சோழர்காலப் பெருங்காப்பியங்கள்
சோழர்காலப் பெருங்காப்பியங்கள்
தமிழ்நாடு இராசராசன் இராசேந்திரன் முதலிய பேரரசர் ஆட்சியிற் பகை, பிணி முதலிய துன்பங்களின்றிச் செல்வத்திற் செழித்தது. கங்கைநாடு, மண்ணைக்கடக்கம், இலக்கதீவு, முரட்டெழில், ஈழம், கடாரம் முதலிய பிறநாடுகளுஞ் சோழர் ஆட்சிக்குட்பட்டன. சோழநாட்டிற் பல்கலைகளும் வளர்வதற்குரிய சூழல் அமைந்தது. நடனம், இசை, சிற்பம் ஒவியம் முதலிய நுண்கலைகளிலே மன்னரும் மக்களும் ஈடுபட்டனர். அவ்விருதிறத்தாருஞ் சமயத்தைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள் அதனையும் வாழ்வின் இன்றியமையாத கூறெனக் கருதினார்கள். அக்காலத்து மக்கள் மன்னனைக் கடவுளென மதித்தனர். மன்னர் கோயில்களுக்கு அளித்தபொருள்கள் “தேவராசா” (கடவுள் - மன்னன்) என வழங்கப்பட்டன. நாம் அவ்வழக்கில் மன்னன் கடவுள் அமிசம்பெற்ற தன்மையைக் காண்கிறோம். அக்காலத்து மன்னர்கள் நலங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய தூய தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து இராசேந்திரன், குலோத்துங்கன் முதலிய வடமொழிப் பெயர்களை விரும்பினார்கள். சோழப் பெரு மன்னரவையிலே தமிழ்ப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் ஒருங்கே வீற்றிருந்து தமிழிலும் வடமொழியிலும் பரணிகளையும் பிரசத்தி காப்பியங்களையும் பாடினர். தமிழ்ப்புலவர்கள் வடமொழிபால் வெறுப்புக்கொள்ளாது அதனை விரும்பிக் கற்றனர். அவர்கள் வடமொழியிலுள்ள இலக்கண இலக்கியங்களைக்கற்று அவற்றிலுள்ள சிறப்பான இயல்புகளைத் தமிழிற் புகுத்தவிழைந்தனர். இதன் பயனாகச் சோழர்காலத்திலே தமிழ் இலக்கியம் வடமொழி மரபினைத் தழுவிப் புதியதொரு வழியிற் செல்லலாயிற்று.
மக்களின் பண்பாடு உயர்நிலையடைகிற பொழுது அவர்களது மொழியில் உயர்ந்த இலக்கியங்கள் எழுமென்பதற்குச் சோழர்காலத்துப் பெருங்காப்பியங்கள் சான்றாகின்றன. சிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய பேரிலக்கியங்கள் மன்னரின் வாழ்க்கையினைப் பெருங்காப்பிய முறையிற் சித்திரிக்கின்றன. சோழர் காலத்துப் பெருங்காப்பியங்கள் சில சிறப்பியல்புகளைக் கொண்டன. அவை யாவும் வடமொழி விருத்தப் பாவினடியாகப் பிறந்த தமிழ் விருத்தத்தினால் இயற்றப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் சமயத்தினைச் சிறப்பித்துக் கூறுகின்றன. அவற்றுள்ளே பெரியபுராணம் ஒழிந்த ஏனைய நூல்கள் வடமொழிக் கதைகளைத் தழுவி யெழுந்தவை. அவற்றுட் பெரும்பாலானவை வடமொழியிலே தண்டியியற்றிய காவியாதரிசத்திற் கூறப்பட்டிருக்கும் பெருங்காப்பிய இலக்கணங்களுக்கு அமைய இயற்றப்பட்டிருக்கின்றன.
காப்பியம் என்பது வடமொழிச் சொல்லாகிய “காவ்ய”என்பதின் தமிழாக்கமாகும். தண்டியின் காவியாதரிசத்தினைத் தழுவித் தமிழிலே தண்டியாசிரியர் ஓர் அணிநூலினைச் சோழர் காலத்தில் எழுதினார். அவர் பெருங்காப்பியத்தின் இலக்கணங்களை வருமாறு கூ.றுகிறார்:
“பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகட னாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம்
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப”
தண்டியலங்காரம், 8
பெருங்காப்பியமானது வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகிய மூன்றனுள் ஒன்றினைப் பெற்றதாயும் பாயிரத்தோடு வருவதாயும் அமைதல் வேண்டும். அதன் தலைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகச் சிறந்து விளங்குதல் வேண்டும். தலைவன் அறம், பொருள், இன்பம், வீடாகிய நான்கு பொருளினையும் அடைவதாகக் கூறுதல் வேண்டும். மலை, கடல், நாடு, நகர் முதலிய இயற்கை வருணனைகளிலும் வைகறை, விடியல், நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் முதலிய சிறுபொழுதுகளிலும் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் முதலிய பெரும்பொழுதுகளிலும் ஞாயிறு, திங்களின் தோற்ற முதலிய வருணனைகளிலும் பெரும்பாலன அதில் இடம்பெறும். மணஞ்செய்தல், முடிசூடுதல்,சோலையில் இன்புறுதல், புனல்விளையாடல், மதுவுண்டு இன்புறுதல், புதல்வரைப் பெறுதல், கூடல், ஊடல் முதலிய நிகழ்ச்சிகளுங் காப்பியத்திற் கூறப்படும். அதிலே மந்திராலோசனை, தூதுசெல்லுதல், போருக்குச் செல்லல், போர்தொடுத்தல், வெற்றி முதலியனவுந் தொடர்ச்சியாகக் கூறப்படுதல் வேண்டும். இவையாவுஞ் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற உட்பிரிவுகளுள் ஒன்றினைப் பெறுதல் வேண்டும். காப்பியமானது மெய்ப்பாட்டுக்குறிப்பினையும் வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை ஆகிய எண்வகைச் சுவைகளையும் பெற்றுச் சான்றோரினாற் புனையப்பட்டு விளங்கும்.
சோழர் காலத்திலே முதன்முதல் எழுதப்பட்ட பெருங்காப்பியஞ் சீவகசிந்தாமணியாகும். இந்நூலைத் திருத்தக்கதேவர் என்னுஞ் சமணர் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இயற்றினார் என்பர். நாம் சோழர் காலச் சமயநிலையினை நோக்கின் அக்காலத்திலே சமணசமயம் பெளத்தத்தைவிடச் சிறப்புப்பெற்றதெனப் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியியற்றிய “சோழர்'' என்னும் வரலாற்று நூல் வாயிலாக அறியலாம். இராசராசனின் தமக்கையாகிய குந்தவையார் இராசராசபுரத்திலுந் திருமழபாடியிலுஞ் சமணப்பள்ளிகளைக் கட்டுவித்து அவற்றின் பரிபாலனத்திற்குப் பொருட்கொடையுஞ் செய்தார். இராசராசன் தென்னார்க்காட்டுத் திருநறுங்கொன்றை என்ற இடத்திலுள்ள பெரிய பள்ளியில் இரு விளக்குக்கள் நாடோறும் ஏற்றிவருமாறு நிலக்கொடை. செய்தான். ௪மணப்பள்ளியைக் கொண்ட இடம் “பள்ளிச்சந்தம்'' என வழங்கியது. சோழர்காலத்திற் பள்ளிச் சந்தங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. சிற்றாமூர், செங்கற்பட்டு, திருப்பாண்மலை, விளாப்பாக்கம் முதலிய இடங்களிலே சமணப்பள்ளிகள் சோழப்பேரரசர் ஆதரவுடன் சமயப்பணிபுரிந்தன. கி.பி. 885-ஆம் ஆண்டளவிலே பெரிய சமணப்பள்ளியொன்றில் வாழ்ந்த பெண் துறவிக்கும் அவளின் ஐந்நூறு மாணாக்கர்களுக்குமிடையே ஏதோ கலகம் விளைந்ததெனக் ௯றப்படுவதிலிருந்து இக்காலத்துச் சமணரின் தொகையினையுஞ் செல்வாக்கினையும் நாம் ஓரளவு கணிக்கலாம். இச்சூழலிற்றான் சீவகசிந்தாமணி என்னுஞ் சமணப் பேரிலக்கியம் எழுந்தது.
வடமொழியிலே தண்டி யியற்றிய காவ்யாதரிசத்தினைத் திருத்தக்கதேவர் முதலிய சோழர்காலப் புலவர்கள் கற்றனர். காவ்யாதரிசத்திலுள்ள காவிய இலக்கணங்களாகிய பொன்முடி கவித்தல், மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி முதலியன மன்னர்க்கே பொருந்துவதை அறிந்து அவற்றைக் கைக்கொண்ட மன்னர்பற்றிய காப்பியங்களை யியற்றினர். சீவகசிந்தாமணியாசிரியர் வடமொழியில் வாதீபசிம்மன் எழுதிய சுதந்திர சூடாமணியையுங் கத்தியசிந்தாமணியையுங் தழுவிச் சீவகசிந்தாமணியை யியற்றினார் என்பர் வடமொழியிலுள்ள சீவந்திரநாடகம், சிறீபுராணம் முதலியனவும் இவர்க்கு உதவின என்பர். சிந்தாமணியின் தலைவனாகிய சீவகன் ஏமாங்கதநாட்டு மன்னனாகிய சச்சந்தனுக்கும் விசயை என்ற அவன் பட்டத்தரசிக்கும் பிறந்தான். சீவகன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மணந்து சிறப்புடன் வாழ்ந்து வந்தான். தன் தந்தையை வஞ்சித்து நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைப் போரில் வென்று நாட்டை மீட்டான். ஒருநாள் அவன் சோலையில் உலாவச் சென்றான். அங்கு கடுவன் ஒன்று இனிய பலாச்சுளையினை மந்திக்கு ஊட்டும்பொழுது காவற்காரனால் விரட்டப்படுங் காட்சியினைக் கண்டு வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்தான். இதன் பயனாகச் சீவகன் அரச பதவியினைத் தன் மகன்பால் ஒப்படைத்துவிட்டுத் துறவுகொண்டான். இக்கதையினைத் திருத்தக்கதேவர் பெருங்காப்பிய இலக்கணங்களுக்குப் பொருந்தத் தக்கதாகப் பாடினார். கடவுள் வாழ்த்துடன் நூலைத் தொடங்கினார். அப்பகுதியிற்சித்தனையும் அருகக் கடவுளையுஞ் சாதுக்களையுந் தருமத்தையும் வணங்கினார். பதிகம் என்னும் பிரிவிலே நூலின் வருபொருளினை உரைத்தார். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றினைப் பன்னிரண்டு இலம்பகங்களிற் கூறினார். வீட்டினைச் சிறப்பித்து முத்தியிலம்பகத்திற் கூறினார். சீவகன் தன்னிகரில்லாத் தலைவன் என்பதற்கு அவன், குணமாலை நீராடிவிட்டு வந்தபொழுது அசனிவேகமென்னும் யானை மதங்கொண்டு அவளைக் கொல்லவர அதனை அடர்த்து அவளைக் காப்பாற்றியதும், இசைப் போர் நிகழ்த்திக் காந்தருவதத்தையை மணந்ததும், திரிபன்றி இயந்திரத்தை அம்பினால் எய்து வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெற்று இலக்கணையை மணந்ததும், கட்டியங்காரனைப் போரிலே வென்றதுஞ் சான்றுகளாகும். ஏமாங்கத நாட்டுவர்ணனையும் நகர்வர்ணனையும் மிகவும் விரிவாகச் சித்திரிக்கப்பட்டன. சீவகன் காந்தருவதத்தை முதலாயினோரை மணமுடித்தல், பொழினுகர்தல், சச்சந்தன், சுதஞ்சணன் முதலாய புதல்வரைப் பெறுதல் முதலியனவுங் கட்டியங்காரனைக் கொன்று அரசுரிமை பெறுவதாலே மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி, முதலியனவும் நூலிலிடம் பெறுகின்றன. நாமகளிலம்பகம், கோவிந்தையாரிலம்பகம், காந்தருவதத்தையாரிலம்பகம், குணமாலையாரிலம்பகம், பதுமையாரிலம்பகம், கேமசரியாரிலம்பகம், கனகமாலையாரிலம்பகம், விமலையாரிலம்பகம், சுரமஞ்சரியாரிலம்பகம், மண்மகளிலம்பகம், பூமகளிலம்பகம், இலக்கணையாரிலம்பகம், முத்தியிலம்பகம் ஆகிய பதின்மூன்று இலம்பகங்களைச் சிந்தாமணி கொண்டது. இந்நூலிலேயே “இலம்பகம்'' என்ற சொல் “இயல்” என்னும் பொருளில் வழங்குகிறது. நூலின் பகுதிகள் பலவற்றிலும் எண்வகைச் சுவையினையும் மெய்ப்பாட்டினையும் நாம் காணலாம்.
சிந்தாமணி வடமொழிக் காப்பிய மரபினைத் தழுவித் தமிழில் எழுந்தமையால் வடமொழியணிகள் பெருந்தொகையாக அதனிற் காணப்படுகின்றன.
பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்
நற்சிறா ரூர்தலின் நங்கை மார்விரீஇ
உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை
மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே
நாமகளிலம்பகம், 60
ஏமாங்கதநாட்டு மகளிர் நெல்லை உண்ணவருங் கோழிகளை விரட்டத் தம்முடைய விலையுயர்ந்த காதணிகளைக் கழற்றி யெறிவார்களென்றும் அவை சிறுவர் உருட்டுந்தேர்ச்சில்லுகள் உருளாவண்ணந் தடைசெய்வனவென்றுங் கற்பனை செய்தார்.
“வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும்
உயர்ச்சி புனைந்துரைப்ப துதார்த்தமாகும்”
என்ற தண்டியலங்காரச் சூத்திரத்திற் கிணங்கத் திருத்தக்கதேவர் ஏமாங்கதநாட்டினரின் செல்வநிலையைப் பாடுவதற்கு ஒரு செல்வமிகுதியணியினை இப்பாட்டிற் கையாண்டார். திருத்தக்கதேவரின் கற்பனை பழையதொன்றாகும்.
“நேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”
பட்டினப்பாலை, 23-25
என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையிற் பாடினார்.
மேலும் பட்டினப்பாலையாசிரியரிர்
“மாமலை யணைந்த கொண்மூப் போலவுந்
தாய்முலை தழுவிய குழவி போலவும்'' (95-96)
என்ற உவமைகளைத் திருத்தக்கதேவர் பயன்படுத்தினார்.
“தாய்முலை தழுவிய குழவி போலவும்
மாமலை தழுவிய மஞ்சு போலவும்”
நாமகளிலம்பகம். 71
சிற்சிலவிடங்களிலே திருத்தக்கதேவரின் கதையுங் கற்பனையும் பழையன வெனிலும் அவர் அவற்றிற்குப் புது மெருகூட்டினார். சோழர்காலப் புலவர் யாவரும் பழைய கதையினையுஞ் சிற்சில விடங்களிற் பழைய கற்பனையையும் பயன்படுத்திய பொழுதிலும் அவர் அவற்றினைத் தத்தம் பேரிலக்கியங்களிற் பயன்படுத்தும் வகையிலே தனித்தன்மை பெற்று விளங்கினர்.
திருத்தக்கதேவர் முதலிய சோழர்காலப் புலவர் கையாண்ட அணிகள் பெரும்பாலுஞ் செய்யுளுக்கு அலங்காரமாகவே விளங்குகின்றன. சங்ககாலத்திற் புலவர்கள் உண்மையணியையே பெரிதுங் கையாண்டார்கள். அக்காலப் புலவர்கள் கையாண்ட உவமைகள் சொற்சுருக்கமாகவும் பொருட் பெருக்கமாகவும் இலங்குகின்றன. பல அடிகள் கொண்ட பாடலொன்றினுள் ஒரு சிறிய சொற்றொடர் உவமையாக வரும். அச்சொற்றொடர் அப்பாட்டின் பொருளிற்குப் பெரும்பாலும் மையமாக விளங்கி அதன் பொருளை எளிதில் விளங்க உதவுகிறது. சங்ககாலப் புலவர்கள் புலனல்லாத பொருளினைப் புலனாக்குவதற்கே உவமையினைக் கையாண்டார்கள். அறியாத ஒரு பொருளினை அறிந்த ஒரு பொருளினால் விளக்கினர். “ஓரேர் உழவன்போல, கல்லிலொரு சிறுநுரைபோல, செம்புலப்பெயல்நீர் போல, சிறுகோட்டுப் பெரும் பழந்தூங்கியாங்கு'' முதலிய எடுத்துக்காட்டுகள் இவ்வுண்மையினை வலியுறுத்தும். திருத்தக்கதேவர் மலையின் அருவிகளை வருமாறு உவமித்தார்:
“இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல்
விலங்கி வீழ்ந்தமுத தாரமும் போன்றவை
நலங்கொள் பொன்னொடு நன் மணி சிந்தலாற்
கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே”
நாம. இல. 6
அருவிகள் வீழ்வது இந்திரன் மார்பின்மேல் வீழ்ந்த முத்துவடத்தினை ஒத்தனவென்றும் அவ்வருவிகள் பொன்னையும் மணியையுஞ் சிந்துதலால் அவனின் ஆபரணப்பேழை கவிந்து அதிலிருந்து நீங்கிய ஆபரணங்களையும் ஒத்தனவென்றுந் திருத்தக்கதேவர் கற்பனை செய்தார். அறிந்த சாட்சியாகிய அருவியோட்டத்தினைக் கண்ணாற்காணமுடியாத இந்திரனின் மார்பிலுள்ள முத்தாரத்திற்கு ஒப்பிட்டார். இவ்வுவமை வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுந்தது அன்று.
விருத்தயாப்பு, முன்னர்க் காரைக்காலம்மையாராலே முதன்முதலிற் பத்திநெறியினைப் புலப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. அவரைப் பின்பற்றிச் சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வாருந் தந் தேவாரத்திருப்பாசுரங்களையும் பிரபந்தங்களையும் அவ்யாப்பிற் பாடினர். அதனைப் பெருங்காப்பியம் பாடுவதற்கு முதன்முதலிற் பயன்படுத்திய பெருமை சீவகசிந்தாமணியாசிரியர்க்கே யுரியது. வல்லான் வகுத்த வழியிற் செல்வது மரபாகையாலே திருத்தக்கதேவருக்குப் பின்வாழ்ந்த கம்பர், சேக்கிழார், கச்சியப்பர் முதலியோருந் தத்தங்காப்பியங்களை விருத்த யாப்பில் அமைத்தனர்.
எனவே, வடமொழி மரபைப் பின்பற்றியதிலும் விருத்தயாப்பிற் பெருங்காப்பியம் பாடியதிலும் வடமொழியணிகளைக் கணக்கின்றிக் கையாண்டதிலுஞ் சீவகசிந்தாமணியாசிரியர் ஒரு புது மரபினைத் தமிழ் இலக்கியத்திற் றொடக்கிவைத்தாரெனலாம்.
சோழர்காலத்திலே திருத்தக்கதேவரை யடுத்துக் கம்பர், இராமாயணத்தினை யியற்றினார். வால்மீகி வடமொழியில் இயற்றிய இராமாயணத்தினை முதனூலாகக் கொண்டு கம்பர் பெருங்காப்பியத்தினை யியற்றினார். ஆனால், வால்மீகியிராமாயணத்தில் இராமர், சீதை முதலியோர் தத்தம் உயர்குணங்களுக்கு முரணாகக் கூறியவற்றினைத் கம்பர் நீக்கியும் இராவணன் சீதையைத்தூக்கிச் செல்லுதன் முதலிய தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாதவற்றை மாற்றியுமமைத்தார். இராமர் சீதையைக் கண்டு காதல் கொள்வது முதலிய தமிழர் பண்பாட்டிற்கு ஒத்தவற்றினைப் புதிதாகச்சேர்க்கவுங் கம்பர் தவறவில்லை. இராமன், சீதை, இலக்குமணன், பரதன் முதலிய பெரும்பாத்திரங்களேயன்றி, வாலி, குகன் முதலிய சிறு பாத்திரங்களுங் கம்பரின் ஆற்றலினால் இலட்சியப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டன. வால்மீகி இரண்டடிச் சுலோகங்களாக நாலாயிரம் பாடல்களில் இராமாயணத்தைப் பாடினார். கம்பரோ பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நாலடி விருத்தப்பாக்களில் இராமாயணத்தைத் தமிழ் நாட்டிற்கு அளித்தார். கம்பரின் இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களாகவும், படலங்களாகவும் பிரிக்கப்பட்டது. காண்டம், படலம் என்ற பிரிவுவகைகள் தண்டியலங்காரத்திலுள்ள பெருங்காப்பியச் சூத்திரத்திற் கூறப்பட்டில.
கம்பர் வடமொழியிலே தண்டியியற்றியகாவியா தரிசம் முதலிய இலக்கண நூல்களைக்கற்றவர். அவர்வடநாட்டு இராமர் கதையைத் தம் கவிதைப் பொருளாகக் கொண்ட பொழுதிலும் அவரின் அரசவிசுவாசமும் நாட்டுப்பற்றும் அவரைச் சோழநாட்டையும் மன்னனையும் பாடும்படி தூண்டின. சோழப்பேரரசின் உன்னத நிலைக்குப் பொருந்த அவர் நூல் உயிர்த் துடிப்புள்ள இலக்கியமாக விளங்குகிறது.
நாம் கம்பரை ஓர் அலங்காரப்பித்தன் என வருணிக்கலாம். கம்பர் வடமொழியிலக்கியங்களிற் பெரும்பயிற்சியுடையவராகையால் அவற்றிற் காணப்பட்ட அலங்காரச் சிறப்புக்களை யெல்லாந் தாம் படைத்த இராமாயணத்தில் அடக்கிவிட்டார். தற்குறிப்பேற்றம் என்னும் அணி “உற்பிரேட்சை என வடமொழியில் வழங்குகிறது. புலவன் ஒருபொருளின் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிக்குக் காரணமாகத் தான் குறித்த கருத்தினை ஏற்றிக் கூறுதலே தற்குறிப்பேற்றம் (தன்+குறிப்பு+ஏற்றம்) எனப்படும். கம்பர் தற்குறிப்பேற்ற வணியையே தம் பெருங்காப்பியத்திற் பெரிதுங்கையாண்டார். சிலவிடங்களில் அதனைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினார்.
“மையறு மலரி னீங்கி யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிக ளென்
கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்க [னுங்
ணையனை யொல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா”
“நிரம்பிய மாடத் தும்பர் நீள்மணிக் கொடிக ளெல்லாந்
தரம்பிற ரின்மை யுன்னித் தருமமே தூதுசெல்ல
வரம்பில்பே ரழகினாளை மணஞ்செய்வான் வருகின் றானெ
றரம்பையர் விசும்பி னாடுமாடலி னாடக் கண்டார்.” [ன்
மிதிலைக்காட்சிப்படலம், 1,2.
கொடிகள் காற்றினால் அசைக்கப்படுவது இயல்பான நிகழ்ச்சியாகும். ஆனால், கம்பர் அக்கொடிகள் அசைவது காற்றினால் அன்று என உள்ளத்திற் ௧ருதி, “இராமலக்குமணரும் விசுவாமித்திரரும் மிதிலைநகர்க்கு வருகின்றனர்; அக்கொடிகள் திருமகளின் இயல்பினளாகிய சீதையை மணஞ் செய்யத் திருமாலின் இயல்பினனாகிய இராமர் வருவதையறிந்து அவரைத் தங்கைகளை நீட்டி. வரவேற்கின்றன” வென்றார். ஒருவர் நம் இல்லத்திற்கு வரின் அவரை நாம் கைகள் இரண்டினையுந் நீட்டி வரவேற்று உபசரிக்கிறோம். இம்மனிதப்பண்பினை அஃறிணைப் பொருளாகிய கொடிமீது எற்றிக் கம்பர் கூறினார். கொடிகள் கைநீட்டிவரவேற்றதுடன் இராமலக்குமணரின் வரவேற்புபசாரம் நின்றுவிட வில்லை. கம்பர் மேலும் “இராமலக்குமணரை மாடத்திலுள்ள நீண்ட மணிக்கொடிகளாகிய தேவமாதர் நடனவிருந்தினால் வரவேற்கின்றனர்” என்றார். இவ்வாறு காற்றுக்குக் கொடிகள் அசையும் இயற்கைக்காட்சி, கம்பரின் கற்பனையில் இராமலக்குமணரை வரவேற்று உபசரிக்கும் பண்புகொண்டனவாகவுந் தேவமாதராகவும் மாறுகின்றது. கம்பர் முற்றும் புதிதாக இக்கற்பனையைப் படைத்ததாக நாம்கொள்ளல் ஆகாது. இளங்கோடிகள் கோவலனுக்கு நிகழவிருக்குந் துன்பத்தினை வாசகர்களுக்கு உணர்த்துவதற்கு மதுரை மதிலின் மீதுள்ள கொடி அசையும் நிகழ்ச்சியைப் பயன்படுத்தினார்.
“போருளந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட''
புறஞ்சேரியிறுத்தகாதை 189, 190
இளங்கோவடிகள், “கோவலனே! இங்கு வராதே நீயிங்குவரின், உன்னைத் துன்பஞ்சூழும்'' எனக் கொடி தன் கைகளால் அசைத்து மறிக்கின்றது என்றார். இத்துன்பவுணர்ச்சியைப் புலப்படுத்தக் கையாளப்பட்ட தற்குறிப்பேற்றத்தையே கம்பர் இன்பநிகழ்ச்சியாக இராமலக்குமணரின் வரவேற்பினையுணர்த்துவதற்கு மாற்றிப் பயன்படுத்தினார். பழைய கற்பனையெனினுங் கம்பனின் புதுமெருகூட்டலினால் அது புதுச்சிறப்பினைப் பெற்று எம்மை அதனைப் படிக்குந் தோறும் இன்புறுத்துகிறது. இன்னுங் கம்பர் இராமரின் பிரிவைப் பொறாது கோழிகள் சிறகடித்துக் கூவினனென்றும் சீதையின் விரகதாபந் தன்னைச்சுடுமென அஞ்சிச் சூரியன் மறைந்தானென்றுந் தாங்கருதியவற்றைப் பிறபொருள்களின் இயல்பான நிகழ்ச்சிகளுக்குக் காரணமாகக் காட்டிக் கூறினார்.
திருத்தக்கதேவர் கம்பருக்குப் பெருங்காப்பிய மரபில் வழிகாட்டியாக விளங்குகிறார். கம்பரோ உவமை முதலிய அணிகளைக் கையாளுவதிலே திருத்தக்கதேவராகிய குருவைவென்ற சீடராகக் காணப்படுகின்றார். திருத்தக்கதேவர் எமாங்கதநாட்டிலே நெல்விளைந்த சிறப்பினை யுணர்த்துவதற்கு ஒரு பாட்டிலே மூன்று உவமைகளைக் கையாளுகிறார். நெற்பயிரானவை, கருவுற்ற பசும்பாம்பின் தோற்றத்தினையொத்தன வென்றும், கீழ்நிலையிலுள்ளோர் செல்வத்தைப்போலப் செருக்குடன் தலைநிமிர்ந்து நின்றனவென்றும், கல்வி நிரம்பிய அறிஞர்போலத் தாழ்ந்து நின்றனவென்றும் வருணித்தார்.
“சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போன்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்த நூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே”
நாமகளிலம்பகம் 24
அநுமன் சீதைக்கு இராமரின் மோதிரத்தைக் காட்டினான். அப்பொழுது சீதை அடைந்தநிலையினைக் கம்பர் செய்யுளில் அடிதோறும் உவமைவாயிலாக விளக்கினார். சீதையின் மகிழ்ச்சிநிலையினைப் புற்றிலுள்ள பாம்பு தன் மாணிக்கத்தினையிழந்து மீண்டும் அதனைப் பெற்றநிலைக்கும் “பொருளற்றார் பூப்பரொருகால்” என்றபடி. பழைய செல்வத்தை யிழந்தவர் மீண்டும் அதனைப் பெற்றநிலைக்கும் மலடி மலட்டுத்தன்மைநீங்கிக் குழவி ஈன்ற நிலைக்குங் கண்ணொளி யிழந்தவன் அவ்வொளியினை மீண்டும் பெற்ற நிலைக்கும் ஒப்பிட்டார்.
“இழந்தமணி புற்றா வெதிர்ந்ததென லானாள்
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்
குழந்தையை யுயிர்த்தமல டிக்குவமை கொண்டாள்
உழந்துவிழி பெற்றதொ ருயிர்ப்பொறையு மொத்தாள்''
உருக்காட்டுபடலம்-65
சிற்சிலவிடங்களிலே கம்பரின் அலங்காரம் அளவுகடந்து போகிறது எனலாம். அலங்காரம் அளவுகடந்துபோய்த் தம் வித்தையைத் திறம்படப் புனைந்து காட்டும் ஏழாந் நூற்றாண்டின் வடமொழி யுலகைப் பின்பற்றிய கம்பர் தாங்கையாண்ட அலங்காரத்தின் மூலம் மக்கள் கருத்துக்கு உணவு கொடுக்கிறார். கம்பரது கற்பனை இரசிகர்களை யீடுபடுத்தக்கூடிய முறையிலே பயன்படுத்தப்பட்டது. சீவகசிந்தாமணி மூவாயிரத்து நூற்றுநாற்பத்தைந்து பாக்களைக் கொண்டிருக்க இராமாயணம் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாக்களாற் பாடப்பட்டிருப்பது கம்பரின் பெருங்காப்பியஞ் செய்யுட்டொகையிலும் வளர்ந்து சிறப்புற்றிருப்பதை விளக்குகிறதுபோலும். அவரின் இராமாயணத்திற் சோழர்காலப் பெருங்காப்பியங்களின் வளர்ச்சி உன்னதநிலையை யடைந்து அவருக்குப்பின் சிறிதுசிறிதாக அவ்வளர்ச்சி குன்றி நாயக்கர்காலத்துத் தலபுராணங்களிலே முற்றாக வீழ்ச்சியடைந்தது. ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கிற் கம்பராமாயணம் இடம்பெறாதது சமணபெளத்தர் வைணவக் காப்பியத்திலே கொண்டிருந்த சமயக்காழ்ப்பினை யுணர்த்துகிறது. நாயன்மார் வரலாற்றினைக் காப்பிய அமைப்பிற் சித்திரித்தபெருமை சேக்கிழாரைச் சார்ந்தது. சுந்தரரின் திருத்தொண்டத்தொகையையும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியினையுஞ் சேக்கிழார் கசடறக் கற்றபின் தந் திருத்தொண்டர் புராணத்தைப் பாடினார். பொருளமைதியிலே சேக்கிழார் வடமொழிக் கதைகளைத் தழுவிப் பெருங்காப்பியங்கள் இயற்றிய ஏனைய சோழர்காலப் புலவரைவிட உயர்ந்து விளங்குகிறார். அவரினது நூல் தமிழ்நாட்டுச் சைவநாயன்மாரின் கதையைக் கூறினமையாற் சிறந்து விளங்குகிறது.
பெருங்காப்பிய இலக்கணங்களுட் பொன்முடி கவித்தல், மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி முதலியன மன்னர்க்கே பொருந்துவன. திருத்தக்கதேவர், கம்பர் முதலியோர் இவற்றினை யறிந்தே மன்னர்பற்றிப் பெருங்காப்பியம் பாடினர். சேக்கிழாரின் தலைவராகிய சுந்தரர் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் பிறந்தவரெனினும் அவர் நரசிங்கமுனையரென்னும் மன்னரால் வளர்க்கப்பட்டவர். அரசியற் கலையையும் அந்தணர் மறையையுஞ் செவ்வனே கற்றவர். ஆகையாற் பிறகாப்பியங்களில் வரும் மன்னர்க்கு எத்துணையும் அவர் குறைந்தவரல்லரெனலாம்.
பெரியபுராணம் என்ற பெயர் “மாக்கதை'' என்ற வடமொழி வழக்கின் நேர்மொழிபெயர்ப்பாகும். திருத்தொண்டர்புராணம் என்பதே பெரியபுராணத்தின் இயற்பெயர். திருத்தொண்டர்புராணத்தின் வாழ்த்துச் செய்யுளொன்றில் “மாக்கதை'' என்ற சொற்றொடர் காணப்படுகிறது. பிற்காலத்தில் அதனைத் தமிழிலே “பெரியபுராணம்'' எனமொழிபெயர்த்துத் திருத்தொண்டர்புராணத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கினர் போலும்.
பெரியபுராணம், காண்டம் என்ற பெரும்பிரிவினையுஞ் சருக்கம் என்ற சிறுபிரிவினையும் பெற்று விளங்குகிறது. சுந்தரரின் வரலாறு திருமலைச்சருக்கத்திற் றொடங்கி, வெள்ளானைச் சருக்கத்திலே முடிகிறது. பெரியபுராணத்தைச் சேக்கிழார் சமயப்பொறாமை காரணமாக இயற்றினாரெனக் கதையொன்று வழங்குகிறது. அநபாயசோழர் சிந்தாமணியைப் பெரிதுஞ் சுவைத்ததைக் கண்டு அவரின் மனத்தை மாற்றுமாறு பெரிய புராணத்தைச் சேக்கிழார் இயற்றினாரெனுங் கதையைச் சமணர் பரப்பினர். சமணபெளத்தர் தத்தம் இலக்கியங்களுக்கு ஏற்றம் அளிக்குமுகமாக “ஜம்பெருங்காப்பியம்” என்ற வழக்கினை வழங்கினர். இவ்வழக்கிற் சைவவைணவ இலக்கியங்களில் ஒன்றெனினும் இடம்பெறாததே யிதனை வலியுறுத்தும். சமணர் தஞ் சிந்தாமணிக்குச் சிறப்பு அளிக்குந் நோக்கத்துடன் சேக்கிழார் திருத்தக்கதேவரின் ஆற்றலிற் பொறாமை காரணமாகப் பெரியபுராணத்தை யியற்றினாரெனக் கதையொன்றனைக் கட்டினர். ஆனால் அக்கதை யின்று சேக்கிழார் சிந்தாமணியை வெல்லும் இலக்கியத்தைப் படைக்கும் ஆற்றல்வாய்ந்தவரென்பதை விளக்குவதற்குப் பலராற் பயன்படுத்தப்படுகிறது. சேக்கிழார் சிந்தாமணியின் சிறப்பினை யுணர்ந்து அதனைச் சுவைத்தாரென்பதை அவ்விரு நூல்களையொப்பிட்டுக் கற்பின் அறியலாம். சிந்தாமணி பதின்மூன்று சருக்கங்களைக் கொண்டதுபோலவே பெரியபுராணமும் பதின்மூன்று சருக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. சிந்தாமணியாசிரியர் சோழநாட்டின் செல்வச்செழிப்பினை மனத்திற் கொண்டு எமாங்கதநாட்டினைப் பாடினார். சேக்கிழாருஞ் சோழநாட்டினையுஞ் சோழமன்னனையும் வருணித்தார். அரசவிசுவாசம், நாட்டுப்பற்று முதலிய நல்லியல்புகள் சோழமன்னனின் அமைச்சனிடத்தில் இல்லாமற்போகுமா? அவற்றினை யுணர்த்துவதற்குப் பெரியபுராணம் ஒருவாயிலாக அமைந்தது. சிந்தாமணியில் எவ்வாறு சீவகன் பிறப்பு முதலியன நாமகளிலம்பகத்திற் கூறப்பட்டதோ அவ்வாறே திருமலைச்சருக்கத்திற் சுந்தரரின் இளமை வருணிக்கப்பட்டது. முத்தியிலம்பகத்திற் சீவகன் முத்தியடைவது கூறப்பட்டதுபோல வெள்ளானைச்சருக்கத்திற் சுந்தரர் வீடுபேற்றினையடைவது கூறப்பட்டது. சுந்தரரின் வரலாறு தடுத்தாட் கொண்டபுராணத்திற் றொடங்கி ஏயர்கோன்கலிக்காம நாயனார், கழறிற்றறிவார் நாயனார் முதலியோர் புராணங்களில் வளர்ந்து வெள்ளானைச்சருக்கத்திலே முடிவடைகிறது.
பெருங்காப்பியத் தலைவராகிய சுந்தரமூர்த்திசுவாமிகளின் நாடாகிய திருமுனைப்பாடி நாட்டைப்பற்றி அதிகம் பாடாது இருபாடல்களுடன் முடித்ததுஞ் சோழநாட்டைப்பாடியதுஞ் சுந்தரரது கதை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகக் கூறப்படாததுஞ் சேக்கிழாரின் நூலைப் பெருங்காப்பியமெனக் கொள்வதற்குத் தடையாகவிருக்கின்றன. ஆயினும் பெருங்காப்பியம் இதுதானென வரையறுத்துத் தமிழிலே தண்டியலங்காரத்திலுள்ள பெருங்காப்பியம் பற்றிய சூத்திரமொன்றே கூறுகிறது. அதனை மட்டுங்கொண்டு பெரியபுராணத்தின் பெருங்காப்பியச் சிறப்புக்களையாராய்வது ஏற்புடைத்தன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன பெருங்காப்பிய வரிசையில் வழங்குவதனை நோக்கின் பெரியபுராணத்திற்கும் அவ்வரிசையில் இடமுண்டு என்றுகொள்ள எவருந் தயங்கார். பெரியபுராணம் நாலாயிரத்து இருநூற்றுஐம்பத்துமூன்று பாடல்களைக் கொண்டது.
குன்றவ ரதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி யார்த்த
வன்திரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்குங் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்”
கண்ணப்பநாயனார் புராணம்-3
உடுப்பூரில் வாழ்ந்த வேடரின் இல்லம் இப்பாடலில் வருணிக்கப்பட்டது. சேக்கிழார் குன்றவரின் இல்லத்தை வருணிப்பதை யொழித்து அவர்களின் முற்றத்தை யீண்டு தன்மை நவிற்சியாக வருணித்தார். விளாமரங்களில் வளைந்த செவிகளையுடைய வேட்டைநாய்கள் கட்டப்பட்டிருந்தன. அவ்விளா மரக்கிளைகளில் வாரும் வலையுந் தொங்கவிடப்பட்டன. பன்றி, புலி, கரடி, மான் முதலிய பார்வை விலங்குகளுங் காணப்பட்டன. இவற்றுடன் மலைநெல், முற்றத்தில் உலர்த்தப்பட்டிருந்ததையுங் காணலாம். குறிஞ்சிநிலக் கருப்பொருள்கள் இயற்கை வனப்புடன் வருணிக்கப்பட்டன. கொடுஞ்செவி, வன்திரள், என்ற வருணனைகள் சொல்லில் எளிமையும் பொருளில் ஆழமுங் கொண்டவை. வேட்டுவருடைய வாழ்க்கைப் போராட்டத்திற்கு இல்முன், காடு ஆகியனவே களங்கள். இரவும் பகலும் விலங்குப் பகைக்கு அஞ்சாது போரிடும் வாழ்க்கை பெற்றவர்க்கு இல்வாழ்விற்கு நேரம் எது? எனச் சேக்கிழார் காட்டினார். சேக்கிழார் பிறிதோரிடத்தில் வேட்டுவரைத் “தாளில் வாழ் செருப்பர்'' என வருணித்ததும் அவர்களின் புறவாழ்க்கையைக் குறித்தே. குன்றவரின் இல்லத்திற்குப் பதிலாக அவர்களின் முற்றத்தை வருணித்ததால் அவர்களின் வீரவாழ்வினைத் தொடக்கத்திலேயே எம்மை யுணரவைத்தார்.
சேக்கிழார்க்குப் பின் கச்சியப்பசிவாசாரியார் கந்தபுராணத்தினை யியற்றினார். இந்நூல் வடமொழியிற் காணப்படுங் கந்தபுராணத்தின் ஒரு பகுதியாகிய சங்கரசங்கிதையிற் கூறப்படுஞ் சுப்பிரமணியக் கடவுளின் அவதாரத்தையும் அவர் சூரன் முதலிய அசுரரை வென்று தேவர்களைக் காப்பாற்றிய வரலாற்றுக்களையுங் கூறுகிறது. இது உற்பத்திகாண்டம், அசுரகாண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தக்ககாண்டம் என ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சைவசித்தாந்தக் கருத்துக்கள் செறிந்ததாயும் முருகனது பெருமையைப் பாடுவதாயும் இந்நூல் அமைந்திருப்பது இதன் சிறப்பிற்குச் சான்றாகும். இப்பெருங்காப்பியம் பத்தாயிரத்துமுந்நூற்றுநாற்பத்தாறு பாடல்களைக் கொண்டது. பாத்திரப்படைப்பு முதலிய பல்வேறு அமிசங்களிற் சீவகசிந்தாமணிக்குங் கம்பராமாயணத்திற்குமுள்ள ஒற்றுமைகளைவிடப் பன்மடங்கு கூடுதலாகக் கந்தபுராணமுங் கம்பராமாயணமும் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. இராவணன் சூரனையும், சூர்ப்பனகை அசமுகியையும், அனுமன் வீரவாகுவையும், சிறையிருந்த சீதை சிறையிருந்த சயந்தனையும் ஒத்திருத்தலை இவ்விருநூல்களையும் படிப்போர் உணர்வர்.
குண்டலகேசி வளையாபதியாகிய இரு நூல்களின் செய்யுட்கள்யாவும் இன்று எமக்குக் கிடைத்தில. இந்நிலையில் அவைபற்றித் திட்டவட்டமாக ஒன்றுங் கூறமுடியாது.
வடமொழியிலே “பஞ்சகாவ்ய” என்ற வழக்கில் அரிடகவியின் நைடதமுங் காளிதாசனின் இரகுவமிசமுங் குமாரசம்பவமும் பாரவியின் கிராதார்ச்சுனியமும் மாகவியின் சிசுபாலவதமும் அடங்கும். சமணபெளத்தர் தத்தம் இலக்கியங்களுக்கு ஏற்றம் அளிக்கும்பொருட்டு இவ்வடமொழி வழக்கினையொட்டித் தமிழிலும் “ஐம்பெருங்காப்பியம்'' என்ற சிறப்பு வழக்கினை வழங்கினர். இவ்வழக்கினை நன்னூலுக்கு மயிலைநாதர் எழுதிய உரையிலே முதன்முதலாகக் காண்கிறோம். இவ்வழக்கில் மணிமேகலை சிலப்பதிகாரம், சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதியாகிய சமணபெளத்த நூல்களே யிடம்பெற்றன. இந்நூல்களின் ஆசிரியர்க்குப்பின் வாழ்ந்த சமணபெளத்தவுரையாசிரியர் இவ்வழக்குப் பெருவழக்காகுமாறு தத்தம் உரைகளில் அதனைக் குறிப்பிட்டனர். சமயப்பொறுமை யுள்ளம்படைத்த பிறசமயவுரையாசிரியரும் அவர்கள் கூற்றினைத் தத்தம் உரைகளிற் கையாண்டனர்.பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவற்றையுங் கொண்ட வைணவச்சார்புடைய கம்பராமாயணம் சமயப்பொறாமை காரணமாகப் பெருங்காப்பிய வழக்கிற் சேர்க்கப்படவில்லை. விசயாலயன் வழியில் வந்த ஆதித்தியசோழன் வைணவரைத் துன்புறுத்தியதன் விளைவாக நாட்டில் உண்டான குழப்பத்தில் அவன் உயிர் இழந்த செய்தியும் இரண்டாங் குலோத்துங்கன் சிதம்பரத்திலுள்ள விட்டுணு விக்கிரகத்தை யப்புறப்படுத்த முயன்ற கதையுஞ் சோழர்காலத்தில் வைணவசமயம் வீழ்ச்சியுற்றதைக் குறிக்கின்றன. முன்பு சமணபெளத்த சமயங்களையெதிர்ப்பதற்கு ஒன்றியுழைத்த சைவவைணவ சமயங்கள் இவ்வாறு பிளவுறின் அவற்றிற்கும் பிறவற்றிற்குமிடையே யிக்காலத்திலே நிலவுகிற பகையினைக் கூ.றவேண்டுமா?
சோழர்காலச் சமுதாயத்தின் நிலையே அக்காலத்துப் பெருங்காப்பிய இலக்கியத்தின் நன்மைக்குப் பொறுப்பாகவிருந்தது. மாட்சிமைமிக்க ஆட்சியுடன் திகழ்ந்த அரசர்செயலுஞ் சமயமும் வடமொழிக்கலப்பும் இலக்கியத்தைப் பாதித்தன. அக்காலத்துப் பெருங்காப்பியங்களாகக் கருதப்படுஞ் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருத்தொண்டர்புராணம், கந்தபுராணம் ஆகிய நான்குஞ் சமயத்தாற் கட்டுப்படுத்தப்பட்டன. மன்னரும் மக்களுந் தத்தம் ஆதரவினால் எச்சமயத்தைப் போற்றினார்களோ அதைப் பின்பற்றியே பெருங்காப்பிய இலக்கியம் எழுந்தது. இதற்கு எடுத்துக்காட்டுக்களாக முன்பு கூறப்பட்ட நான்கு நூல்களும் அமையும். சீவகசிந்தாமணி, சமணத்தையும் இராமாயணம் வைணவத்தையுந் திருத்தொண்டர்புராணம் கந்தபுராணம் ஆகிய இரண்டும் சைவத்தையும் பாராட்டிக் கூறுகின்றன.
பெருங்காப்பியத்திற்குக் கதை முக்கியமன்று. சோழர் காலத்திற் றோன்றிய பெருங்காப்பியங்கள் நூலிலே மூன்று வடமொழிமரபைத் தழுவி வந்தன. இதற்குக் காரணம் மக்களின் சமயப்பற்றும் வடமொழியார்வமுமேயாகும். அக்காலத்திலே மணிப்பிரவாள நடைக்குத் தனிமதிப்புக் கொடுக்கப்பட்டது. வடமொழிக்கு ஆதரவு மக்களிடையே கிடைக்க மன்னரவையில் வடமொழி விற்பன்னரால் வடமொழி யாராய்ச்சி நடத்தப்பட்டது. இதன் விளைவாக வடமொழி தங்குதடையின்றித் தமிழிற் புகுந்தது. வடமொழிக்காப்பிய மரபும் அணிகளுந் தமிழ்ச் செய்யுட்களைப் பொருளிலும் அமைப்பிலும் அணிசெய்தன. அக்காலத்துப் புலவர் தம் நூலிற்குப் பொருளாகக் கொண்ட கதை பழையதென்றாலும் அதைத் தம் நாகரிகத்திற்கும் மக்களின் விருப்பத்திற்கும் இயையமாற்றிப் பாடினர். மக்கள் விரும்பிய பழங்கதைகளுக்கூடாகப் புதிய கருத்துக்களை அவர் புகுத்தினர். இதனால் அவரின் பெருங்காப்பியங்கள் இன்றுஞ் சிறப்புற்றுவிளங்குகின்றன.

Comments
Post a Comment