இராமனின் சுந்தரத் தோற்றமும் வீடணனுக்களிக்குங் காட்சியும்
இராமனின் சுந்தரத் தோற்றமும் வீடணனுக்களிக்குங் காட்சியும்
இராமன் மாரனும் வெள்கும் பெரும் பேரழகன். சீதையும் பெண்குலத்துக்கே அழகுசெய்ய வந்த பெரும் பேரழகி. ஆழ்வார்கள் தம் அருட்பாடல்களில் இராமனுடைய அழகை எடுத்தியம்பி அன்பர்களையெல்லாம் அவனுடைய அழகுக்கடலில் ஆழ்ந்து அழுந்தி அருள் பெறுமாறு செய்தனர். கண்ணனாக, பாலகோபாலனாக, இராமனாக அவன் சுந்தர வடிவைப் பாடுவதிலே அவர்கள் பேரானந்தமுற்று அவற்றை ஓதுவாரையுங் களிப்பு மிகுதியில் ஆழ்த்துகின்றனர். இராமன் சீதைக்காகவும், சீதை இராமனுக்காகவும் வாழ்வதாகக் கம்பன் யாத்த கவிகள் கவிநலங் கலந்திலங்குகின்றன. அவன் வசையிலா நம்பி எனவும், அவள் மருங்கிலா நங்கையெனவும் இருவர்உடல் உள அழகையெல்லாங் கம்பன் நமக்குக் காட்டினான்.
![]() |
| இராமனின் சுந்தரத் தோற்றம் |
இராமன் நலனைத் தானே எடுத்து இயம்புவதோடமையாது நாடக பாணியில் பிறர் வாய்மூலமாகவும் நாம் கேட்டகமகிழும் உத்தியையுங் கையாண்டான் கம்பன். “ஆடவர்பெண்மையை அவாவுந் தோளினாய்” எனப் பற்றையறுத்த விசுவாமித்திரமுனியும் இவனழகாற் கவரப்பட்டமையை அவன் வாயிலாகவே நாம் அறியச்செய்தான். வேட்டுவக்குகக்குரிசில் வாக்கிலும் அவன் பரதனுக்குக் கூறுங் கூற்றாக “அல்லையாண்டமைந்த மேனி அழகனும் அவளும்” என்று அவனழகையும் அதற்குப் பொருத்தமான சீதையினுடைய நலனையும் நமக்கெடுத்துக்காட்டினான். மூக்கறுந்து இராமன்மாட்டு ஆறாச்சினம் வீறு கொண்டெழுந்த நிலையிலும் இராவணன். சந்நிதியிலே சூர்ப்பனகையின் வாயில் “செந்தாமரைக் கண்ணொடுஞ் செங்கனி வாயினோடுஞ் சந்தார் தடந்தோளொடுந் தாழ்தடக் கைகளோடும் அந்தார கலத்தொடும் அஞ்சனக் குன்றமென்ன வந்தானிவனாகு மவ் வல்வில் இராமன்” என்று இராமன் அழகு பளிச்சிட்டொளி செய்யும் வகையிற் கவிதையொன்றைப் பெய்தான் கம்பன். ஐம்பொறிகளும் ஆறிய அனுமன் வாயிலும் இராமனைச் சுந்தரனாக்கி,
“மஞ்செனத்திரண்ட கோல மேனிய மகளிர்க் கெல்லாம்
நஞ்செனுந் தகையவாகி நளியிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்ச மொத்தலர்ந்த செய்ய கண்ண”
என மகளிர் அவன்மீது கொண்ட காதலோ அநுமன் வைத்த ஆரா அன்போ சீரிய தெனக் கூறமுடியாவகையில் வெளிப்படுத்தினான். மீட்டும் அவ்வனுமன் வாயினால் “என்பெனக் குருகின்றதிவர் கின்றதளவில் காதல் அன்பினுக்கவதியில்லை” என உணர்ச்சிப் பெருக்கை வெளியாக்கி இராமன் மேனிநலனைக் கவிச்சிகரத்தில் ஏற்றி வைத்தான் கம்பன்.
இராமநலனை முறையற்ற முறையில் வெஃகித்தானே அனுபவித்தானந்திக்க விரும்பிய சூர்ப்பனகை தானுமொழிந்து தன்குலத்தையும் அழிக்கும் பெருந்தீயானாள். முனிவரருஞ் சிரமிசைக்கரம் வைத்துப் போற்றும் பொற்புடைச் சீதையின் அழகு வெள்ளத்தைப் பருக நினைத்த அரக்கன் தலைபத்தும் ஒழிந்து வேரோடுமழிந்ததைச் செப்பவந்த காப்பியமே இராமாயணம். அது சீதையின் கற்பின் பொற்பொடு இராமநலனையுந் துலக்குங் காவியமாகின்றது.
நவிலரும் நன்றிப் பெருக்கால் எல்லோருக்கும் உயிரீந்த சஞ்சீவியர் வதத்தைக் கொணர்ந்த சமயசஞ்சீவியாகிய அனுமனை மார்புறத் தழுவினான் இராம அழகன். அவன் திருமார்பு “எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடுழுத மார்பு” ஆகையினால் அது சீதைக்கே முற்றூட்டென நினைக்கும் அனுமன் அவன் பிணைப்பினின்றும் நழுவினான. இங்ஙனஞ் சீதைக்கே உரியவனாகிய காப்பிய நாயகனை இழிகுல அரக்கருட் பிறந்துந் தலைசிறந்து விளங்கும் விபீடணன் கண்டுருகிக் கண்ணாலாயபயனை எய்தும் முறையையுங்கம்பன் காட்டியதையும் ஈண்டுற்று நோக்குவோம்.
கருணைமேகமாகிய இராமன், வஞ்சனை அரக்கன் பின்வந்த தனக்குக் காட்சி அருளத் திருவுளங் கொண்டதைச் சுக்குரீவன் வாயிலாக அறிந்து உருக்கமுடன் அவனைத் தரிசிக்கவிரைந்த விபீடணன் தேவியொடு அண்ணலை ஒரு சேரப் பூரண புருடனாகக் காணும் வாய்ப்புத் தனக்கில்லையேயென்று உளம்நொந்து சென்றான். கோலத்திரைகள் வெள்ளை மணலில் சீதையின் புருவவுருவை வரைந்தன. இராமனுளத்திடைச் சீதையின் உருவுகுடி கொண்டது. வெண்மணற்பரப்பிலே கரியசாயலுடன் இராமன் மிளிருங்காட்சி தூரத்தே வரும் விபீடணணுக்குச் சீதையின் வெள்விளியின் நாப்பண் இலங்குங் ௧ருவிழியின் மணியாகத் தோற்றமளித்தது. ஆதரம் பெருக வரும் விபீடணனுக்கு அழகன் தனித்தவனாகக் காட்சிதாராது சீதேவியைச் சற்றும் பிரியாது அவள் விழிப்பாவையினூடே உடனுறைபவனாகக் காட்சிதருமாற்றைக் கம்பன் “கோணுதற் கமைந்த கோலப் புருவம போற்றிரையுங்கூட” என்ற விபீடணனடைக்கலப் படலப் பாட்டிற் காட்டினான்.
சேணிடை நின்று இராமன் திருவுருவைப் பொது நோக்காகப் பார்க்கின்றான் அவன், கரிய திருமேனியும் அதன் கண் மிளிருஞ் செவ்விய கண்களும், வாயும், கைகளும், கால்களும் கார்கடல் கமலம் பூத்த (இல்பொருட்) காட்சியை நல்குகின்றன. இராமனுடைய கண்கள் குளிர்ந்து தன்னைப் பார்ப்பன போலவும், வாயிதழ்கள், தன்னுடன் கதைக்கத் துடிப்பன போலவும்,திருக்கரங்கள் தன்னைத் தழுவ முற்படுவன போலவும் திருப்பாதங்கள் தனக்குச் சரண் தருவன போலவும் விபீடணன் கண்ணில் இலங்குவதால் இவ்வுவமை சாலவும் பொருத்த முடைத்து. மேலும் சற்றே அணுகின்றவனுக்கு விண்ணவர் வேண்டுகோளுக்கிணங்கிக் கொடியோரைத் தடிந்து நல்லோருக்குக் காப்பருளும் பாற்கடலினின்று துயிலெழும் அவதார புருடவடிவம் விபீடணனுக்குப் பளிச்சிட்டது. தசரதன் மகனாகவன்றித் தேவாதிதேவனாக, நல்லுளப் பண்பமைந்த வீடணனுக்கு இராமவள்ளல் காட்சி வழங்கினான்.
சற்றே ஆறுதலாக அத்திருவுருவை அவன் நோக்கினான். இராசகோலந்துறந்த நிலையிலும் வீரகெம்பீரம் குன்றாமல் அவனங்கங்கள் பொலிவதைப் புதுமையோடு நோக்கினான். அவனுடைய மார்பகத்திலே நவமணிமாலையில்லை. எனினுங் கடல் சூழுலகைப் புரக்குங் காரேபோல அவன் திருமேனி துலங்கும் நிலையை மண்ணிடைப் பொருளொன்றோடேனுஞ் சம்பந்தப்படுத்தாது உயர் விண்ணிடைப் பொலியும் ஒப்புயர்வற்ற காட்சியொன்றோடு தொடர்பு படுத்திக் கம்பன் சீரிய உவமை ஒன்றினை அமைத்தல் வியப்புடைத் தொன்றாகும்.
“படர் மழை சுமந்தகாலைப் பகர்வரும் அமரர்கோமான்
அடர்சிலை துறந்த தென்ன ஆரந்தீர் மார்பு”
என்பதே அந்நலஞ்சான்ற உவமையாகும்.
(படர் = எங்கும் பரந்த; மழைசுமந்த = சூல் நிரம்பி மழை நீரைத் தாங்கிய; அமரர் கோமான் = இந்திரனது; அடர்சிலை = எங்கும் நெருங்கிச் செறிந்துள்ள வானவில்; ஆரம் = மணிமாலை)
விபீடணன் இராமனுடைய ஒவ்வொருறுப்புக்களையுங் கண்ணாரக் கண்டான். மார்பைப் பார்த்தகண் அப்பொழுது தோளின்மிசை தாவியது. மார்பிலே மாலையில்லாதது போலதோளிலும் அரசர்க்குரியவாகுவலயம் நீங்கியிருந்தது. அவ்வாபரணம் இருப்பின் தோளினழகை அது விழுங்கித் தானே அழகுபெறும். இராமனின் தோளினழகு எவ்வித மறைபாடுமின்றிச் சுந்தரச்சுடர்சான்று விளங்கியது. வாகுவலயமில்லாமையினாலே தோளினழகு சிறப்புறப் புலப்படுவதைக் காரணங்காட்டிக் கம்பன் “சுடரொளி வலயந்தீர்ந்த சுந்தரத்தோள்” என்று புலப்படுத்தினான்.
பொதுப்பார்வையை நீத்து அங்கங்களைச் சிறப்புறப்பார்த்த விபீடணன் மீண்டும் அருளொழுகுகின்ற முகமண்டலத்தை ஆராமையோடு நோக்கினான். எந்த நிலையிலும் ஒளிகுன்றா அவன் முகங் கலைகுன்றா நிறைமதிபோலத் தோற்றந்தந்தது. கற்றை வெண்பூரணமதி ஒற்றைப்பிறையாதல் உலகவழக்கன்றே! ஆகவே என்றும் ஒளிகுன்றாத் திருமுகத்திற்கு நிலாமதியை ஒப்பிடல் இழுக்குடைததாகும். என்றுங் கருணையும் மென்மையும், ஒளியும் துளும்புந் திருமுகத்தைக் கம்பன் ஒப்புயர்வற்ற “கருணையால் அமிழ்தங்காலும் முற்றுறு கலையிற்றாய முழுமதிமுகம்'' என்னல் பொருத்தமுடையதாகும். முகத்தைப் பார்த்த கண்கள் பின்பு சிரமிசைப் பாய்ந்தன. அந்தச் சிரத்தில் இருக்கின்ற ஒளியானது சிரத்திற்கொரு தனிப்பொலிவைக் கொடுத்தது. ஆண்டுத் தியாகச்சுடரும் (தந்தையளித்த மோலியை தம்பிக்குத் அளி சிறக்கக் கொடுத்துத் தாய் தந்த சடாமகுடத்தோடு கூடிக்) கலந்திலங்கு முகமண்டலம் என்றும் பொலிவொடு கூடி விளங்கியதால் “சிற்றவை பணிந்த மோலி பொலிகின்ற சென்னியானாக இராமன் என்றும் நன்றே நின்றிலங்கினான். அழகுடன் அருமையும் நிறைந்த முழுப்பாடலும் வருமாறு :-
“கற்றை வெண்ணிலவு நீக்கிக் கருணையால் அமிழ்தங்காலும்
முற்றுறு கலையிற்றாய முழுமதி முகத்தினானைப்
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத்தான்பெற்ற
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை.”
இங்ஙனம் அழகும் அருளுந் தியாகமுங் கலந்திலங்கும் இராமன் அருமைத் திருமேனி விபீடணனுக்குக் கிட்டுவதால் அதனை அருமையில் எளிய அழகு” என்போம்.

Comments
Post a Comment