வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு ; சமகாலச் சூழலில் வாசிப்பு பழக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் காரணிகள்
வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு ; சமகாலச் சூழலில் வாசிப்பு பழக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் காரணிகள்
‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்’ என்பது ஆங்கில மெய்யியலாளரான பிரான்ஸிஸ் பேக்கனின் (1561) புகழ் பெற்ற வாசகம். ‘கண்டதும் கற்கப் பண்டிதனாவான்’ என்பது தமிழர் தம் பழமொழி. இப் பழமொழியை இரண்டு விதத்தில் பொருள் கொண்டு விளக்கலாம். சிலர் கண்ணால் கண்டவுடன் ஆர்வம் காரணமாக நுணுக்கமாக எளிதில் விடயங்களைக் கற்றுக் கொள்வர். மகாபாரதக் கதையில் அர்ச்சுனன் சிறுவனாக இருந்த போது துரோணரின் வில்வித்தையைக் கண்டதும் கற்றுள்ளான். கிணற்றுள் விழுந்த பொருளை துரோணர் வில்லின் ஜாலம் கொண்டு எவ்வாறு வெளியே எடுத்தாரோ, அதைக் கண்டதும் அவ்வாறே தானும் முயற்சி செய்தான். கண்டதும் கற்றதால் பின்னாளில் நிகரற்ற இன்னொரு வில்லாளனானான் என்கிறது மகாபாரதம். இப்பழமொழிக்கு இன்னொரு பொருளும் கொள்வர். அதாவது பரந்துபட்ட வாசிப்பு ஒருவரைப் புலமையாளனாக்கும் என்பது ஆகும். எதுவாயினும் கல்விக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தூண்டுதலாய் அமையும் இப்பழமொழியை நினைவில் கொள்வது இவ்விடயத்தில் பொருத்தமானது.
கல்வி மற்றும் அறிவுவளர்ச்சியின் அடிப்படையாக அமைவது பொறுமையான வாசிப்பு. இந்த வாசிப்பு என்பது முக்கியமான பல திறன்களைக் கொண்ட ஒரு செயன்முறை ஆகும். இது மகிழ்ச்சிகரமானதும் சுவாரஸ்யமானதும் ஆகும். சுவாரஸ்யமான வாசிப்பில் ஒரு புறம் மகிழ்ச்சி கிடைப்பதுடன் மறுபுறம் அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இது ஒரேநேரம் நிகழும் இருவேறு நன்மையான நிகழ்வு என்று குறிப்பிடலாம்.
இன்றைய இளஞ்சமுதாயம் தொலைத்துவிட்ட அற்புத அனுபவம் வாசிப்பு என்னும் நற்பழக்கம் ஆகும். வாசிப்பைத் தொலைத்ததன் பாதகமான விளைவுகளைப் பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், புலமையாளர்கள் எனப் பலரும் மனத்துன்பத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமது பிள்ளைகளிடையே வாசிப்பை வளர்த்தெடுக்கும் வழிவகைகளை இன்று பெற்றோரும் ஆசிரியரும் தேடியலைகின்றார்கள்.
வாசிப்பு என்பது தனக்குள் பல கருத்துக்ளை உள்ளடக்கியுள்ளது. படித்தல், கற்றல், எழுதியவற்றைக் கண்ணால் பார்த்துக் கிரகித்தல் என்றவாறாக இதனை பல நிலைகளில் உணரலாம். குழந்தைப் பருவத்தில் எழுத்தின் வரிவடிவத்தை அறிவதற்காக எழுத்துக்கூட்டுதலும் வாசிப்பு என்றுதான் எம்மிடையே விளங்கப்படுகின்றது. நூல்கள் மட்டுமன்றி இசைக்கருவிகளை இயக்குதலும் வாசித்தல் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. அதாவது வீணை வாசித்தல், புல்லாங்குழல் வாசித்தல், கிற்றார் வாசித்தல், என்ற பிரயோகங்கள் வாசித்தல் தொடர்பில் உள்ளன. வாசித்தல் பல நோக்கங்களுக்காகப் பல நிலைகளில் நிகழ்கின்றன.
வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வதற்கான சிறந்த திட்டமாகக் கதை சொல்லுதல் என்பதை யப்பனியர் பயன்படுத்துகின்றனர். வளமான வாசிப்புக்கு அத்திவாரமிடும் பணியாக சிறுவர்களுக்கு கதை சொல்லல் என்பது பயன்படக்கூடியது. சுவாரஸ்யமான கதையை காதினால் கேட்ட பிள்ளை அக்கதையை வாசிக்கத்தூண்டுவது இயல்பானதே. இச் செயற்பாட்டைக் “காதினால் வாசித்தல்” என்ற பொருளில் ஜப்பானியர் வாசிப்புப் பழக்கத்தைத்தூண்டும் சிறந்த செயற்திட்டமாகப் பயன்படுத்துகின்றனர். சினிமாவின் கதையொன்றைக் கேட்;டபின் அந்தச் சினிமாவைப் பார்க்க ஒருவர் தூண்டப்படுவதை இது ஒத்தது.
வாசித்தல் செயன்முறையிலே அறிவுத்திறன், மொழித்திறன், பார்வை நலன், உடல் நலன், மன நலன், சூழ்நிலை என்ற அனைத்தும் ஒத்திசைந்து காணப்படுதல் இன்றியமையாதது. இந்த ஒத்திசைவு எங்கெல்லாம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் வாசிப்பும் சாத்தியப்படும். அமைதியான சூழலும் தரமான நூல்களும் வாசிப்புக்கு ஆதார சுருதியாய் அமையக் கூடியன. அமைதி பேணுக என்பது நூலகங்களில் காணப்படக்கூடிய ஒரு தார்மீக வேண்டுகோளாகும். எனினும் இன்று பெரும்பாலான நூலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வாசகர்கள் இல்லாத நூலகங்களின் நூற்பாதுகாவலர்களாக நூலகர்கள் கடமையாற்றும் துர்பாக்கிய நிலை உள்ளது.
வாசித்தலின் இன்றைய தடைகள் என்ன? இதுபற்றிச் சிந்திப்போமானால் வாசிப்பற்ற சமூகத்தின் உருவாக்கத்திற்குத் தகவல் யுகத்தின் இணைய உருவாக்கம் ஒரு பிரதான காரணியாகச் சொல்லப்படுகின்றது. இணையத்தில் எதையும் தேடலாம், பெறலாம் என்ற திடமான மனப்பாங்கு இன்றைய சிறார்கள்; மற்றும் ஆய்வாளர் மத்தியில் வலுப்பெற்று வளர்ந்துள்ளது. உண்மையில் வாசிப்பு மற்றும் தகவல் தேடல் என்பவை ஆரம்பத்தில் புத்தகங்கள், பத்திரிகைகள் முதலான அச்சடிக்கப்பட்ட வெளியீடுகள் மூலம் கட்டியெழுப்பப்படுவதே ஆரோக்கியமானது. இதன் அடுத்தகட்ட நகர்வாகவே இலத்திரனியல் ஊடகங்களின் வாசிப்பும் பயன்பாடும் அமைவது பொருத்தமானது. எழுத்தின் வரிவடிவங்களை நுணுக்கமாக இனங்கண்டு விருத்தி செய்யவும் சரியாகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் சொற்களஞ்சியத்தை விருத்தி செய்யவும் “புத்தக வாசிப்பு” அத்தியாவசியமாகிறது.
இணையத்தில் தகவலைத் தேடிக்கொள்ளலாமே தவிர பின்வருவன போன்ற சிறப்பு ஆற்றல்கள் நூல் வாசிப்பினால் மாத்திரமே சாத்தியமாகும் என்பது இன்று பல நிலைகளிலும் உணரப்படுகின்றது.
மொழியின் வரிவடிவத்தை புரிந்துகொள்ளுதல்
- இன்றைய குறுஞ்செய்தி அனுப்பும் முறையால் கடிதம் எழுதும் கலை இளையோரிடமிருந்து தொலைந்துள்ளது. கடிதம் ஒன்றை எழுத பரீட்சை நோக்கில் பயிற்றுவிக்கும் அவலம் இன்று உணரப்படுகிறது. குறுஞ்செய்தியில் சுருக்கமாக எழுத்துக்களை ‘ரைப்’; செய்வதால் சொல்லொன்றையும் சரியான முறையில் எழுதும் பயிற்சி இளையோருக்கு கிடைப்பதில்லை. சொற்களஞ்சிய விருத்திக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கம் பெரும் சவாலாக உணரப்படுகின்றது.
வாக்கியங்களுக்கிடையேயான தொடர்பைப் புரிந்து கொள்ளல்.
- அன்பு நண்பா! என்பது இன்று ‘ர்iஇ னய’ என வருகின்றது. புலமையாளர்களின் நூல்களைத் தொடர்ச்சியாக வாசித்து வரும்போது ஒரு கோர்வையாக கருத்தை வெளியிடும் அற்புத எழுத்தாற்றல் வாசிப்பினால் மட்டுமே சாத்தியமாகும். வசன அமைப்பை சரியாக தெரிந்துகொள்ள வாசிப்பு அவசியமானது.
- நூலைவிடுத்து இணையவழி தகவல் தேடும் பிள்ளையைக் கண்காணிக்க வேண்டியுள்ளது. பெற்றோரும் ஆசிரியரும் மனம் பதைபதைக்கின்ற அவல நிலை உள்ளது. கையடக்க தொலைபேசிக்குள் காலத்தைக் கழிக்கும் பெரும் அவலம் உருவாகியுள்ளது.
இணையத்தை நூலகத்திற்குப் பதிலீடாகக் கொள்ள முடியாது என்பதையும் நூலகத்தின் மரபுரீதியான வளங்களுடன் மேலதிகமான தகவல்களைப் பெறுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே கொள்ள வேண்டுமென்ற கருத்தையும் வீடுகளிலும் வகுப்பறைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் இளையோர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரியதாகும். நூலகங்களை நோக்கி வாசகர்களை அனுப்பும் பணி பொது நூலகங்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் உரியது. கற்பித்தல் வகுப்பகைளிலும், பாடசாலை கற்றல் நூலகங்களிலும் இடம்பெறும் பொழுதுதான் ஆரோக்கியமான மனிதவள உருவாக்கம் மேற்கொள்ளப்படும்.
ஒருவரின் வாசிப்ப முயற்சியில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாகச் சிலவற்றை இங்கு நோக்கலாம். மோசமான வீட்டு நிலைமைகள் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது குறைவான வசதி, குறைவான ஊக்குவிப்பு, அதிக சத்தம், போதிய வெளிச்சமின்மை, தரமான நூல்கள் கிடைக்காமை எனப் பலவாக இவை உள்ளன. தொலைக்காட்சி நாடகங்களும் சமூக ஊடகங்களும் அதிக நேரத்தை இளையோரின் விழுங்குகின்றன இதனால் வாசிப்புக்கு நேரம் இல்லாமல் போகின்றது.
பாடசாலைகளிலும் கூடப் பொருத்தமற்ற கற்றல் கற்பித்தல் முறைகள், போதிய வாசிப்பு உபகரணங்கள் இன்மை, தேவையான பாடக்குறிப்புக்களை ஆசிரியர் வழங்குதல் இதனால் தேடிக் கற்கும் வாய்ப்பு இன்மை, தனியார் கல்வி நிலயங்களில் நேரத்தைச் செலவு செய்தல், இளையோர் கவனம் பல்வேறு நிலைகளில் கலைந்து செல்வதால் வாசிப்புக்க நேரத்தை ஒதுக்க முடிவதில்லை முதலான விடயங்கள் வாசிப்பு பழக்கத்தை விருத்தி செய்வதில் தடைகளாக அமைகின்றன எனலாம்.
எனவே முடிவாக நாம் நோக்கும் போது வாசிப்புப் பழக்கம் என்பது தனிநபர் ஒருவரின் வெற்றிக்கு இன்றியமையாதது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது அலுப்பூட்டும் அல்லது எரிச்சலூட்டும் செயல் அல்ல என்பதையும் மகிழ்ச்சிகரமான பயனுள்ள செயல் என்பதையும் மனதில் விதைக்க வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் வாசிக்க அமர வேண்டும். இது ஒரு முன்மாதிரியாக அமையும் செயற்பாடாகும்.
இளையோரின் வாசிப்புக்குத் தடையாக இருக்கக் கூடிய காரணிகளை இனங்கண்டு பக்குவமான முறையில் அவை தீர்க்கப்பட வேண்டும். பிள்ளைகள் எப்போதும் பாடநூல்களை மாத்திரம் வாசிப்பதற்கு விரும்பமாட்டார்கள். ஈடுபாடு கொள்ளக் கூடிய வகையில் ஆக்க இலக்கியங்கள், வரலாறு, பொது அறிவு மற்றும் இது போன்ற மகிழ்வூட்டும் விடயங்களுக்கு இடம்கொடுத்தலும் பொருத்தமானது. ‘உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு…….” என்ற உளவியளாளர் ‘சிக்மண்ட் ஃப்ராய்ட்’ டின் சிந்தனையை மனதில் இருத்தி வாசிப்பை நேசிப்போம்.
Comments
Post a Comment