இலக்கியமும்‌ நாட்டு வருணனையும்

இலக்கியமும்‌ நாட்டு வருணனையும்

விஞ்ஞானிகள்‌ மிக்கு வாழுகின்ற இடத்தில்‌ விஞ்ஞானமேதை ஒருவன்‌ தோன்‌றுகின்றான்‌. இசைப்பயிற்சி மிக்கார்‌ பலர்‌ வாழுகின்ற இடத்திலே சிறந்த இசைக்கலைஞன்‌ ஒருவன் ‌தோன்றுகின்றான்‌. ஒழுக்கமும்‌ உள்ளச்செம்மையும்‌ நிறைந்தமக்கள்‌ வாழுகின்ற நாட்டிலே ஓர்‌ உத்தம புருடன்‌ அவதரிக்‌கின்றான்‌. சமய வாழ்வில்‌ வேரூன்றி நிலைத்த சமுதாயத்தில் ‌ஒரு தத்துவஞானி உதயஞ்‌ செய்கின்றான்‌. இவ்வாறு மக்களின் ‌சமூக அமைப்பே மாட்சிமை மிக்க தலைவனின்‌ தோற்றத்திற்குக்‌ காரணமாகின்றது. இவ்வுண்மையை அறிந்த புலவர்கள்‌, தாங்‌கூறுதற்கு எடுத்துக்கொண்ட செய்திக்குப்‌ பிறப்பிடமான சூழலை விவரித்தும்‌ வருணித்தும்‌ பாடத்‌ தவறுவதில்லை.

Tamil Culture


அகப்பொருட்‌ செய்தியைக்‌ கூறும்‌ பாக்களிலே மூன்‌று பொருள்களை முறைசிறக்க அமைத்தல்‌ வேண்டும்‌ எனத் ‌தொல்காப்பியர்‌ இலக்கணம்‌ வகுத்தனர்‌. அவை முதற்‌பொருள்‌, கருப்பொருள்‌, உரிப்பொருள்‌ என்பன. அவற்றுள் ‌முதற்பொருளாவது ஒரு செய்தி நிகழ்தற்கிடமாகிய நிலமுங்காலமுமாகும்‌. அகநானூறு முதலிய அகப்பொருளிலக்கியங்‌களிலுள்ள பாடல்களிலே புணர்தல்‌, பிரிதல்‌ முதலிய ஒழுக்‌கங்கள்‌ சிறப்பித்துச்‌ சொல்லப்பட்டி.ருத்தல்போல, அவ்‌வொழுக்கங்கள்‌ நிகழுதற்கிடமான மலை, சுரம்‌ முதலிய நிலங்‌களின்‌ நல்லியல்புகளுஞ்‌ செவ்வனே விதந்து கூறப்பட்டிருக்‌கின்றன. இவ்வாறு அமைந்த நிலங்கள்‌ மாத்திரமன்றி, அந்நிலங்களில்‌ வாழுகின்ற தாவரங்கள்‌, மிருகங்கள்‌, பறவைகள்‌, மக்கள்‌ ஆகிய கருப்பொருள்களின்‌ பண்புகளும்‌ புனைந்து, கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு செய்தியைத்‌ தனித்தனிப்‌பாடல்களிற்‌ கூறுகின்ற வழக்கம்‌ மலிந்த சங்ககாலத்தின் ‌பின்னர்‌, பலப்பல செய்திகளையுந்‌ தொடர்புபட அமைத்துக் ‌கதைவடிவிற்‌ காப்பியமாகப்‌ புனையும்‌ வழக்கம்‌ புலவர்களிடத்திலே உண்டாயிற்று. அங்ஙனம்‌ அவர்கள்‌ கதையைக் ‌கூறுகின்றபோதுங்‌ கதையின்‌ உயிராய்‌ அமைந்த இலட்சியத்‌திற்கும்‌, அவ்விலட்சியத்தின்‌ வடிவமான கதாநாயகனுக்கும்‌ பிறப்பிடமாயாவது சூழலாயாவது பொருந்திய நாட்டின்‌ நல்‌லியல்பை விளக்கிக்காட்டத்‌ தவறவில்லை. ஆனால்‌, அவ்வாறான நாட்டின்‌ சிறப்பினை விளக்கிக்‌ கூறுகின்ற முறைமையிலுந்‌திறமையிலும்‌ வளர்ச்சியும்‌ வனப்பும்‌ இருத்தலைக்‌ காலந்தோறும்‌ தோன்றிய இலக்கியங்களிலே நாம்‌ நன்கு கண்டு மகிழலாம்‌.

சங்ககாலத்திற்குப்‌ பின்னர்‌ முதன்முதலிற்‌ றோன்றிய காப்பியமான சிலப்பதிகாரம்‌ மங்கலவாழ்த்துப்‌ பாடலுடன்‌ தொடங்குகின்றது. அவ்விலக்கியத்தின்‌ கதாநாயகர்களான கண்ணகியுங்‌ கோவலனும்‌ பிறந்த நாடும்‌ வாழ்ந்த சூழலும்‌ எத்தகையன என்பதை அந்நூலின்‌ ஆசிரியர்‌ முதற்கண்‌ கூறவில்லை. புகாரைப்பற்றிச்‌ சிறிதளவே சொல்லிவிட்டு அவர்‌கதை நிகழ்ச்சியினைக்‌ கூறத்தொடங்கினார்‌. ஆயினுங்‌ கதாநாயகர்களின்‌ பிறப்பிடமான காவிரிப்பூம்பட்டினத்தினதுஞ் ‌சோழநாட்டினதுஞ்‌ சிறப்பியல்புகளை முறையே இந்திரவிழவூரெடுத்தகாதையிலும்‌ நாடுகாண்காதையிலும்‌ அழகாக விவரித்‌துக்‌ காட்டினார்‌. சிலப்பதிகாரம்‌ ஒரு நாடகக்‌ காப்பியமெனத்‌தக்கதாதலாலும்‌, முதன்முதலில்‌ எழுந்த காவியமாதலாலும்‌ அவ்வருணனை அவ்வாறு அமைந்தது எனலாம்‌.

சிலப்பதிகாரத்தின்பின்‌ கதைதழுவி எழுந்த காப்பியங்‌களிற்‌ சீரிய நூலாகிய சிந்தாமணியிலே கதாநாயகனுடைய நாட்டினையும்‌ நகரினையுங்‌ கூறுகின்ற மரபிலே சிறு வளர்ச்சி காணப்படுகின்றது. சீவகனது ஏமாங்கத நாட்டின்‌ ஏற்றமான வளத்தையும்‌ இராசமாபுரத்தின்‌ உயர்வையும்‌ ஆசிரியர்‌ முதற்‌கண்‌ கூறிப்‌ பின்னரே சீவகனது பிறப்பினை உரைத்தனர்‌. ஆயினும்‌ அவர்‌ அவற்றைத்தனித்‌தனி இலம்பகங்களிற்‌ கூறாது, சீவகன்‌ கல்விபயின்றதையே சிறப்பு நிகழ்ச்சியாகக்‌ கொண்டு, அது முதலிலமைந்த இலம்பகத்திற்கு “நாமகளிலம்பகம்‌” எனப்பெயரிட்டு, அந்நாமகளிலம்பகத்தின் ஆரம்பத்திலே நாட்டு வளத்தையும்‌ நகர்வளத்தையுங் கூறினார்‌. நாட்டுச்‌ சிறப்‌பிலே மழைவளம்‌ வயல்வளம்‌ முதலிய இயற்கை வளங்களும்‌, நகர்ச்‌ சிறப்பிலே செயற்கை வளங்களும்‌ மிகுத்‌துக் காட்டப்பட்‌டன. இவ்விருவகை வளங்களுஞ்‌ சீவகனுடைய வாழ்விலே மலர்ந்த இன்பவளத்திற்கு ஏற்ற காரணங்களாகின்‌ றன.

சீவகசிந்தாமணிக்குப்‌ பின்பு தோன்றிய பெரியபுராணம் ‌ஒரு சமயக்‌ காப்பியமாகும்‌. அதன்‌ ஆசிரியராகிய சேக்கிழார்‌ சுவாமிகள்‌ பத்திச்சுவை நனிசொட்டப்பாடிக்‌ காப்பியங்களுள்‌ளுஞ்‌ சமய நூல்களுள்ளும்‌ பலவாற்றானும்‌ அந்நூலானது தலைமைபெறுமாறு அமைத்தனர்‌. முன்னேதோன்றிய காப்‌பியங்களை விடப்‌ பெரியபுராணம்‌ நூலமைப்பாலும்‌ நூற்பொருளைக்‌ கூறுகின்ற திறனாலும்‌ மேம்பட்டுப்‌ பிறநூல்களுக்‌கெல்லாம்‌ வழிகாட்டியாய்‌த்‌ திகழ்கின்றது. முன்னைய காப்பியப்‌ புலவர்‌ போலாது சேக்கிழார்‌, நூலின்‌ முதற்கண்‌ நாட்‌டுச்‌ சிறப்பு நகரச் சிறப்பு என்பவற்றைத்‌ தனித்தனியாக அமைத்தனர்‌. மேலும்‌, அந்நூலில்‌ வரும்‌ ஒவ்வோரடியார்‌ செய்தியும்‌ ஒவ்வொரு புராணமெனப்‌ பெயர்‌ பெறுந் தன்மைக்‌கேற்ப, அவ்வொவ்வொரு புராணத்தின்‌ தொடக்கத்திலும் ‌அவ்வப்‌ புராணத்திற்‌ கூறப்படும்‌ நாயனாரது நாட்டின்‌ சிறப்‌பினைக்‌ குறைந்தது இரண்டு மூன்று பாடல்களிலாயினும்‌ வருணித்தும்‌ சிலவற்றிலே நாட்டின்‌ சிறப்புமட்டுமன்றி நகரின் சிறப்பினையும்‌ ஒருங்கு வருணித்துங் கூறியிருப்பது சிறப்பாகக்‌ குறிப்பிடத்தக்கது. சேக்கிழார்‌, தாங் கூறுங்‌ கதாபாத்திரங்களின்‌ உயரிய பண்புகளின்‌ ஆக்கத்திற்குக்‌ காரணமான நாட்டினதும்‌ நகரத்தினதும்‌ நல்லியல்புகளைக்‌ கூறுகின்‌றவிடத்து, இயற்‌கையனவுஞ்‌ செயற்கையனவுமான பொருள்வளங்களையும்‌ ஒழுக்க நன்னிலைமைகளையும்‌ பரக்கக்‌ காட்டிப்‌, பின்னர்‌, பத்திவளமுஞ் ‌சமயவாழ்வும்‌ அந்நாடு நகரங்களிலே பல்கிப்‌ பெருகித்‌ திகழ்‌வதையுந் தம்‌ அருமைப்‌ பாடல்களிற்‌ படம்‌ பிடித்தாற்போலக்‌ காட்டுகின்றார்‌.

“மேகமுங்‌ களிறும்‌ எங்கும்‌ வேதமுங்‌ கிடையும்‌ எங்கும்

‌யாகமுஞ்‌ சடங்கும்‌ எங்கும்‌ இன்பமும்‌ மகிழ்வும்‌ எங்கும்‌

யோகமுந்‌ தவமும்‌ எங்கும்‌ ஊசலு மறுகும்‌ எங்கும்‌

போகமும்‌ பொலிவும்‌ எங்கும்‌ புண்ணிய முனிவர்‌ எங்கும்‌”

எனவும்‌,



தாழ்ந்த வேணியர்‌ சைவர்‌ தபோதனர்

‌வாழ்ந்த சிந்தை முனிவர்‌ மறையவர்

‌வீழ்ந்த வின்பத் துறையுள்‌ விரவுவார்

‌சூழ்ந்த பல்வே றிடத்ததத்‌ தொன்னகர்‌''

எனவும்‌ வரும்‌ பாடல்களிற்‌ காணப்படும்‌ நாடும்‌ நகரமுஞ்‌சமய வாழ்வினை மலரச்செய்யும்‌ பெரியார்களின்‌ பிறப்பிற்கு ஏற்ற நிலைக்களன்களாயே உள்ளன என்பது தெளிவாகப் ‌புலப்படுகின்றது.

சேக்கிழாருக்குப்‌ பின்வந்த கம்பர்‌ தாம்படைத்த இராமாயணத்தில்‌ ஒரு புதுமையை அமைத்தார்‌. சேக்‌கிழார்‌ நாடு நகரங்களின்‌ சிறப்புக்களைக்‌ கண்டு அவற்றைத் தனித்தனி படலங்களிற்‌ பாடிய திறனை உணர்ந்த கம்பர்‌, தமது நூலிலே நாடுநகரங்களின்‌ சிறப்புக்களைக்‌ கூறுதற்கு முன்னாக, அந்நாட்டுப்‌ படலத்திற்‌ பிறர்‌ கூறிய மழையின்‌ சிறப்பினைத்‌ தாம்‌ தனியாக முதற்கண்‌ வைத்து ஆற்றுப்படலம்‌ எனப்‌ பெயரிட்டு, அதன்‌ பின்னரே கோசலநாட்டின்‌ வளத்தினையும் அயோத்தி நகரின்‌ அழகினையும் ‌வருணித்தார்‌. அங்ஙனம்‌ அவர்‌ ஆற்றுக்கு முதன்மை கொடுத்துப்‌ பின்பு நாட்டின்‌ சிறப்பினைப்‌ பாடினாராயினும்‌, அந்நாட்டின்‌ வளத்தினைக்‌ கூறுகின்றவிடத்துந்‌ தமக்கே உரிய அழகான நடையிலே பிற புலவர்கள்‌ - சங்ககாலப்‌ புலவர்‌ உட்‌படப்‌ பலருங் கூறாத முறையிற்‌ கூறுகின்றார்‌. ஒரு நாட்டின் ‌மேன்மையை அங்கு நாஞ்சிலல்லது படையும்‌ இல்லை,சுடு நெருப்பல்லது ஊர்‌ சுடு நெருப்புமில்லை என்றாயிலும்‌, வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன என்றாயினும்‌, நல்லனவன்றித்‌ தீயனவில்லை என்ற வாய்ப்பாட்டிற்‌ கூறுவதே மரபு. ஆனாற்‌ கம்பரோ, கோசலநாட்டிலே நல்லனவே இல்லை என்று சொல்கின்றார்‌ !

“வண்மை இல்லையோர்‌ வறுமை இன்மையால்‌

திண்மை யில்லைநேர்‌ செறுந ரின்மையால்

‌உண்மை யில்லைபொய்‌ யுரையி லாமையால்‌

ஒண்மை யில்லைப்பல்‌ கேள்வி மேவலால்‌”

இவ்வாறு கூறியவர்‌ கம்பர்‌ ஒருவரே யாவர்‌. இத்தகைய நல்லநாடுதான்‌ இராமர்‌ அவதரித்தற்கு ஏற்ற நிலைக்களமாயிற்று

இவ்வாறு காலந்தோறுந் தோன்றிய காப்பியங்களிற்‌ கதாபாத்திரங்களின்‌ பிறப்பிற்கு நிலைக்களமாகிய நாடுநகரங்கள்‌ வெவ்வேறு வகையில்‌ விதந்து க.றப்பட்டன. இவையெல்லாவற்றையும்‌ விட வேறொரு புதிய வழியிலே புதுமைக் ‌கவிஞராகிய சுப்பிரமணிய பாரதியார்‌ பாடினார்‌. அவர்‌ தமது பாஞ்சாலி சபதம்‌ என்ற நூலில்‌ அத்தினாபுரம்‌, இந்திரப்பிரத்தம்‌ என்ற இரு வேறிடங்களையும்‌ வருணிக்கும் மரபு நூதனமானது. அத்தினாபுரத்தின்‌ இயல்பினைக்‌ கூறுகிறபோது அது நல்லவர்‌ வாழுகின்ற நகர்‌ என்று முன்னோர்‌ போலவே புனைந்து கூறிச்‌ செல்லாமல்‌, அங்கு நல்லாரும் ‌உள்ளனர்‌ தீயாரும்‌ உள்ளனர்‌ என்பதை மமைக்காமற் ‌செப்புகின்றார்‌. ஆனால்‌ இந்திரப்பிரத்த வருணனை ஏனைய நூல்களைப்போலவே அமைகின்றது. துரியோதனன்‌, சகுனி முதலான தீயவர்‌ வாழுகின்ற இடத்தையும்‌, தருமன்‌ முதலிய நல்லவர்‌ வாழுகின்ற இடத்தையும்‌ ஒரே தன்மையனவாகப் புனையாமல்‌ அவ்வக்‌ கதாபாத்திரங்களின்‌ பண்புகளுக்கமையப்‌ பாடியமை நாம்‌ கண்டு நயக்கத்தக்கதாகும்‌.


Comments

Popular posts from this blog

மரபும்‌ வழக்கும்

இலக்கிய நுகர்வு

பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு