பரிசில் வாழ்க்கை
பரிசில் வாழ்க்கை
கலையே நாட்டின் செல்வம். கலைச்செல்வத்தைச், செல்வத்துட் செல்வம் என்பர். கலைக்காக உயிர்வாழுங் கலைஞர்களுக்கே பரிசில்வாழ்க்கை உரிமையுடையதாகும் நுண்ணறிவுடைய கலைப்பெருமக்கள் இன்றும் “நோபல்” பரிசு பெறுகின்றார்கள். கலைஞர்களது வாழ்க்கையைப் பொற்கிழியும், பொன்னாடையும் பொலிவு செய்கின்றன. முத்தமிழ்த் துறைவாய் நுழைந்த வித்தகச் சான்றோர் வாழ்க்கை, பரிசில் வாழ்க்கையாகும். கையில் பாழையேந்தி மெய்யிற் பசியைச் சுமந்து செல்லும் பாணரும், கூத்தரும், புலவரும், பிறரும் பரிசில் வாழ்க்கைக்கு உரியவராயினர். முடியுடை மூவேந்தரே பரிசில் வாழ்க்கையராய்ப் பாடிச் சென்றனரெனில் அதன் சிறப்பு எடுத்து இயம்புந் தரத்ததோ!
பரிசிலரது உலகம் பெரிது. அவர்களைப் பாதுகாப்போரும் பலராவர். எத்திசையிற் சென்றாலும் அத்திசையிற் பரிசும் பாட்டும் அவர்களை எதிர் கொண்டு அழைத்தன. “கொள்க” எனப் பரிசிலைக் கொடுத்தபோதுங் “கொள்ளேன்” என்னும் பண்புடையதும் “முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்றீதல் யாம் வேண்டலமே” என்னும் பெருமிதத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்ததும் பரிசில் வாழ்க்கையே. நாளும் புள்ளும் பரிசில் வாழ்க்கைக்கு நன்மையே விளைத்தன. காலத்தையும் இடத்தையுங் கடந்து நின்றது பரிசில் வாழ்வு.
“நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்லர் பரிசிலர்”
என்னும் புறப்பாட்டுப் பரிசில் வாழ்க்கையைப் பாராட்டுகின்றது.
வாள்வலியாலுந் தோள்வலியாலும் மற்றெவ்வலியாலும் எய்தமுடியாத வென்றி நலன்களையெல்லாம், பரிசிலர் கலைவலியால் எய்திச் செம்மாந்து-இறுமாந்து வாழ்ந்தனர். மண்ணாளுஞ் செல்வம் படைத்த மன்னவருந் தலைவணங்கிப் பணிபுரியும் தலைமைப்பாடு பரிசில் வாழ்க்கைக்குண்டு ஈத்துவக்கும் இன்பம் அறியாது, எலிபோன்று பதுக்கிவைக்கும் ஈயாமன்னர், பரிசிலரைக் கண்டு நாணினர். புலிபோன்ற மானவீரர், பரிசிலருடன் புணர்ச்சி நட்பும், உணர்ச்சி நட்பும் பூண்டு வாழ்ந்தனர். வேந்தரது வெண்குடைச் செல்வத்தைப் பரிசிலர்வியவாது தம்மிடத்துச் செய்யும் முறைமையை அறிந்து ஆற்றும் மூதறிவாளரது வறுமையைப் பரிசிலர் மதித்தார்; அஃறியும் அறிவற்றோரை அவமதித்தார். பரிசிலரது பாடறிந்து கொடுக்குந் தினையளவு பனையளவாகப் பாராட்டுப் பெற்றது.
காந்தியடிகள் உலகினுக்குக் காட்டிய சத்தியமாகிய இளவளஞாயிறு, பரிசில் வானில் உதித்தெழுந்து, பழந்தமிழ் நாட்டிற் கலைக்கதிர் பரப்பி நின்றது. அது
“பல்லிளைஞரும் விறலியரும் வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன் மெய் கூறுவல்”
புறம் 139
எனவும்,
“பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றெஞ் கிறுசெந் நாவே”
புறம் 148
எனவும் பரிசிலர் கூறுங் கூற்றுக்களிலிருந்து வெளியாகும். அதன் கதிர்களைக் கண்டு, இன்னும் நம்முள்ளத் தாமரைகள் பூத்துக் குலுங்குகின்றன. மாரியிரவில் மரக்கலங் கவிழும் பொழுது, கண்ணில்லாத ஊமன் கடல் நடுவே படுந்துயர் போன்ற பெருந்துயர் வந்தகாலத்தும், சத்தியத்தினின்றும் அடி தவறாது பரிசிலர் வாழ்ந்தனர்.
“வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப்
பாடுப வென்ப பரிசிலர்”
புறம் 168
என்னும் பகுதி பரிசிலர் சத்திய வாழ்வுக்கு அழியாத சான்றாகும்.
நிலையற்ற உலகத்தின்கண்ணே நிலைத்து நிற்பது புகழ் ஒன்றேயாம். உலகப்புகழ் பெறுதலே உயிருக்கு ஊதியமாகும். மண் நாணுமாறு புகழ் விளைத்து வாழ்வோரே, நல்வாழ்வு வாழ்வோராவர். ஓம்பிய பொருளும், உடலும், உயிரும் கொடுத்துப் புகழினைக் கொள்வர். வசையற்ற வான்புகழ் ஒன்றே புலவர் நாவிற் பொருந்துவதாகும். புலன் அழுக்கற்ற நிறைமொழி மாந்தராகிய புலவர் பெருமக்கள் பரந்த புகழ் நிலைக்கப் பாடுவார்கள்.
“புலவர்பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வானவூர்தி எய்துபவென்ப”
ஆதலின் புரவலர் எல்லோரும் புலவர் பாடும் புறத்துறை வழியே சென்றனர்; பாடினி பாடும் வஞ்சிக்கு அமைந்த வலியுடையோராக விளங்கினர்; காண்டற்கு எளிமையுங், கனிவான சொல்லுங் கொண்டு பரிசிலர் உள்ளங்களைக் கவர்ந்தனர்; அன்பு கலந்த கெஞ்சும், அருள் ஒழுகு கண்ணும், கவிவண்கையும் உடையோராய்த் தம்புகழுடம்பைப் படைக்கும் பரிசிலரைப் போற்றி நின்றனர். கொல்லன் உலைக்கல்லை ஒத்த வன்னெஞ்சரும், குறுகிவரும் பரிசிலரைக் கண்டதும், தண்ணீரினும் இனிய தண்மையும் மென்மையும் உடையராயினர். பரிசிலர் துயர் களைதலையே செல்வர் தஞ்செல்வத்தின் பயனாகக் கருதினர்; பரிசிலர் துயரைத் தந் துயரமாகக் கொண்டு பரிவுகாட்டினர். தம்முடைமையைப் பரிசிலர் உடைமையாகவும், தம்மைப் பரிசிலர்க்கு வரிசையறிந்து பகிர்ந்தளிக்குந் தருமகர்த்தாவாகவும் எண்ணினர். இமையவர் துயர்தீர இன்னாத நஞ்சுண்டும் இறவாதிருந்த திருநீலகண்டன் போலப், பரிசிலரை உய்யக் கொண்ட புரவலர்களும் இறவாப் புகழுடம்பை எய்தினார்கள்.
ஈவோரது கைவண்மை தமது மறுமை நோக்கிச் செல்லாது, பரிசிலரது வறுமை நோக்கிச் சென்றது. “இம்மைச்செய்தது மறுமைக்காம் எனும் அறவிலை வணிக'த்தை அவர்கள் கனவிலுங் கருதவில்லை. பரிசிலரைக் கூட்டிச், சங்கம் அமைத்து, அவர்தம் பசிப்பிணி மருத்துவனாகப் பாண்டியன் விளங்கினான். முரசுகட்டிலேறிய பரிசிலன் கண்வளரச், சேரமன்னன் கவரிவீசி நின்றான், சோழவேந்தன், “அரசன்றிப்பரிசிலர்க்கு ஆருயிருங் கொடுப்பேன்; வருக என் குடைநிழல் வருக என வரவழைத்தான். தலையைக் கொடுத்துந் தண்டமிழ்ப் பரிசிலனது பசியைப் போக்கக் குமணவள்ளல் துடியாய்த் துடித்தான். தன்னையே பரிசிலர்க்கு நல்கிய தனிப்பெருந் தியாகியன்றோ பாரி; அவனது முந்நூறுஊரும் பரிசிலர் பெற்றனர். வல்வில் ஒரியும், எழிலியும், மலையமானும், நள்ளியும், ஆயும், பேகனும் பரிசிலர் ஒக்கல் தலைவர்களாகவே விளங்கினார்கள். பெண்களுந் தம்பதங் கொடுத்துப் பரிசிலர் வாழ்வை வளம்படுத்தினார்கள். அமிழ்தினை வென்ற சுவையுடை அடிசிலைத தாழிதங் கமழ ஊண்முறையூட்டினார்கள். “பரிசிலர் தமதெனத் தொடுக்குவராயின் எமதெனப் பற்றாது” சுற்றத்தாரும் உதவி வந்தனர்.
பண்புடையாளரது பெருஞ் செல்வத்தைப் பரிசிலர் ஊருணிநீர்போல உபயோகித்தனர். பரிசிலரை வருத்தும் பசிநோய் தீர்க்கும் மருந்துமரமாகச் செல்வர் விளங்கினர். கோடைகாலத்துக் கொழு நிழலாயினர்; நடுவூர்ப் பழமரமாய் நல்விருந்தாயினர். பழமரம் நாடும்பறவை, நேற்று உண்டனம் என்னாது பின்னும் வருவது போலப் பரிசிலர் கூட்டம் வந்த வண்ணமாகவே இருந்தது. பழுத்த மரத்தில், பழமுண்ணும் பறவைக்குரல் ஒலிப்பது போலச், செல்வர் வீட்டில் ஊணொலியரவந்தானுங் கேட்கும். மருந்தும், விருந்தும், வளமுறு நிழலும், விரும்பும் பொருளும் வேண்டியோர்க்கீயுங் கற்பகதருவாகக் காவலர் திகழ்ந்தனர். அவர்கள் “ஓம்பிய நாடு புத்தேளுலகம் போலப் பொலிந்தது. பெய்யும் இடமறியாது, விளைபுலத்தும் களர்நிலத்தும் பொழிந்து மடம்படும் மாரிபோல, பரிசிலர்க்கு வரையாது கொடுப்போருங் கொடை மடம் படுவாராயினர். வரையாது வழங்கும் வானமும் நாணப் பரிசு வழங்கியோர் பெருமை, “விரிப்பின் அகலும்; தொகுப்பின்” எஞ்சும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உள்ள தன்மையினாலேயே பரிசிலர் உலகும் உளதாயிற்று.
பூமேலே நடந்தோர் பெற்றிய தென்னப் பரிசிலர் இப்புவிமேல் வாழ்ந்தனர்; கறிசோறுண்டு வருந்து தொழிலல்லது பிறிதொரு தொழிலால் வருந்தாராயினர்; வெய்தான உணவுண்டு வியர்த்தல் அல்லது செய்தொழிலால் வியர்த்தல் அறியார். அவர் கை மிகவும் மென்மையாயிருந்தது. பொருட்குறைவும், மனக்குறையும் போக்குவதற்காகப் பரிசிலர் புரவலரிடஞ் சென்றனர்; கவலை நெஞ்சத்து அவலந் தீர்க்க வேண்டினர்; எண்ணியதை முகக்குறிப்பால் எடுத்துக்காட்டினர். குறை முடிப்பதுவே அவர் கொள்ளும் பரிசிலாகும். நிலந்தொட்டு நீர்ப்பாய்ச்சி, வளம்படுத்துமாறு மன்னவரைத் தூண்டினர்; விளை நிலங்கள் விளைவுகுன்றியபோது இறைதவிர்க்குமாறு அரசனை இரந்தனர்; இருபேரரசர் பொருவது கருதியக்கால், இடையே நிகழும் இன்னல்களை எடுத்துரைத்துச் சந்து செய்தனர்; அரச குடும்பத்து ஊடலைத் தணிக்கும் வாயில்களாக உசாத்துணைபுரிந்தனர்; முறைதிறம்பிய மன்னவரை நீதி வழிப்படுத்தினர்; அரச கன்னியரை மணம் முடித்து வைக்கும் அறப்பணியாற்றினர். இவை போன்றவற்றைப் பரிசிலாக ஏற்றுத் தூயபரிசில் வாழ்க்கையர் தொண்டு புரிந்தனர்.
மலையிலே பிறந்து மாக்கடலை நோக்கி, நிலமிசையோடும் பல ஆறுகள் போலப் பலதிசைகளிலுமிருந்து பரிசிலர், புரவலரை நோக்கிப் புறப்பட்டனர். உடும்புரித்தாற் போன்று எலும்பெழுந்தியங்கும் உடம்பையுடைய சுற்றத்தவரும், இளைஞரும் அவருடன் கூடி ஏகினர். மணம் வளருங் கூந்தலை மலைக்காற்று அசைக்க; கலாபமயில் போன்ற காட்சியராய்ப் பரிசிலர் மனைவியரும் பயணப்பட்டனர், யாவரும் வெயிலென வெறாதும், பனியென மடியாதும் விழைவுடன் சென்றனர். ஊர் இல்லதும், வருத்தம் மிக்கதும், உண்ணும் நீரில்லதுமான நீண்ட வழிகளைத் தாண்டினர். அனல் மிகுந்த அருஞ் சுரத்தை நீங்கி, ஆனினம் மிகுந்த அடிப்பாடு பலகடந்து, மானினம் மலிந்த மலைபின் னொழிய, மீனினங்கலித்த துறைபல நீந்திச்சென்று கொடைவல்லாரைக் குறுகினர். கனவிலும் பகைவர் காணமுடியாத காவலுள்ள புரவலர் ஊருள்ளே உரிமையுடையார் போலப் புகுந்தனர், வாயிலிலே தடையில்லாது வள்ளியோர்மனையுள்ளே தலை நிமிர்ந்து சென்றனர். புள்ளுக் குரலியம்பும் புலரிவிடியலிலும், மாலைக் காலத்திலும், மற்றெந் நேரத்திலும் பரிசிலர் வரவைப் புரவலர் பார்த்த வண்ணமாகவே இருந்தனர். பரிசிலர் பொருட்டே அவர் வாயில் அடையாவாயிலாகத் திகழ்ந்தது.
வள்ளியோர் பரிசிலரை வரிசையறிந்து வரவேற்றனர். ஈரநெஞ்சும் இன்முகமுங் காட்டிக், கட்டித்தழுவிக், கைகொடுத்து மகிழ்ந்தனர். கையாலே தலையைத்தைவந்து கரவில்லாது இன்சொல் வழங்கினர். ஒருநாட் சென்றாலும், இருநாட் சென்றாலும், பலநாட் பயின்று பலரொடு சென்றாலும் முதனாட்போன்ற பெருவிருப்பத்தோடு உபசரித்தனர். பாலுந், தேனும், பிறவுங் கொடுத்து பரிசிலரது தாகத்தைத் தணித்தனர். புனலாட்டி, அரையிலுடுத்த கந்தையையகற்றிப்பட்டாடை அணிவித்தனர். முற்றத்திற்குவந்த பரிசிலர் உண்ணாராயினும், “என்னாணையுண்” எனத் தம்மொடு சூளுரைத்து உண்பித்தனர். விருந்தயரும் விருப்பினளாய தம்மனைவிக்குப் பரிசிலரைக் காட்டி. இவரை “எம்போற் போற்று” என்றனர். இவ்வாறு பெருஞ்சோறுஞ் சிறுசோறும் வள்ளியோர் பரிசிலர்க்கு வரையாது வழங்கினர். பரிசிலரும், தாம்மேற் கொண்ட கலைத்திறத்தால் அவர்களை உவகைக் கடலுள் ஆழ்த்தினர். பரிசிலருடன் உரையாடி உவகைபூத்த நாளே தம் வாள் நாளிற் பயன்பட்ட நாளாக ஈவோர் எண்ணினர்.
பல நாட் கழியினும் பரிசிலரைப் பிரிய ஈவோர் இசையாராயினர். “நின்புகழே நிரம்பிய உள்ளம் தூண்ட, நின்னைக் காணவந்தோம்; கண்குளிரக் கண்டோம்” என்னுங் கூற்றின் மூலம் பரிசிலர்தாம் போக விரும்புங் குறிப்பைப் புலப்படுத்தினர். கொடுப்போர் அக் குறிப்பையுணராராயின், “யாண்டுபலவாகி, நரைமுதிர்ந்து, கண்ணிழந்து, கோலே காலாகக் கொண்டு வருந்துந் தாயின் மெய்வருத்தத்தையும், தாய்முலை சுவைத்தும் பசிதணியாது கூழுஞ் சோறுங் கூவியழும் மக்களின் அழுகுரலையும், மாசுண்ட உடையுடுத்த மனைவியின் கண்ணீரையுங் காட்டி விடைபெற விரைந்தனர்.
உழுது பாடுபடும் எருது, நென்மணியைப் பிறர்க்கு உதவுவதுபோல, கொடுப்போரும் தாம் வருந்தித்தேடிய பொருள்களையெல்லாம் பரிசிலர்க்கு வழங்குவாராயினர்; காடென்றும் நாடென்றுங் கருதாது, பகலென்றும் இரவென்றும் பாராது பரிசிலரது குறைமுடிப்பாராயினர். காட்டு விறகெடுப்போர் புதையல் எடுத்தாற் போன்று, பரிசிலரும் நிச்சயசெல்வம் பெற்றனர்.
“குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ
மன்றுநிறையு நிரையென்கோ மனைக்களமரொடு கள
ஆங்கவை, கனவென மருள வல்லே [மென்கோ
நனவின்”
நல்கினார்கள்.
நெல்லிக்கனியும், நெல்லும், வரகும், பிறவும் உதவினார்கள். முத்து வடமும், பன்மணிக்கோவையும், பொன்னரிமாலையும், பசும்பொன்னும் பரிசிலர் பெற்றனர். கைபுனைந் தியற்றியகவின் பெறும் அணிகளைப் பெற்ற பரிசிலர் சுற்றம், கழிபேரு வகை கொண்டு செய்வதறியாது திகைத்தது; இராமனுடன் காடுபோந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது, அவள் கழற்றி வீசிய அணிகலன்களைக் குரங்குச் சுற்றம் அணிந்ததுபோல, அணியும் இடமும் முறையுந் தெரியாது அணிந்து மகிழ்ந்தது. விரலில் அணிவனவற்றைச் செவியிலும், செவிக்குரியவற்றை விரலிலும், அரைக்குரியவற்றைக் கழுத்திலும், கழுத்தணியை இடையிலும் பரிசிலர் சுற்றத்தார் அணிந்து, காண்பார் கைகொட்டி நகைக்குமாறு விளங்கினர்.
வருந்தியும் வருத்தியும் முகம்மாறிப் பெறும் பொன்னணி யானைப் பரிசிலிலும் பார்க்க, பசிவேளையறிந்து இன்முகத்துடன் அளிக்கும் ஒரு வேளை உணவை மேலாகக் கருதினர். இயலுவது ஒன்றனை இல்லையென மறுத்தல், பரிசிலரை வாட்டுவதன் றிப் புரவலர் புகழையுங் குறைப்பதாகும். பரிசில் பெறாத விடத்து புரவலரைப் பழியாது, புள்ளையும் பொழுதையும் பழிப்பர். தமக்குச் செய்த தகாத செயலால் அவர் துன்புறுவரே என இரங்கினர். “நீடு வாழிய நெடுந்தகை' எனவும், “நோயிலராக நின்புதல்வர்” எனவும் அவரையும் அவர்வழி மரபையும் வாழ்த்திச் சென்றனர். பரிசிலர் முகத்தைப் பாராது ஈந்தது எத்துணையுயர்ந்த பரிசிலாயினும் அதனை ஏற்காது, “காணாது ஈத்த பரிசிற்கு யாமொரு வாணிகப் பரிசிலரல்லேம் என இகழ்ந்து சென்றனர். வரிசையறியாது வழங்குவோர்க்குத் தக்கன கூறி அவரைத் தெருட்டினர். “இரைவேட்ட வயப்புலி, யானை வேட்டை பிழைப்பின் எலிவேட்டையில் இறங்காது” எனக் கூறிச்சென்று வரிசைக் கேற்ற பரிசை வாங்கிவந்து,
“இரவலர் புரவலை நீயு மல்லை;
புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர்;
இரவல ருண்மையுங் காணினி; யிரவலர்க்கு
ஈவோ ருண்மையுங் காணினி” புறம் 162
எனப்பாடித் தாம் பெற்ற பரிசிலைப் புரவலர்க்குக் காட்டி அவருள்ளத்தைப் பரிசிலர் மாட்டுத் தாழச் செய்தனர். பரிசிலரை இகழ்ந்தமையாற் பண்டு பல நகரங்கள் பாழடைந்தன. புகழ்ந்த. செய்யுட்கழா அத் தலையை இகழ்ந்ததன் பயனாக அரையம் என்ற பெருநகரம் அழிந்தது. பரிசிலர்க்கு அடைத்த வாயிலுடையோரை வழிவழியாகப் புலவர்பாடாது ஒழிந்தனர்.
உலகியற் பொருளும், அப்பொருளாற் பெறும் இன்பமும் நிலையற்றவை என்பதை அநுபவமூலம் பரிசிலர் அறிந்தனர். பொருளும் பொன்னும் போகமும் பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குமாற்றையறிந்து அவற்றைத் துறந்தனர். வாழ்வாய் - வாழ்முதலாய் - வாழ்முதலாகிய பொருளாய் - உறவாயுள்ள ஒரு பொருளை உணர்ந்தனர். தெய்வமென்பதொரு சித்தங் கொண்டு, அன்புற்று, அருள்நெறிபரப்பி, அறவாழ்வு வாழ்ந்தனர். அருட்செல்வன் கழலேத்துஞ் செல்வத்தையே செல்வத்துள்ளே தலையாய செல்வமாக மதித்தனர் “இறைவன் பொருள் சேர் புகழை”ப் புகழ்ந்து பாடினர். “செந்நாவலர் பரசும் புகழ்” உடைய பெருமான், வான்பழித்து மண்புகுந்து. பரிசிலரை ஆட்கொண்டருளினன். “அஞ்சலோம் புமதி அறிவனின் வரவு” என அன்பொடு திருவாய்மலர்ந்து, பெறலரும் பரிசிலாய பேரின்பம் நல்கியருளினன்.
தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னுந் தமிழ்ப்பெரும் பண்பால், பரிசிலர் கலைஞரை புரவலரிடம் ஆற்றுப்படுத்தினர். கற்றோன்றி முட்டோன்றாக் காலத்தே தோன்றிய ஆற்றுப் படையாயவித்து, இலக்கியச் சோலையில் முளைத்து வளர்ந்து பத்தித்தேன் சொட்டும் பல எழிலுறு மலர்களை ஈன்று உலகெலாம் அருள் மணம் பரப்பி நிற்கின்றது. “பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீ இச்சென்று பயனெதிரச் சொன்னபக்கம்'' எனத் தொல்காப்பியப் பெருங்கடல் அதன் இறவாப்புகழை எடுத்து முழங்குகின்றது. சங்கத்தமிழ்ப் புலவராம் நக்கீரனார், ஒவ்வொருவரையும் முன்னிலைப் படுத்தி, “இன்னே பெறுதி நீ முன்னியவினையே'' எனக் கூறிமுருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துகின்றார். பித்தா எனப்பாடிப் பேரின்ப வெள்ளத்துத்துள்ளேதிளைத்த முத்தராஞ் சுந்தரர், இம்மையிலே சோறுங்கூறையும் அம்மையிலே முத்தியும் பெறப் புகலூரரைப்பாடுமாறு வழிகாட்டுகின்றார். “பாண்டிப்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே” என்றழைப்பதுஞ் செவிக்குத் தேனெனத் தித்திக்குந் திருவாசக மன்றோ !
“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடியவென் னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஒம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை”
அருள் நெறிச் செல்வர் ஆற்றுப்படுத்திய வழிநின்று எல்லோரும் இம்மை மறுமை வீடு பேறுகளை எய்துமாறு, தண்கதிர் மதியம் போன்றும் ஒண்சுடர் ஞாயிறுபோன்றும் நின்று நிலைத்திடுக.

Comments
Post a Comment