கவி கவியாகிறன்

கவி கவியாகிறன்

கம்பருடைய மகன் அம்பிகாபதி. கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமல்லவா? அம்பிகாபதியின் புலமையைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அம்பிகாபதியும் சோழ மகா ராஜாவின் புத்திரியும் பரஸ்பரங் காதலுடையவர்களாயிருந்தார்கள். அதனை அரசன் ஒருவாறு அறிந்துவிட்டான். மந்திராலோசனை கூடச்செய்யவில்லை. அம்பிகாபதியைச் சிரச்சேதஞ் செய்யும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனைக் கம்பர் அறிந்தார். அவருக்கு மனம் சகிக்கவில்லை. அரசனை எவ்வளவுக்குப் பணிந்து கேட்கக் கூடுமோ, அவ்வளவுக்கெல்லாம் பணிந்து கேட்டார். மன்னிப்புக் கிடைக்கவில்லை. கவித்துவ சக்தியத்தனையும் பிரயோகிக்கப்பட்டது. கம்பர்தாம் கவிச்சக்கரவர்த்தி என்பதனையும் மறந்துபோனார். புத்திரசோபம் யாரைத்தான் விட்டது. 

Kamban


அரசனுக்குக் கம்பருடைய முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அவனுடைய மனம் ஒரு சிறிது நெகிழ்ந்தது. ஆயினும் சிந்திக்கத் தொடங்கினான். ஒருவாறு மனம் ஒரு முடிவுக்கு வந்தது. அம்பிகாபதி பெண்பால் கலவாமல் நூறு பாட்டுப் பாடக் கூடுமானால் அவனுடைய மரண தண்டனையை விலக்கிவிடுவதே யல்லாமல், தன்னுடைய புத்திரியைக் கல்யாணஞ் செய்தும் வைப்பதாகப் பெருமூச்சோடு சொன்னான். கம்பர் கவிச்சக்கரவர்த்தியாய் விட்டார். அவருடைய ஆனந்தக் கூத்துக்கு அளவில்லை. அம்பிகாபதிக்கு அதற்குமேலே. இந்தச் சம்பவங்களையெல்லாம் திரை மறைவிலே கேட்டுக்கொண்டிருந்த அரசிளங்குமரிக்கு ஆகந்தம் அணைகடந்து விட்டது. 

அம்பிகாபதி பாடுகிறான். அவளுடையகாதல் திரையைப்பீறிப் பாய்கிறது. அவள் விரல்மடித்தெண்ணுகிறாள். அவன் மிகு வேகமாகப்பாடுகிறான். அவள் அதில்வேகமாக எண்ணுகிறாள். அந்தோ விதியே! ஒரு எண் தவறிவிட்டது. காதலுக்குக் கண்மாத்திரமா கணக்குமில்லை. அவள் அவனை முந்திவிட்டாள். அவன் தொண்ணூற்றொன்பது பாட்டுப் பாடி முடித்தான். அவள் நூறுஎன்று எண்ணி முடித்தாள். அவளுக்கு அப்பால் எண்ணுகிற வேலை இல்லை. அவளைக் காதல் விழுங்கிவிட்டது. அவள் தன்னை அறியாமலே எழுந்து சற்றே தலையை நிமிர்த்தி அவனை எட்டிப்பார்த்தாள்.

அவளுடைய முகம், கவிதாலோகத்தை ஊடுருவிச் செல்லுகின்ற அவனுடைய கெம்பீரமான பார்வைக்கெதிர்ப்பட்டது. நடந்த பழைய சம்பவங்களை எப்படி ஞாபகஞ்செய்ய முடியும்? அவனுடைய நிலை தன்னை மறந்த நிலை. யோகநிலை. கவிதாயோகம். அவளுடைய முகச்சாயல், அவனுடைய இருதயமாகிய தூய பளிங்கில் அப்படியே படிந்தது. அது, அவன் வாயினின்றும் 'சற்றே' என்று தொடங்கி, “தலையலங்காரம் புறப் பட்டதே” என்று முடிந்த ஒரு பாட்டாகப் பிரதிவிம் பித்தது. இதுதான் நூறாம்பாட்டு.

கத்திமுனையிலும், கம்பருடைய மகன் கம்பருடைய மகனாகவேயிருந்தான்.

ஒருநாள் நல்ல மத்தியானம் கும்பகோணத்திலே ஒருசத்திரத்திலே காளமேகப்புலவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கெதிரில், ஒரு முன் குடுமி வைத்த பிராமணன் -சோழதேசத்தவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை- சாதத்தோடு யுத்தஞ் செய்து கொண்டிருந்தான். பரிசாரகர்கள் சாதம் படைத்தபடியே நின்றார்கள். அவன் சாப்பிட்ட படியே இருந்தான். அந்த மகாயுத்தத்தில் அவனுடைய முன் குடுமி அவிழ்ந்து, சாதத்தில் வீழ்ந்து மூடிக் கொண்டது. அவன் இடது கையால் குலைந்த குடுமியை உதறினபடியே யுத்தத்தையும் நடாத்தினன். எதிரில் சாப்பிட்டுக்கொண்டிருந்த காளமேகப் புலவரின் சாதத்தில் எச்சிற்சாதந்தாராளமாகத் தெறித்தது.

காளமேகம் இருண்டது.புலவர் உருத்திரமூர்த்தியின் அவதாரம் எடுத்தார். 

"சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் 

பொருக்குலைந்த வாயா புலையா -திருக்குடந்தைக் 

கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி 

போட்டாளே..............”

என்ற பாசுரம் பாய்ந்தது. 

கடும்பசி வேளையில், கடுங்கோப நேரத்திலுங் காளமேகம் காளமேகமாகவேயிருந்தது. 

" கம்பர் கதைசொல்லுதல் முதலிய விஷயத்திற் குற்றமில்லை. பாதாதிகேச வர்ணனை, நாட்டுவர்ணனை, கோபுரவர்ணனை, மதில்வர்ணனை, இவைகளல்லவா காவியங்களைச் சிறப்பிப்பன. இந்த விஷயங்களில் எங்களுக்குங் கம்பருக்கு மென்ன வித்தியாசம் " என்று சோழ மகாராஜாவின் சமஸ்தானப் புலவர்கள் கம்பரில்லாத ஒரு சமயத்திற் பேசிக்கொண்டார்கள். இதனையறிந்த சோழ மகாராஜா புலவர்களனைவரையும் தத்தங்காவியங்களுடன் சமஸ்தானத்துக்கு வருமாறு ஒருநாள் கட்டளையிட்டார். அக்கட்டளைப்படி புலவர்களெல்லாரும் தாந்தாம் பாடிய காவியங்களுடன் வந்து சேர்ந்தார்கள். கம்பரும் வந்து சேர்ந்தார்.

சோழமகாராஜா புலவர்களை விளித்து, உங்கள் காவியங்களில் சிறந்த பகுதிகளை- காவியங்களைக் காவியங்களாக வைத்திருப்பனவற்றை இவையென்று வரையறுத்துச் சொல்லவேண்டுமென்று ஒரு கேள்வி கேட்டார். புலவர்களுக்குத் தலை கால் தெரியவில்லை. அளவில்லாத சந்தோஷம். விடை முன்னமே ஆயத்தமான வினா வருமானால் எவர்கள் எந்தப் பரீட்சைதான் எடுக்கமாட்டார்கள். இறுதியிலிருந்த- ஒரு காலத்தும் எழுந்து பேசியறியாத ஒரு புலவர் திடீரென்றெழுந்து “பாதாதிகேசவர்ணனை, அகழிவர்ணனை...................” என்று ஒரு பெரிய ஆவலியை மூச்சுவிடாமற் படித்தார். சோழமகாராஜா கையையமைத்து அவரை இருத்தி விட்டு “புலவரவர்கள் கூறிய வர்ணனைகளுள் முதலிலுள்ள பாதாதிகேச வர்ணனையை எடுத்துக்கொள்ளுவோம் ; அதில் உங்களுக்குக் கைவந்த அவயவங்களைப் பற்றிய வர்ணனைகளை, உங்கள் காவியங்களில் எடுத்துக் காட்டி வியாக்கியானஞ் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்.

சோழமகாராஜா வாய் மூடமுன் ஒட்டக்கூத்தர் எழுந்தார். இப்படியான சந்தர்ப்பங்களிலே தான் ஒட்டக்கூத்தர் மகாப்புலவர் “தாம் பிந்தியிருந்தால் தாங் கருதியிருந்த அவயவ வர்ணனையை மற்றவர்கள் ஆளவுங்கூடும் ' என்ற கள்ளக்கருத்து ஏற்ற காலத்தில் ஒட்டக்கூத்தருக் குதபமானது. அவர் தமது காவியத்தில் பெண்களின் அவயவம் ஒன்றுக்கு முந்நூறு உபமானங் காட்டி வருணித்த வாணனையொன்றைப் படித்துக் காட்டி வியாக்கியானஞ் செய்தார். அப்பால் மற்றொரு புலவர் பல்லுக்குப் பதினாறு உபமானங் காட்டினர். வேறொருவர் மூக்குக்கு முப்பத்திரண்டு உபமானஞ் சொன்னார். இப்படியே புலவர்களெல்லாரும் மநநப் பிரசங்கஞ்செய்து முடித்த பிள்ளைகள்போல், தத்தம் வர்ணனைகளைப் படித்து வியாக்கியானஞ் செய்து முடித்துவிட்டு அப்பால் ஒன்றும் பேசாமல் அமைதியாகவிருந்தார்கள். புலவர்களின் வர்ணனைகளைப்பற்றி- வியாக்கியானங்களைப்பற்றி விரித்துக்காட்ட  இவ் விணையப்பகுதியில் இடம் போதாது. 

இது நிற்க, இந்தச் சமாஜத்தைப்பற்றி ஒளவையாருக்கும், புகழேந்திக்கும் ஒன்றுமே தெரியாது. அவர்கள் மிகவும் பிந்தித்தான் வந்தார்கள். அப்பொழுதுதான் கம்பர் எழுந்தார். அதற்கிடையில் “ஒரு வார்த்தை” என்று சொல்லிக்கொண்டு ஒட்டக்கூத்தர் குறுக்கிட்டார். சபையிலே ஒரு பெரிய அமைதி உண்டானது. 

“பெண்களின் அவயவ வர்ணனைகளைப்பற்றிக் கேட்டுக் கேட்டுச் சபையிலுள்ளவர்கள் அலுத்துப்போனார்கள். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். கம்பர் கவிச்சக்கரவர்த்தியாயிருக்கின்றாரே. அவர் ஆண்பாலாரின் அவயவத்தைவர்ணித்திருந்தால் அதைப் படித்து வியாக்கியானஞ் செய்வதே நன்று. பெண் பாலாரின் அவயவ வர்ணனை - அவர்களுள்ளுஞ் சீதா பிராட்டியின் அவயவ வர்ணனை வேண்டவே வேண்டாம். அதுதான் எல்லாருமறிந்தது. ஆண்பாலாருள்ளும் ஸ்ரீராமனுடைய முகம், கை, கால், தோள் இவற்றைப் பற்றிய வர்ணனையானால் வேணாம், வேணாம். அவற்றைப்பற்றிய வர்ணனைகளை ஆழ்வார்களின் பாசுரங்களிற்கேட்டுக் கேட்டுக் காதடைத்துவிட்டது. ஸ்ரீராமனுடைய மார்பு, முழந்தாட்பொருத்து, மூக்குத்துவாரம், இரைக்குழல், சிறுகுடல் இவற்றைப்பற்றிய வர்ணனையானாலாகட்டும் இனி வருங்காலத்துக்கேற்றது. சுகாதார சம்பந்தமானது” என்று தமது சிற்றுரையை ஒருவாறு முடித்தார். சபையிற்பெருங்கூச்சல். ஆம்! ஆம் !! என்று கையுயர்த்தி அநுவதித்தார்கள் புலவர்கள். சோழமகாராஜ “கொண்ட கோலத்தை........” என்ற பழமொழியை மனசில் நினைத்துக்கொண்டு மெளனஞ் சாதித்தார். 

புலவர்களினாரவார மடங்கின பின்பு கம்பர் புன் சிரிப்போடு சபையிலுள்ளவர்களை நோக்கி “ஒட்டக் கூத்தர் அவர்கள் கூறியது முற்றிலுஞ் சரியே. அவர்கள் எடுத்துக்காட்டிய விஷயங்களுள், முதலிலுள்ள ஸ்ரீராமனுடைய மார்பைப்பற்றிய வர்ணனையைப்படித்து வியாக்கியானஞ் செய்கின்றேன்” என்று சொல்லி இராமாயணத்திலே உருக்காட்டு படலத்தில் சீதாபிராட்டிக்கு அநுமான் கூறியதாயுள்ள ஸ்ரீராமனுடைய மார்பைப்பற்றிய வர்ணனைப் பாட்டைப் படிக்கவாரம்பித்தார். 

“பொருவரு மரகதப் பொலங்கொண் மால்வரை

வெருவுற விரிந்துயர் விலங்க லாகத்தைப் 

பிரிவற நோற்றன் ளென்னிற்பின்னையத்” 

என்ற மூன்றடியையும் படித்துவிட்டார். நான்காமடி தொடங்குமுன், சபையிலே பெரிய கூக்குரல் உண்டாய் விட்டது. கம்பர் ஒருவித சலனமுமின்றி நிறைகுடம் போல அமைதியாக நின்றார். 

இதுதானே பழைய பல்லவி என்றார் ஒரு புலவர். “திருவுறை மார்பினைச் செப்பவேண்டுமோ” என்று நான்கா மடியையும் முடித்துவிடுகிறதுதானே என்றார் மற்றொரு புலவர்.

“பாவமோர் கோடி புரியினு மொன்றாம் 

பரிவினிற் றருமமொன் றியற்றி 

னேவரும் வியப்பக் கோடியாய் மல்கு 

மின்னதோர் பெற்றியை நாடித் 

தேவர்கண் முனிவர் தம்பதம் வெறுத்துச் 

சிவனருச் சனைபுரிந் தங்கண் 

மேவினர் தவஞ்செய் திருத்தலாற் காஞ்சி 

வியனகர்ப் பெருமையார் விரிப்பார்." 

என்ற பாட்டைப் படித்து- இறுதியடியின் இறுதிப் பாகத்தை இரண்டாம் முறையும் படித்து இப்படித்தானே கந்தபுராணத்திற் கச்சியப்பரும் பாடியிருக்கிறார் என்றார் வேறொரு ஆராய்ச்சிப் புலவர். என்ன புதுக்கு கரியஞ் செய்துபோட்டார்- நாலுபத்து உபமானம் சொல்லியிருக்கிறாரா என்றார் உவமைப்புலவர். ஆடாமல் அசையாமல் நல்லபிள்ளைக்கிருந்தார் ஒட்டக்கூத்தப் புலவர்.

கம்பர், புலவர்களாரவாரஞ் செய்தபடியாலோ, வேறெக் காரணத்தினாலோ நான்காமடியையே படித்துக்காட்டாமல் முதன் மூன்றடிக்கும் வியாக்கியானந் தொடங்கினார். உரையாசிரியர் ஒருவரும் ஏதோ ஒரு விதமாக அந்தச் சபையில் நுழைந்துவிட்டார். அவர் “வேண்டாம்! உரை வேண்டாம்! வெளிப்படை ! ஒப்பில்லாத அழகிய பெரிய மரகதமலை யஞ்சும்படி யகன் றுயர்ந்ததும், மலைபோல அசைவில்லாததுமான ஸ்ரீராமனுடைய மார்பைப் பிரியாமல் எப்பொழுதும் வாழும்படி (இலக்குமி) தவஞ்செய்தாளேயானால் என்பதுதானே உரை; “பின்னையத்” என்பதை அடுத்த அடியோடு சேர்த்துக்கொள்ளுவோம்” என்றார். சபை யிலுள்ளவர்களும் ஆம்! ஆம்! உரை வெளிப்படை; புதுமையொன்றுமில்லை. அடுத்த அடி வரட்டும்' என்றார்கள். 

கம்பர் சிறிதுநேரம் மெளனமாக அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்கள் தங்கள் கண்களாகிய பாணங்களை அவருடைய வாய்க்குட் செலுத்தினார்கள். அவர் மிக ஆறுதலாக, “திருவினிற்றிருவுளார் யாவர் தெய்வமே” என்ற நான்காமடியை வெளியிட்டார். 

சோழமகாராஜா சிங்காசனத்தினின்றும் குதித்துக் கம்பரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். ஒளவைக் கிழவி இருந்தவிருக்கையிற் குடுகுடுத்தாள். புகழேந்திப்புலவர் அந்த அடிக்குத் தாம் வியாக்கியானஞ்செய்வதாக எழுந்துநின்றார். ஒட்டக்கூத்தர் தலையைத் தூங்கப் போட்டுவிட்டார். மற்றைப் புலவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அங்கேயிருந்த உரையாசிரியர் கண்டறியாததைக் கண்டு களிக்கூத்தாடினா. சோழ மகாராஜாவின் வேண்டுகோளின்படி கம்பர் சிங்காசனத்தில் எழுந்தருளினார். எல்லாருங் கம்பரையும் புகழேந்தியையும் மாறிமாறிப் பார்த்தார்கள். 

“ஸ்ரீராமனுடைய மார்பைப் பிரியாமல் இருக்குமாறு இலக்குமி தவஞ்செய்தாளேயானால்” என்ற பொருளைச் சாதாரண கவிகள் எடுத்துக்கொண்டால், இச்சபையிலுள்ள ஒரு புலவர் திருவுறை மார்பினைச் செப்பவேண்டுமோ' என்று நான்காமடியை முடித்துக் காட்டியவாறுபோல, ஸ்ரீராமனுடைய மார்பின் பெருமையைச் சொல்லவும்வேண்டுமா' என்றுதான் பின்னடியிற் பொருளை முடிப்பார்கள். கம்பர் சாதாரண கவிகளின் வருக்கத்தைச் சேராதவர். இப்படியான சந்தர்ப்பங்களிலேதான், கம்பரையும் சாதாரண கவிகளையும் பிரித்தறிகின்றோம். 

கம்பர் முதலில் எடுத்துக்கொண்ட பொருளை நோக்கினால், சாதாரணகவிகள் செல்லுகிற வழியிற் செல்லுவதாகவே தோன்றுகின்றது. ஆனால், இங்கே காட்டிய 'பொருவரும்' என்ற செய்யுளின் நான்காமடியின் பொருளை நோக்கினால், அவர் தம்மைப் பின்றொடர்ந்து வந்த கவிகளையெல்லாம் ஏமாற்றிவிட்டு, முன் ஒருகாலும் ஒருவரும் போயறியாத புதுவழியிற்றிரும்பி, “தாம் புலவர்” என்ற பிறவிக்குணத்தைக் காட்டிச்செல்லுவது நன்கு தெரிகின்றது. 

சாதாரண கவிகள் எல்லாம் “மார்பின் பெருமை யைத்தான் நான்காமடியிற்சொல்லுவார் சொல்லுவார்” என்று தொடர்ந்தர்கள் கம்பருக்கோ சொந்தமான  குணம் உண்டாய்விட்டது. 'மகாலக்குமி ஸ்ரீ ராமனு டைய மார்பைப் பிரியாமலிருக்குமாறு தவஞ்செய்தால்' மகாலக்குமிக்குப் பெருமையா ? ஸ்ரீராமனுடைய மார்புக்குப் பெருமையா? என்ற வினாக்கள் கம்பருடைய இருதயத்தில் எழுந்து போராடின. 

ஸ்ரீராமனுடைய மார்புக்குப் பெருமையென்று சொல்லுவதுதான் அந்தப் பாழான பழம்வழி. கழுதை மயிரைப் பிடுங்கிக் காதிலே வைத்தவர்கள் சென்ற வழி. 

“மகாலக்குமிக்குப் பெருமை” என்று சொல்வது தான் கவிச்சக்கரவர்த்திகள் செல்லும் மார்க்கம். கம்பர் கண்ட நெறி. 

மகாலக்குமி ஸ்ரீராமனுடைய “ஆகத்தைப் பிரிவற நோற்றனள்” என்னில் அவள் மகா பாக்கியசாலி தான். அவளிலும் பார்க்கப் பாக்கியசாலிகள் இருக்க முடியாது' என்ற பொருள்போதர “அத்திருவினில் திருவுளார் யாவர்” என்று கூறப்பட்டது. மகாலக்குமிக்கு இதைவிட மகா பாக்கியம் முன் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லையாதலின் 'பின்னை' என்ற அடை கொடுக்கப்பட்டது. “தெய்வமே” என்பது விளிப் பெயர் அநுமான் சீதாபிராட்டியை விளித்தது. 

எடுத்துக்கொண்ட பொருள் ஸ்ரீராமனுடைய மார்பின் பெருமை- முடித்துக்கொண்ட பொருள் மகாலக்குமியின் பெருமை. இங்ஙனமாக முன்னொடு பின் முரணிற்கும் பிறவெனின், அறியாது கடாயினாய் ; எடுத்துக்கொண்ட பொருளில் முடிக்காது மற்றொரு பொருளில் முடித்தமையால், எடுத்துக் கொண்ட பொருளுக்கு வரக்கடவ பெருமைகளினாலும், அநந்தமடங்கு பெருமைகளுளவாமென்பது. என்னை ? ஸ்ரீராமனுடைய மார்பை விரும்பியதனால், மகாலக்குமிக்குப் பெருமை வருமாயின், அவனுடைய மார்பின் பெருமை அளவிடலாகா தென்பது ' என்று இங்ஙனம் வியாக்கியானஞ்செய்தார் புகழேந்திப்புலவர்.

இறுதியில், ஒளவையார் எழுந்து, 'புகழேந்திப் புலவர் அவர்கள் நடுநிலை பிறழாதவர்கள் ; அன்றி இச்சமாசத்திலும் தொடர்பு வைத்திருக்கின்றார்கள். 

தம் புலமையைக் காட்டுதற்கேலாத- பழம் புலவர்களெல்லாம் எடுத்தான்ட-பலரும் பலகாலும் பயின்ற பழைய விஷயத்திலுங்கூடக் கம்பர் கம்பராகவேயிருந்தார். 

எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் கவிகள் கவிகளாகவேயிருக்கின்றார்கள்.

Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு