூறவே யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு அங்கீகரிக்கப்பட்டு 1850 இல்‌ அச்சேற்றப்‌பட்டது. அச்சேற்றப்பட்ட பிரதிகள்‌ தமிழ்நாடு முழுவதும் பறந்தன. எதிர்ப்புக்களும்‌ பறந்து வந்தன. திருநெல்வேலி தஞ்சாவூர்‌ இவற்றிலிருந்து சரமாரியாக வந்தன. இந்திய இலங்‌கைத்‌ தமிழ்கலந்த படைப்பென்றனர்‌ பலர்‌. சங்கதமொழிச் ‌சொற்கள்‌ நிறைந்திருக்கின்றன என்றனர்‌ சிலர்‌. நாவலர்‌ வேண்டுமென்றே பல சொற்பிரயோகங்களை விட்டிருக்கின்றார் ‌என்றனர்சிலர்‌. இது நேரடி. மொழிபெயர்ப்பாக அமையவில்லையென்றனர்‌ சிலர்‌. ஆகவே இதனைப்பரீட்சார்த்தகரமான மொழிபெயர்ப்பெனக்கூறி வேறு திருத்தமான மொழிபெயர்ப்பு வேண்டி நின்றனர்‌. இதனாலே நாவலர்‌ மொழிபெயர்ப்புச்‌ சிறிது காலம்‌ யாழ்ப்பாணத்திலே மாத்திரம்‌ பயன்படுத்தப்பட்டுப் ‌பின்னர்‌ மறைந்து விட்டது. இப்பிரதிகள்‌ கிடைப்பதற்கில்லை. பிரதி யொன்று யாழ்ப்பாண அத்தியட்சர்‌ சபாபதி குலேந்திரம்‌ அவர்களிடமுண்டு.

சென்னை வேதாகம சங்கம்‌ புதியதோர்‌ மொழிபெயர்ப்பை வெளியிடும்‌ வேலையை 1854 இல்‌ மீண்டும்‌ மேற்கொள்ளலாயிற்று. தங்கள்‌ மொழிபெயர்ப்பு எல்லா வேதபோதக சபைகளும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ வண்ணம்‌ அமையவேண்டு மென்பது அவர்களின்‌ பேரவா. எனினும்‌ வேலையைத்‌ தொடர்ந்து விடாப்பிடியாய்‌ நடாத்த முடியவில்லை. போக்குவரத்து வசதியின்மை, இடமாற்றம்‌, சிலரின்‌ எதிர்பாராத மரணம்‌, இவையெல்லாந் தடைசெய்தன. என்றாலும்‌ 1857 இல்‌ எல்லாச் ‌சபைகளின்‌ ஒத்‌துழைப்புச்‌ சம்மதம்‌ பெற்றதும்‌ மொழிபெயர்ப்‌புச்சங்கம்‌ நிறுவப்படலாயிற்று. இச்சபையில்‌ உலூத்தர்‌ சபைநீங்கலாக மற்றச்சபைகள்‌ பிரதிநிதித்‌துவம்‌ வகித்தன. பெளவர்‌ஐயர்‌ தலைமையில்‌ இயங்கலாயிற்று. பாபிரிசியசு ஐயரின்‌ மொழிபெயர்ப்பே அடிப்படையாகக்‌ கொள்ளப்பட்டது. 1863 இற்‌ புதிய ஏற்பாட்டின்‌ மொழிபெயர்ப்பு முடிவடைந்தது. 1864 இல்‌ அது அச்சில்‌ வெளிவந்தது. 1868 இற்பழைய ஏற்பாட்டின்‌ மொழிபெயர்ப்பு முற்றுப்‌ பெற்றது. 1871 இலே முழு வேதாகமும்‌ அச்சில்‌ வெளிவந்தது. 5000பிரதிகள்‌ எடுக்கப்பட்டன.

இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புக்களெல்லாம்‌ எராசமுசு தொகுப்பை மூலமாகக் ‌கொண்டு செய்யப்பட்டவை. நெசிலின்‌ (Neslin) தொகுப்பை ஆதாரமாகக்‌ கொண்டு புதியதோர்‌ மொழிபெயர்ப்பை ஆக்குதல்‌ வேண்டுமென்ற எண்ணம்‌ சென்னை வேதாகம சங்கத்துக்கு உதயமாயிற்று. ஆகவே 1923 இல்‌ மொழிபெயர்ப்புச்‌ சங்கமொன்று உருவாயிற்று. இச்சங்கத்தில்‌ எல்லாச் சபைகளின்‌ பிரதிநிதிகளுமிருந்தனர்‌. இலாசன்ஐயர்‌ தலைவராயிருந்தார்‌. இம்மொழி பெயர்ப்பு வேலையிலே பேருதவியாகத்‌ துரைசாமி பண்டிதர்‌ என்பார்‌ இருந்தார்‌. சகல சபைகளின்‌ ஒத்துழைப்பாலே திருத்தமான மொழிபெயர்ப்பு 1936 இல்‌ வெளிவந்தது. இது தமிழ்நடையிலுஞ்‌ மொழிபெயர்ப்பிலும்‌ சிறந்ததாக விளங்கியது. எனினும்‌ நெசிலின்‌ தொகுப்பை ஆதாரமாகக்கொண்டு மொழி பெயர்த்தபடியால்‌ அடக்கம்‌ வேறுபட்டிருந்தது. பலமான எதிர்ப்பு தாயகத்திலுங்‌ யாழ்ப்பாணத்திலுங்‌ கிளம்பியது. ஆகவே இலாசன்‌ மொழிபெயர்ப்பு நிலையான மொழிபெயர்ப்‌பாக விளங்கவில்லை.

சென்னை வேதாகம சங்கம்‌ இலாசன்‌ மொழிபெயர்ப்‌பைத்‌ திருத்தத் தொடங்கியது. மோனகன்‌ ஐயர்‌ தலைமையில் ‌வேறோர்‌ சங்கத்தை அமைத்தது. இச்சங்கத்தின்‌ மொழி பெயர்ப்பை 1941 இல்‌ வெளியிட்டனர்‌. இதிலும்‌ புதிய ஏற்பாட்டிலே சில பிழைகள்‌ காணப்பட்டன. இவற்றைத் தியல்‌ ஐயர்‌ திருத்தி 1954 இல்‌ வெளியிட்டனர்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாட்டு வேதபோதக சபைகளின்‌ 250 ஆம்‌ ஆண்டு நிறைவுவிழா கொண்டாடப்பட்டது. ஆகவே விழா ஞாபகார்த்தமாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள வேதாகம சங்கப்பண உதவிகொண்டு முழு வேதாகமமும்‌ 1956 இல்‌ வெளியிடப்படலாயிற்று.

இவ்வகையிலெழுந்த மொழிபெயர்ப்புக்களின்‌ வேறுபாடுகளை நாமறிதல்‌ வேண்டும்‌. அதற்காக அவ்வம்‌ மொழிபெயர்ப்பிலிருந்து உதாரணந்‌ தருவாம்‌.

மத்தேயு: அதிகாரம்‌. 4.

க. அப்போ இயேசுநாதர்‌ பசாசினாலே சோதினைப்‌படுகிறதுக்காக அரூபியினாலே வனாந்திரத்திலே கொண்டு போகப்பட்டார்‌.

உ. அவர்‌ நாற்பது பகலும்‌ நாற்பது இரவும்‌ உபவாசமாயிருந்த பின்பு ஈற்றிலே அவருக்குப்‌ பசியுண்‌டாச்சுது.

 கூ. சோதினைகாறன்‌ அவரிடத்திலே வந்து நீ சறுவேசபரனுடைய குமாரனானால்‌ இந்தக்‌ கல்லுக்களை அப்பங்‌களாகக்‌ கற்பியென்று சொன்னான்‌.

1741: கிறேமர்‌.

அப்பொழுது இயேசு பிசாசினாற்‌ சோதிக்கப்‌படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் ‌கொண்டு செல்லப்பட்டார்‌.

அவர்‌ இரவும்‌ பகலும்‌ நாற்பது நாள்‌ உபவாசமாயிருந்த பின்பு அவருக்குப்‌ பசியுண்டாயிற்று.

அப்பொழுது சோதனைக்காரன்‌ அவரிடத்தில்‌ வந்து நீர்‌ தேவனுடைய குமாரனேயானால்‌ இந்தக் கல்லுகள்‌ அப்பங்களாகும்படி சொல்லும்‌ என்றான்‌.

1759. பிலிப்புதே மெல்லோ.

(க) பின்பு யேசு பிசாசினாலே சோதிக்கப்படும்படி ஆவி

(உ) யினால்‌ வனத்திற்குக்‌ கொண்டு போகப்பட்டு- நாற்பதுநாள்‌ இரவும்‌ பகலும்‌ உபவாசமாயிருந்தார் ‌; பின்பு

(கூ) அவருக்குப்‌ பசியுண்டாயிற்று. அப்பொழுதுசோதிக்கிறவன்‌ அவரிடத்தில்‌ வந்து‌, நீ தேவனுடைய குமாரனாயிருந்தால்‌ இந்தக்‌ கற்கள்‌ அப்பமாகும்படி கட்டளையிடென்றான்‌.

1850: நாவலர்‌.

  1. அப்பொழுது இயேசு பிசாசினாற்‌ சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்‌ கொண்டு போகப்பட்டார்‌.

  2. அவர்‌ இரவும்‌ பகலும்‌ நாற்பது நாள்‌ உபவாசமாயிருந்த பின்பு அவருக்குப்‌ பசியுண்டாயிற்று.

  3. அப்பொழுது சோதனைக்காரன்‌ அவரிடத்தில்‌ வந்து நீர்‌ தேவனுடைய குமாரனேயானால்‌ இந்தக்‌ கல்லுகள் ‌அப்பங்களாகும்படி சொல்லும்‌ என்றார்‌.

1888, 1957 பதிப்பு.

இதுவரையுங்‌ கத்தோலிக்கரல்லாத மற்றைய கிறீத்தவர்‌கள்‌ செய்த வேதாகம மொழிபெயர்ப்புக்கள் பற்றி வரைந்தாம்‌.இனி, கத்தோலிக்கர்‌ எடுத்துக்கொண்ட முயற்சிகளை நோக்குவாம். கத்தோலிக்கர்‌ அதிகமாக வேதாகமங்களைப் பற்றி நினைப்பதில்லை. குருமார்‌ இலாத்தீன்‌ மொழியிலுள்ளதை உபயோகிப்பர்‌. விசுவாசிகளுக்கு செபப்புத்தகங்களுண்டு. இப்‌புத்தகங்களில்‌ வேதாகமப்‌ பகுதிகளிருக்கும்‌. ஆகவே கத்தோலிக்கு குருமார்‌ வேதாகமங்களை மொழி பெயர்ப்பதில்‌ அதிகம்‌ ஊக்கங்‌ காட்டவில்லை. எனினும்‌ மொழிபெயர்க்காது விட்டனரல்லர். அவர்களின்‌ மொழிபெயர்ப்பும்‌ 19 ஆம்‌ நூற்றாண்டின் ‌பிற்பகுதியிலேதான்‌ மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர்‌ சில சில பகுதிகளே மொழிபெயர்க்கப்பட்டன. மதுரைப்‌பகுதியிற்‌ பங்குக்‌ குருவாக விருந்த திரிங்கால சுவாமியார்‌ இவ்‌வலுவலில்‌ ஈடுபட்டார்‌. இவருக்கு உதவியாயிருந்தவர்‌ மிக்கேல் ‌சந்நியாசியார்‌. திரிங்கால்‌ சுவாமியாருக்கு ஊக்கமளித்‌தவர் ‌இவரே. 1860 ஆம்‌ ஆண்டு தொடங்கிய வேலை 1879 இல் ‌முடிவடைந்தது. இரு கையெழுத்துப்‌ பிரதிகள்‌ எடுக்கப்‌பட்டன. 1891 இல்‌ முதன்‌ முறையாக புதுச்சேரி கத்தோலிக்கு மிஷன்‌ அச்சுக்கூடத்திற்‌ புதிய ஏற்பாடு பதிப்பிக்கப்படலாயிற்று, இப்புதிய ஏற்பாட்டின்‌ மூன்றாம்‌ பதிப்பு 1906ஆம்‌ஆண்டு நடந்தது. சந்தியாகு சுவாமியார்‌ பரிசோதித்துத் திருத்தி அச்சேற்றினர்.

‌பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு எப்பொழுது தொடங்‌கப்பட்டதென்று தெரியவில்லை. 1904 இற்‌ பழைய ஏற்பாடு தமிழில்‌ அச்சேறியது, இது கும்பகோணம்‌ மேற்றிராணியார்‌ தலைமையிற்‌ குருமார்‌ பலர்‌ ஒன்றித்து உழைத்ததன் ‌பலனாக வெளிவந்தது.

கத்தோலிக்கு மொழிபெயர்ப்பிற்‌ கையாளப்பட்டிருக்குஞ் ‌சொற்களுஞ்‌ சொற்றொடர்களும்‌ வித்தியாசமானவை. சமயவேற்றுமை காரணமாகவே சொற்களும்‌ வேற்றுமையடைந்தன.

சொற்களையும்‌ வசனநடையினையுஞ்‌ சீர்தூக்கிப்‌ பார்த்துச் ‌சமயத்தை நிச்சயித்துக்‌ கொள்ளலாம்‌. இதனை விரித்துக் ‌கூறுவதற்கு முன்னர்க் கத்தோலிக்க வேதாகமத்தின்‌ மத்தேயு 4ஆம்‌ அதிகாரத்தை முதலிலே தருவாம்‌.

  1. அப்போது யேசுநாதர்‌ பசாசினாலே சோதிக்கப்படுவதற்கு இஸ்பிரித்துவினால்‌ வனாந்தரத்‌துக்குக் ‌கூட்டிக்கொண்டு போகப்பட்டார்‌ :

  2. அவர்‌ நாற்பது இரவும்‌ நாற்பது பகலுமாக உபவாசமாயிருந்த பின்பு அவருக்குப்‌ பசியுண்டாயிற்று.

  3. அப்போது சோதனை செய்வோன்‌ அவரண்டையில் ‌வந்து நீர்‌ சர்வேசுரனுடைய சுதனானால்‌ இந்தக்‌கல்லுகள்‌ அப்பங்களாகும்படி சொல்லு மென்றான்‌.

கத்தோலிக்கர்‌ மொழிபெயர்ப்பிலும்‌ மற்றையோர்‌ மொழிபெயர்ப்பிலுஞ்‌ சில வேற்றுமைகள்‌ காணப்படுகின்றன. முதலாவதாக, “சர்வேசுரன்” என்ற சொல்லினை எடுப்பாம்‌. இச்சொல் Jehovah என்ற ஆங்கிலச்‌ சொல்லின்‌ சமபதம்‌. இச்சொல்‌ இன்றுவரையுங்‌ கத்தோலிக்கரால்‌ உபயோகிக்கப்பட்டு வருகின்றது. வேதபோதகத்திற்குத்‌ துணைபுரிந்த போர்த்துக்கீசர்‌ காலத்தில்‌ ‘தம்பிரான்’ என்ற சொல்‌ உபயோகிக்கப்படலாயிற்று. Lord என்பதற்கு இது சம பதமாகும்‌. Lord’s Prayer என்‌பதனைத்‌ ‘தம்பிரான்‌ வணக்கம்‌' என்றும்‌ வழங்கினர்‌. இச்சொல்‌ இப்போது வழக்கொழிந்தது. சர்வேசுரன்‌ என்ற சொல்லே இன்று வழக்கிலிருக்கிறது. சீகன்பால்கு, கிறேமர்‌ என்பாரிருவருந் தங்கள்‌ மொழி பெயர்ப்பில்‌ (1714+1741) இச்சொல்லை உபயோகித்துள்ளார்கள்‌. 1759 இலே தேமெல்லோ என்பார் “தேவன்‌” என்ற சொல்லை முதன்‌ முதலாகக்‌ கையாளுகின்றார்‌.

1869 இற்‌ பாபிரியசு என்பார்‌ “கர்த்தர்” என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கினர்‌. மறுதலித்தோர்‌ மதத்திலே தேவன்‌ யாகோவா, கர்த்தர்‌ என்ற பல சொற்கள்‌ உபயோகத்தில்‌ இன்‌றுமிருக்கின்‌றன. கத்தோலிக்கு மதத்திலே “சர்வேசுரன்‌” என்ற சொல்‌ வழங்கி வருகின்றது. ஆண்டவர்‌ என்ற சொல்லையும்‌ உபயோகிப்பர்‌. தேவன்‌, கர்த்தர்‌ என்ற சொற்கள்‌ கிடையா.

இந்து மதத்தினர்‌ வழங்குஞ்‌ சொற்பிரயோகங்களை நீக்கித்‌தமக்கென ஒரு மொழிமரபினைச்‌ கிறீத்தவர்கள்‌ ஆக்கிக் ‌கொண்டனர்‌. இவர்களும்‌ இந்துக்களைப்போல்‌ அதிகமான சொற்களைச்‌ சங்கத மொழியிலிருந்து கடன்‌ பெற்றனரெனினுந் தமிழ்மரபினைச்‌ சிதைத்தாரல்லர்‌. தமிழ்‌ இலக்கணமுறைப்படி பல சொற்களை ஆக்கிக்‌ கொண்டார்கள்‌. மொழிபெயர்க்கத்தக்கவற்றை மொழிபெயர்த்தார்கள்‌. மொழிபெயர்க்கமுடியாதவற்றை நேரடியாகத்‌ தமிழ் மொழிச்சாயலாக மாற்றினார்கள்‌. பின்வரும்‌ பெயர்களின்‌ மொழிபெயர்ப்பு, சாயல்மாற்றம் ‌இவற்றை நோக்குக

இராயப்பு.......... பேதுரு

அருளப்பு.......... யுவானியர்

சஞ்சுவான்

சுவாம்பிள்ளை

சின்னப்பர்........ பாவிலு

பாவிலுப்பிள்ளை

இன்னும் பல சொற்பிரயோகங்கள்‌ கத்தோலிக்கராலே மாத்திரம்‌ உபயோகிக்கப்படுகின்றன. சாமியாரின்‌ இருப்பிடத்தை “அறைவீடு'' என்பர்‌  வேதவினா விடையைக்‌ “குறிப்‌பிடம்‌” என்பர்‌, யேசுநாதர்‌ சொன்னார்‌ என்பதைத்‌ “திருவுளம்‌ பற்றினார்‌'' என்றும்‌, வசனித்தார்‌ என்றுங்‌ கூறுவர்‌. தேவநற்கருணை, சற்பிரசாதம்‌, திவ்விய நற்கருணை, நன்மை, எழுந்‌தேற்றம்‌, சுற்றுப்பிரகாரம்‌, மனுமகன்‌, வேண்டிக்கொள்ளுதல் ‌என்ற சொற்பிரயோகங்களையும்‌ நோக்குக.

இதுவரை திருவாக்கு என்னுந்‌ திருநூல்‌ தமிழிலே மொழிபெயர்க்கப்பட்ட வரலாறும்‌ அம்மொழிபெயர்ப்பு காலந்‌தோறுந்‌ திருத்தப்பட்டுச்‌ செம்மை பெற்றவரன்‌ முறைகளும் ‌எடுத்துக்காட்டி இக்கட்டுரையை இனிது முடித்தாம்‌.




மொழிபெயர்ப்பு நடந்த ஆண்டு வரிசை

(மற்றைய கிறீத்துவ சபையினர்‌ மொழிபெயர்ப்பு)

1658-1665 

1694

1714+1715 

1728

1798

1741

1742 

1750

1759

1772

1778 

1796

1853

1850

1864 

1871

1867

1893

1911-1913 

1922

1936

1941

1954

1956 


கத்தோலிக்கு மொழிபெயர்ப்பு


1860-1879

1880

1891

1906

1904


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு